என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • விளம்பரத்தால் எண்ணற்ற மக்கள் துணிகளை வாங்க குவிந்தனர்.
    • தரமற்ற துணிகளே இருந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

    ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே வரி அதிகரிப்பால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத ஜவுளி ரகங்கள் சலுகை விலையில் விற்பனை என விளம்பரம் செய்யப்பட்டு துணிகள் வீரப்பனை செய்யப்பட்டது.

    இந்த விளம்பரத்தால் எண்ணற்ற மக்கள் துணிகளை வாங்க குவிந்தனர். ஏராளமான மக்கள் குவிந்த நிலையில் தரமற்ற துணிகளே இருந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

    உள்ளூர் சந்தையில் விற்கப்படுவதை ஏற்றுமதி துணிகள் என ஏமாற்றுவதாக மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட துணிகள் விற்பனை நிறுத்தப்பப்பட்டது. 

    அட்லி, தற்போது அல்லு அர்ஜூன்-தீபிகா படுகோனே நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

    'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என தமிழ் படங்களில் தொடர் வெற்றி படங்களை கொடுத்த அட்லி, பாலிவுட் சினிமாவில் ஜவான் திரைப்படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்து அசத்தினார். ஷாருக்கான்-நயன்தாரா கூட்டணியில் அவர் இயக்கிய 'ஜவான்' படம் ரூ.1,000 கோடியை தாண்டி வசூல் குவித்து சாதனை படைத்தது.

    அட்லி, தற்போது அல்லு அர்ஜூன்-தீபிகா படுகோனே நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தமாகி இருக்கிறாராம். படத்தில் அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று தகவல் வெளியான நிலையில் தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர்களை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் ஜான்வி கபூரும் படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

    • 21 பந்தில் அரைசதம் விளாசிய நிலையில், 42 பந்தில் சதம் அடித்தார்.
    • அவரது ஸ்கோரில் 8 பவுண்டரிகள், 15 சிக்சர்கள் அடங்கும்.

    டெல்லி டி20 லீக்கின் எலிமிடேட்டர் சுற்று நேற்றிரவு நடைபெற்றது. இதில் மேற்கு டெல்லி- தெற்கு டெல்லி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தெற்கு டெல்லி 201 ரன்கள் குவித்தது. பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கு டெல்லி களம் இறங்கியது. இரண்டு விக்கெட்டுகளை விரைவாக இழந்த போதிலும், கேப்டன் நிதிஷ் ராணா ருத்ரதாண்டவம் ஆடினார்.

    திக்வேஷ் வீசிய 8ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி, 3 சிக்சர் வரிசையாக அடித்து அசத்தினார். அத்துடன் 21 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து திக்வேஷ் வீசிய 10ஆவது ஓவரிலும் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விரட்டினார். தொடர்ந்து விளையாடிய அவர் 42 பந்தில் சதம் அடித்தார்.

    நிதிஷ் ராணா ஆட்டமிழக்காமல் 55 பந்தில் 134 ரன்கள் விளாச 17.1 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கு டெல்லி அபார வெற்றி பெற்றது. நிதிஷ் ராணா 8 பவுண்டரி, 15 கிக்சர்கள் விளாசினார். ஓடாமலேயே 132 ரன்கள் விளாசினார்.

    • பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் சீனா சென்றடைந்தார்.
    • சீன அதிபர் ஷி ஜின்பின், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார்.

    பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று ஜப்பான் நாட்டுக்கு சென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

    அப்போது இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 6 லட்சம் கோடியை முதலீடு செய்ய ஜப்பானில் உள்ள நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்து இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

    அதோடு இந்தியா விரைவில் 3-வது பெரிய பொருளாதார நாடாக உருவாக இருப்பதால் தொழில் அதிபர்கள் இந்தியாவுக்கு வந்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

    இந்தியா-ஜப்பான் இடையிலான 15-வது வருடாந்திர உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில், பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் சீனா சென்றடைந்தார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார்.

    சீனாவில் நடக்க உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்திக்கிறார்

    • 4 முறை வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் குறைவான முதலீட்டைக் கொண்டு வந்துள்ளார்.
    • பெரும்பாலான முதலீட்டு ஒப்பந்தங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளின் விரிவாக்கம் ஆகும்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என்று, பதவியேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், இந்தியாவில் மற்ற மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஈர்த்த முதலீட்டைவிட மிக, மிகக் குறைவான முதலீட்டைக் கொண்டு வந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில் ஆட்சி முடிவடைய இன்னும் 8 மாத காலமே உள்ள நிலையில், இன்று 5-ம் முறையாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது உண்மையிலேயே ஸ்டாலின் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கச் செல்கிறாரா? அல்லது முதலீடு செய்வதற்கு செல்கிறாரா என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

    தெலுங்கானா (அமெரிக்கா– ரூ. 31,500 கோடி) மற்றும் கர்நாடகா (அமெரிக்கா- ரூ. 25 ஆயிரம் கோடி) முதலீடுகளை ஈர்த்ததாகவும் செய்திகள் வந்துள்ளன. ஆனால், ஸ்டாலின், மார்ச் 2022-ல் துபாய்க்கு குடும்ப சுற்றுலா (6 நாட்கள்), மே மாதம் 2023-ல் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப் பயணம் (8 நாட்கள்), ஜனவரி மாதம் 2024-ல் ஸ்பெயின்

    சுற்றுப் பயணம் (10 நாட்கள்), ஆகஸ்ட் 2024-ல் அமெரிக்கா சுற்றுப் பயணம் (16 நாட்கள்), என்று மொத்தம் 4 முறை, 40 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் சுமார் ரூ.18 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது.

    இதிலும், பெரும்பாலான முதலீட்டு ஒப்பந்தங்கள் தமிழகத்தில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்காக போடப்பட்டவையே.

    தமிழக அரசின் இன்றைய பத்திரிக்கை செய்தியின்படி 2021 முதல் இன்றுவரை சுமார் 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை எங்கள் ஆட்சியில் போடப்பட்ட தொழில் முதலீடுகளின் தொடர்ச்சியே. 4 முறை வெளிநாடு சென்று இவர் சாதித்ததாக மார்தட்டிக்கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வெறும் 36 மட்டுமே. நான் முதலமைச்சராக இருந்தபோது, 2019-ம் ஆண்டு ஒருமுறை மட்டுமே இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 41 ஆகும்.

    ஸ்டாலின், நான் வெளிநாடு சென்று வந்ததைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். எனது வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் தொழில் முதலீடுகளை ஈர்த்தது மட்டுமல்ல, அங்குள்ள கால்நடை பண்ணை மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவற்றை நேரடியாகப் பார்வையிட்டு, அதுபோன்றதொரு கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை, சேலம் மாவட்டம், தலைவாசலில் சுமார் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கிக் காட்டினேன்.

    அதை அழிக்கும் முயற்சியில் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். எனவே, ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க வெளி நாட்டுப் பயணம் மேற்கொண்டதால் உண்மையில் தமிழகத்திற்கு எந்தவிதமான நன்மைகளும் ஏற்படவில்லை என்று தொழில் துறையினர் கூறுகின்றனர்.

    அதேபோல், கோவிட் தொற்றுநோய் காலத்தில் மட்டும், 60,674 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,00,721 நபர்களுக்கு வேலை வாய்ப்புடன், 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. எனவே, ஆரம்பம் முதல் ஸ்டாலின் வெளிநாடு சென்று ஈர்த்த தொழில் முதலீட்டு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இதுவரை பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு வெள்ளை அறிக்கையை பற்றி மூச்சுவிடவில்லை.

    ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தைப் பற்றிய செய்தி அறிந்தவுடன், திரைப்படத் துறையில் மறைந்த 'சின்ன கலைவாணர்' என்று அனைவராலும் அழைக்கப்பட்ட விவேக் அவர்களது நகைச்சுவைதான் ஞாபகம் வருகிறது.

    இதுவரைக்கும் உங்களுக்கு ஏதாவது செய்துள்ளேனா? என்று விவேக் அவரின் அடிபொடிகளிடம் கேட்பார். ஒன்றுமே இல்லை' என்று அவர்கள் பதில் அளிப்பார்கள். உடனே விவேக் 'அதுதான் மக்களுக்கும்' - என்பார்!

    அதுபோல் ஸ்டாலின் முதலீட்டை ஈர்க்கிறேன் என்று 4 முறை வெளிநாடுகளுக்குச் சென்றார். சொல்லும்படியாக ஏதேனும் முதலீட்டை ஈர்த்தாரா? என்றால் இல்லை என்பதே தொழில்துறையினரின் கருத்து. எனவே ஸ்டாலின்,

    இன்று 5-ம் முறையாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், கடந்த சுற்றுப்பயணங்களின் போது வெளிநாட்டில் சைக்கிள் ஓட்டி பொன்னான நேரத்தை வீணடித்தது போல் செய்யாமல், இந்த முறை அதைத் தவிர்த்து தமிழகத்திற்குத் தேவையான முதலீட்டை ஈர்க்க வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது.
    • இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் கடுமையான விரிசல்களை ஏற்படுத்தியது.

    ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது.

    இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளும் மோதலில் ஈடுபட்டன. மே 9 அன்று பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட்டது.

    இதனிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இந்த விவகாரம் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் கடுமையான விரிசல்களை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டின்

    வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்களை சந்தித்து பேசிய இஷாக் தார், "காஷ்மீர் விவகாரம் உட்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவுடன் கண்ணியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது.

    வர்ஷா பரத் “Bad Girl” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    சிலம்பரசன் டி.ஆர். (STR), ரசிகர்களால் சிம்பு என்றும் அழைக்கப்படும் இவர், தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

    இப்படத்தில் STR முற்றிலும் இளமையான தோற்றம் பெற வேண்டும் என்பதற்காக 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளார். இப்படத்தில் இரண்டு தோற்றத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் அறிவிப்பு வீடியோ படமாக்கப்பட்ட நிலையில் அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

    வெற்றி மாறனின் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பரத் "Bad Girl" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை இன்று கமலா திரையரங்கிள் 1000 நபர்களுக்கு மட்டும்  திரையிடப்பட்டது. அப்போது படத்தை இளைஞர்கள் மிகவும் ரசித்து பார்த்தனர். படம் முடித்துவிட்டு வெற்றிமாறனிடம் அடுத்த படத்தின் அப்டேட் கேட்டனர். அதற்கு வெற்றி அடுத்து சிம்புவின் படம் இயக்குகிறேன் அதற்கான அப்டேட் இன்னும் 10 நாட்களில் வரும் அதை தொடர்ந்து வட சென்னை2 இயக்குவேன் என கூறினார்.

    • உக்ரைனின் மொத்த டீசல் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 15.5% ஆக உயர்ந்துள்ளது.
    • 2024 ஜூலையில் வெறும் 1.9 சதவீதமாக இருந்த இந்த அளவு தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.

    ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்வதற்காக இந்தியா மீது அமெரிக்காவி 50 சதவீத வரிகளை விதித்துள்ளது. இந்நிலையில், உக்ரைனின் மிகப்பெரிய டீசல் சப்ளையராக இந்தியா மாறியுள்ளது.

    கடந்த ஜூலை மாதத்தில் உக்ரைனின் மொத்த டீசல் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 15.5% என அந்நாட்டின் எண்ணெய் சந்தை பகுப்பாய்வு நிறுவனமான NaftoRynok கூறியுள்ளது.

    ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில், உக்ரைனின் டீசல் விநியோகத்தில் இந்தியாவின் பங்கு 10.2 சதவீதமாக உயர்ந்தது. 2024 ஜூலையில் வெறும் 1.9 சதவீதமாக இருந்த இந்த அளவு தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.

    • பூமியை சமநிலைப்படுத்துவதில் மரங்களின் பங்கு அதிகமானது என்பது அறிஞர்களின் கருத்து.
    • மரங்கள் வெட்டப்படுவதால் பருவநிலை மாறி வருகிறது. இனி இந்த மண்ணில் பருவமழை, பெருமழை இல்லை. புயல் மழை மட்டும்தான்.

    மரங்களின் மாநாட்டில் நாம் தமிழர் கட்சி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

    காட்டில் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலை கூட காணவில்லை. அணில்களுக்கும் சேர்த்துதான் மரங்களின் மாநாடு. நாட்டுக்காக நிற்பவர்களால்தான் இந்த மாநாட்டை நடத்த முடியும். அற்ப ஓட்டுக்காக நிற்போர் மாநாட்டை நடத்த முடியாது.

    தண்ணீரை தொடர்ந்து காற்றையும்கூட இவர்கள் விற்பார்கள். டெல்லியை போல தமிழ்நாட்டிலும் சுத்தமான காற்றை குடுவையில் விற்கும் நிலைவரும். காற்று மாசுபட்டு போனதா, இல்லை நாம் காற்றை மாசுபடுத்தி சென்றோமா என யோசித்து செயல்பட வேண்டும். வீசும் நச்சுக்காற்றை மூச்சுக்காற்றாக மாற்றும் மகத்தான பணியை மரங்கள் செய்யும்.

    பூமியை சமநிலைப்படுத்துவதில் மரங்களின் பங்கு அதிகமானது என்பது அறிஞர்களின் கருத்து. ஒரு மரத்தை நட்டாலே ஆண்களும் தாயாக முடியும். மரம் நம் அன்னை, நம் தாய்.

    மரங்கள் வெட்டப்படுவதால் பருவநிலை மாறி வருகிறது. இனி இந்த மண்ணில் பருவமழை, பெருமழை இல்லை. புயல் மழை மட்டும்தான். புவி வெப்பமாவதுதான் இதற்கு காரணம். பூமியின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, ஒரு கட்டத்தில் அதை தாங்க முடியாமல் கடல் பொங்கி கொந்தளிக்கும். அந்த கொந்தளிப்பில் கடலோர கிராமங்கள் விழுங்கப்படும். ஒரு சுனாமியையே நம்மால் கடந்த காலத்தில் தாங்க முடியவில்லை. இதேநிலை தொடர்ந்தால், பூமி பேரழிவை சந்திக்கும்.

    இவ்வாறு சீமான் பேசினார்.

    • 79 வயதாகும் டொனால்டு டிரம்பின் உடல்நிலை மோசமாக உள்ளதாக செய்திகள் வெளியாகின.
    • தலைமை பதவிக்கான பயிற்சிக்கு தயாராகியுள்ளதாக துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் ஜே.டி. வான்ஸ், தன்னுடைய தற்போதைய பணி, அமெரிக்காவில் பயங்கரமான சோகம் நடைபெற்றால், தன்னை தலைமை பதவியை ஏற்பதற்கு தயார்படுத்தியுள்ளது என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஜே.டி. வான்சின் இந்த கருத்து டிரம்பின் உடல்நிலை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இந்நிலையில், இணையத்தில் "Trump Died" மற்றும் "Donald Trump death" போன்ற ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டாகியுள்ளன. மேலும் டிரம்ப் இறந்துவிட்டார் என்று எண்ணற்ற மீம்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

    79 வயதாகும் டொனால்டு டிரம்பின் உடல்நிலை மோசமாக உள்ளதாக அவ்வப்போது யூகச் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இத்தகைய மீம்கள் ட்ரெண்டாகியுள்ளன.

    அதே சமயம் டிரம்ப் இறந்துவிட்டார் என்பதற்கு நம்பகமான ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்று குறிப்பிடத்தக்கது.

    • பீகாரில் ராகுல் காந்தி வாக்காளர் உரிமை பேரணி மேற்கொண்டுள்ளார்.
    • சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தியின் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் உரிமை பேரணி மேற்கொண்டுள்ளார்.

    சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தியின் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார். பேரணியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இன்று ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை பேரணியில் உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று பங்கேற்றார்.

    இந்த பேரணியில் பேசிய அகிலேஷ் யாதவ், "வாக்காளர் உரிமை பேரணியில்சேர நான் இங்கு வந்துள்ளேன். யாத்திரையை ஆதரித்ததற்காக பீகார் மக்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். பீகாரின் குரல் நாடு முழுவதும் ஒலிக்கிறது. இந்த முறை பாஜக பீகாரிலிருந்து வெளியேறப் போகிறது" என்று தெரிவித்தார்.

    • நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரையும், மாத கட்டணம் ரூ.70 முதல் ரூ.395 வரையும் உயருகிறது.
    • கார்/வேனுக்கு ஒருமுறை சென்று ரிட்டன் வருவதற்கு 155 ரூபாய்க்கு பதில் 160 ரூபாய் வசூலிக்கப்படும்.

    சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மிகவும் பிசியாக இயங்கும் சுங்கச்சாவடிகளில் ஒன்று. நாள் ஒன்றிற்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும். அதேபோல் திருச்சியில் இருந்து சென்னைக்கு வரும். இந்த நிலையில் வருகிற 1ஆம் தேதி முதல் (நாளைமறுநாள்), அதாவது திங்கட்கிழமை முதல் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரையும், மாத கட்டணம் ரூ.70 முதல் ரூ.395 வரையும் உயருகிறது.

    கார்/ பயணிகள் வேன்- ஒரு முறை செல்ல 105 ரூபாய் (பழைய கட்டணம் 105 ரூபாய்). திரும்பி வருவதாக இருந்தால் 160 ரூபாய் (பழைய கட்டணம் 155 ரூபாய்). மாதந்திர பாஸ் 3170 ரூபாய் (பழைய கட்டணம் 3100 ரூபாய்) ஆகும்.

    லைட் கமர்சியல் வாகனங்கள்- ஒருமுறை செல்ல 185 ரூபாய் (பழைய கட்டணம் 185 ரூபாய்). திரும்பி வருவதாக இருந்தால் 275 ரூபாய் (பழைய கட்டணம் 270 ரூபாய்). மாதந்திர பாஸ் ரூ. 5545 (பழைய கட்டணம் 5420 ரூபாய்) ஆகும்.

    டிரக்/பஸ்- ஒரு முறை செல்ல 370 ரூபாய் (பழைய கட்டணம் 360 ரூபாய்). திரும்பி வருவதாக இருந்தால் 555 ரூபாய் (பழைய கட்டணம் 540 ரூபாய்). மாதாந்திர பாஸ் ரூ. 11085 (பழைய கட்டணம் 10845 ரூபாய்).

    மல்டிபிள் ஆக்சில் வாகனங்கள் (இரண்டு ஆக்சிலுக்கு மேற்பட்டவை)- ஒருமுறை செல்ல 595 ரூபாய் (பழைய கட்டணம் 580 ரூபாய்). திரும்பி வருவதாக இருந்தால் 890 ரூபாய் (பழைய கட்டணம் 870 ரூபாய்). மாதாந்திர பாஸ் 17820 ரூபாய் (பழைய கட்டணம் 17425 ரூபாய்).

    பள்ளி பேருந்துகளுக்கு கிடையாது. மாதாந்திர பாஸ் 1000 ரூபாய் ஆகும் (பழைய கட்டணம் 100 ரூபாய்).

    ×