search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NASA"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகம்.
    • வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை நாசாவின் ஹப்பிள் தொலை நோக்கி கண்டுபிடித்துள்ளது.

    வாஷிங்டன்:

    பூமியை போன்று வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதில் சூரிய குடும்பத்துக்கு வெளியே பல கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை நாசாவின் ஹப்பிள் தொலை நோக்கி கண்டு பிடித்துள்ளது.

    நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் கடந்த 2017-ம் ஆண்டு ஜிஜே 9827டி என்று பெயரிடப்பட்ட கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியின் விட்டத்தில் ஏறக்குறைய இரண்டு மடங்கு இருக்கும் இந்த கிரகத்தில் நீர் நிறைந்த வளிமண்டலங்கள் இருப்பதை ஹப்பிள் தொலைநோக்கி தற்போது கண்டறிந்துள்ளது. இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறுகள் அதிகமாக இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். மீனம் நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் ஒரு குறு விண்மீனை சுற்றி வரும் இந்த கிரகம் ஒவ்வொரு முறை இந்த சூரியனை கடந்து செல்லும் நேரத்தில் எடுக்கப்படும் நிறமாலை தரவுகளின் அடிப்படையில் அந்த கிரகத்தில் உள்ள மூலக்கூறுகள் கண்டறியப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறு நிறைந்த வளிமண்டலம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பூமியில் உள்ள கடலை போன்று இரண்டு மடங்கு அதிகமாக நீராவியை இந்த கிரகம் பெற்றிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த கிரகம் வெள்ளி கிரகத்தை போல 800 டிகிரி பாரன்ஹீட் வெப்பமாக இருப்பதால், வளிமண்டலம் நீராவியாக இருப்பதாக கூறப்படுகிறது.

    பாறைகள் நிறைந்த கிரகங்களில் வளிமண்டலங்களின் நீர் மூலக்கூறுகள் இருப்பது உயிர்கள் வாழ்வதற்கான இது ஒரு முக்கியமான படியாகும் 97 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் மீனம் நட்சத்திர மண்டலத்தில் பூமியைப் போன்ற வளிமண்டலம் பெற்ற ஒரு கிரகத்தை கண்டறிந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.

    இதற்கு முன்பு கண்டறிந்த நீர் மூலக்கூறு ஆக்சிஜன் இருக்கும் கிரகங்களை ஒப்பிடுகையில், தற்போது கண்டறிந்துள்ள கிரகம் மிக அருகில் இருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    • நாசாவின் லூனார் ரீகளைசென்ஸ் ஆர்பிட்டர், அதன் லேசர் அல்டிமீட்டர் கருவி, விக்ரம் லேண்டரை நோக்கி சுட்டிக்காட்டியது.
    • லேசர் கற்றையை கடக்கும்போது அந்த ஒளி விக்ரம் லேண்டரில் பதிந்து பின்னர் அந்த ஒளியை ஆர்பிட்டர் பதிவு செய்தது.

    வாஷிங்டன்:

    நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது.

    விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் ஆய்வுகளை மேற்கொண்டது. 14 நாட்களுக்கு பிறகு சூரியன் அஸ்தமனமானதால் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் தூக்க நிலைக்கு சென்றதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டருடன் லேசர் கற்றை மூலம் தொடர்பை ஏற்படுத்தியதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு கழகமான நாசா தெரிவித்துள்ளது.

    நிலவின் மேற்பரப்பில் சுற்றி வரும் நாசாவின் லூனார் ரீகளைசென்ஸ் ஆர்பிட்டருக்கும் (எல்.ஆர்.ஓ.) விக்ரம் லேண்டருக்கும் இடையே ஒரு லேசர் கற்றை அனுப்பப்பட்டு பிரதிபலிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக நாசா கூறும்போது, நாசாவின் லூனார் ரீகளைசென்ஸ் ஆர்பிட்டர், அதன் லேசர் அல்டிமீட்டர் கருவி, விக்ரம் லேண்டரை நோக்கி சுட்டிக்காட்டியது. அப்போது ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் 100 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.

    லேசர் கற்றையை கடக்கும்போது அந்த ஒளி விக்ரம் லேண்டரில் பதிந்து பின்னர் அந்த ஒளியை ஆர்பிட்டர் பதிவு செய்தது. இந்த வெற்றிகரமான சோதனையானது நிலவின் மேற்பரப்பில் உள்ள இலக்குகளை துல்லியமாக கண்டறிய வழி வகுக்கும்.

    நிலவின் சுற்றுப்பாதையில் இருந்து மேற்பரப்பில் பின்னோக்கி பிரதிபலிப்பை கண்டறிய முடியும் என்பதை நாங்கள் காட்டியுள்ளோம். இது வருங்காலத்தில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான அடுத்த கட்டமாகும்.

    இவ்வாறு நாசா தெரிவித்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்பும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி கழகமான நாசா தொடங்கியுள்ளது.
    • இந்த ஆண்டின் பிற்பகுதியில் நிலவை சுற்றி வர விண்வெளி வீரர்கள் 4 பேரை அனுப்ப நாசா திட்டமிட்டிருந்தது.

    கடந்த 1969-ம் ஆண்டு அப்பல்லோ விண்கலத்தில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பி அமெரிக்கா சாதனை படைத்தது. நீல் ஆம்ஸ்ட்ராங், நிலவில் முதல் காலடியை வைத்தார். இதற்கிடையே 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்பும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி கழகமான நாசா தொடங்கியுள்ளது. 2024-ம் ஆண்டுக்குள் மனிதனை நிலவுக்கு அனுப்புவோம் என்று நாசா தெரிவித்தது.

    இதன் முதல்கட்ட விண்கலத்தையும் ஏவி சோதனை செய்தது. இந்த நிலையில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2026-ம் ஆண்டு வரை தள்ளி வைக்கப்படுவதாக நாசா அறிவித்துள்ளது.

    இந்த ஆண்டின் பிற்பகுதியில் நிலவை சுற்றி வர விண்வெளி வீரர்கள் 4 பேரை அனுப்ப நாசா திட்டமிட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அந்த விண்கலம் ஏவப்படுவது அடுத்த ஆண்டுக்கு (2025) தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலவுக்கு மனிதனை அனுப்புவது 2026-ம் ஆண்டுக்கு தள்ளி போயிருக்கிறது.

    • 2016ல் நாஸா விண்வெளிக்கு ஓசிரிஸ்-ஆர்ஈஎக்ஸ் விண்கலனை அனுப்பியது
    • 2020ல் ஓசிரிஸ் பென்னு குறுங்கோளில் தனது கேப்ஸ்யூலை தரையிறக்கியது

    ஆஸ்டிராய்ட் எனப்படும் சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களை ஆராய்ச்சி செய்வதில் அமெரிக்காவின் மத்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா (NASA) பல வருடங்களாக ஈடுபட்டு வருகிறது.

    2016 செப்டம்பர் மாதம், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து ஓசிரிஸ்-ஆர்ஈஎக்ஸ் (OSIRIS-REx) எனும் விண்கலனை பூமியிலிருந்து 200 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள பென்னு எனும் குறுங்கோளை ஆராய்ச்சி செய்ய அமெரிக்காவின் மத்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாஸா அனுப்பியிருந்தது. அந்த குறுங்கோளிலிருந்து ஆராய்ச்சிகளுக்காக மாதிரி படிவங்களை பூமிக்கு கொண்டு வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    பென்னுவின் மேற்பரப்பில் ஆராய்ச்சி செய்ய அந்த விண்கலனிலிருந்து அனுப்பப்பட்ட ஆய்வு சாதனம் (probe) 2020ல் பென்னுவை அடைந்தது. பாறைகள் நிறைந்த அந்த குறுங்கோளின் மேற்பரப்பிலிருந்து 250 கிராம் மண்துகள்களை அந்த சாதனம் எடுத்தது.

    இந்நிலையில் ஓசிரிஸ் விண்கலனிலிருந்து கேப்ஸ்யூல் எனப்படும் மிக சிறிய மற்றொரு விண்கலன் மூலம் பென்னுவின் மண்துகள் மாதிரிகள் ஓசிரிஸ்-ஆர்ஈஎக்ஸ் விண்கலனால் பூமியிலிருந்து 1,07,826 உயரத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டது.

    அந்த கேப்ஸ்யூல் 6.21 பில்லியன் கிலோமீட்டர் பயணத்தை நேற்று நிறைவு செய்தது. பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து அமெரிக்காவின் உடா மாநிலத்தில் பாலைவனத்தில் வந்திறங்கியது. இதனை நாஸா அதிகாரிகள் பத்திரமாக மீட்டெடுத்தனர். விண்கலனிலிருந்து வெகு வேகமாக பூமியை நோக்கி வந்த கேப்ஸ்யூல், வளிமண்டலத்தை தாண்டி, அதில் இணைக்கப்பட்ட பாராசூட் மூலம் மெதுவாக பூமியை தொட்டது.

    "விஞ்ஞானிகளின் சூரிய மண்டல ஆராய்ச்சிக்கு ஒரு புதிய பார்வை கிடைக்க இந்த ஆராய்ச்சி வழி செய்யும்" என நாஸாவின் இந்த முயற்சி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அதன் தலைவர் பில் நெல்சன் தெரிவித்தார்.

    • நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவரில் இருந்து எடுக்கப்பட்ட முப்பரிமாண வடிவ புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டது.
    • எல்ஆர்ஓ விண்கலம் நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் -3 லேண்டரை சமீபத்தில் படம்பிடித்தது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியால் (இஸ்ரோ) சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதனைச் சாதித்த முதல் நாடு என்ற பெருமையை நமது நாடு கொண்டாடி வருகின்றது.

    விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலனின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொண்டது.

    இந்த ஆய்வின் மூலம் நிலவில் இரும்பு, அலுமினியம், சல்பர் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை கண்டறிந்து பிரக்யான் ரோவர் உறுதி செய்தது.

    சமீபத்தில், நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவரில் இருந்து எடுக்கப்பட்ட முப்பரிமாண வடிவ புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.

    இந்தப் புகைப்படத்தை சிவப்பு மற்றும் சியான் எனப்படும் நீல நிற கண்ணாடிகள் மூலம் முப்பரிமாண வடிவத்தில் பார்க்கலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 இருப்பதை நாசா செயற்கைக்கோள் படம்பிடித்துள்ளது.

    அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் (எல்ஆர்ஓ) சமீபத்தில் சந்திரயான் -3ன் லேண்டரின் புகைப்படத்தை பிடித்தது. இந்த படம் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி அன்று எல்ஆர்ஓ-ஆல் எடுக்கப்பட்டது.

    இந்த படத்தை டுவிட்டரில் பகிர்ந்த நாசா,"எல்ஆர்ஓ விண்கலம் நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் -3 லேண்டரை சமீபத்தில் படம்பிடித்தது.

    சந்திரயான் 3 தரையிறங்கிய நான்கு நாட்களுக்குப் பிறகு லேண்டரின் சாய்ந்த பார்வையை (42-டிகிரி ஸ்லூ ஆங்கிள்) எல்ஆர்ஓ கேமரா படம் பிடித்தது. ராக்கெட் ப்ளூம் நுண்ணிய ரேகோலித் (மண்) உடன் தொடர்புகொள்வதால் லேண்டரைச் சுற்றி பிரகாசமான ஒளிவட்டம் தெரிந்தது" என்றது.

    • லூனா-25 விண்கலம் விழுந்த இடத்தை நிலவை கண்காணித்து வரும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளது.
    • நிலவின் குறிப்பிட்ட பகுதியை 2020 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படத்தோடு, தற்போது லூனா 25 விழுந்த பிறகு எடுத்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு நாசா வெளியிட்டுள்ளது.

    நிலவின் தென் துருவ பகுதியை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியதற்கு போட்டியாக ரஷியா லூனா-25 விண்கலத்தை அனுப்பியது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்குவதற்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை தரையிறக்க ரஷிய விண்வெளி நிறுவனம் தீவிரமாக செயல்பட்டது.

    புவி மற்றும் நிலவின் சுற்றுவட்ட பாதைகளை அதிவேகமாக கடந்து சென்ற லூனா-25 விண்கலத்தை தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டபாதைக்குள் கடந்த மாதம் 19-ம் தேதி நுழைக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து நொறுங்கியது.

    இந்த லூனா-25 விண்கலம் விழுந்த இடத்தை நிலவை கண்காணித்து வரும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளது. லூனா -25 விண்கலம் தரையிறங்க வேண்டிய இடத்துக்கு அருகில் புதிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இது லூனா-25 விண்கலம் விழுந்த இடமாக இருக்க வாய்ப்புள்ளது என எல்ஆர்ஓ குழு முடிவு செய்துள்ளது. இந்த புதிய பள்ளம், 10 மீட்டர் அகலத்தில் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

    மேலும், நிலவின் குறிப்பிட்ட பகுதியை 2020 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படத்தோடு, தற்போது லூனா 25 விழுந்த பிறகு எடுத்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு நாசா வெளியிட்டுள்ளது.

    • சுழற்சி வேகம் அதிகரித்து வருவதற்கு என்ன காரணம் என்பதை விஞ்ஞானிகளால் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை.
    • செவ்வாய் கிரகத்துக்கான இன்சைட் போன்ற புவி இயற்பியல் நிலையத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறோம்.

    வாஷிங்டன்:

    செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இன்சைட் லேண்டரை அனுப்பியது. இந்த லேண்டர் கடந்த 2018-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தை சென்றடைந்து ஆய்வை தொடங்கியது. எரிசக்தி தீர்ந்ததால் இந்த திட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் இன்சைட் லேண்டர் சேகரித்து அனுப்பிய தரவுகளை நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ஆய்வில் செவ்வாய் கிரகத்தின் சுழற்சி வேகம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவது தெரிய வந்தது. இந்த பகுப்பாய்வில் வேகமாக சுழல்வதன் காரணமாக செவ்வாய் கிரகத்தில் ஒரு நாளின் நீளம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லி விநாடி அளவு குறைந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

    சுழற்சி வேகம் அதிகரித்து வருவதற்கு என்ன காரணம் என்பதை விஞ்ஞானிகளால் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை.

    அதே வேளையில் செவ்வாய் கிரகத்தின் நிறை, அதன் மேற்பரப்பில் நடக்கும் நிகழ்வு உள்ளிட்ட கிரகத்தில் மெல்ல மெல்ல ஏற்பட்டு வரும் மாற்றம் ஆகியவை சுழற்சி வேகம் அதிகரிப்பதற்கான காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

    பனிக்கட்டிகள் நிறைந்த துருவப்பகுதிகளில் பனிக்கட்டி படிவதாலும், பனிக்கட்டி புதைவால் நிலப்பரப்பு உயர்ந்து வருவதாலும் இது நிகழ்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

    இதுதொடர்பாக இன்சைட்டின் முதன்மை ஆய்வாளர் புரூஸ்பெனர்ட் கூறும்போது, மிகவும் துல்லியத்துடன் சமீபத்தில் அளவீட்டை பெறுவது மிகவும் அருமையாக உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கான இன்சைட் போன்ற புவி இயற்பியல் நிலையத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறோம். தற்போதைய ஆய்வு முடிவுகள் பல ஆண்டுகளின் உழைப்பை பயனுள்ளதாக்குகின்றன என்றார்.

    • சந்திரயான்-3, நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துகள்.
    • இத்திட்டத்தில் உங்களின் கூட்டாளியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    வாஷிங்டன்:

    சந்திரயான்-3 திட்ட வெற்றி குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான 'நாசா' பாராட்டு தெரிவித்துள்ளது. 'நாசா' தலைவர் பில் நெல்சன் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சந்திரயான்-3, நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நிலவில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமையை பெற்ற இந்தியாவுக்கும் வாழ்த்துகள். இத்திட்டத்தில் உங்களின் கூட்டாளியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வைத்து ஒரியன் விண்கலத்தை ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்து வருகிறார்கள்.
    • விண்கலத்தின் உறுதித்தன்மையை பரிசோதிக்கும் வகையில் பல்வேறு சோதனைகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் உட்படுத்தி வருகிறார்கள்.

    கேப் கனவேரல்:

    அரை நூற்றாண்டு கடந்த பின்னர் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி கழகம் கையில் எடுத்தது. இந்த கனவு திட்டத்திற்கு உறுதுணையாக எலான் மஸ்கின் ஸ்பெக்ஸ் எக்ஸ் நிறுவனம், இந்தியாவின் இஸ்ரோ ஆராய்ச்சி மையம் உள்பட உலகின் முன்னணி நிறுவனங்கள் உதவுகிறது. இதற்கான திட்டத்தை ஆர்திமிஸ் என பெயரிட்டு கடந்த 2017-ம் ஆண்டு முதல் விண்கலன்களை தயாரித்து வருகின்றன.

    இந்தநிலையில் ஆர்திமிஸ் 2 திட்டத்தை முன்னெடுத்து அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப நாசா தயாராகி வருகிறது.

    அதற்காக ஒரு பெண் விண்வெளி வீராங்கனை உள்பட 4 பேர் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் தங்களை நிலவுக்கு அழைத்து செல்லும் ஒரியன் விண்கலத்தை முதல்முறையாக விண்வெளி வீரர்கள் நேரில் சென்று பார்த்தனர். புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வைத்து ஒரியன் விண்கலத்தை ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்து வருகிறார்கள்.

    தங்களை உற்சாகப்படுத்தி கொள்ளவும் ஆயத்தப்பணிகளை முடுக்கி விடும் பணிக்காக விண்வெளி வீரர்கள் நிலவுக்கு அழைத்து செல்லவிருக்கும் விண்கலத்தை நேரில் பார்க்க அனுமதி வழங்கப்பட்டதாக நாசா அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த விண்கலத்தின் உறுதித்தன்மையை பரிசோதிக்கும் வகையில் பல்வேறு சோதனைகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் உட்படுத்தி வருகிறார்கள்.

    • 90 நிமிடங்கள் விண்வெளி நிலையம் உடனான தொடர்பு துண்டிப்பு
    • ரஷியாவின் தகவல் தொடர்பு அமைப்பு மூலம் 20 நிமிடத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

    அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் நேற்று திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக விண்வெளி மையம், விண்வெளி வீரர்கள் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

    பின்னர் பேக்அப் கன்ட்ரோல் சிஸ்டம் மூலம் விண்வெளி மையத்துடன் தொடர்பை ஏற்படுத்தினர். மின்தடையால் சுமார் 90 நிமிடங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. நாசாவில் ஏற்பட்ட மின்தடை குறித்து ரஷியாவின் தகவல் தொடர்பு அமைப்பு மூலமாக 20 நிமிடத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

    விண்வெளி வீரர்கள் மற்றும் விண்வெளி மையத்துடன் தொடர்பு கொள்ள நாசாவில் தனியாக கட்டுப்பாட்டு மையம் உள்ளது. ஒருவேளை இந்த மையம் வேலை செய்யவில்லை என்றால், இதற்கு மாற்று திட்டம் வகுத்துள்ளது. முதன்முறையாக விண்வெளி மையத்தை தொடர்பு கொள்ள நாசா இந்த மாற்று ஏற்பாட்டை பயன்படுத்தியுள்ளது.

    ஒருவேளை இயற்கை பேரழிவு ஏற்பட்டால் மாற்று ஏற்பாட்டிற்காக ஹூஸ்டனில் இருந்து சில மைல் தூரத்தில் மாற்று கட்டுப்பாட்டு மையத்தை அமைத்து பராமரித்து வருகிறது. ஆனால் தற்போது விளக்குகள் மற்றும் ஏ.சி. வேலை செய்ததால் நாசா மையத்தில் இருந்தே தொடர்பு கொண்டுள்ளது.

    இதுகுறித்து விண்வெளி நிலைய திட்ட மேலாளர் ஜோல் கூறுகையில் ''விண்வெளி வீரர்களுக்கோ, நிலையத்திற்கோ எந்தவொரு ஆபத்தும் இல்லை'' எனத் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட உலக நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை கட்டி வருகிறது. இதற்காக விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ளன. அவர்கள் விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    • சராசரியை விட 1.07 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாக நாசா கூறுகிறது.

    லாஸ் ஏஞ்சல்ஸ் :

    எல் நினோ தாக்கத்தால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தான் வரலாற்றிலேயே உலகில் அதிக வெப்பம் பதிவான மாதம் என நாசா தெரிவித்துள்ளது.

    ஜூன் 2023-க்கான உலகளாவிய சராசரி வெப்பநிலை 1951 முதல் 1980 ஜூன் வரையிலான சராசரியை விட 1.07 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாக நாசா கூறுகிறது.

    இது, மனித நடவடிக்கைகளின் விளைவாக, முக்கியமாக கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகளின் விளைவாக, அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலையின் ஒரு பகுதி என நாசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    • விண்கலன்களும் செவ்வாய் கிரகத்தில் என்ன உள்ளது என்பது தொடர்பாக புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வருகிறது.
    • நாசா கடந்த ஏப்ரல் மாதம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்காக விண்கலத்துடன் இணைத்து இன்ஜினியுடி என்ற சிறிய ரக ஹெலிகாப்டரை அனுப்பியது.

    வாஷிங்டன்:

    செவ்வாய் கிரகத்தின் மொத்த அளவு என்பது பூமியின் பாதி அளவு தான். அளவில் சிறியது என்றாலும் பூமியின் நிலப்பரப்புக்கு நிகரான நிலப்பரப்பை கொண்டது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ தகுதி உள்ளதா? என்பதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா ஆராய்ந்து வருகிறது. இதற்காக விண்கலன்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி வருகிறது.

    விண்கலன்களும் செவ்வாய் கிரகத்தில் என்ன உள்ளது என்பது தொடர்பாக புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்த புகைப்படங்களை நாசா அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

    இந்த நிலையில் நாசா கடந்த ஏப்ரல் மாதம் 26- ந் தேதி செவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்காக விண்கலத்துடன் இணைத்து இன்ஜினியுடி என்ற சிறிய ரக ஹெலிகாப்டரை அனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இறங்கிய இரண்டு நிமிடத்தில் நாசாவுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் குறித்து தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் 63 நாட்களுக்குப் பிறகு அந்த ஹெலிகாப்டரில் இருந்து மீண்டும் தகவல் கிடைத்துள்ளது. அந்த ஹெலிகாப்டர் இறங்கிய பகுதியில் ஒரு பெரிய மலை இருந்ததே தகவல் தொடர்பு தடையானதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து அந்த ஹெலிகாப்டரை அனுப்பிய குழுவின் தலைவர் ஜோஸ்வா ஆண்டர்சன் கூறும்போது இன்ஜினியுடி ஹெலிகாப்டர்தான் நீண்ட நாள் காலமாக தகவல் தொடர்பில் இல்லாமல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது தகவல் தொடர்பை இழந்தாலும் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தகவமைத்துக் கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டது. தற்போது மீண்டும் தகவல் தொடர்பு கிடைத்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம் என்றார்.

    ×