என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • இப்போதெல்லாம் லிவ்-இன் உறவுகள் ஒரு ட்ரெண்டாக மாறிவிட்டன.
    • கல்வி என்பது வெறும் பட்டப்படிப்புக்காக அல்ல, வாழ்க்கையில் மாற்றத்திற்கானது.

    உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீத், ஜனநாயக் சந்திரசேகர் விஸ்வவித்யாலயா மற்றும் சம்பூர்ணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    இளம் பெண்கள் லிவ் இன் உறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். லிவ்-இன் உறவுகளின் விளைவை பார்க்க விரும்பினால், அனாதை இல்லங்களை பாருங்கள். அங்கு 15-20 வயது சிறுமிகள் ஒரு வயது குழந்தைகளுடன் வரிசையில் நிற்கிறார்கள்.

    இப்போதெல்லாம் லிவ்-இன் உறவுகள் ஒரு ட்ரெண்டாக மாறிவிட்டன. ஆனால், அதிலிருந்து விலகி இருங்கள். பெண்கள் 50 துண்டுகளாக வெட்டப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.

    பெண்கள் தங்கள் கல்வி மற்றும் சிறந்த குறிக்கோள்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். தாய்வழி குடும்பங்களோ அல்லது மாமியாரோ பின்னர் அவர்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

    இளைஞர்களிடையே போதைப்பொருள் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் கல்விப்பட்டங்களுடன் கடமை உணர்வையும் தேசியப் பொறுப்பையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    கல்வி என்பது வெறும் பட்டப்படிப்புக்காக அல்ல, வாழ்க்கையில் மாற்றத்திற்கானது. சரியான நேரத்தில் தேர்வுகள் மற்றும் வகுப்புகளில் 75% வருகையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

    சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து பேசிய ஆனந்திபென் படேல், இயற்கை விவசாயத்தை பின்பற்றவும், தூய்மையை மேம்படுத்தவும், இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்க ஆராய்ச்சி நடத்தவும் மாணவர்களை வலியுறுத்தினார்.

    • அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது
    • மரியா வெனிசுலா நாட்டு எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.

    உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.

    முன்னதாக இந்தியா- பாகிஸ்தான் உள்ளிட்ட 7 போர்களை கடந்த 6 மாதங்களில் நிறுத்தியதாகவும் அதனால் தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப், வழி மேல் விழி வைத்து காத்திருந்த நிலையில் அவரது கனவு பொய்த்துள்ளது.

    அமைதியை விட அரசியலுக்கு முக்கியத்துவம் என்பதை மீண்டும் ஒருமுறை நோபல் கமிட்டி நிரூபித்துள்ளது என வெள்ளை மாளிகை விமர்சித்துள்ளது.

    இந்நிலையில் எனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கும் அர்ப்பணிக்கிறேன் என நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிர்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ கூறினார்.

    இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு குறித்து மனம் திறந்து பேசிய டிரம்ப், "வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா, எனது சார்பாக நோபல் பரிசு வாங்கிக் கொள்வதாக கூறினார். என்னிடம் போனில் பேசிய மரியாவிடம் எனக்கு நோபல் பரிசை கொடுக்கும்படி நான் கேட்கவில்லை. நெருக்கடியான காலங்களில் வெனிசுலாவுக்கு நான் உதவி உள்ளேன். வெனிசுலாவில் லட்சக்கணக்கானோரை காப்பாற்றியதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • கிராம மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதற்காக 12 ஆயிரத்து 480 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
    • ஆண்டுக்கு 6 கூட்டங்கள் கண்டிப்பாக நடத்தப்படும்.

    தமிழ்நாடு முழுவதும் இன்று 12,480 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 முறை கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்றிருந்தார். இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதன்முறையாக 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் உரையாற்ற உள்ளார்.

    கிராம மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதற்காக 12 ஆயிரத்து 480 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆண்டுக்கு 6 கூட்டங்கள் கண்டிப்பாக நடத்தப்படும். சிறப்பு கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இது கிராமப்புறங்களிலும் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்புகள் கிடைத்துள்ளன என்பதற்கு சான்றாகும். 11 ஆயிரத்து 100 ஊராட்சிகளில் பைபர் ஆப்டிக் இணைப்புகள் இருந்தாலும் 10 ஆயிரம் ஊராட்சிகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் பேசி முடிந்த பிறகு கிராம சபைகளில் தெருக்களின் சாதிப் பெயர்களை நீக்குவது, மழைநீர் சேகரிப்பு, கொசு - டெங்கு ஒழிப்பு, குழந்தை தொழிலாளர் நிலை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

    நிகழ்வில், செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ஊராட்சி, தென்காசி மாவட்டம் முள்ளிக்குளம் ஊராட்சி, கோவை மாவட்டம் வாரப்பட்டி ஊராட்சி, விழுப்புரம் மாவட்டம் கொண்டாங்கி ஊராட்சி, தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் ஊராட்சி ஆகிய இடங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் முதல்-அமைச்சருடன் நேரடியாக கலந்துரையாட உள்ளனர்.

    • டெல்லியில் கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கபட்டுள்ளது.
    • டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டது.

    டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கபட்டுள்ளது. டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டது.

    மேலும், டெல்லியில் எந்த வகையான பட்டாசுகளை தயாரிப்பதும், சேமிப்பதும், விற்பனை செய்வதும், ஆன்லைன் டெலிவரி செய்வதும் மற்றும் வெடிப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகைகளை கொண்டாடும் விதமாக தடையை தளர்த்தலாம் என மத்திய அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு இணங்க உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் டெல்லி மக்களும், பட்டாசு விற்பனையாளர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே சமயம் இந்த உத்தரவால் டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்படும் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    • சோளிபாளையம் மீனாநகர் அருகே ஒரு இடத்தில் 2 பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
    • சோளிபாளையம் மீனாநகர் அருகே ஒரு இடத்தில் 2 பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

    'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    நேற்று ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சோளிபாளையம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    பிரசார கூட்டம் நடந்த இடத்தில் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி பல்வேறு கோஷங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. சோளிபாளையம் மீனாநகர் அருகே ஒரு இடத்தில் 2 பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

    அதில் ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி 2 கைகளையும் சேர்த்து வணக்கம் கூறும் படமும், இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் ஒரு கையை பேண்ட் பாக்கெட்டில் வைத்து இன்னொரு கையை 'ஹாய்' என காட்டும் படமும் அச்சிடப்பட்டு இருந்தது.

    2 பேனர்களிலும் விஜய் ரசிகர்கள்-தமிழக வெற்றி கழகம் மொடக்குறிச்சி தொகுதி என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    ஆனால், பிளக்ஸ் வைக்கப்பட்டு இருந்த தகவல் அறிந்து அங்கு வந்த தமிழக வெற்றிக்கழகம் கட்சி நிர்வாகிகளிடம் பேனர் குறித்து கேட்டபோது, நாங்கள் வைக்கவில்லை என்று கூறினார்கள். இதேபோல் கூட்டத்திலும் சிலர் த.வெ.க. கொடிகளை கைகளில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.
    • ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே கர்நாடக-தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    இந்த நீர்வரத்து நேற்று இரவு 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடியில் இருந்து 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

    இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர். 

    • 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பச்சை பொய் கூறுகிறார்.
    • விலையேற்றத்தை கட்டுப்படுத்த திறமையில்லாத அரசு தி.மு.க. அரசு.

    ஈரோடு:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி 5-வது கட்ட தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கி உள்ள அவர் நேற்று ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி மற்றும் வில்லசரம்பட்டியில் பிரசாரம் செய்தார்.

    மொடக்குறிச்சி தொகுதிக்கான கூட்டம் அவல்பூந்துறை அருகே உள்ள சோளிபாளையம் பகுதியில் நடந்தது. இதற்கு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி முன்னிலை வகித்தார்.

    திரண்டிருந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசார பஸ்சில் நின்றவாறு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5-ம் ஆண்டு நடந்து வருகிறது. இந்த 4 ஆண்டுகளில் மொடக்குறிச்சி தொகுதியில் ஏதாவது திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதா? எதுவும் இல்லை. கடந்த தேர்தலின் போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 520 அறிவிப்புகள் அறிவித்தது. அதில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. ஆனால் முதலமைச்சர் திட்டமிட்டு பொய்யை பரப்பி வருகிறார்.

    98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பச்சை பொய் கூறுகிறார். தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றார். உயர்த்தினார்களா?. 100 நாள் தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என்றார்கள். உயர்த்தினார்களா?. அதுவும் இல்லை. ஏற்கனவே பணி செய்த நாட்களுக்கு முழுமையான சம்பளம் வழங்க முடியாத அவல நிலை இன்றைய தினம் தொடர்கிறது.

    ஆனால், இந்த பணியாளர்களுக்காக அ.தி.மு.க. மத்திய அரசில் சம்பந்தப்பட்ட மந்திரியிடம் எடுத்துக்கூறி சம்பளம் முழுமையாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததன் பேரில் முதல்கட்டமாக ரூ.2 ஆயிரத்து 999 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

    மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உணவு பொருட்களின் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அரிசி விலை உயர்ந்து விட்டது.

    தமிழகத்தில் 65 சதவீதம் பேர் சாதாரண ஏழை மக்கள். விலை உயர்வால் இவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

    பச்சரிசி கிலோ ரூ.50-ல் இருந்து ரூ.77 ஆக உயர்ந்துள்ளது. பொன்னி அரிசி ரூ.50-ல் இருந்து ரூ.72 ஆக உயர்ந்துள்ளது. இட்லி புழுங்கல் அரிசி ரூ.30 என்பது ரூ.48-க்கு உயர்ந்துள்ளது.

    கடலை எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.130-ல் இருந்து ரூ.190 ஆகவும், நல்லெண்ணெய் ரூ.250-ல் இருந்து ரூ.400-க்கும், துவரம் பருப்பு ரூ.74-ல் இருந்து ரூ.130-க்கும், உளுந்தம்பருப்பு ரூ.79-ல் இருந்து ரூ.120-க்கும் உயர்ந்துள்ளது.

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

    அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வை தடுக்க கட்டுப்பாட்டு நிதி என்ற பெயரில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து கூட்டுறவுத்துறை மூலம் பொருட்கள் வாங்கி மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கினோம்.

    எனவே விலையேற்றத்தை தடுத்து நிறுத்தியது அ.தி.மு.க. அரசு. விலையேற்றத்தை கட்டுப்படுத்த திறமையில்லாத அரசு தி.மு.க. அரசு. ஓட்டு போட்ட மக்களுக்கு துரோகம் செய்யும் அரசு. விடியா தி.மு.க. அரசு.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனை தடையின்றி நடந்து கொண்டு இருக்கிறது. மாணவர்கள், பொதுமக்கள் போதைக்கு அடிமையாகி சீரழிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த சீரழிவுக்கு தி.மு.க. அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். திறமையற்ற முதலமைச்சர், பொம்மை முதலமைச்சர். என்ன செய்வதென்றே அறியாமல் ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டிலேயே கஞ்சா விற்பனை குறித்து எச்சரித்தோம். பிரதான எதிர்க்கட்சி சொல்வதை கேட்டு நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி இருக்கலாம்.

    அதை கேட்காததால் இன்று இந்தியாவிலேயே அதிகமாக போதைப்பொருட்கள் நடமாடும் மாநிலமாக தமிழகம் உருவாகிவிட்டது.

    எல்லா துறைகளிலும் ஊழல். ஊழல் இல்லாத துறைகளே இல்லை. தி.மு.க. என்றால் ஊழல். ஊழல் என்றால் தி.மு.க. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஊழலுக்காக ஆட்சி கலைக்கப்பட்ட வரலாறு கிடையாது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு தி.மு.க. அரசு.

    டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. பாட்டிலுக்கு ரூ.10 என்றால் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரத்து 500 கோடி. 4 ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இதை மறுக்க முடியுமா?

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு அவதூறுகளை பரப்புகிறார். நீங்கள் எங்கள் அ.தி.மு.க. ஆட்சி குறித்து பேசுங்கள் பதில் சொல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமுமில்லை. ஆனால், மு.க.ஸ்டாலிலுக்கு பயம் வந்துவிட்டது. எப்போது பா.ஜ.க. கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததோ அப்போதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது.

    இது எங்கள் கட்சி. நாங்கள் யாருடனும் கூட்டணி வைப்போம். நீங்கள் ஏன் பதறுகிறீர்கள். உங்களுக்கு ஏன் கவலை. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். தி.மு.க. கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதாக கூறுகிறார்கள். இருந்துவிட்டு போகட்டும். ஓட்டுபோடுவது கூட்டணி அல்ல. மக்கள் தான். மக்கள் தான் நீதிபதி. மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்கள் தான் ஆட்சிக்கு வரமுடியும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

    மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் குடிமராமத்து திட்டம் நிறைவேற்றப்படும். விவசாயிகளுக்கு 24 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். ஏழை பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும்.

    அருந்ததியர், பட்டியலினத்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். நெசவாளர்களுக்கு இலவச வீடு கட்டித்தரப்படும். கட்சிக்கு உழைக்கிறவர்கள் உயர்பதவிக்கு வரக்கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க. ஆனால் தி.மு.க. குடும்ப கட்சி. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் 2026 சட்டமன்ற தேர்தல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வில்லரசம்பட்டியில் பிரசாரம் செய்தார்.

    • காசா மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து சென்னையில் போராட்டம் நடந்தது
    • காசாவில் நடக்கும் போருக்கு மவுனமாக இருக்கும் மோடியும் தான் காரணம்.

    கடந்த 2023 அக்டோபரில் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 65,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.

    காசா மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சென்னையில் போராட்டம் நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ் ராஜ், "காசாவில் நடக்கும் போருக்கு இஸ்ரேல் மட்டும் காரணமில்லை. அதற்குத் துணையாக இருக்கும் அமெரிக்காவும் காரணம். மவுனமாக இருக்கும் மோடியும் தான் காரணம். இதை எதிர்த்துப் பேசாத ஒவ்வொரு மனிதரும் காரணம் தான்" என்று கூறினார்.

    இந்நிலையில், காச அமைதி ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை நண்பர் என அழைத்து பிரதமர் மோடி பதிவிட்ட பதிவை பகிர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.

    அவரது பதிவில், "உன் நண்பன் யார் என்று சொல்... நீ யார் என்று நான் உனக்குச் சொல்கிறேன்" என்று பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.

    • குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் அலங்கார திருமஞ்சன சேவை.
    • மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-25 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : பஞ்சமி இரவு 10.22 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம் : ரோகிணி இரவு 11.17 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, கீழ்த்திருப்பதி பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்

    குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் அலங்கார திருமஞ்சன சேவை. திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலை ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. திருநாளைப் போவார் குரு பூஜை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரங்கராஜர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம் பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-போட்டி

    ரிஷபம்-புகழ்

    மிதுனம்-உறுதி

    கடகம்-லாபம்

    சிம்மம்-ஜெயம்

    கன்னி-மாற்றம்

    துலாம்- பெருமை

    விருச்சிகம்-வரவு

    தனுசு- சிந்தனை

    மகரம்-பெருமை

    கும்பம்-பொறுப்பு

    மீனம்-உண்மை

    • மருத்துவக் கட்டமைப்பில் வட மாநிலங்களைவிட முன்னேறி, முதலிடத்தில் இருக்கிறோம்
    • காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து பிஞ்சுக் குழந்தைகளின் உயிரை பறித்தது

    தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மா நிறுவனம் தயாரித்த 'கோல்ட்ரிஃப்' (Coldrif) மற்றும் வெவ்வேறு இருமல் மருந்தை உட்கொண்டு பாஜக ஆளும் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 22 குழந்தைகள் உயிரிழந்தனர்.

    ம.பி. காவல்துறை அமைத்த சிறப்பு விசாரணைக் குழு நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை சென்னையில் கைது செய்தது.

    இந்நிலையில், காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து 20 பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ளது தமிழ்நாடு சுகாதாரத் துறையின் தோல்வி என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஞ்சிபுரத்தில் இயங்கிவரும் தனியார் மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து 20 பிஞ்சுக் குழந்தைகளின் உயிரை பறித்துள்ள கொடுந்துயர நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவலியையும் தருகின்றது.

    "மருத்துவக் கட்டமைப்பில் வட மாநிலங்களைவிட முன்னேறி, முதலிடத்தில் இருக்கிறோம்" என்றெல்லாம் தற்பெருமை பேசும் திராவிட மாடல் திமுக ஆட்சியில், தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து பிஞ்சுக் குழந்தைகளின் உயிரை பறித்தது உலக அளவில் மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

    ஸ்ரீ சான் பார்மா (Shri Saan Pharma) நிறுவனத்தின் 'Coldrif' இருமல் மருந்தில், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ப்ரோப்பிலீன் கிளைகால் (Propylene Glycol) அளவுக்கு அதிகமாக சேர்க்கப்பட்டிருந்ததே 20 இளந்தளிர்களின் இன்னுயிர் பறிக்கப்பட முதன்மைக் காரணம் என்பது தற்போதைய விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ சான் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கோவிந்தன் மத்திய பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் (Drug Control Department) நடத்திய ஆய்வில், அந்த நிறுவனத்தில் 14 ஆண்டுகளாக எந்த சோதனையும் நடத்தப்படவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. முந்தைய அதிமுக அரசு மற்றும் தற்போதைய திமுக அரசுகளின் அலட்சியத்தால், ஸ்ரீ சான் பார்மா நிறுவனம் மொத்தம் 364 விதிமீறல்களைக் கடந்த 14 ஆண்டுகளில் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    இதுபோன்ற மோசடி நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க கடந்த 60 ஆண்டுகால திராவிட ஆட்சிகளில் நிலவும் ஊழல் முறைகேடுகளே அடிப்படை காரணமாகும். மருந்தகங்களில் மாதம் 1000 ரூபாயும், மருத்துவமனைகளில் மாதம் 2000 ரூபாயும், இலஞ்சமாக வசூலிக்கும் தமிழ்நாடு மருத்துவத் துறை அதிகாரிகள், இந்நிறுவனங்களிடமிருந்து இலட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளனர் என்பதும் தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களோ, செவிலியர்களோ, மருந்துகளோ இருப்பதில்லை; அதனை சீர்செய்து ஏழை மக்களுக்கு தரமான மருத்துவத்தை திமுக அரசால் இன்றளவும் தர முடியவில்லை. தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் திருட்டினை தடுக்க முடியவில்லை; அம்முறைகேடுகளின் உச்சமாக தற்போது ஸ்ரீ சான் பார்மா போன்ற தனியார் மருந்து நிறுவனங்களை முறையாக ஆய்வு செய்து அவற்றில் நடைபெறும் மோசடிகளையும் கண்டறிந்து தடுக்க முடியவில்லை. அதன் காரணமாகவே மத்திய பிரதேசத்தை சேர்ந்த 20 பிஞ்சு குழந்தைகளின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்க திமுக அரசு காத்திருக்கிறது?

    சுகாதாரத்துறையில் எந்தக்குறையும் இல்லை என்று மூடி மறைக்கும் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அண்ணன் மா.சுப்ரமணியன் இப்பெருந்துயரத்திற்கு என்ன பதில் கூறப்போகிறார்?

    தமிழ்நாட்டை தலைகுனியவிடமாட்டோம் என்று சொன்ன தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் உலக அளவில் ஏற்பட்டுள்ள இத்தலைகுனிவிற்கு என்ன பதில் கூறப்போகிறார்? இதுதான் எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சியா?

    ஆகவே, 20 குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான ஸ்ரீ சான் பார்மா நிறுவனத்தினைத் தடைசெய்து, குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பெருந்துயரங்கள் நிகழாமல் தடுக்க தமிழ்நாடு முழுவதும் இயங்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் மருந்தகங்களில் முறையான ஆய்வுகள் தொடர்ச்சியாகச் செய்யப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீட்டை விரிவுசெய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    ரிஷபம்

    பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

    மிதுனம்

    அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

    கடகம்

    தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

    சிம்மம்

    யோகமான நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகலாம்.

    கன்னி

    வரவைவிட செலவு கூடும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உருவாகும்.

    துலாம்

    விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். நினைத்த காரியத்தை முடிக்க முடியாது.

    விருச்சிகம்

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். பிரபலஸ்தர்களின் சந்திப்பு உண்டு. வருங்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    தனுசு

    தொட்டது துலங்கும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பயணத்தால் பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவுகள் கைக்கு கிடைக்கலாம்.

    மகரம்

    அலைச்சல் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் இடமாற்றங்கள், எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். தொழில் ரீதியாக முக்கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள்.

    கும்பம்

    மனக்குழப்பம் அகலும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். கடுமையான எதிர்ப்புகள் திடீரென சாதகமாகி விடும். கல்யாண முயற்சி கைகூடும்.

    மீனம்

    எதிரிகள் உதிரியாகும் நாள். பணவரவு திருப்தி தரும். வீடு, இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வரலாம்.

    ×