என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • விஜய் கட்சியில் அ.தி.மு.க., பா.ஜ.க., ஆகிய கட்சிகளில் இருந்து முக்கிய பிரபலங்கள் சேருவதற்கு விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.
    • இணைப்பு விழாவை எப்போது எங்கு வைத்து நடத்தலாம் என்பது பற்றி தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    தி.மு.க. மற்றும் அ.தி.மு.க, பா.ஜ.க., ஆகிய கட்சிகள் தனித்தனியே கூட்டணி அமைத்துள்ள நிலையில் நடிகர் விஜய் தனித்து போட்டியிட உள்ளார். இதற்காக தமிழக வெற்றிக்கழகத்தை பலப்படுத்த திட்டமிட்டுள்ள அவர் அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்.

    பூத் கமிட்டிகளை வலுவாக்கி அதன் மூலமாக தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலுமே கட்சியின் கட்டமைப்பை வலுவாக்குவதற்கு விஜய் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். கடந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி பெற வியூகம் வகுத்து கொடுத்த பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விஜய் கட்சியில் ஆலோசகராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார்.

    விஜய் கட்சியில் அ.தி.மு.க., பா.ஜ.க., ஆகிய கட்சிகளில் இருந்து முக்கிய பிரபலங்கள் சேருவதற்கு விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்து செயல்பட்டு வரும் பிரபல பெண் பிரமுகரும் தமிழக வெற்றி கழகத்தில் விரைவில் சேருவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதேபோன்று அ.தி.மு.க. வில் முன்னாள் அமைச்சர் ஒருவரும் த.வெ.க.வில் சேருவதற்கு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தவிர பாரதிய ஜனதா கட்சியில் உள்ள இரண்டு முக்கிய பிரபலங்களும் விரைவில் விஜய் கட்சியில் சேருவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

    இது போன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் முக்கிய அரசியல் கட்சிகளில் மாவட்ட அளவில் பணிபுரிந்து வருபவர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்வதற்கு ஆயத்தமாகி வருகிறார்கள். இப்படி மாநிலம் முழுவதிலுமே இருந்து பல்லாயிரக்கணக்கானோர் விஜய் கட்சியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தயாராகி வருவதால் அதனை பிரம்மாண்டமான விழாவாக நடத்துவதற்கு கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த இணைப்பு விழாவை எப்போது எங்கு வைத்து நடத்தலாம் என்பது பற்றி தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பொதுவான ஒரு இடத்தில் வைத்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் இணைப்பு விழாவை நடத்துவதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    அதற்கான தேதி மற்றும் விழா நடைபெறும் இடங்கள் ஆகியவை விரைவில் அறிவிக்கப்பட்ட உள்ளது. இதன்மூலம் சட்டமன்ற தேர்தலை சந்தித்து அதில் வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விஜய் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் டிரம்ப்- ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • டிரம்புடனான மோதல் விவகாரத்தில் ஜெலன்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

    வாஷிங்டன்:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா போர் தொடுத்தது.

    போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வந்த அமெரிக்கா ஆயுதங்கள், ராணுவ உதவிகளை செய்து வந்தது. அதேபோல் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும் ஆதரவு அளித்தன. இதற்கிடையே அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், உக்ரைன் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகினார். ரஷியாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் தொலைபேசியில் பேசினார். இந்த விவகாரத்தில் டிரம்ப்-ஜெலன்ஸ்கி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.

    இதற்கிடையே டிரம்ப்-ஜெலன்ஸ்கி நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உக்ரைனில் உள்ள அரிய வகை கனிமங்களை அமெரிக்கா எடுத்து கொள்வது தொடர்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு சென்றார்.

    அப்போது வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் டிரம்ப்- ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் கேட்ட கேள்வியால் அதிருப்தி அடைந்த ஜெலன்ஸ்கி தனது கருத்தை தெரிவித்தபோது டிரம்ப் குறுக்கிட்டு அவரை கண்டித்தார். மேலும் வான்சும் கண்டிக்கும் வகையில் பேசினார்.

    ரஷியாவுடன் போர் நிறுத்தத்தை டிரம்ப் வலியுறுத்திய நிலையில் அதை ஜெலன்ஸ்கி ஏற்க மறுத்தார். இதையடுத்து இந்த சந்திப்பு பாதியில் முடித்துக் கொள்ளப்பட்டது. மேலும் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் வெள்ளை மாளிகையில் இருந்து ஜெலன்ஸ்கி வெளியேறினார்.

    சர்வதேச ஊடகங்கள் மத்தியில் டிரம்ப்- ஜெலன்ஸ்கி இடையே நடந்த வாக்குவாதம், போரின் திசையை மாற்றி விடும் சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. டிரம்புடனான மோதல் விவகாரத்தில் ஜெலன்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆனால் ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஆதரவு மிகவும் முக்கியம் என்றே கருதப்படுகிறது.

    இந்த நிலையில் உக்ரைனுக்கு அளிக்கப்பட்டு வரும் அனைத்து ராணுவ உதவிகளையும் நிறுத்த அதிபர் டிரம்ப் நிர்வாகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, போரில் உக்ரைனுக்கு அனுப்பப்பட காத்திருக்கும் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பு உள்ள ரேடார்கள், வாகனங்கள், வெடிமருந்துகள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுத உதவிகள் விநியோகத்தை நிறுத்தும் முடிவு தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது என்றார். இந்த தகவலை வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

    ஏற்கனவே டிரம்ப் அதிபராக பதவியேற்றதும் வெளிநாடுகளுக்கான நிதி உதவிகளை நிறுத்தவும் உத்தரவிட்டார். இதற்கிடையே உக்ரைனுக்கான அனைத்து ராணுவ உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தும் பட்சத்தில் அது போரில் உக்ரைனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது. உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவினாலும் அமெரிக்காவை போல் ஆயுதங்களை வழங்க முடியுமா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

    இதற்கிடையே டிரம்ப்-ஜெலன்ஸ்கி மோதல் விவகாரத்தில் நேட்டோ அமைப்பு சமரசத்தை ஏற்படுத்த முயற்சித்து உள்ளது. டிரம்புடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் என்று ஜெலன்ஸ்கியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே கூறும் போது, அமெரிக்க அதிபர் டிரம்புடனான உறவை மீட்டெடுக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் நான் கூறியுள்ளேன். டிரம்ப் இதுவரை உக்ரைனுக்குச் செய்த உதவியை ஜெலன்ஸ்கி உண்மையில் மதிக்க வேண்டும்.

    டிரம்ப்-ஜெலன்ஸ்கி இடையேயான சந்திப்பில் நடந்த விஷயம் துரதிர்ஷ்டவசமானது. உக்ரைன் ரஷியாவுடன் அமைதியைப் பெறுவதை உறுதி செய்வதில் அமெரிக்க நிர்வாகம் ஈடுபட்டுள்ளதை நான் அறிவேன் என்றார்.

    அதேபோல் இந்த விவகாரத்தில் சமரசத்தை ஏற்படுத்த நேட்டோ நாடுகள் முயற்சித்து வருகின்றன.

    இந்த நிலையில் லண்டனில் இன்று ஐரோப்பிய தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இதில் உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவது தொடர்பாக விவாதிக்கிறார்கள்.

    இதன்மூலம் எதிர்கால அமைதி ஒப்பந்தத்தைப் பெற ஐரோப்பிய தலைவர்கள், உதவுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே தெரிவித்தார்.

    உக்ரைன்-ரஷியா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று டிரம்ப் அதிபராக பதவி ஏற்றதும் தெரிவித்து இருந்தார். இதற்கான முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டார்.

    இந்த நிலையில் ஜெலன்ஸ்கியுடன் மோதலால் இந்த போரின் அடுத்தக்கட்ட நகர்வு எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே நிலவி வருகிறது.

    • வழக்கு நிலுவையில் இருக்கும் போது எப்படி பாலியல் குற்றவாளி என்பீர்கள்?
    • தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து கனிமொழியின் கருத்து என்ன?

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

    * என்னை எப்படி பாலியல் குற்றவாளி என்று எப்படி கூறுவீர்கள்?

    * என்னை பற்றி பேச உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

    * வழக்கு நிலுவையில் இருக்கும் போது எப்படி பாலியல் குற்றவாளி என்பீர்கள்?

    * என்னை குற்றம்சாட்டுபவர்கள் முதலில் தலைமை பண்புடன் நடந்து கொள்ளட்டும்.

    * தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து கனிமொழியின் கருத்து என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார். 

    • சீமானை சமாளிப்பது எங்களுக்கு தூசு மாதிரி.
    • உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பாலியல் வழக்கு நடைபெற்று வருகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் சீமான் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

    * சீமானை சமாளிப்பது எங்களுக்கு தூசு மாதிரி.

    * சீமான் பாலியல் வழக்கில் தி.மு.க. தலையிடவில்லை

    * உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பாலியல் வழக்கு நடைபெற்று வருகிறது.

    * சீமான் பாலியல் வழக்கில் தி.மு.க.வின் பின்புலம் எதுவும் இல்லை என்றார். 

    • திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் குறித்தும், எளிய மக்களுக்குப் புரியும் வகையில், விளக்கிப் பேசுவார்கள்.
    • பொதுக்கூட்டங்களை எழுச்சியுடன் நடத்துமாறு இளைஞர் அணி நிர்வாகிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    மத்திய அரசை கண்டித்து தி.மு.க. இளைஞரணி சார்பில் சட்டமன்ற தொகுதித்தோறும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கழக இளைஞர் அணியின் மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், புதிய கல்விக்கொள்கை மூலம் இந்தியைத் திணிக்கும், நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு என்ற பெயரை முற்றிலுமாக புறக்கணித்து, நிதிப் பகிர்விலும் பாரபட்சம் காட்டும், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டை வஞ்சித்து, அநீதி இழைக்கும் ஒன்றிய அரசைக் கண்டிக்கும் வகையில், சட்டமன்றத் தொகுதிதோறும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    இக்கூட்டத்தில் முதன்மைப் பேச்சாளர் ஒருவர், இளம் பேச்சாளர் ஒருவர் என தொகுதிக்கு இரண்டு பேர் பேசவுள்ளனர். மாநில உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், 72-வது பிறந்தநாள் காணும் கழகத் தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் குறித்தும், எளிய மக்களுக்குப் புரியும் வகையில், விளக்கிப் பேசுவார்கள்.

    தமிழ் மக்களின் உரிமைக்குக் குரல் எழுப்பிடும் வகையிலும், உரிமையைத் தர மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டிக்கும் வகையிலும், இந்தப் பொதுக்கூட்டங்களை எழுச்சியுடன் நடத்துமாறு இளைஞர் அணி நிர்வாகிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    தமிழ்நாடு போராடும்!

    தமிழ்நாடு வெல்லும்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 



    • டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது.
    • ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டமன்ற தேர்தலில் 22 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது.

    போபாலில் உள்ள ஒரு குத்தகை வீட்டில் இயங்கி வந்த ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகம், மூன்று மாதங்களாக வாடகை செலுத்தப்படாத காரணத்தால், வீட்டு உரிமையாளரால் பூட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தி உள்ளது.

    இது குறித்து ஆம் ஆத்மி கட்சி இணை செயலாளர் ராமகாந்த் கூறும் போது, "நாங்கள் நேர்மையாக வேலை செய்யும் போது இவை அனைத்தும் நடக்கும். நிலைமைகள் மாறும். நாங்கள் நேர்மையானவர்கள். தற்போது, எங்கள் கட்சியிடம் நிதி இல்லை. எனவே எங்களால் அதை செய்ய முடியவில்லை," என்று தெரிவித்தார்.

    "அலுவலக வாடகை தொகை எவ்வளவு என்றும், அது எவ்வளவு காலமாக செலுத்தப்படாமல் உள்ளது என்பது பற்றியும் எனக்கு தெரியாது" என்று முன்னாள் ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் கூறினார்.

    மாநில பாஜக செய்தி தொடர்பாளர் நரேந்திர சலுஜா, "ஆம் ஆத்மியின் மத்திய பிரதேச அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது, அடுத்து காங்கிரஸ் தான்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சமீபத்தில் ஆம் ஆத்மியை வீழ்த்தி நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆட்சியமைத்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியை மிஞ்சியது. மொத்தமுள்ள 70 இடங்களில் பா.ஜ.க. மட்டும் 48 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி வெறும் 22 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    • அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டார்.
    • சம்பவம் குறித்து அரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் வெளியில் உள்ள அறையில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது சிறுமியின் சித்தப்பா உறவு முறையான தொழிலாளி சுதாகர் (வயது 45) என்பவர் அங்கு வந்தார்.

    அப்போது அவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டார். இதனால் சுதாகர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து சிறுமி சைல்டுலைன் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். இதுகுறித்து அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அரூர் அனைத்து மகளிர் போலீசார் சுதாகர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சுதாகரை கைது செய்த போலீசார் தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, சுதாகருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.

    கைதான சுதாகர் தமிழக வெற்றிக்கழகத்தில் அரூர் பகுதி நிர்வாகியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வீட்டில் தூங்கிகொண்டிருந்த சிறுமிக்கு தொழிலாளி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • மக்கள் அனைவரும் கொதித்துப் போய் உள்ளார்கள்.
    • பல்வேறு வரி உயர்வுகளை விதித்த இந்த தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

    மதுரை:

    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதூர் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கலைஞர் இருந்த காலத்தில் கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க.விற்காக குரல் கொடுத்தவர் வைகை புயல் நடிகர் வடிவேலு. அப்போது தி.மு.க. வெற்றி பெறவில்லை. வெள்ளைக் கொடி ஏந்திய புலிகேசி வடிவேலு, தி.மு.க. பக்கம் போய்விட்டார்.

    ஒருபுறம் வடிவேலு, மறுபுறம் குஷ்பு என்று பிரசாரம் செய்தார்கள். ஆனால் அந்த தேர்தலில் தி.மு.க. தோல்வியை சந்தித்தது. மீண்டும் நடிகர் வடிவேலு மேடை ஏறிய தி.மு.க. ஊத்திக்கப்போகிறது. இது நூற்றுக்கு நூறு உண்மை.

    ஸ்டாலின் தான் வராரு, விடியல் தரப்போறாருன்னு பாடல் போட்டார்கள். ஆனால் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் கூட அந்தப் பாட்டை போடவில்லை. ஏனென்றால் மக்கள் அனைவரும் கொதித்துப் போய் உள்ளார்கள். மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு என பல்வேறு வரி உயர்வுகளை விதித்த இந்த தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதை மக்களாகிய நீங்கள் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நடிகர் வடிவேலு குறித்து செல்லூர் ராஜூ பேசியது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய நடிகர் வடிவேலு, கலைஞரும், அவரது மகன் மு.க.ஸ்டாலினும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளனர். அதிலும் குறிப்பாக சொன்னதை விட சொல்லாதது ஏராளமானவற்றை செய்துகொடுத்துள்ளனர் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • வருகின்ற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
    • தேர்தலுக்கு இன்னும் காலம், நேரம் இருக்கிறது.

    மதுரை:

    மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் பகுதியில் யானை மலை அடிவாரத்தில் குடை வரை கோவிலாக அமைந்துள்ள நரசிங்கம் பெருமாள் கோவிலில் தமிழக வெற்றிக்கழக ஆதரவாளரும், நடிகரும், தனியார் அறக்கட்டளை தலைருமான சௌந்தரராஜா தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

    அப்போது அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரிலும், அதன் தலைவரும் நடிகருமான விஜய் பெயரிலும் அர்ச்சனை செய்து வழிபட்டார். மேலும் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது இதே மகிழ்ச்சியுடன் எப்போதும் இருக்கவேண்டும் என்றும், வருகின்ற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து பேசிய அவர் கூறியதாவது:-

    மக்களுக்கு சந்தோஷத்தை கொடுத்து மண்ணுக்கு தேவையான ஒரு ஆட்சியை கொடுப்பதற்கான வழியை தமிழக வெற்றிக் தழகத்தின் தலைவர் விஜய் கையில் எடுத்திருக்கிறார். பேசும் பொருள் ஆனால் தான் அது கழகம், கலகம் வந்தால்தான் தீர்வு கிடைக்கும். எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் கூறிய குறைகளை ஆட்சியாளர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை நிறைவேற்றவில்லை. மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள், நேர்மையாக அரசியல் செய்ய விரும்புபவர்கள் விஜய்யை விரும்புகிறார்கள்.

    தேர்தலுக்கு இன்னும் காலம், நேரம் இருக்கிறது. கூட்டணி கட்சியினர் சீட்டுக்காக காத்திருக்கிறார்கள், சீட்டு கிடைக்கவில்லை என்றால் நல்லவர்கள் எங்களை தேடி வருவார்கள். அரசியலை பொறுத்தவரை நேர்மையான விமர்சனத்திற்கு பதில் சொல்லலாம் என்பதற்காக வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிறார்கள். தவறு செய்பவர்களை சுட்டிக்காட்டுவதற்காக பாசிசமும் பாயாசமும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

    நாங்கள் இதுவரை ஆட்சிக்கு வரவில்லை. எங்கள் மீது குற்றம் சுமத்த வேண்டிய காரணம் என்ன? அச்சுறுத்துவீர்கள், அவமானப்படுத்துவீர்கள், ஆட்சி அதிகாரத்தை வைத்து பயமுறுத்துவீர்கள். இதெல்லாம் விஜய் அண்ணனிடம் பலிக்காது.

    அவரவர்கள் அவர்கள் கட்சியை வளர்ப்பதற்கு அடுத்தவர்களை வீழ்த்துவதற்கான வேலையை பார்க்கிறார்கள். இந்த கட்சிதான் மீண்டும் மீண்டும் ஆள வேண்டுமா, அ.தி.மு.க., பா.ஜ.க., தி.மு.க., காங்கிரஸ் தவிர வேறு கட்சிகளே இல்லையா? மக்களுக்கான பணியை செய்தால் உங்களை விமர்சனம் வேண்டிய அவசியம் இல்லை. பா.ஜ.க., அ.தி.மு.க. என மக்களுக்கு நல்லது செய்தால் ஆட்சி பிடிப்பதற்கு எதற்கு போட்டி வருகிறது? மக்கள் யாராவது நிம்மதியாக இருக்கிறார்களா?

    மதுரையில் ஒத்தக்கடை நரசிங்கம்பட்டியில் பாறைகள் உடைக்கப்பட்டு இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டது, அதற்கு தீர்வு கிடைத்ததா? தீர்க்க வேண்டிய, திருத்தப்பட வேண்டிய விஷயம் தமிழ்நாட்டில் நிறைய இருக்கு. கூட்டணி என்பது வியூகம்தான், அவரவர் கருத்தை கூறுவார்கள். இது அனைத்திற்கும் இப்போது பதில் சொல்வது பொருத்தமாகாது.

    எத்தனை ஆண்டு காலமாக என் தாய் ஒரே கட்சிக்குதான் சாகும் வரை வாக்களிப்பேன் எனக் கூறிவந்தார். தற்போது முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிப்பதாக கூறியிருக்கிறார். இது ஒரு சான்று, இதேபோல் ஓராயிரம் சான்று உள்ளது. தமிழக வெற்றி கழகத்தை எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • அதிகாரிகளை செயல்பட வைக்க அரசியல் ரீதியாக வலிமைபெற வேண்டும்.
    • எளிய மக்களுக்கான திட்டங்களை அமல்படுத்துவதில் பெரிய போராட்டம் உள்ளது.

    சென்னை:

    சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டம் சட்டம் & விதிகள் 2024! நடைமுறைப்படுத்துதல்,கண்காணித்தல், வலுப்படுத்துதல் சமூக அமைப்புகள் மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    * 4 எம்.எல்.ஏ.க்கள், 2 எம்.பி.க்கள் இருந்தும் கொடி கூட ஏற்ற முடியவில்லை.

    * அதிகாரத்தில் இருப்பவர்களோடு இணைந்து கோரிக்கையை நிறைவேற்றி கொள்வதே வாய்ப்பாக உள்ளது.

    * அதிகாரிகள் நல்ல பதிலை கூறினாலும் ஒன்றும் நடப்பதில்லை.

    * விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடியேற்றும்போதுதான் அதிகாரிகள் சட்டம் பேசுகின்றனர்.

    * அதிகாரிகளை செயல்பட வைக்க அரசியல் ரீதியாக வலிமைபெற வேண்டும்.

    * எளிய மக்களுக்கான திட்டங்களை அமல்படுத்துவதில் பெரிய போராட்டம் உள்ளது.

    * அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கும் அனைத்தும் நடைமுறைக்கு வந்தாலே இந்தியா இந்நேரம் ஒரு சமத்துவம் உள்ள தேசமாக எப்போதோ பரிணாமம் அடைந்திருக்கும். ஆனால் அதுவே இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்றார். 

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு தொடங்கியது.
    • பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "ஆசீர்வதிக்கப்பட்ட ரம்ஜான் மாதம் தொடங்கும்போது, அது நமது சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும். இந்த புனித மாதம் பிரதிபலிப்பு, நன்றியுணர்வு மற்றும் பக்தியை எடுத்துக்காட்டுகிறது, மேலும் இரக்கம், கருணை மற்றும் சேவையின் மதிப்புகளையும் நமக்கு நினைவூட்டுகிறது. ரம்ஜான் முபாரக்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ரமலான் நோன்பு தொடங்கியதை அடுத்து பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இன்று அதிகாலை 4 மணிக்கு இஸ்லாமியர்கள் உணவு உட்கொண்டு ரமலான் நோன்பை தொடங்கினர்.

    ×