என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
- தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சென்னை :
தே.மு.தி.க. சார்பில் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மகளிர் தின விழா நடைபெற்றது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடந்த இந்த விழாவில் மாநில நிர்வாகிகள் நல்லதம்பி காளிராஜ் வேணுராம் , மகளிர் அணி நிர்வாகிகள் மகாலட்சுமி, சுப மங்களம், மாவட்ட செயலாளர்கள் ஆனந்தன், பிரபாகரன், பழனி, மாறன், செந்தில்குமார் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பங்கேற்ற மகளிர் அணியினர் பிரேமலதாவுக்கு பிரமாண்ட ஆளுயுர மாலை அணிவித்தனர். பிரேமலதா கேக் வெட்டி மகளிர் அணிக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினருக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.
பின்னர் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா அளித்த பேட்டி வருமாறு:-
தே.மு.தி.க.வில் மகளிர் அணியினருக்கு ஒரு சீருடையை உருவாக்கி கொடுத்த நமது தலைவர் கேப்டன் இன்று தெய்வமாக இருந்து நம்மை வழி நடத்தி கொண்டிருக்கிறார்.
கல்லூரி விழாவில் எனக்கு நேற்று அளிக்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருதை தே.மு.தி.க. மகளிர் அணியினருக்கு அர்ப்பணிக்கிறேன். மகளிர் தினமான இன்று கேப்டனின் லட்சியம், கொள்கைகளை அனைவரும் வென்றெடுப்பதற்கு நாம் உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மும்மொழி கொள்கை தொடர்பாக எங்களது கருத்துக்களை ஏற்கனவே தெரிவித்துள்ளோம். அன்னை மொழியை காப்போம். அனைத்து மொழிகளையும் கற்போம் என்கிற கேப்டன் வாக்கின்படி தே.மு.தி.க. செயல்படும். தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தில் தொகுதிகளை குறைக்க கூடாது. இதற்காக தே.மு.தி.க. தமிழக அரசுடன் இணைந்து எதிர்ப்பை தெரிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பிரேமலதாவிடம், தே.மு.தி.க.வுக்கு மேல் சபை எம்.பி. பதவி கொடுப்பதற்கான ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை என்று அ.தி.மு.க. பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பிரேமலதா பதில் கூற மறுத்துவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் சில நாட்களுக்கு முன்பு கேள்வி கேட்ட போதும் பதில் அளிக்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாங்கள் அரசியல் கட்சிகளைப் பற்றி தான் பேச விரும்புகிறோம்.
- தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியையும் சிறுபான்மையினர் நம்ப தயாராக இல்லை.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள த.வெ.க. தலைவர் விஜய், நீங்கள், நாம எல்லோரும் சேர்ந்து தான் இந்த தி.மு.க. அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனா அவங்க இப்படி ஏமாத்துவாங்கன்னு இப்ப தானே தெரியுது. எல்லாமே இங்கே மாறக்கூடியது தானே. மாற்றத்திற்கு உரியது தானே
2026-ல் நாம எல்லாம் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினமான இன்று நாம் எல்லோரும் சேர்ந்து உறுதி ஏற்போம் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ரகுபதி கூறியதாவது:
* த.வெ.க.-வை ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை.
* நீங்கள் தான் அதை ஒரு பொருட்டாக பேசிக்கொண்டு உள்ளீர்கள்.
* நாங்கள் அரசியல் கட்சிகளைப் பற்றி தான் பேச விரும்புகிறோம்.
* சிறுபான்மையினரை ஏமாற்ற முடியாது. அவர்களுக்கு நண்பர் யார்? நீலிக்கண்ணீர் வடிப்பவர் யார் என்று தெரியும்
* தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியையும் சிறுபான்மையினர் நம்ப தயாராக இல்லை என்று கூறினார்.
- சீடர்களின் கட்டுப்பாட்டில் தான் நித்யானந்தா இருக்கிறார்.
- வேறு எந்த நாட்டுக்கும் நித்யானந்தாவால் செல்ல முடியாத நிலை உள்ளது.
திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்து புகழ் பெற்ற நித்யானந்தா வித்தியாசமான செயல்பாடுகள் மூலம் நாடு முழுவதும் கோடிக்கணக்கானவர்களை கவர்ந்தார். இதனால் அவருக்கு மிகக்குறுகிய காலத்தில் பல நூறு கோடி ரூபாய் சொத்துக்கள் சேர்த்தது. இதையடுத்து நாடு முழுவதும் கிளை ஆசிரமங்களை உருவாக்கினார்.
உலகில் பல்வேறு நாடுகளிலும் அவரது ஆன்மீக ஆசிரமங்கள் ஏற்படுத்தப்பட்டன. அவரது ஆன்மீக பாதையை பின்பற்ற வெளிநாட்டவர்களும் ஆர்வமுடன் முன்வந்தனர். ஆனால் அவரது ஆன்மீக சொற்பொழிவால் ஏராளமான பெண்கள் திசை மாறி விட்டதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
நித்யானந்தா கைது செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு அவர் நேபாளம் வழியாக தென்அமெரிக்காவில் உள்ள சிறிய நாடான ஈக்வடார் நாட்டுக்கு சென்று தஞ்சம் அடைந்தார். முதலில் அவர் எங்கு பதுங்கி இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. பிறகு நித்யானந்தாவே சமூக வலைதளங்களில் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
கைலாசா நாட்டுக்கு குடியேற வருமாறு அவர் அழைப்பும் விடுத்தார். அப்போது தான் அவருக்கு ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பது தெரிய வந்தது. இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்கள் பல முடக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரபிரதேசம், குஜராத், உத்தரகாண்ட் மாநிலங்களில் அவருக்கு இன்னமும் பல ஆயிரம் ஏக்கரில் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சொத்துக்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நித்யானந்தாவின் 3 முக்கிய சீடர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. அந்த 3 சீடர்களில் ஒருவர் பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சீடர்களின் கட்டுப்பாட்டில் தான் நித்யானந்தா இருக்கிறார்.
நித்யானந்தாவின் டிரஸ்டுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்றன. அதன் பெயரில் ஏராளமான இடங்கள் உள்ளன. அந்த இடங்களை கைப்பற்ற ஒருசாரார் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இவற்றையெல்லாம் நித்யானந்தாவால் கட்டுப்படுத்த இயலவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே நித்யானந்தாவுக்கு ஈக்வடார் நாட்டில் திடீர் நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து தங்க அனுமதித்தால் சட்ட சிக்கல்கள் ஏற்படும் என்று ஈக்வடார் நாடு கருதியது. இதனால் அவரை கைது செய்ய முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த நித்யானந்தா தற்போது அந்த நாட்டில் இருந்து வெளியேறி விட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வேறு எந்த நாட்டுக்கும் நித்யானந்தாவால் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அவர் பிரமாண்டமான சொகுசு கப்பலை வாங்கி உள்ளாராம். மொனாகோ நாட்டை சேர்ந்த கோடீஸ்வரருக்கு சொந்தமான அந்த கப்பலில் நீச்சல் குளம், மசாஜ் சென்டர் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் இருக்கின்றன. தற்போது அந்த சொகுசு கப்பல் சர்வதேச எல்லையில் நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக நடுக்கடலில் அந்த கப்பலில் தான் நித்யானந்தா தங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. பருவ நிலைக்கு ஏற்ப சர்வதேச எல்லைப் பகுதிகளில் அந்த கப்பல் உலா வருவதாக கூறப்படுகிறது. சர்ச்சைக்கு புகழ்பெற்ற நித்யானந்தாவின் எதிர்கால வாழ்க்கை இதனால் கேள்விக்குறியாக மாறி இருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் வருத்தப்படுகிறார்கள். ஒரு மாதத்துக்கு மேலாக கடலுக்குள்ளேயே இருப்பதால் நித்யானந்தாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்க அவரது ஆதரவாளர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ்.
- பெருசு படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவர் தற்பொழுது சூர்யாவின் 45 திரைப்படமான ரெட்ரோ திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஸ்டோன் பென்ச் நிறுவனம் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இது அவர்கள் தயாரிக்கும் 16- வது திரைப்படமாகும். இப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார். படத்தின் இசையை அருண் ராஜ் மெற்கொண்டுள்ளார். திரைப்படம் வரும் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் வைபவ், சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், தீபா, நிஹரிகா, சாந்தினி, மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் மிகவும் நகைச்சுவையாக அமைந்துள்ளது. படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இப்படம் வீட்டில் இறக்கும் ஒரு பெரியவரை மற்றும் அந்த இறுதி சடங்கில் நடக்கும் பிரச்சனையை சுற்றி நடைப்பெறவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பா.ஜ.க. மும்மொழி கொள்கையில் உறுதியாக உள்ளது.
- பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
கோவை:
மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் இன்று மெட்ரிகுலேஷன் சி.பி.எஸ்.சி பள்ளிக்கூடங்களில் படிப்பவர்கள் 3 மொழி படிக்கிறார்கள். ஆனால் அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்படுவது ஏன்?.
பணம் இருப்பவர்கள் எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் பணம் இல்லாத ஏழை, எளிய மக்கள் அரசு பள்ளிகளில் தான் படிக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கான மொழியை கற்கக்கூடிய வாய்ப்பை ஏன் இவர்கள் மறுக்கிறார்கள். 3 மொழி வேண்டும் என்பது பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது. அனைவரும் மும்மொழி கொள்கையை வரவேற்கின்றனர்.
பா.ஜ.க. மும்மொழி கொள்கையில் உறுதியாக உள்ளது. ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒவ்வொரு கொள்கைகள் உள்ளது. கூட்டணியில் இருப்பதால் இதை மட்டுமே கூற வேண்டும் என்பதெல்லாம் இல்லை. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் இணைந்து செயல்படுவதற்காக மட்டுமே.
கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் மேம்பாட்டுக்காக, பிரதமர் நரேந்திர மோடி மிகக் கடுமையான பணிகளை செய்து கொண்டு இருக்கிறார். வரலாற்று சிறப்புமிக்க 33 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் கொண்டு வந்திருப்பது நரேந்திர மோடி தான்.
நரேந்திர மோடி எடுத்திருக்கும் திட்டங்களால் பெண்களின் வளர்ச்சி ஒருபடி மேலே தான் சென்று இருக்கிறது. குறிப்பாக பாதுகாப்பு துறையில் பெண்களுக்கு இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதெல்லாம் மகளிருக்கு மரியாதை கொடுக்கும் விதமாகவும், முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும், நரேந்திர மோடி செய்து கொண்டு இருக்கிறார்.
ஆனால தமிழ்நாட்டில் தாய்மார்கள் சாலையில் நடந்து கூட செல்ல முடிவதில்லை, பாதுகாப்பற்ற சூழல்தான் இங்கு இருக்கிறது. ரெயிலில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தான் உள்ளது. பாலியல் வன்கொடுமைகள் தமிழகம் எங்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ரூபியோ பெரிய அளவில் பணி நீக்கங்களை செய்யவில்லை என்று எலான் மஸ்க் குற்றம் சாட்டினார்.
- எலான் மஸ்க்கின் இந்த கருத்துக்கு ரூபியோ எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
அமெரிக்காவில் அரசு ஊழியர்களை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் அதிபர் டிரம்ப் மற்றும் அரசாங்க திறன் துறை தலைவர் எலான் மஸ்க் ஈடுபட்டு வருகிறார்கள்.
அமெரிக்கா நாட்டில் அரசு ஊழியர்கள் தாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து மின்னஞ்சலில் தெரியப்படுத்த வேண்டும் என்றும் இவ்வாறு தெரிவிக்காத ஊழியர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் டிரம்ப் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, எலான் மஸ்க் இடையே கடும் வார்த்தை மோதல் எற்பட்டது. ரூபியோ பெரிய அளவில் பணி நீக்கங்களை செய்யவில்லை என்று எலான் மஸ்க் குற்றம் சாட்டினார். இதற்கு ரூபியோ எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
இதனையடுத்து, டிரம்ப் நிருபர்களிடம் கூறும்போது, "ரூபியோ-எலான் மஸ்க் மோதல் இல்லை. அவர்கள் இருவரும் ஒரு அற்புதமான வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
- தி.மு.க.வினரின் ஆசியோடு குற்றங்கள் நடப்பதை யாராலும் மறுக்க முடியாது.
- தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாள்தோறும் அரங்கேறுகிறது.
நெல்லை:
தமிழகத்தை குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாக தி.மு.க. அரசு மாற்றிவிட்டதாக கூறி அதனை கண்டித்தும், போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தக்கோரியும் மகளிர் தினமான இன்று நெல்லை மாநகர் மாவட்ட அ.ம.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை தாங்கி கலந்து கொண்டு கண்டன உரையாற்றி பேசியதாவது:-
தமிழகத்தில் பெண்கள் முதல் வயதான மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. சட்டம்-ஒழுங்கை சரி செய்யுங்கள். பால்வாடிக்கு செல்கின்ற பால் முகம் மாறாத பெண் குழந்தைகள் முதல் கல்லூரிக்கு செல்கிற மாணவிகள், பள்ளிகளுக்குச் செல்கிற சிறுமிகள், வேலைக்கு செல்கிற பெண்கள், வீட்டிலே இருக்கிற பெண்கள், மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுவதை தடுக்க ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர்.
மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். மாதராய் பிறக்க மாதவம் செய்ய வேண்டும் என்ற பேசப்பட்ட தமிழகத்தில் பெண்களாய் பிறந்ததற்கு அச்சப்படும் நிலை உள்ளது. பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை பாதுகாக்கும் ஆசிரியர்கள் தவறு செய்கின்றனர். பாலியல் வன்கொடுமை, போதை பொருள் நடமாட்டம், கனிமவள கொள்ளை என எந்த குற்றமாக இருந்தாலும் தி.மு.க.வுக்கு நேரடி அல்லது மறைமுக தொடர்பு இருக்கிறது.
தி.மு.க.வினரின் ஆசியோடு குற்றங்கள் நடப்பதை யாராலும் மறுக்க முடியாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் ரவுடிகள் ஓடி ஒழிந்தார்கள். இப்போது தி.மு.க கொடி பொறித்த வண்டியில் வந்து ரவுடிசம் செய்யும் நிலை உள்ளது. பெண்கள் பாலியல் பிரச்சனையில் பாதிக்கப்பட்டால் புகார் அளிக்க கூடாது என அவர்கள் அளித்த புகார்கள் லீக் செய்யப்படுகிறது. தி.மு.க. ஆட்சியில் காவல் துறை ஏவல் துறையாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிகமான பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். அதற்கு காரணம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். அவரது ஆட்சி காலத்தில் தான் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது.
தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாள்தோறும் அரங்கேறுகிறது.
பாலியல் வன்கொடுமை செய்து பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். பள்ளிக்கு பெண் குழந்தைகளை அனுப்பிவிட்டு வயிற்றில் நெருப்பை கட்டிகொண்டு இருக்கும் அவலம் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சரால் பெண் முன்னேற்றத்திற்கு கொண்டு வந்த நல்ல திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் மூடுவிழா காணப்படுகிறது.
மீதம் இருக்கும் ஓராண்டினை பாவமன்னிப்பு பெறும் ஆண்டாக எடுத்து விழித்து கொள்ளுங்கள். இந்த ஆட்சியாளர்கள் 4 ஆண்டுகளாக கமிஷனை தவிர வேறு எதன் மீதும் அக்கறை இல்லாமல் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசாக தமிழக அரசு செயல்படுவதை பார்த்து சந்தி சிரிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
- 14-ந்தேதி தமிழ்நாடு, புதுவையில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 11-ந்தேதி குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
14-ந்தேதி தமிழ்நாடு, புதுவையில் வறண்ட வானிலை நிலவும்.
தமிழகத்தில் இன்று, நாளை, நாளை மறுநாள் என 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதிய வேளையில் 36 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகக்கூடும்.
- இப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.
- இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்தார்
2004 ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், அசின் ,நதியா, பிரகாஷ் ராஜ் மற்றும் விவேக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது எம்.குமரன் Son Of Mahalakshmi திரைப்படம். இப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.
இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்தார் படத்தில் இடம் பெற்ற பாடலகள் அனைத்தும் ஹிட்டானது. கணவனை பிரிந்து மகனை வளர்க்கும் தாயின் அன்பு, அவள் படும் கஷ்டங்கள், தாய்-க்காக மகன் எய்யும் செயல்கள் என மிகவும் நேர்த்தியாக இப்படத்தின் கதைக்களம் உருவாகியிருக்கும். குறிப்பாக ரவி மோகன் மற்றும் நதியாவின் காம்பினேஷன் மிக அழகாக வொர்க் அவுட் ஆகியிருக்கும்.
இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படத்தை மீண்டும் வரும் மார்ச் 14 ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்கின்றனர். இதனால் ரவி மோகன் ரசிகர்கள் மற்றும் திரைப்படத்தை திரையரங்கிள் பார்க்க ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரஷிய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசினார்.
- வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் சந்தித்து பேசினார்.
ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார்.
மேலும் வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் சந்திப்பின்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போர் நிறுத்தத்துக்கு ஜெலன்ஸ்கி மறுத்ததால் டிரம்ப் அதிருப்தி அடைந்தார்.
இதையடுத்து உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில் உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வரை ரஷியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "போர் களத்தில் உக்ரைனுக்கு எதிராக முற்றிலும் ஒரு கடுமையான தாக்குதலை ரஷியா தொடுத்து வருகிறது. இதனால் ரஷியா மீது மிகப்பெரிய அளவிலான பொருளாதார தடைகளையும், வரிகளையும் விதிப்பது குறித்து நான் பரிசீலனை செய்து வருகிறேன். அமைதி ஏற்படுவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் இறுதி தீர்வுக்கான ஒப்பந்தம் ஏற்படும் வரை இந்த தடைகள் அமலில் இருக்கும். ரஷியாவும், உக்ரைனும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷிய அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா, ரஷியா அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இந்நிலையில் உக்ரைன் அதிகாரிகளுடன் அமெரிக்கா 11-ந்தேதி சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மீண்டும் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக்கை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரெயில்வே தண்டவாளங்களை சுத்தமாக வைத்திருப்பது ரெயில்வேயின் பொறுப்பு.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்த வேண்டாம் என்று கேரள ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பான வழக்குகளில் கேரள ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் கூறியிருப்பதாவது:-
திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக கண்ணாடி தண்ணீர் பாட்டில்களை மாற்றி பயன்படுத்தலாம். மீண்டும் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக்கை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்த உரிமம் பெறுவது கட்டாயமாகும்.
ரெயில்வே தண்டவாளங்களை சுத்தமாக வைத்திருப்பது ரெயில்வேயின் பொறுப்பு. அவற்றில் கழிவுகள் கொட்டப்படுவதை அனுமதிக்கக்கூடாது. ரெயில் தண்டவாளங்களில் இருந்து கழிவுகளை முழுமையாக அகற்றுவதை ரெயில்வே துறை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு கேரள ஐகோர்ட்டு கூறியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் கேரள அரசு ஐகோர்ட்டில் கொடுத்துள்ள விளக்கத்தில், "நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்து வதற்கான உரிமங்களை வழங்கும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்த தடை செய்யப் பட்டுள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் பிளாஸ்டிக் தடை பரிசீலனையில் உள்ளது" என்று தெரிவித்துள்ளது.
- எனது ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
- இல்லத்தை மட்டுமல்ல உலகத்தையும் இயக்கச் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள் பெண்கள்.
சென்னை:
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தமிழக அரசு சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பெண் காவலர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின், மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை என்பதை உணர்ந்தவர்கள் நாங்கள்.
* பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை என்பதை உணர்ந்ததால் தான் மகளிர் தின விழாவில் பங்கேற்கிறோம்.
* வாழ்நாள் எல்லாம் பெண்களின் விடுதலைக்காக உழைத்தவர் தந்தை பெரியார்.
* நீதிக்கட்சி ஆட்சியில் தான் பெண்களுக்கு முதன்முறையாக வாக்களிக்கும் உரிமை தரப்பட்டது.
* பெண்களுக்கு சொத்துரிமை வழங்கி சட்டம் கொண்டு வந்தவர் கலைஞர்.
* மகளிர் தினம் கொண்டாடப்படும் மாதத்தில் பிறந்தவன் என்பதை எண்ணி பெருமை கொள்கிறேன்.
* எனது ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
* இல்லத்தை மட்டுமல்ல உலகத்தையும் இயக்கச் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள் பெண்கள்.
* முக்கிய நரகங்களில் புதிதாக 72 கோடி ரூபாய் மதிப்பில் 700 படுக்கைகளுடன் தோழி விடுதிகள் அமைக்கப்படும்.
* காஞ்சிபுரம். ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, கடலூர், நாகை, ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களில் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும்.
* 24 மணிநேர பாதுகாப்பு வசதியுடன் பெண்களுக்கான விடுதிகள் புதிதாக கட்டப்படும்.
* கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கப்படும் கடன்களில் பெண்களுக்கு முன்னுரிமை, சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. வழங்கப்படும்.
* தமிழ்நாடு முழுவதும் 4.42 லட்சம் மகளிருக்கு ரூ.3,190 கோடி வங்கிக்கடன் இணைப்பு.
* பெண்களுக்கு பிங்க் நிற ஆட்டோக்களை வழங்கி இருக்கிறோம்.
* மகளிர் உயர மாநிலம் உயரும். தடைகளை தாண்டி சாதனைகளை படைக்கும் பெண்களை பாராட்டாமல் எப்படி இருக்க முடியும்.
* ஆணாதிக்க மனோபாவம் மறைய வேண்டம், ஆண்களை போல அனைத்து உரிமையும் பெண்களுக்கு உண்டு.
* பெண்கள் முன்னேறுவதை பார்த்து கேலி எண்ணும் மனப்பான்மையில் இருந்து ஆண்கள் வெளிவரவேண்டும்.
* தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெண்களுக்கான திட்டங்களை பயன்படுத்தி பெண்கள் பயன்பெற வேண்டும் என்று கூறினார்.






