என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது.
    • ஹமாஸ்-க்கு எதிராக இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    காசா பகுதி, தெற்கு லெபனான் மற்றும் தெற்கு சிரியா பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தை உள்பட பத்து பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்த ஆயத்தமான பயங்கரவாதிகளை குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

    காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள போதிலும், இஸ்ரேல் தரப்பில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கடந்த இரண்டு வாரங்களாக காசா பகுதிக்குள் உணவு, மருத்து, எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது.

    போர் நிறுத்த ஒப்பந்தத்தில் மாற்றங்களை ஒப்புக் கொள்ள வலியுறுத்தி ஹமாஸ்-க்கு எதிராக இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம் பஷார் ஆசாத் வீழ்த்தப்பட்ட நிலையில், சிரியாவில் ஒரு பகுதியை இஸ்ரேல் கைப்பற்றி இருக்கிறது. இஸ்ரேலுக்கு எதிராக எந்த அச்சுறுத்தலையும் வெளிப்படுத்தவில்லை என்றாலும், தற்போது சிரியாவை ஆளும் முன்னாள் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை இது என்று இஸ்ரேல் கூறுகிறது.

    இஸ்ரேலின் இந்த தாக்குதல் சிரியாவின் தெற்கில் அமைந்துள்ள தாரா என்ற குடியிருப்பு பகுதியை தாக்கி அழித்தது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் நான்கு பேர் குழந்தைகள் ஆவர். இந்த தாக்குதலில் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேதமுற்றதாகவும், மற்ற தாக்குதல்கள் நகரின் ராணுவ தளங்களை தாக்கியதாக சிரிய பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

    • விமான நிலைய ஊழியர் ஒருவரை பிடித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • தங்கம் பறிமுதல் தொடர்பாக 2 விமான நிலைய ஊழியர்கள் உள்பட 4 பேர் கைது.

    மும்பை:

    மும்பை விமான நிலையத்தில் தங்கம் கடத்தலை தடுக்க சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடந்த 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அதிகாரிகள் வெவ்வேறு சம்பவங்களில் 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட ரூ.8½ கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    இதில் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றிய விமான நிலைய ஊழியர் ஒருவரை பிடித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர் பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்து இருந்த ரூ.2 கோடியே 27 லட்சம் மதிப்பிலான 2.8 கிலோ தங்க பசையை பறிமுதல் செய்தனர்.

    மற்றொரு சம்பவத்தில் விமான நிலைய ஊழியர் ஒருவர் உள்ளாடையில் மறைத்து வெளியில் எடுத்து செல்ல முயன்ற ரூ.1 கோடியே 31 லட்சம் மதிப்பிலான 1.6 கிலோ தங்க பசையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் தங்கத்தை வாங்க வந்த மேலும் 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

    இதேபோல இன்னொரு சம்பவத்தில் வெளிநாட்டில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த விமான கழிவறை குப்பை தொட்டியில் இருந்து அதிகாரிகள் 2 கருப்பு நிற பையில் ரூ.2 கோடியே 53 லட்சம் மதிப்பிலான 3.1 கிலோ தங்கத்தை மீட்டனர்.

    தங்கம் பறிமுதல் தொடர்பாக 2 விமான நிலைய ஊழியர்கள் உள்பட 4 பேரை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாக்கடையில் கொட்டும் குப்பைகள், கழிவுகள் ஆண்டு முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
    • பொதுமக்கள் சாக்கடை கால்வாய்களில் குப்பைகளை கொட்டுவதால், சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்படுகிறது.

    மும்பை:

    மும்பையில் ஆண்டு தோறும் மழைக்காலத்துக்கு முன் சாக்கடை கால்வாய்கள், மித்தி நதியை மும்பை மாநகராட்சி தூர்வாரி வருகிறது. இந்த பணிக்காக அதிகளவில் நிதி செலவிடப்படுகிறது. எனினும் பொதுமக்கள் சாக்கடை கால்வாய்களில் குப்பைகளை கொட்டுவதால், சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்படுகிறது.

    இதன் காரணமாக மாநகராட்சி அதிக செலவு செய்து தூர்வாரும் பணியை மேற்கொண்டும், சாக்கடை கால்வாய்களில் குப்பை குவிந்து கிடப்பதால் விமர்சனத்துக்கு உள்ளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது.

    இதையடுத்து பொதுமக்கள் சாக்கடை கால்வாய்களில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில், கரையோரங்களில் தடுப்பு வேலி அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாாி ஒருவர் கூறுகையில், "சாக்கடை கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள், சாக்கடையில் கொட்டும் குப்பைகள், கழிவுகள் ஆண்டு முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் இது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறது. வலை, இரும்பு தகடு மூலம் சாக்கடை கால்வாய் ஓரம் 10 அடி உயரம் வரையில் வேலி அமைக்க திட்டமிட்டு உள்ளோம்.

    தடுப்பு வேலி வலை திருட்டை தடுக்க, அவை பழைய இரும்புக்கு விற்பனை ஆகாத அல்லது மறு விற்பனை ஆகாத பொருட்கள் மூலம் செய்யப்பட்டதாக இருக்கும். முதல் கட்டமாக அதிகளவில் குப்பை கொட்டப்படும் இடங்களில் தடுப்பு வேலி அமைக்க உள்ளோம். அதன்பிறகு மற்ற இடங்களில் வேலி அமைக்கப்படும்" என்றார்.

    • கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டம் கல்யாண் கோவிந்த்வாடி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக பஜார்பேட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் வாலிபர் ஒருவர் நடமாடியதை கவனித்தனர்.

    இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் பீட் மாவட்டத்தை சேர்ந்த சகில் சேக் (வயது25) என்பது தெரியவந்தது. இவர் வைத்திருந்த உடைமையை பிரித்து சோதனை போட்ட போது, அதில் 12 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இவர் கஞ்சாவை விற்க கல்யாணுக்கு வந்தது தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து. விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தென்காசி மற்றும் திருநெல்வேலி மலைத்தொடர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    அதன்படி, நீலகிரி, தேனி, மதுரை, திண்டுக்கல், தென்காசி மற்றும் திருநெல்வேலி மலைத்தொடர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காலை உணவு திட்டம்கொண்டு வந்ததையும் தே.மு.தி.க. வரவேற்கிறது.
    • ஆளுங்கட்சியை எதிர்த்து போராடுபவர்கள் கைது செய்யப்படுவது காலங்காலமாக நடைபெறும் வழக்கம்தான்.

    மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2006-ல் தே.மு.தி.க. தேர்தல் அறிக்கையில் வந்த திட்டங்களை தான் தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள். எனவே நாங்கள் அதை வரவேற்கிறோம்.

    மதிய உணவு திட்டம் மட்டும் இருந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவும் தே.மு.தி.க. கொண்டுவர இருந்த திட்டம்தான். காலை உணவு திட்டம் கொண்டு வந்ததையும் தே.மு.தி.க. வரவேற்கிறது.

    தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான திட்டங்களும், விவசாயிகள் வாழ்வாதத்திற்கான திட்டங்களையும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 2006-ல் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதை செயல்படுத்துவதாக இருந்தால் அதையும் இந்த பட்ஜெட்டில் அறிவித்தது வரவேற்கக் கூடியது.

    தற்போது போராட்டம் நடத்தும் எதிர்கட்சியினரை கைது செய்வது தொடர்ந்து வருகிறது. கடந்த காலங்களில் இருந்து தற்போது வரை ஆளுங்கட்சியை எதிர்த்து போராடுபவர்கள் கைது செய்யப்படுவது காலங்காலமாக நடைபெறும் வழக்கம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் பிரேமலதாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் விபரம் வருமாறு:-

    கேள்வி: 2026-ல் தேர்தல் கூட்டணிக்கு முன்னோட்டமாக தே.மு.தி.க.வின் இந்த பட்ஜெட் பாராட்டை எடுத்துக்கொள்ளலாமா?

    பதில்: தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருட காலம் இருக்கிறது.தே.மு.தி.க. நிலைப்பாடு என்ன என்பது குறித்து தேர்தல் நெருங்கும் போது தெரிவிப்போம். தமிழக பட்ஜெட்டில் தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பு தெரிவிக்கிறோம்.

    கேள்வி: டாஸ்மாக் ஊழலில் சிறு மீன்கள் முதல் பெரிய திமிங்கலம் வரை கைது செய்யப்படுவார்கள் என விஜய் கூறியது?

    பதில்: அதை விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை அமலாக்கத்துறை உரிய விசாரணை நடத்தி உண் மையை வெளிக்கொண்டு வரவேண்டும். ஏற்கனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப் பட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

    • முஸ்லிம்களுக்கு அரசு ஒப்பந்தகளில் 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல்.
    • இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு செய்வோம் என பாஜக தெரிவித்துள்ளது.

    கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, முஸ்லிம்களுக்கு அரசு ஒப்பந்தத்தில் 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும் என பரிந்துரை செய்துள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதற்கு எதிராக அனைத்து விதமான வகையில் போராடுவோம். இந்த முடிவை திரும்பப்பெறும் வகையில் நீதிமன்றத்தில் கூட முறையீடு செய்வோம் என பாஜக தெரிவித்துள்ளது.

    4 சதவீத ஒதுக்கீட்டிற்கான சட்ட திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2 கோடி ரூபாய் வரையிலான ஒப்பந்தத்திலும், ஒரு கோடி ரூபாய் வரையில் goods/services ஒப்பந்தங்களிலும் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் வழங்க சட்டதிருத்தம் கொண்டு வர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இது அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கை. சித்தராமையா அரசு உடனடியாக இதை திரும்பப் பெற வேண்டும். இது அரசியமைப்புக்கு எதிரான துரதிருஷ்டவசமானது என பாஜக எம்.பி. தேஜஷ்வி சூர்யா பாஜக தலைமையகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மேலும், நாட்டிலேயே முதல் முறையாக, மதச்சார்பற்ற தன்மை கொண்டதாகக் கூறும் ஒரு அரசாங்கம், மாநிலத்தில் மத மாற்றத்தை ஊக்குவிக்கிறது என்றார்.

    • பள்ளிக்குழந்தைகள் மாதிரி அரசியல் செய்கிறது தவெக.
    • நாடகம் பன்னுவது விஜய். விஜய் திமுக-வின் பி டீம்.

    ரூ. 1,000 கோடி அளவுக்கு டாஸ்மாக்கில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டி பா.ஜ.க. சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டிருந்தனர்.

    இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா உள்பட பலர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    அதேவேளை, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பா.ஜ.க. தலைவர்கள், பெண்கள் உள்பட அக்கட்சி தொண்டர்கள் மாலை 6 மணிக்கு மேல் விடுதலை செய்யப்பட்டனர்.

    விடுதலை செய்யப்பட்ட பின்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அதில் நடிகர் விஜயின் தவெக, திமுக-வின் பி டீம் என அவர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பள்ளிக்குழந்தைகள் மாதிரி அரசியல் செய்கிறது தவெக. சினிமா சூட்டிங்கில் பாட்டு பாடிக்கொண்டு நடிகைகளின் இடுப்பை கிள்ளி அரசியல் செய்கிறார் விஜய். நான் களத்தில் இறங்கி போராட்டம் நடத்துகிறேன் களத்தில் நின்று பேசுகிறேன். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் என்ன Work from home அரசியல் செய்கிறாரா?


    விஜய்-க்கு 50 வயதில்தான் அரசியலில் வரவேண்டும் என்று தோன்றியதா. 30 வயதில் எங்கே சென்றார். நாடகம் பன்னுவது விஜய். விஜய் திமுக-வின் பி டீம்.

    சூட்டிங்கில் உட்கார்ந்து அறிக்கை அனுப்பும் விஜய்-க்கு மக்களின் கஷ்டத்தை பற்றி என்ன தெரியும். சினிமாவில் புகைப்பிடிப்பது, மது குடிப்பது என நடிக்கும் விஜய்-க்கு டாஸ்மாக் குறித்து பேசுவதற்கு யார் உரிமை கொடுத்தது. ஒருநாள் குல்லா போட்டுக் கொண்டு இஃப்தார் விருந்தில் பங்கேற்றால் போதுமா.

    என அண்ணாமலை கூறினார்.

    • முதல்வரை A1 என்று கூறிய விவகாரத்தில் தைரியமிருந்தால் என்னை ரிமாண்ட் செய்யட்டும்.
    • சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு தைரியமிருந்தால் என்னை கைது செய்து சிறையில் அடைக்கட்டும்.

    சென்னை அக்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கைது செய்து அடைக்கப்பட்டிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுவிக்கப்பட்டார்.

    பிறகு செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது:-

    டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடும் போராட்டத்திலும் ஈடுபடப் போகிறோம்.

    சட்டத்தை பற்றி பேசுவதற்கு அமைச்சர் ரகுபதிக்கு அருகதை இல்லை. அமைச்சர் ரகுபதி மீது சொத்து குவிப்பு வழக்க நிலுவையில் உள்ளது.

    முதல்வரை A1 என்று கூறிய விவகாரத்தில் தைரியமிருந்தால் எனு்னை ரிமாண்ட் செய்யட்டும்.

    சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு தைரியமிருந்தால் என்னை கைது செய்து சிறையில் அடைக்கட்டும்.

    இவ்வாறு கூறினார்.

    • பாஜகவுக்கு மரியாதை கொடுக்காத காவல்துறை இனி தூங்கக் கூடாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
    • அடுத்த ஒரு வாரத்தில் டாஸ்மாக் கடைகளில் முதல்வர் படத்தை பிரேம் போட்டு மாட்டுவோம்.

    சென்னை அக்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கைது செய்து அடைக்கப்பட்டிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுவிக்கப்பட்டார்.

    பிறகு செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது:-

    போராட்டம் நடத்தியவர்களை மாலை 6 மணிக்கு மேல் ஆகியும் விடுவிக்க மறுத்தது ஏன்?

    ரேபிஸ்ட் ஆக இருந்தால் ராஜமரியாதை, மணல் கடத்தினால் ராஜமரியாதை.

    இனி முன் அனுமதி பெறாமல் திடீர் போராட்டங்களை நடத்தப் போகிறோம்.

    அடுத்த ஒரு வாரத்தில் டாஸ்மாக் கடைகளில் முதல்வர் படத்தை பிரேம் போட்டு மாட்டுவோம்.

    நமக்கு மரியாதை கொடுக்காத காவல்துறை இனி தூங்கக் கூடாது. பொறுமையை சோதித்து விட்டதால் இன்றைக்கு இரவில் இருந்து காவல்துறையை தூங்க விடமாட்டேன்.

    போலீசார் தூங்க முடியாத அளவுக்கு மே மாதம் வரை போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்று, மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அவுங்கரசீப்புக்கு இணையாக கொடுங்கோல் ஆட்சி செய்கிறார்.
    • மதம் தொடர்பான விசயங்களுக்கு அவர் எப்போதும் ஆதரவாக இருக்கிறார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்கசீப்பின் கல்லறையை அப்புறப்படுத்த வேண்டும் என சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பெரும் புயலை கிளப்பி வருகிறது. இதனால் அவுரங்கசீப் கல்லைறை இருக்கும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடையாள அட்டை காண்பித்துதான் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலவைர் ஹர்ஷ்வர்தன் சப்கால், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸை அவுரங்கசீப் உடன் ஒப்பிட்டதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கால் பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது "அவுரங்கசீப் கொடுங்கோல் ஆட்சி செய்தார். இன்று, மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அவுங்கரசீப்புக்கு இணையாக கொடுங்கோல் ஆட்சி செய்கிறார். மதம் தொடர்பான விசயங்களுக்கு அவர் எப்போதும் ஆதரவாக இருக்கிறார். ஆனால், சர்பாஞ்ச் சந்தோஷ் தேஷ்முக் கொலை போன்ற வழக்குகளில் எதுவுமே செய்யவில்லை" எனக் கூறியிருந்தார்.

    இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரது ஒப்பீடு சிறுபிள்ளைத்தனமானது எனத் தெரிவித்துள்ளது.

    பாஜக எம்.பி. பகவத் கராத் இது தொடர்பாக கூறுகையில் "இது மிகவும் தவறானது, கண்டிக்கத்தக்கது. பட்நாவிஸ் மாநிலத்திற்கான நல்ல விசயங்களை செய்து வருகிறார். அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது. விக்ஷித் மகாராஷ்டிரா நோக்கி பணியாற்றிக் கொண்டிருக்கிறார். காங்கிஸ் தலைவரின் ஒப்பீடு சிறுபிள்ளைத்தனமானது.

    தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் ஒப்பீடு நல்லதல்ல என கருத்து தெரிவித்துள்ளனர்.

    • கைது செய்யபட்டு மாலை 6 மணியாகியும் எங்களை விடுவிக்காதது ஏன்? என போலீசாருடன் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • கைது செய்யப்பட்டதும் சிலரைப் போல நெஞ்சு வலி என நாங்கள் நாடகமா போடுகிறோம்?

    டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் எனக்கூறி போராட முயன்ற தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களை சென்னையில் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டு மாலை 6 மணி ஆகியும் பாஜகவினரை விடுவிக்காததால், அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள். டாஸ்மாக் அலுவலகத்தையே மூடிய பிறகு எங்களால் என்ன பிரச்சனை ஏற்பட போகிறது ?

    மாலை 6 மணியாகியும் எங்களை விடுவிக்காதது ஏன் ?

    கொல்கத்தா நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும். 3 விமானங்களை விட்டுவிட்டேன்" என்றார்.

    டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற தமிழிசை உள்ளிட்டோர் கைது செய்து சென்னை வளசரவாக்கம் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்ட நிலையில் போலீசாருடன் வாக்குவாதம் நடந்து வருகிறது.

    அப்போது தமிழிசை கூறுகையில், " மாலை 6 மணிக்கு மேலாகியும் தங்களை விடுவிக்க மறுப்பது ஏன்?

    கைது செய்யப்பட்டதும் சிலரைப் போல நெஞ்சு வலி என நாங்கள் நாடகமா போடுகிறோம்?

    இரவு 7 மணி ஆகியும் எங்களை விடுவிக்க மறுப்பது ஏன்? நாங்கள் என்ன பயங்கரவாதிகளா?" என்று ஆதங்கமாக பேசினார்.

    இந்நிலையில், சென்னை அக்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கைது செய்து அடைக்கப்பட்டிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுவிக்கப்பட்டுள்ளார்.

    ×