என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சட்டவிரோதமாக தங்கியிருந்த மேலும் 119 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்துகிறது.
    • 119 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு 2 விமானங்கள் இன்றிரவு பஞ்சாப் மாநிலத்துக்கு வர உள்ளது.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கூறி ஏற்கனவே 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். இந்தியர்களுக்கு கைவிலங்கு போட்டு அமெரிக்கா நாடு கடத்தியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு வந்த விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரை இறங்கியது. இதையடுத்து அங்கிருந்து இந்தியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

    இதனை தொடர்ந்து, சட்டவிரோதமாக தங்கியிருந்த மேலும் 119 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்துகிறது. 119 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு 2 விமானங்கள் இன்றிரவு பஞ்சாப் மாநிலத்துக்கு வர உள்ளது.

    இந்த நிலையில், விமானத்தை தரையிறக்க அமிர்தசரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணத்தை வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்த வேண்டும் என்று பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    * முதல் விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. இப்போது, இரண்டாவது விமானம் இங்கு தரையிறங்கும். விமானத்தை தரையிறக்க அமிர்தசரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணத்தை வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்த வேண்டும்.

    * பிரதமர் மோடியும்- டிரம்பும் சந்தித்த நேரத்தில், அமெரிக்க அதிகாரிகள் நம் மக்களைக் கட்டிப்போட்டிருக்க வேண்டும். டிரம்ப் கொடுத்த பரிசு இதுதானா?

    * லாகூர் அமிர்தசரஸிலிருந்து வெறும் 40 கி.மீ தொலைவில் உள்ளது. எதிரி நாடான பாகிஸ்தான், அமிர்தசரஸ் அருகில் உள்ளது என்று தெரிந்தும், இந்த விமானங்களை இங்கே தரையிறக்க மத்திய அரசு ஏன் தேர்வு செய்தது? இது என்ன வகையான வெளியுறவுக் கொள்கை? விமானங்களை தேசிய தலைநகரில் தரையிறக்க வேண்டும் அங்கிருந்து நம் மக்களை அழைத்து வருவோம்...

    * பஞ்சாபியர்கள் மட்டுமே சட்டவிரோத குடியேறிகள் என்று சித்தரிக்க வேண்டுமென்றே அமிர்தசரஸ் தேர்ந்தெடுக்கப்படுகிறது. பா.ஜ.க. எப்போதும் பஞ்சாபை அவதூறு செய்ய சதி செய்கிறது. அமிர்தசரஸில் இருந்து சர்வதேச விமானங்களை இயக்க அவர்கள் அனுமதிப்பதில்லை, அது அதற்கு ஏற்றதல்ல என்று கூறி, இப்போது அமெரிக்காவிலிருந்து விமானங்கள் ஏன் வருகின்றன?...

    * விமானத்தை டெல்லி அல்லது அகமதாபாத்தில் தரையிறக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கிறேன் என்றார்.

    முன்னதாக, டெல்லி சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு 104 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு வந்த விமானத்தை டெல்லியில் தரையிறக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராகிங் செய்த மாணவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • விடுதியில் தங்கியிருந்த மாணவன் கடந்த 3 மாதங்களாக சித்ரவதைகளை அனுபவித்தபடி இருந்திருக்கிறான்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தில் அரசு நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் முதலாமாண்டு மாணவரை, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 5 பேர் கொடூரமாக சித்ரவதை செய்து ராகிங் செய்தனர்.

    அதாவது அந்த மாணவரை கட்டிலில் கட்டி வைத்தும், ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கியும், அந்தரங்க உறுப்பின் மேல் எடை தூக்கும் கருவியை வைத்தும், கூர்மையான திசைகாட்டியால் உடலில் பல இடங்களில் குத்தி காயப்படுத்தியும் சித்ரவதை செய்தார்கள்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முதலாமாண்டு மாணவரை கொடூர சித்ரவதைக்கு உள்ளாக்கி ராகிங் செய்த மாணவர்கள் சாமுவேல் ஜான்சன், ராகுல்ராஜ், ஜீவ், ரிஜில் ஜித், விவேக் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் மீது ராகிங் தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    மாணவர்கள் 5 பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டும் செய்தது. இந்தநிலையில் முதலாமாண்டு மாணவனை, பிற மாணவர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கி ராகிங் செய்த வீடியோ காட்சி வெளியானது. மாணவன் கதறும் நிலையில், இவ்வளவு கொடூரமாக சித்ரவதை செய்ய முடியுமா? என்ற கேள்வி எழும்பும் வகையில் அந்த வீடியோ மிகவும் பயங்கரமாக இருந்தது.

    விடுதியில் தங்கியிருந்த அந்த மாணவன் கடந்த 3 மாதங்களாக சித்ரவதைகளை அனுபவித்தபடி இருந்திருக்கிறான். அரசு நர்சிங் கல்லூரியில் நடந்திருக்கும் இந்த ராகிங் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதால், அந்த சம்பவம் குறித்து மருத்துவக்கல்வி இயக்குனர் நேரடியாக விசாரணை நடத்தினார்.

    இந்தநிலையில் மாணவன் சித்ரவதைக்குள்ளான நர்சிங் கல்லூரியின் முதல்வர் சுலேகா, விடுதியின் உதவி வார்டனாக இருந்த உதவி பேராசிரியர் அஜீஷ் மணி ஆகிய இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மருத்துவக்கல்வி இயக்குனர் விசாரணையை தொடர்ந்து மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலர் ராஜன் கோப்ரகடே இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விண்வெளி ஆய்வுமையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
    • நான் அதிபர் ஆனால் சுனிதா வில்லியம்சை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் கூறியிருந்தார்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் ஆய்வுக்காக விண்வெளி ஆய்வுமையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 10 நாளில் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது.

    தொழில்நுட்ப கோளாறால் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த 6 மாதத்துக்கும் மேலாக விண்வெளி ஆய்வு மையத்தில் வீரர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

    சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை மீட்டுக் கொண்டு வருவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விரைவில் ராக்கெட் அனுப்ப உள்ளது என நாசா அறிவித்திருந்தது.

    இந்நிலையில், வெண்வெளியில் இருந்தபடியே சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பேட்டி கொடுத்துள்ளனர். அதில், "நாசாவின் க்ரூ-10 விண்கலம் மார்ச் 12 ஆம் தேதி பூமியில் இருந்து ஏவப்படும் என்றும் மார்ச் 19 ஆம் தேதி நாங்கள் பூமிக்கு திரும்புவோம்" என்று தெரிவித்தனர்.

    நான் அதிபர் ஆனால் சுனிதா வில்லியம்சை மீட்டு பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
    • நாங்கள் வேண்டுமானால் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம்.

    'உங்களில் ஒருவன் பதில்கள்' மூலமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பதில் அளித்துள்ளார்.

    இந்நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு அவருக்கு கேள்வி எழுப்பி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா??? முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே!!

    தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA, MP அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி! என்று தெரிவித்துள்ளார்.

    • சாப்பிடும் போது குடும்ப விஷயங்களை மட்டும் விவாதிக்க வேண்டும்.
    • தனது தாயிடம் தனது நடத்தை குறித்து புகார் செய்வதை நிறுத்த வேண்டும்.

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுபம் மற்றும் அனையா தம்பதியினர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்கள் இருவரும் நேற்று காதல் தினத்தில் பத்திரத்தில் வினோத ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

    அந்த ஒப்பந்தத்தில் மனைவி, கணவர் பின்பற்ற வேண்டியவை குறித்து தெரிவித்துள்ளதாவது சாப்பிடும் போது குடும்ப விஷயங்களை மட்டும் விவாதிக்க வேண்டும்.

    வர்த்தகம் பற்றி பேசக்கூடாது. இனி என்னை பியூட்டி காயின், கிரிப்டோ பை என அழைப்பதை நிறுத்த வேண்டும். படுக்கை அறையில் பங்குச்சந்தை லாபம் நஷ்டம் பற்றி பேசக்கூடாது.

    இரவு 9 மணிக்கு பிறகு வர்த்தகம் தொடர்பான செயலி மற்றும் வீடியோக்களை பார்க்க கூடாது. இவ்வாறு மனைவி கூறி இருந்தார்.

    அதேபோல் கணவரும் மனைவிக்கு சில நிபந்தனைகளை விதித்து இருந்தார். அதில் தனது தாயிடம் தனது நடத்தை குறித்து புகார் செய்வதை நிறுத்த வேண்டும். வாக்குவாதத்தின் போது முன்னாள் காதலி குறித்து பேசக்கூடாது.

    விலை உயர்ந்த தோல் மற்றும் பராமரிப்பு பொருட்களை வாங்கக்கூடாது. இரவு நேரங்களில் ஆப் மூலம் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்ய கூடாது இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த ஒப்பந்தங்களை மீறினால் 3 மாதங்களுக்கு துணி துவைப்பது, கழிவறையை சுத்தம் செய்வது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து சமையல் செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்ய வேண்டும் என ஒப்பந்தத்தில் தெரிவித்து இருந்தனர்.

    இவர்களின் வேடிக்கையான ஒப்பந்தம் போட்ட பத்திரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் தொற்றுப் பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
    • லேசான காய்ச்சல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ரோம்:

    கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிசுக்கு (வயது 88) திடீரென்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் வாடிகனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் தொற்றுப் பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து மேல் சிகிச்கைக்காக இத்தாலியின் ரோமில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


    இதுகுறித்து வாடிகன் கூறும்போது,

    போப் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். ஆனால், அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு லேசான காய்ச்சல் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிபர் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து விவாதித்தார்.
    • போர்பன் என்பது சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை அமெரிக்க விஸ்கி ஆகும்.

    பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    கடந்த 10-ம் தேதி பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி தலைநகர் பாரீசில் நடந்த சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இதையடுத்து, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்தார். இச்சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 2 நாள் பயணமாக சென்றடைந்தார். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதிபர் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து விவாதித்தார். அதனை தொடர்ந்து பரஸ்பர வரிவிதிப்பு முறை அறிமுகம் படுத்தப்பட்டது.



    இந்தியா மீது பரஸ்பர வரிகளை விதிக்கும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததன் எதிரொலியால், போர்பன் விஸ்கி மீதான வரியை 150%-லிருந்து 100%-ஆகக் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

    அமெரிக்க 'போர்பன் விஸ்கி' தயாரிப்பு நிறுவனங்களான JIM BEAM, FOUR ROSES, MAKER'S MARK 2 இந்த வரி குறைப்புகள் பயனளிக்கும் என கூறப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் மற்ற அனைத்து மதுபானங்களும் தொடர்ந்து 100 சதவீத இறக்குமதி வரியை கொண்டு இருக்கும்.

    போர்பன் விஸ்மி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால் மதுபான பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    போர்பன் என்பது சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை அமெரிக்க விஸ்கி ஆகும். இது அதன் லேசான இனிப்பு சுவைக்கு பெயர் பெற்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொலை செய்யப்படும் அளவிற்கான பதட்டமான சூழலை வாடிக்கையாக்கிய திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
    • பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் நடைபெற்ற சாராய விற்பனையை தட்டிக் கேட்ட இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றன.

    சாராய விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட ஒரு சில தினங்களிலேயே ஜாமினில் வெளிவந்து மீண்டும் சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர்களை இளைஞர்கள் தட்டிக் கேட்டதாலே இந்த படுகொலைச் சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது.

    கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்கள் என அனைத்து வகையிலான குற்றச் சம்பவங்களில் கைதாகும் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தராததும், ஜாமினில் வெளியே வருவோரை கண்காணிக்கத் தவறியதுமே இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் அரங்கேற முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    சாராய விற்பனையை தட்டிக் கேட்பவர்கள், மணல் திருட்டை தடுத்து நிறுத்துவோர், மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்து புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படும் அளவிற்கான பதட்டமான சூழலை வாடிக்கையாக்கிய திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

    எனவே, இளைஞர்களை படுகொலை செய்த சாராய வியாபாரிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தருவதோடு, இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு கைதாகும் நபர்களை இனியாவது தொடர்ந்து கண்காணித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன். 

    • கணக்கெடுக்கப்பட்ட வாக்காளர்களில் 26 சதவீதம் பேர் இந்தியா கூட்டணி கலைக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தி உள்ளனர்.
    • ராகுல் காந்தி தான் இந்தியா கூட்டணியை வழி நடத்தும் தலைவராக இருக்க வேண்டும் என 24 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக இந்தியா டுடே-சிவோட்டர் மூட் ஆப் தி நேசன் ஆகியவை இணைந்து நாடு முழுவதும் கருத்துக்கணிப்பை நடத்தின.

    கடந்த மாதம் 2-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் 1 லட்சத்து 25 ஆயிரத்து 123 வாக்காளர்களிடம் கருத்துகள் கேட்டு இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

    இதில், பாராளுமன்றத்திற்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜ.க. கூட்டணி 343 இடங்களை கைப்பற்றும் எனவும், இதில் பா.ஜ.க. மட்டும் 281 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதே நேரம் இந்தியா கூட்டணிக்கு 188 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. இது காங்கிரஸ் 78 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்தியா கூட்டணி தொடர வேண்டும் என 65 சதவீதம் பேர் விரும்புகிறார்கள் என்பதும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

    இருப்பினும் கணக்கெடுக்கப்பட்ட வாக்காளர்களில் 26 சதவீதம் பேர் இந்தியா கூட்டணி கலைக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தி உள்ளனர்.

    மேலும், இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க பொருத்தமான தலைவர் யார் என்ற கேள்விக்கு, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தான் இந்தியா கூட்டணியை வழி நடத்தும் தலைவராக இருக்க வேண்டும் என 24 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    அதே நேரம் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு 14 சதவீதம் பேரும், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 சதவீதம் பேரும், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு 6 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து சென்றது. அதிலும் கடந்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என்ற உச்சத்தை தாண்டியது. அதன் பின்னரும், தொடர்ந்து விலை அதிகரித்தபடியே காணப்பட்டு, ஒரு சவரன் ரூ.64 ஆயிரம் என்ற வரலாறு காணாத உச்சத்தையும் எட்டிப் பிடித்தது.

    தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.10-ம், சவரனுக்கு ரூ.80-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 990-க்கும், ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்து 920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,890-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.63,120-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    14-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,920

    13-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840

    12-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    11-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480

    10-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    14-02-2025- ஒரு கிராம் ரூ.108

    13-02-2025- ஒரு கிராம் ரூ.107

    12-02-2025- ஒரு கிராம் ரூ.107

    11-02-2025- ஒரு கிராம் ரூ.107

    10-02-2025- ஒரு கிராம் ரூ.107

    • சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே?
    • தமிழகம் தற்போது, 2006 - 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தை விட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட, எஞ்சினியரிங் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்களை, சாராய வியாபாரிகள் படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது அந்தந்த பகுதி காவல்துறைக்குத் தெரியாமலா இருக்கும்? இன்று சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் உயிர் போயிருக்கிறதே. உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா?

    துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே? தமிழ்த் திரையுலகம் உங்கள் கைகளில்தானே இருக்கிறது.

    தமிழகம் தற்போது, 2006 - 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தை விட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. உங்கள் கையாலாகாத்தனத்தால், அமைதியான பொதுமக்களை, மிக மிக மோசமான எதிர்விளைவுகளுக்குத் தூண்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும் என தெரிவித்துள்ளார். 

    • XEV9e மற்றும் BE6 மின்சார கார்கள் 30,179 புக்கிங்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளன.
    • மின்சார கார்கள் விற்பனையில் இது ஒரு மைல்கல் என மஹிந்திரா பெருமிதம் தெரிவித்துள்ளது.

    மஹிந்திராவின் புதிய EV மாடல்களான XEV9e மற்றும் BE6, விற்பனைக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்ட முதல் நாளே 30,179 புக்கிங்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளன. இதன் முன்பதிவு மதிப்பு மட்டும் ரூ.8,472 கோடி (Ex-Showroom) என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    மின்சார கார்கள் விற்பனையில் இது ஒரு மைல்கல் என மஹிந்திரா பெருமிதம் தெரிவித்துள்ளது.

    மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e மின்சார கார்கள் 170kW மோட்டார் 59kWh பேட்டரி மற்றும் 210kW மோட்டார் 79kWh பேட்டரி என்று 2 மாடல்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த மொட்டரின் டார்க்விசை 380Nm ஆகும்.

    மஹிந்திரா BE 6 காரின் விலைகள் (எக்ஸ்-ஷோரூம்):

    பேக் ஒன்று 59kWh - ரூ. 18.90 லட்சம்

    பேக் ஒன்றுக்கு மேல் 59kWh - ரூ. 20.50 லட்சம்

    பேக் 2 59kWh - ரூ. 21.90 லட்சம்

    பேக் 3 செலக்ட் 59kWh - ரூ. 24.50 லட்சம்

    பேக் 3 79kWh - ரூ. 26.90 லட்சம்

    மஹிந்திரா XEV 9e காரின் விலைகள் (எக்ஸ்-ஷோரூம்):

    பேக் 1 59kWh - ரூ. 21.90 லட்சம்

    பேக் 2 59kWh - ரூ. 24.90 லட்சம்

    பேக் 3 செலக்ட் 59kWh - ரூ. 27.90 லட்சம்

    பேக் 3 79kWh - ரூ. 30.50 லட்சம்

    மஹிந்திரா BE 6 மற்றும் மஹிந்திரா XEV 9e மின்சார கார்களின் பேக் 3 மாடல் இந்தாண்டு மார்ச் மாதத்திலும் பேக் 3 செலக்ட் மாடல் ஜூன் மாதத்திலும் பேக் 2 மாடல் ஜூலையிலும் பேக் 1 மற்றும் பேக் ஒன்றுக்கு மேல் மாடல் ஆகஸ்டிலும் டெலிவரி செய்யப்படும் என்று மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    ×