என் மலர்
இந்தியா

திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்த வேண்டாம்- கேரள ஐகோர்ட்
- மீண்டும் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக்கை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரெயில்வே தண்டவாளங்களை சுத்தமாக வைத்திருப்பது ரெயில்வேயின் பொறுப்பு.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்த வேண்டாம் என்று கேரள ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பான வழக்குகளில் கேரள ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் கூறியிருப்பதாவது:-
திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக கண்ணாடி தண்ணீர் பாட்டில்களை மாற்றி பயன்படுத்தலாம். மீண்டும் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக்கை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்த உரிமம் பெறுவது கட்டாயமாகும்.
ரெயில்வே தண்டவாளங்களை சுத்தமாக வைத்திருப்பது ரெயில்வேயின் பொறுப்பு. அவற்றில் கழிவுகள் கொட்டப்படுவதை அனுமதிக்கக்கூடாது. ரெயில் தண்டவாளங்களில் இருந்து கழிவுகளை முழுமையாக அகற்றுவதை ரெயில்வே துறை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு கேரள ஐகோர்ட்டு கூறியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் கேரள அரசு ஐகோர்ட்டில் கொடுத்துள்ள விளக்கத்தில், "நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்து வதற்கான உரிமங்களை வழங்கும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்த தடை செய்யப் பட்டுள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் பிளாஸ்டிக் தடை பரிசீலனையில் உள்ளது" என்று தெரிவித்துள்ளது.






