என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து சென்றது. அதிலும் கடந்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என்ற உச்சத்தை தாண்டியது. அதன் பின்னரும், தொடர்ந்து விலை அதிகரித்தபடியே காணப்பட்டு, ஒரு சவரன் ரூ.64 ஆயிரம் என்ற வரலாறு காணாத உச்சத்தையும் எட்டிப் பிடித்தது.

    தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.10-ம், சவரனுக்கு ரூ.80-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 990-க்கும், ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்து 920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,890-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.63,120-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    14-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,920

    13-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840

    12-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    11-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480

    10-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    14-02-2025- ஒரு கிராம் ரூ.108

    13-02-2025- ஒரு கிராம் ரூ.107

    12-02-2025- ஒரு கிராம் ரூ.107

    11-02-2025- ஒரு கிராம் ரூ.107

    10-02-2025- ஒரு கிராம் ரூ.107

    • சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே?
    • தமிழகம் தற்போது, 2006 - 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தை விட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட, எஞ்சினியரிங் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்களை, சாராய வியாபாரிகள் படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது அந்தந்த பகுதி காவல்துறைக்குத் தெரியாமலா இருக்கும்? இன்று சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் உயிர் போயிருக்கிறதே. உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா?

    துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே? தமிழ்த் திரையுலகம் உங்கள் கைகளில்தானே இருக்கிறது.

    தமிழகம் தற்போது, 2006 - 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தை விட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. உங்கள் கையாலாகாத்தனத்தால், அமைதியான பொதுமக்களை, மிக மிக மோசமான எதிர்விளைவுகளுக்குத் தூண்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும் என தெரிவித்துள்ளார். 

    • XEV9e மற்றும் BE6 மின்சார கார்கள் 30,179 புக்கிங்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளன.
    • மின்சார கார்கள் விற்பனையில் இது ஒரு மைல்கல் என மஹிந்திரா பெருமிதம் தெரிவித்துள்ளது.

    மஹிந்திராவின் புதிய EV மாடல்களான XEV9e மற்றும் BE6, விற்பனைக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்ட முதல் நாளே 30,179 புக்கிங்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளன. இதன் முன்பதிவு மதிப்பு மட்டும் ரூ.8,472 கோடி (Ex-Showroom) என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    மின்சார கார்கள் விற்பனையில் இது ஒரு மைல்கல் என மஹிந்திரா பெருமிதம் தெரிவித்துள்ளது.

    மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e மின்சார கார்கள் 170kW மோட்டார் 59kWh பேட்டரி மற்றும் 210kW மோட்டார் 79kWh பேட்டரி என்று 2 மாடல்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த மொட்டரின் டார்க்விசை 380Nm ஆகும்.

    மஹிந்திரா BE 6 காரின் விலைகள் (எக்ஸ்-ஷோரூம்):

    பேக் ஒன்று 59kWh - ரூ. 18.90 லட்சம்

    பேக் ஒன்றுக்கு மேல் 59kWh - ரூ. 20.50 லட்சம்

    பேக் 2 59kWh - ரூ. 21.90 லட்சம்

    பேக் 3 செலக்ட் 59kWh - ரூ. 24.50 லட்சம்

    பேக் 3 79kWh - ரூ. 26.90 லட்சம்

    மஹிந்திரா XEV 9e காரின் விலைகள் (எக்ஸ்-ஷோரூம்):

    பேக் 1 59kWh - ரூ. 21.90 லட்சம்

    பேக் 2 59kWh - ரூ. 24.90 லட்சம்

    பேக் 3 செலக்ட் 59kWh - ரூ. 27.90 லட்சம்

    பேக் 3 79kWh - ரூ. 30.50 லட்சம்

    மஹிந்திரா BE 6 மற்றும் மஹிந்திரா XEV 9e மின்சார கார்களின் பேக் 3 மாடல் இந்தாண்டு மார்ச் மாதத்திலும் பேக் 3 செலக்ட் மாடல் ஜூன் மாதத்திலும் பேக் 2 மாடல் ஜூலையிலும் பேக் 1 மற்றும் பேக் ஒன்றுக்கு மேல் மாடல் ஆகஸ்டிலும் டெலிவரி செய்யப்படும் என்று மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    • பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் சென்று கொண்டிருந்தது.
    • மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நடந்து வருகிறது.

    இதில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 10 பேர் ஒரு காரில் கும்பமேளாவுக்கு புறப்பட்டு சென்றனர்.

    உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த பஸ் கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கார் முழுவதும் நொறுங்கியது.

    அதிலிருந்து பக்தர்கள் 10 பேர் பலியானார்கள். மேலும் பஸ்சில் இருந்த மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

    நள்ளிரவில் நடந்த இந்த விபத்து காரணமாக பிரயாக்ராஜ்-மிர்சாபூர் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியானவர்கள் உடல்களை ஸ்வரூப் ராணி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

    பலியானவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    • பெட்ரோல் வினியோகிக்கப்படும் எந்திரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள விலையை அவர் சரிபார்த்தார்.
    • வீடியோ 2 நாளில் 63 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.

    அண்டை நாடான பூடான் நாட்டின் பணமான குல்ட்ரம் மதிப்பும் நம் நாட்டு ரூபாயின் மதிப்பும் ஒரே மதிப்பு கொண்டதாக உள்ளது. டெல்லியை சேர்ந்தவர் அர்பாஸ்கான். வௌியூர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இணைய தளத்தில் இவரை 5 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் அர்பாஸ்கான் அண்டை நாடான பூடானுக்கு சுற்றி பார்க்க சென்றார். அப்போது நம் நாட்டில் உள்ள பெட்ரோல் பங்க்குகளை நிர்வகிக்கும் பாரத் மற்றும் இன்டேன் நிறுவனங்களின் பங்க்குகள் இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தார். தொடர்ந்து அங்கு விற்கப்படும் பெட்ரோல் விலை குறித்து அறிய ஆர்வம் கொண்டார்.

    பெட்ரோல் வினியோகிக்கப்படும் எந்திரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள விலையை அவர் சரிபார்த்தார். அப்போது அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 63.92 என தெரிந்துள்ளது. இந்தியாவில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100 ரூபாய்க்கு விற்கப்படுவதை காட்டிலும் பூடானில் 37 ரூபாய்வரை குறைவாக விற்கப்படுவதை அவர் சுட்டிகாட்டினார். இந்த வீடியோ 2 நாளில் 63 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.



    • தோல்வியை ஒருபோதும் இறுதி இலக்காகக் கருதாதீர்கள். ஏனென்றால் வாழ்க்கை எப்போதும் இரண்டாவது வாய்ப்பை அளிக்கிறது.
    • படிப்பிலும் வாழ்க்கையிலும் பல முறை தோல்வியடைந்தேன்.

    உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் ஜேஇஇ தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட 18 வயது மாணவி பற்றி அதானி குழுமத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் கவுதம் அதானி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "உங்கள் அனைவருக்கும் எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் மட்டுமே உள்ளது - தோல்வியை ஒருபோதும் இறுதி இலக்காகக் கருதாதீர்கள். ஏனென்றால் வாழ்க்கை எப்போதும் இரண்டாவது வாய்ப்பை அளிக்கிறது..." என்று தெரிவித்து உள்ளார்.

    மாணவியின் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்த அவர், "எதிர்பார்ப்புகளின் சுமையில் ஒரு நம்பிக்கைக்குரிய மகள் இப்படிச் செல்வதைப் பார்ப்பது மனவேதனை அளிக்கிறது".

    அந்த மாணவி தனது பெற்றோருக்கு "அவர்களின் கனவுகளை நிறைவேற்றாததற்கு" "மன்னிக்கவும்" என்று ஒரு குறிப்பை எழுதி வைத்திருந்தார்.

    வாழ்க்கைப் பாடத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், பெற்றோர்கள் தங்களிடமிருந்தும் தங்கள் குழந்தைகளிடமிருந்தும் அழுத்தங்களை விலக்கி வைக்குமாறு அறிவுறுத்தினார்.

    "வாழ்க்கை எந்தத் தேர்வையும் விடப் பெரியது - பெற்றோர்கள் இதைப் புரிந்துகொண்டு தங்கள் குழந்தைகளுக்கும் விளக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி தனது தனிப்பட்ட தோல்விகள் மற்றும் அதிலிருந்து எப்படி மீண்டார் என்பது குறித்தும் மனம் திறந்து கூறி உள்ளார். அதில்,

    "நான் படிப்பில் மிகவும் சாதாரணமாக இருந்தேன்". மேலும் "படிப்பிலும் வாழ்க்கையிலும் பல முறை தோல்வியடைந்தேன்".

    "ஆனால் ஒவ்வொரு முறையும் வாழ்க்கை எனக்கு ஒரு புதிய பாதையைக் காட்டியது" என்று கூறினார்.

    • இன்றைய முக்கியச் செய்திகள்
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • ஆடை முழுவதும் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது.
    • அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களில் தனக்கு தேவையானதை தேர்வு செய்து கொண்டிருந்தார்.

    சார்ஜ் போடும்போது சூடாகி செல்போன்கள் வெடிப்பதை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் எவ்வித பயன்பாடும் இன்றி சாதாரணமாக நம் ஆடையில் வைக்கப்பட்டிருக்கும்போது செல்போன் வெடிப்பது என்பது கொஞ்சம் அரிதாக நடக்கும் நிகழ்வு. அத்தகைய நிகழ்வு ஒன்று பிரேசிலில் நடந்துள்ளது.

    காய்கறி சந்தைக்கு இளம்பெண் ஒருவர் தனது தோழருடன் சென்றிருந்தார். அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களில் தனக்கு தேவையானதை தேர்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த பேண்ட்டின் பின்பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த செல்போன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. தொடர்ந்து அவருடைய ஆடை முழுவதும் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது.

    இதனால் செய்தறியாமல் அவர் அங்கும் இங்கும் ஓடியபடி அலறி துடித்தார். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இதுதொடர்பான வீடியோ பதிவாகி இருந்தநிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.



    • கடைசியாக 2007 ஆம் ஆண்டு BSNL காலாண்டு லாபத்தை ஈட்டியது.
    • BSNL சந்தாதாரர் எண்ணிக்கையும் டிசம்பரில் சுமார் 9 கோடியாக உயர்ந்துள்ளது.

    நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ( அக்டோபர் முதல் டிசம்பர் வரை) ரூ.262 கோடி நிகர லாபமாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்க்கு கிடைத்துள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு காலாண்டு வருவாயில் இந்நிறுவனத்தால் லாபம் ஈட்டப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

    இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர், "கடைசியாக 2007 ஆம் ஆண்டு BSNL காலாண்டு லாபத்தை ஈட்டியிருந்தது. கடந்தாண்டு ஜூன் மாதத்தில் 8.4 கோடியாக இருந்த சந்தாதாரர் எண்ணிக்கையும் டிசம்பரில் சுமார் 9 கோடியாக உயர்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.

    கடந்த நிதியாண்டின் 3ம் காலாண்டை ஒப்பிடும் போது, BSNL செல்போன் சேவை வருவாய் 15%, பைபர் இணையசேவை வருவாய் 18%, தொலைத்தொடர்பு கம்பி வழித்தட குத்தகை வருவாய் 14% அதிகரித்துள்ளன

    மேலும், BSNL அதன் நிதிச் செலவு மற்றும் ஒட்டுமொத்த செலவினங்களை குறைத்துள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட ரூ.1,800 கோடிக்கு மேல் நட்டம் குறைந்துள்ளன.

    • ஒன்றிய அரசில் இருக்கிறவர்களுக்கு மனசாட்சி இருக்கா என்று கேட்க தோன்றுகிறது.
    • கருத்து முரண்பாடுகளால் எங்கள் நட்புறவில் எந்த பாதிப்பும் இல்லை.

    சென்னை:

    'உங்களில் ஒருவன் பதில்கள்' மூலமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    நீண்ட இடைவெளிக்குப்பிறகு 'உங்களில் ஒருவன் பதில்கள்' மூலமாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி... ஆரம்பிக்கலாமா....

    கே: தலைவர்- முதல்வர்... இப்போது 'அப்பா' என்று அழைக்கிறார்களே!

    ப: கட்சிக்காரர்கள் இயக்கத்திற்கு தலைவர் ஆனதும் தலைவர் என்று கூப்பிடுகிறார்கள். முதலமைச்சர் பொறுப்பில் இருப்பதால் முதல்வர் என்று அழைக்கிறார்கள். இன்றைய இளைய தலைமுறைகள் என்னை அப்பா என்று அழைப்பதை கேட்கும் போது ஆனந்தமாக உள்ளது. காலப்போக்கில் மற்ற பொறுப்புகளுக்கு வேறு யாராவது வருவார்கள். ஆனா இந்த அப்பா என்று உறவு மாறாது. அந்த சொல் என்னுடைய பொறுப்புகளை இன்னும் கூட்டியிருக்கிறது என்று சொல்வேன். நான் இன்னும் தமிழ்நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்குன்னு எனக்கு உணர்த்துகிறது.

    கே: பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு இந்த பட்ஜெட்டால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது?

    ப: தமிழ்நாட்டுக்கு இந்த பட்ஜெட்டால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது? தமிழ்நாட்டை புறக்கணிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் இல்லை. பெயரை கூட சொல்வதில்லை. மாநிலங்களை ஒப்பிட்டு ஒன்றிய அரசு வெளியிடுகிற எல்லா புள்ளிவிவரங்களிலும் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது என அறிக்கை மட்டும் தருகிறார்கள். ஆனா பணம் மட்டும் தரமாட்டோம்ன்னு புரண்டு பிடிக்கிறார்கள். மாநில அரசின் நிதி வைத்து திட்டங்களை செயல்படுத்தணும்னு சொல்றாங்க. மாநில அரசின் நிதி வைத்து நாம் பல திட்டங்களை சிந்தித்து இருந்தாலும் ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு கிடைத்தால் தானே இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். நாம பசங்க படிக்கறதுக்க வேண்டியதற்கான நிதியை கூட கொடுக்கமாட்டேங்கறாங்கண்ணா என்ன அர்த்தம்? ஏற்கனவே கொடுத்துட்டு இருந்த நிதியையும் கொடுக்காமல் நிறுத்தினால் என்ன பண்றது? இப்படி ஒன்றிய அரசு தொடர்ந்து நம்மை வஞ்சித்துக்கொண்டே இருக்கு. நாமும் தொடர்ந்து போராடிக்கிட்டே இருக்கோம். இதுல நம்ம உரிமை கேட்குறதே அற்ப சிந்தனை என்று ஒன்றிய அமைச்சர் சொல்கிறார். ஒன்றிய அரசில் இருக்கிறவர்களுக்கு மனசாட்சி இருக்கா என்று கேட்க தோன்றுகிறது.

    கே: கல்வி... குறிப்பாக பெண்களுக்கான கல்வி குறித்து தொடர்ச்சியாகப் பேசுகிறீர்கள். திட்டங்களையும் அறிவிக்கிறீர்கள். இந்த 4 ஆண்டுகளில் என்ன மாற்றத்தை உணர்கிறீர்கள்?

    ப: நாம் ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் இருந்து கல்விக்காக நிறைய செய்து கொண்டு இருக்கோம். கல்வி தான் யாராலும் திருட முடியாத சொத்து. ஒருவருடைய கல்வித்தான் அவருடைய தலைமுறையை முன்னேற்றி விடும் என்று சொல்லிக்கொண்டு இருக்கேன். அதனால் தான் காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என்று நிறைய திட்டங்களை செய்கிறோம். குறிப்பாக பெண்களுக்கு கல்வி அறிவு கிடைக்கணும்னு ஏராளமான திட்டங்களை செய்து கொண்டு இருக்கிறோம். இதனால ஏராளமானவர்கள் பயன் அடைந்து இருக்கிறார்கள். பயன் அடைந்த பலர் பேசுகிற வீடியோக்களை நீங்களும் பார்த்து இருப்பீர்கள். இந்த திட்டங்களால் முன்னேறியவர்கள் எனக்கு கடிதம் எழுதுகிறார்கள். அதைப்போல நான் கொடுக்கிற அப்பாயிண்மெண்ட் ஆர்டர் பெரும்பாலும் பெண்களுக்காக இருக்கிறதை பார்த்து நான் பெருமை அடைகிறேன். கல்விக்காக இன்னும் நிறைய செய்யணும் நினைக்கிறேன்.

    கே: கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை எப்படி பார்க்கிறீர்கள்? முரண்கள் இருக்கின்றனவா?

    ப: கூட்டணி கட்சிகளின் கருத்துக்களை நான் ஆலோசனையாக தான் பார்க்கிறேன். முரண்பாடா நினைக்கிறது இல்லை. எல்லா இடத்திலும் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும். கருத்து சொல்வது ஜனநாயகப்பூர்வமான உறவின் அடையாளம் தான். 2019-ல் இருந்து ஒன்றாக சேர்ந்து தேர்தல் களத்தை சந்தித்து வருகிறோம். பா.ஜ.க.வை எதிர்த்து வெற்றி பெறுவதில் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டா இருப்பது தி.மு.க. தலைமையிலான கூட்டணி தான். கருத்து முரண்பாடுகளால் எங்கள் நட்புறவில் எந்த பாதிப்பும் இல்லை.

    கே: டெல்லி முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சம்மட்டி அடி என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சொல்லியிருக்கிறாரே?

    ப: நான் ஏற்கனவே சொன்னது தான். பழனிசாமியின் அறிக்கையை பார்த்தால் பா.ஜ.க.வின் அறிக்கை மாதிரி தான் இருக்கும். அவருடைய குரலே பா.ஜ.க.வின் டப்பிங் குரல்தான். நாம கள்ளக்கூட்டணின்னு சொல்றத நிரூபிக்கிற பழனிசாமி அவ்வளவுதான். இதெல்லாம் பேசுறதுக்கு முன்னாடி அவர் தனது தோல்விகள் குறித்து யோசித்து பார்க்க வேண்டும்.

    கே: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான செய்திகள் இப்போது அதிகம் வருகின்றதே!

    ப : பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து இருக்கிறோம். பாலியல் குற்றங்களுக்கு இன்னும் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கு சட்டமன்றத்தில் நானே சட்டங்களை கொண்டு வந்திருக்கிறேன். சிறப்பு நீதிமன்றங்களை கொண்டு வந்திருக்கிறோம். உடனடியாக தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறோம். பாலியல் குற்றங்களை செய்கிறவர்கள் அவங்க வீட்டில் இப்படி ஒரு குற்றம் நடந்தால் எப்படி எதிர்கொள்வார்கள் என்று நினைத்து பார்க்கணும்.

    கே: சோஷியல் மீடியாக்களில் வரும் கருத்துக்களை பார்ப்பீர்களா?

    ப: ஓய்வுநேரங்களில் பார்ப்பதுண்டு. செய்திகளை விட மக்களின் கருத்துக்கள் என்ன என்று பார்ப்பேன். தீயவற்றை விலக்கிட்டு நல்லதை எடுத்துப்பேன். யாராவது கோரிக்கை வைத்திருந்தால் அதை நியாயமான கோரிக்கையாக இருந்தால் அதை தீர்த்து வைக்கச் சொல்லி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பேன். பொதுவா சோஷியல் மீடியாக்களில் உணவு சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வருது. நிறைய பேர் ஓட்டல்களுக்கு போய் உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கற மாதிரி Fitness-க்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.



    • காதலரை வாடகைக்கு எடுக்கும் நடைமுறை பல நாடுகளில் பிரபலமாக உள்ளது.
    • இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு 'ரென்ட் எ பாய்பிரண்ட்' என்ற தளம் மும்பையில் தொடங்கப்பட்டது.

    உலகம் முழுவதும் காதலர் தினம் நேற்று (பிப்ரவரி 14) கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் 'வாடகைக்கு காதலன் வேண்டுமா? ஒரு நாளுக்கு ரூ 389 கொடுத்தால் போதும்' என்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த போஸ்டரில் ஒரு QR கொடு ஒன்றும் கொடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான தகவல்களை பெற அதை ஸ்கேன் செய்யுங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெட்டிசன்கள் பலர் இந்த போஸ்டரை இணையத்தில் பகிர்ந்து காவல்துறையினர் டேக் செய்தனர்.

    காதலரை வாடகைக்கு எடுக்கும் நடைமுறை ஜப்பான், சீனா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக பிரபலமாக உள்ளது.

    இந்தியாவிலும் 2018 ஆம் ஆண்டு 'ரென்ட் எ பாய்பிரண்ட்' என்ற தளம் மும்பையில் தொடங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டில், இதே போன்ற சேவைகள் பெங்களூரு மற்றும் பிற பெருநகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பேருந்து ஓட்டுநர் மற்றும் ஒரு பயணியின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
    • 41 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    பெரு நாட்டில் பாலம் இடிந்து விழுந்ததில் டபுள் டெக்கர் பேருந்து ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

    மீட்புப் பணியில் 50க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளும் 100 தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    பேருந்து ஓட்டுநர் மற்றும் ஒரு பயணியின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. மேலும் 41 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    பெரு நாட்டில் பேருந்து விபத்துக்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. பெரு நாட்டில் 2023 ஆம் ஆண்டு  சாலை விபத்துக்களில் 3,138 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×