என் மலர்
உலகம்

போர் நிறுத்தம் குறித்து புதினிடம் கடிதம் வழங்கிய டிரம்ப் மனைவி
- அப்பாவித்தனம் கொண்ட குழந்தைகளை பற்றி சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- மோதலில் சிக்கிய குழந்தைகளின் மெல்லிசை சிரிப்பை உங்களால் மீட்டெடுக்க முடியும்.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பில் உக்ரைன், ரஷியா இடையிலான போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ரஷிய அதிபர் புதின், எங்களுக்கு இடையே நடந்த போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்று கூறினார்.
பின்னர் பேசிய டிரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக இன்னும் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என தெரிவித்தார். மேலும், "ஒப்பந்தத்தை முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு இப்போது உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியிடம் உள்ளது.
ஐரோப்பிய நாடுகளும் இதில் சிறிது தலையிட வேண்டும். ஆனால் முக்கிய பொறுப்பு ஜெலென்ஸ்கியிடம் உள்ளது" என்று கூறினார்.
இதனிடையே அலாஸ்காவில் நடந்த பேச்சுவார்த்தையின்போது புதினிடம் டிரம்ப் தனது மனைவி மெலனியா எழுதிய கடிதத்தை வழங்கினார். அதில் உக்ரைனில் போரால் பாதிக்கப்படும் குழந்தைகளைப் பற்றி பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அக்கடிதத்தில், "புவியியல், அரசாங்கம் மற்றும் சித்தாந்தத்திற்கு மேலே நிற்கும் ஒரு அப்பாவித்தனம் கொண்ட குழந்தைகளை பற்றி சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மோதலில் சிக்கிய குழந்தைகளின் மெல்லிசை சிரிப்பை உங்களால் மீட்டெடுக்க முடியும். இந்த குழந்தைகளின் அப்பாவித்தனத்தைப் பாதுகாப்பதில், நீங்கள் ரஷியாவிற்கு மட்டும் சேவை செய்வதை விட அதிகமாகச் செய்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த குழந்தைகளுக்கு நீங்கள் பேனாவால் கையெழுத்திடுவது மூலம் உதவ முடியும்" என்று மெலனியா தெரிவித்தார் .






