என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பெண்கள் குறித்த பிரதமர் நரேந்திர மோடி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கோரியுள்ளார்.
- ஆண் பத்திரிகையாளர்கள் தங்கள் பெண் சகாக்கள் அனுமதிக்கப்படாததை கண்டறிந்தபோது வெளிநடப்பு செய்திருக்க வேண்டும்
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வார கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்தடைந்தார். டெல்லி வந்தடைந்த முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார்.
நேற்று டெல்லியில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தில் முத்தாகி கலந்துகொண்டார். இதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளரை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 2021 இல் மூடப்பட்ட இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்படும் என்று ஜெய்சங்கர் கூறினார்.
இதற்கிடையே ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் வைத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தாலிபான் தாங்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கடுமையான விதித்து வருவது தெரிந்ததே.
அந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு குறித்து ஐக்கிய நாடுகள் சபையும் கவலை தெரிவித்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொது வாழ்வில் இருந்து பெண்களை விலக்கி வைக்கும் கொள்கைகளை உடனடியாக திரும்பப் பெறுமாறு தாலிபான்களை ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்திய மண்ணில் தாலிபான்களை திருப்திப்படுத்த பெண் செய்தியாளர்களை அனுமதிக்க மறுத்து பெண் ஒடுக்குமுறைக்கு மத்திய அரசு துணை போகிறதா என்ற கேள்வியை பலர் முன்வைக்கின்றனர்.
அதேநேரம் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற ஆண் பத்திரிகையாளர்கள் பெண்கள் அனுமதிக்கப்படாததை எதிர்த்து வெளிநடப்பு செய்திருக்க வேண்டும் என்றும் ஆனால அதற்கான சான்றாண்மை இல்லாமல் அவர்கள் அங்கு அமர்ந்திருந்தனர் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கோரியுள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "தேர்தலுக்காக மட்டும் பெண்கள் உரிமைகளை அங்கீகரிப்பதாக நீங்கள் நாடகமாடவில்லை என்றால், பெண்களை முதுகெலும்பாகவும் பெருமையாகவும் கொண்ட நம் நாட்டில் மிகவும் திறமையான பெண்களில் சிலருக்கு இந்த அவமானம் எப்படி அனுமதிக்கப்பட்டது" என்று வினவியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பி. சிதம்பரம் வெளியிட்ட பதிவில், "ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அமீர் கான் முத்தாகி உரையாற்றிய பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து பெண் பத்திரிகையாளர்கள் விலக்கப்பட்டிருப்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனது தனிப்பட்ட பார்வையில், ஆண் பத்திரிகையாளர்கள் தங்கள் பெண் சகாக்கள் அனுமதிக்கப்படாததை அல்லது அழைக்கப்படாததை கண்டறிந்தபோது வெளிநடப்பு செய்திருக்க வேண்டும்" என்று கூறினார்.
அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, பெண் பத்திரிகையாளர்களை விலக்க தாலிபான் அமைச்சரை அனுமதித்ததன் மூலம் அரசாங்கம் ஒவ்வொரு இந்தியப் பெண்ணையும் அவமதித்துள்ளது." என்று விமர்சித்துள்ளார்.
இதற்கிடையே இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம், இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு பத்திரிகையாளர்களை தேர்ந்தெடுத்து அழைத்தவர்கள் ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரிகள் என்றும் ஆப்கானிஸ்தான் தூதரகம் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
- 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது.
- 'காந்தாரா சாப்டர்1' படம் உலக அளவில் இதுவரை ரூ.509.25 கோடி வசூலித்துள்ளது.
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.
'காந்தாரா சாப்டர்1' படம் உலக அளவில் இதுவரை ரூ.509.25 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியாகி ஒரு வாரத்தில் பாக்ஸ் ஆபிசில் வசூல் குவித்து வருவதால் இனி வரும் நாட்களில் மேலும் வசூலில் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், காந்தாரா சாப்டர் 1 படத்தை பாராட்டி பேசிய இயக்குனர் அட்லி, "காந்தாரா சாப்டர் 1 படம் வெளியான அன்று நான் ஆம்ஸ்டர்டமில் இருந்தேன். அப்போது 2.5 மணிநேரம் பயணம் செய்து தியேட்டரில் படம் பார்த்தேன். உடனடியாக ரிஷப் ஷெட்டிக்கு போன் செய்து பாராட்டுகளை தெரிவித்தேன். ஒரு இயக்குனராக இந்த மாதிரி படத்தை உருவாக்குவதே மிக கடினம். அனால் ஒரு நடிகராகவும் ஹீரோவாகவும் அந்த ரிதத்தை அவர் கொண்டு வந்துள்ளார். இந்த படத்திற்க்காக ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.
- ஜெய்ஸ்வால் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார்.
- 258 பந்துகளில் 22 பவுண்டரியுடன் ஜெய்ஸ்வால் 175 ரன்னை எடுத்தார்.
புதுடெல்லி:
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்து இருந்தது.
ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். தமிழக வீரர் சாய் சுதர்ஷன் (87 ரன்) சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் தொடர்ந்து விளையாடினார்கள்.
இரட்டை சதம் அடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார். 1 ரன்னுக்கு ஆசைப்பட்டு இரட்டை சதத்தை கோட்டைவிட்டார்.
போட்டி தொடங்கிய 2-வது ஓவரிலேயே அவர் பெவிலியன் திரும்பினார். 258 பந்துகளில் 22 பவுண்டரியுடன் ஜெய்ஸ்வால் இந்த ரன்னை எடுத்தார். அவர் ரன் அவுட் ஆனது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
அவர் தொடர்ந்து பேட்டிங் செய்திருந்தால் முச்சதம் அடிக்கும் வாய்ப்பு கூட பிரகாசமாக இருந்தது. அதனையும் அவர் தவறவிட்டார் என்றே சொல்லலாம்.
4-வது விக்கெட்டுக்கு சுப்மன் கில்லுடன் நிதிஷ் குமார் ரெட்டி ஜோடி சேர்ந்தார். 96.1-வது ஓவரில் இந்திய அணி 350 ரன்னை தொட்டது.
- தன் கட்சி தொண்டர்களை வைத்தே த.வெ.க. கொடியை தூக்கிப் பிடிக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
- அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தற்போது பலமிழந்து காணப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் த.வெ.க.வினர் கொடிகளுடன் கலந்து கொண்டதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு உள்ளதாக பேசினார்.
இதையடுத்து கூட்டத்தில் த.வெ.க. கொடிகளை வைத்திருந்தவர்கள் த.வெ.க.வினர் இல்லை. அ.தி.மு.க. இளைஞர்கள் என தெரியவந்தது. எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் அ.தி.மு.க. டி-ஷர்ட் அணிந்தபடி த.வெ.க. கொடியை இளைஞர்கள் அசைத்துள்ளனர்.
அந்த இளைஞர்களைப் பார்த்து "கொடி பறக்குது பாருங்க.. பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க" என இ.பி.எஸ். பேசினார் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தன் கட்சி தொண்டர்களை வைத்தே த.வெ.க. கொடியை தூக்கிப் பிடிக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதில் இருந்தே தெரிகிறது விஜயின் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராகி விட்டார். அந்த அளவிற்கு அ.தி.மு.க. பலவீனமாகி விட்டது.
* அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார்.
* த.வெ.க. தலைவர் விஜய் கூட்டணி வருவார் என்றால் பா.ஜ.க.வை எடப்பாடி பழனிசாமி கழற்றி விடுவார்.
* எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கவா விஜய் கட்சி தொடங்கி உள்ளார்.
* அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தற்போது பலமிழந்து காணப்படுகிறது. இந்த கூட்டணி வரும் தேர்தலில் 15 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நித்யாவுக்கு மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
- 3 குழந்தைகளை வைத்துக்கொண்டு தவித்தது மறு புறம் என வினோத்குமார் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம். இவருடைய மகன் வினோத்குமார்(வயது 38). இவர் புகைப்பட கலைஞராகவும், டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி நித்யா(35). இந்த தம்பதியினர் மணவாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருந்தது. இவர்களது அன்பான இல்லற வாழ்க்கையின் பயனாக இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன.
இதில் மூத்த மகள் ஓவியா(12) 6-ம் வகுப்பு படித்து வந்தாள். 2-வது மகள் கீர்த்தி(8) 3-ம் வகுப்பு படித்து வந்தாள். 3-வதாக 5 வயதில் ஈஸ்வரன் என்ற மகன் இருந்தான்.
இந்த நிலையில், நித்யாவுக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பாழாய்ப்போன இந்த கெட்ட சகவாசத்தால் நித்யா தனது அன்பான கணவரையும், குழந்தைகளையும் மறந்து கள்ளக்காதலனே கதி என்றானார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து, தனது கள்ளக்காதலனுடன் நித்யா சென்று விட்டார். கள்ளக்காதலனுடன் தனது மனைவி ஓடிச்சென்ற பிறகும் மனைவியை பிரிய முடியாத சூழ்நிலையில் வினோத்குமார் இருந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை சந்தித்து மீண்டும் தன்னுடன் வந்து குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது.
அப்போதும் மனம் இரங்காத நித்யா கள்ளக்காதலனை விட்டு கணவருடன் வரமறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
மனைவி தன்னை விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய வேதனை ஒரு புறம். 3 குழந்தைகளை வைத்துக்கொண்டு தவித்தது மறு புறம் என வினோத்குமார் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இதனால் மனைவி மீது மிகுந்த ஆத்திரம் அடைந்த வினோத்குமார் நேற்று மாலை வீட்டில் குழந்தைகளுக்கு பலகாரங்கள் வாங்கி கொடுத்து சாப்பிடுமாறு கூறி உள்ளார். குழந்தைகளும் தந்தை வாங்கி கொடுத்த பலகாரங்களை ஆசை ஆசையாக சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். பாவம் அவர்களுக்கு தெரியவில்லை... அதுதான் தங்களது இறுதி சாப்பாடு என்பது.
அப்போது தனது மனதை கல்லாக்கிக்கொண்ட வினோத்குமார் தான் பெற்ற குழந்தைகள் என்றும் பாராது தனது 3 குழந்தைகளையும் துடிக்க, துடிக்க சரமாரி கழுத்தை அறுத்துக்கொலை செய்தார்.
இதில் 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். பின்னர் குழந்தைகளை கொலை செய்த வினோத்குமார், மதுக்கூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தான் தனது 3 குழந்தைகளையும் கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
- 2 நாட்களுக்கு பிறகு, நேற்று தங்கம் விலை குறைந்தது.
- தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,425 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்தில் காணப்படுகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களாக விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.
2 நாட்களுக்கு பிறகு, நேற்று தங்கம் விலை குறைந்தது. காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்து இருந்தது. ஆனால் பிற்பகலில் கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் அதிகரித்து அதிர்ச்சி அளித்தது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,425 ரூபாய்க்கும் சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 187 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 87 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
10-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,720
09-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,400
08-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,080
07-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,600
06-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,000
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
10-10-2025- ஒரு கிராம் ரூ.184
09-10-2025- ஒரு கிராம் ரூ.177
08-10-2025- ஒரு கிராம் ரூ.170
07-10-2025- ஒரு கிராம் ரூ.167
06-10-2025- ஒரு கிராம் ரூ.167
- ஏற்கனவே சீன பொருட்கள் மீது 30% வரி அமலில் உள்ளது
- சீனா - அமெரிக்க வர்த்தகப் போர் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷியாவிடம் எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு உதவுவதாக கூறி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்தார்.
ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் முக்கிய நாடுகளில் சீனாவும், இந்தியாவும் அடங்கும். ஆனால் சீனாவை விடுத்தது இந்தியாவை மட்டும் அமெரிக்கா குறிவைப்பது ஏன் என்ற கேள்வி பலரிடையேயும் எழுந்தது.
இந்நிலையில், நவம்பர் 1 முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுக்கும் கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே சீன பொருட்கள் மீது 30% வரி அமலில் இருக்கும் பட்சத்தில், தற்போது மொத்தமாக சீனா மீது 130% வரி விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவின் முக்கிய மென்பொருட்களுக்கான ஏற்றுமதியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த நடவடிக்கைகளால் சீனா - அமெரிக்க வர்த்தகப் போர் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- இப்போதெல்லாம் லிவ்-இன் உறவுகள் ஒரு ட்ரெண்டாக மாறிவிட்டன.
- கல்வி என்பது வெறும் பட்டப்படிப்புக்காக அல்ல, வாழ்க்கையில் மாற்றத்திற்கானது.
உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீத், ஜனநாயக் சந்திரசேகர் விஸ்வவித்யாலயா மற்றும் சம்பூர்ணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இளம் பெண்கள் லிவ் இன் உறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். லிவ்-இன் உறவுகளின் விளைவை பார்க்க விரும்பினால், அனாதை இல்லங்களை பாருங்கள். அங்கு 15-20 வயது சிறுமிகள் ஒரு வயது குழந்தைகளுடன் வரிசையில் நிற்கிறார்கள்.
இப்போதெல்லாம் லிவ்-இன் உறவுகள் ஒரு ட்ரெண்டாக மாறிவிட்டன. ஆனால், அதிலிருந்து விலகி இருங்கள். பெண்கள் 50 துண்டுகளாக வெட்டப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.
பெண்கள் தங்கள் கல்வி மற்றும் சிறந்த குறிக்கோள்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். தாய்வழி குடும்பங்களோ அல்லது மாமியாரோ பின்னர் அவர்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
இளைஞர்களிடையே போதைப்பொருள் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் கல்விப்பட்டங்களுடன் கடமை உணர்வையும் தேசியப் பொறுப்பையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
கல்வி என்பது வெறும் பட்டப்படிப்புக்காக அல்ல, வாழ்க்கையில் மாற்றத்திற்கானது. சரியான நேரத்தில் தேர்வுகள் மற்றும் வகுப்புகளில் 75% வருகையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து பேசிய ஆனந்திபென் படேல், இயற்கை விவசாயத்தை பின்பற்றவும், தூய்மையை மேம்படுத்தவும், இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்க ஆராய்ச்சி நடத்தவும் மாணவர்களை வலியுறுத்தினார்.
- அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது
- மரியா வெனிசுலா நாட்டு எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.
உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.
முன்னதாக இந்தியா- பாகிஸ்தான் உள்ளிட்ட 7 போர்களை கடந்த 6 மாதங்களில் நிறுத்தியதாகவும் அதனால் தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப், வழி மேல் விழி வைத்து காத்திருந்த நிலையில் அவரது கனவு பொய்த்துள்ளது.
அமைதியை விட அரசியலுக்கு முக்கியத்துவம் என்பதை மீண்டும் ஒருமுறை நோபல் கமிட்டி நிரூபித்துள்ளது என வெள்ளை மாளிகை விமர்சித்துள்ளது.
இந்நிலையில் எனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கும் அர்ப்பணிக்கிறேன் என நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிர்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ கூறினார்.
இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு குறித்து மனம் திறந்து பேசிய டிரம்ப், "வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா, எனது சார்பாக நோபல் பரிசு வாங்கிக் கொள்வதாக கூறினார். என்னிடம் போனில் பேசிய மரியாவிடம் எனக்கு நோபல் பரிசை கொடுக்கும்படி நான் கேட்கவில்லை. நெருக்கடியான காலங்களில் வெனிசுலாவுக்கு நான் உதவி உள்ளேன். வெனிசுலாவில் லட்சக்கணக்கானோரை காப்பாற்றியதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- கிராம மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதற்காக 12 ஆயிரத்து 480 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
- ஆண்டுக்கு 6 கூட்டங்கள் கண்டிப்பாக நடத்தப்படும்.
தமிழ்நாடு முழுவதும் இன்று 12,480 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 முறை கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்றிருந்தார். இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதன்முறையாக 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் உரையாற்ற உள்ளார்.
கிராம மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதற்காக 12 ஆயிரத்து 480 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆண்டுக்கு 6 கூட்டங்கள் கண்டிப்பாக நடத்தப்படும். சிறப்பு கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இது கிராமப்புறங்களிலும் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்புகள் கிடைத்துள்ளன என்பதற்கு சான்றாகும். 11 ஆயிரத்து 100 ஊராட்சிகளில் பைபர் ஆப்டிக் இணைப்புகள் இருந்தாலும் 10 ஆயிரம் ஊராட்சிகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பேசி முடிந்த பிறகு கிராம சபைகளில் தெருக்களின் சாதிப் பெயர்களை நீக்குவது, மழைநீர் சேகரிப்பு, கொசு - டெங்கு ஒழிப்பு, குழந்தை தொழிலாளர் நிலை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
நிகழ்வில், செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ஊராட்சி, தென்காசி மாவட்டம் முள்ளிக்குளம் ஊராட்சி, கோவை மாவட்டம் வாரப்பட்டி ஊராட்சி, விழுப்புரம் மாவட்டம் கொண்டாங்கி ஊராட்சி, தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் ஊராட்சி ஆகிய இடங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் முதல்-அமைச்சருடன் நேரடியாக கலந்துரையாட உள்ளனர்.
- டெல்லியில் கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கபட்டுள்ளது.
- டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டது.
டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கபட்டுள்ளது. டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டது.
மேலும், டெல்லியில் எந்த வகையான பட்டாசுகளை தயாரிப்பதும், சேமிப்பதும், விற்பனை செய்வதும், ஆன்லைன் டெலிவரி செய்வதும் மற்றும் வெடிப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகைகளை கொண்டாடும் விதமாக தடையை தளர்த்தலாம் என மத்திய அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு இணங்க உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் டெல்லி மக்களும், பட்டாசு விற்பனையாளர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே சமயம் இந்த உத்தரவால் டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்படும் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.






