என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மோடியும், அமித் ஷாவும் இந்தியாவை விற்கிறார்கள்.
- அம்பானியும், அதானியும் இந்தியாவை வாங்குகிறார்கள்.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகள் எடுக்கக் கோரி திருப்பூரில் இன்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திமுக எம்.பி. ஆ. ராசா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மோடியும், அமித் ஷாவும் இந்தியாவை விற்கிறார்கள். அம்பானியும், அதானியும் இந்தியாவை வாங்குகிறார்கள். இதன் நீட்சிதான் அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி. 50 சதவீத வரியை டிரம்ப் போடவில்லை. வரியை போடச் சொன்னதே மோடிதான்.
- செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.
- ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள தலைவர்கள் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் என அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது. இருப்பினும் சில மாதங்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்தனர். ஆனால் அவர்களுக்கு இடையே இருந்த சலசலப்பு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் பிரிந்து சென்றார்.
இதனிடையே, பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதற்கு அ.தி.மு.க. பிளவே காரணம் என கூறப்பட்டது. இதன்பின்னர் அ.தி.மு.க.வில் இணைய ஓ.பன்னீர்செல்வம் முயன்றும் முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை அ.தி.மு.க.வில் இணைக்க முடியாது என கூறிவிட்டார்.
இதற்கிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்து வருகிறார். இதனால் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மேலும் கட்சியில் செங்கோட்டையனுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர அனைவரும் கைகோர்க்க வேண்டும். ஆட்சியமைக்க ஒன்றுபட்ட, வலிமையான அதிமுகதான் ஒரே தீர்வு, ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்" என்று அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதியிருந்தார். இதன்பின், ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் பேசி வருவதாக கூறப்பட்டது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் வருகிற 5-ந்தேதி மனம் திறந்து பேசுவேன். அன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் அதுவரை பொறுமையாக இருங்கள் என்று செங்கோட்டையன் இன்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் விலகும் பட்சத்தில் தி.மு.க.வில் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் விஜயின் த.வெ.க. வில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகளை ஒன்று திரட்ட செங்கோட்டையன் முடிவு என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரிந்துள்ளவர்கள் ஒருங்கிணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக களமிறங்கலாம் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள தலைவர்கள் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எது எப்படியோ... அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை... எதிரி இல்லை என்கிற வகையில் வருகிற சட்டசபை தேர்தல் வரை தமிழ்நாட்டு அரசியலில் எதுவும் நடைபெறலாம் என்பது தான் நிதர்சனமான உண்மை!
- தெருநாய்க்கு ஆதரவாக நடிகை அம்மு பேசிய கருத்துக்கள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- தெருநாய் சர்ச்சை தொடர்பான விவகாரத்தில் நடிகை அம்மு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.
இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனையடுத்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்சிற்கு மாற்றினார்.
இதனையடுத்து டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து புதிய உத்தரவை 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ளது.
பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியது.
இதனிடையே, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெருநாய் சர்ச்சை தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு நடிகை அம்மு பேசிய கருத்துக்கள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தெருநாய் சர்ச்சை தொடர்பான விவகாரத்தில் நடிகை அம்மு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், "குழந்தைகளை நாய் கடிக்கும் வரை பெற்றோர்கள் எங்கே போனார்கள். சாதாரணமாக ஒரு நாயை விரட்டக் கூடியவர்கள், அது குழந்தையை கடிக்கும் வரை என்ன செய்தார்கள். நாலு கால் இருக்கும் ஜீவன் வித்தியாசமாக கத்தினாலே நாங்கள் ஓடி வந்து பார்ப்போம். ஒரு குழந்தை நாய்க் கடியால் கதறுகிறது என்றால் அதை பார்த்துக் கொண்டு சும்மாவா இருந்தீர்கள். அந்த குழந்தையை காப்பாத்தனும்னு யாருக்குமே தோனலையா. இந்த நிகழ்ச்சி மொத்தம் 8 மணிநேரம் ஷூட்டிங் நடத்தப்பட்டு, அதில் வெறும் 45 நிமிடங்கள் தான் உங்களுக்கு காட்டப்பட்டுள்ளது. எங்கள் தரப்பில் பேசிய நிறைய விஷயங்களை எடிட் செய்துவிட்டனர். நிறைய இடங்களில் தங்களை பேசுவதற்கே அனுமதிக்கவில்லை" என்று கூறினார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை ரோகிணி, "இப்பொழுது நாய்களின் உயிருக்காக நிறைய பேர் கவலைப்படுகிறார்கள். ஆனால் மனித உயிர்களுக்காக கவலைப்படுங்கள் என்று காலம் காலமாக சொல்லி கொண்டிருக்கிறோம்" என்று நடிகை அம்முவை விமர்சிக்கும் வகையில் பேசினார்.
- தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி இருக்கிறோம்.
- ஸ்மார்ட் மீட்டர் அமைக்கப்பட்ட பிறகு மாதந்தோறும் மின்சார ரீடிங் கணக்கிடும் திட்டத்தை செயல்படுத்துவது எளிதாக இருக்கும்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தை எட்டி தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 3,700 புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. அரசு போக்குவரத்து கழகத்தில் 2200 பஸ்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி இருக்கிறோம். 364 திட்டங்களுக்கான பணிகள் நடந்து முடிந்து உள்ளது. மொத்தம் 404 திட்டங்கள் நடைமுறைக்கு எடுக்கப்பட்டும் செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஒன்றிய அரசின் நிலுவையில் 37 திட்டங்கள் உள்ளது
நாட்டிற்கே வழிகாட்டும் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது வடசென்னையில் 6158 கோடி செலவில் வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது என்றனர்.
கேள்வி:- தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்ட மாதந்தோறும் மின்சார ரீடிங் எடுக்கும் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்த அரசு முயற்சி எடுக்குமா?
மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் பதில்:-ஸ்மார்ட் மீட்டர் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட் மீட்டர் அமைக்கப்பட்ட பிறகு மாதந்தோறும் மின்சார ரீடிங் கணக்கிடும் திட்டத்தை செயல்படுத்துவது எளிதாக இருக்கும். எனவே அதற்கான டெண்டர் போய் உள்ளோம். டெண்டர் முடிவுற்று ஸ்மார்ட் மீட்டர்கள் முழுமையாக அமைக்கப்பட்ட பிறகு இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் தான் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்; அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு சட்டத்தின்படி சரியாக இருந்தாலும் லட்சக்கணக்கான ஆசிரியர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கக்கூடியதாகும்.
இந்தியாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி 8-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்க மத்திய அரசு நிதியுதவி வழங்குவதால், எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கக் கூடிய இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவது அடிப்படைத் தகுதியாக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் 2011-12-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டதால், அதன்பின் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் தான் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அதற்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? என்ற வினாவுக்கு விடையளிக்கும் வகையில் தான் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இந்தத் தீர்ப்பின்படி தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஒரு லட்சத்து 8537 ஆசிரியர்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படுவர். அதேபோல், பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவர். இவர்கள் தவிர தனியார் பள்ளிகளில் பணியாற்றுவோரில் சுமார் 2 லட்சம் பேர் வேலை இழப்பர். அவர்களில் பெரும்பான்மையினர் 50 வயதைக் கடந்தவர்கள் எனும் நிலையில் நடப்புப் பாடத்திட்டத்தின்படி அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவது மிகவும் சவாலான ஒன்றாகும்.
50 வயதைக் கடந்த ஆசிரியர்களின் குடும்பங்களில் பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் போன்ற செலவுகள் இருக்கும் என்பதால், குடும்பத் தேவைகளை கருத்தில் கொண்டு அவர்கள் பணியில் தொடர வேண்டியது கட்டாயமாகும். இத்தகைய சூழலில் அவர்கள் அடுத்த இரு ஆண்டுகளில் பணி விலக வேண்டும் என்றால் அவர்களின் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும். அதிலும் குறிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இல்லாத ஆசிரியர்களின் நிலை இன்னும் மோசமாகும்.
கல்வி உரிமைச் சட்டப்படி தகுதித் தேர்வு கட்டாயம் என்ற அடிப்படையில் தான் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால், எதார்த்தத்தின் அடிப்படையில் பார்த்தால் ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வுத் தேவையில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடும் இது தான். அதனால் தான் 2012-ஆம் ஆண்டிலிருந்தே இந்தத் தேர்வை எதிர்த்து வருகிறது. ஆசிரியர் பணியைப் பொருத்தவரை ஒருவர் சிறப்பாக கற்பிப்பதை அவருக்கு வழங்கப்படும் பயிற்சியும், அனுபவமும் தான் தீர்மானிக்குமே தவிர, தகுதித் தேர்வு தீர்மானிக்காது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அடுத்த இரு ஆண்டுகளில் பணி நீக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள ஆசிரியர்களில் பலர் 15 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டவர்கள். அந்த ஆசிரியர்கள் அவர்களின் பணிக்காலத்தில் ஏராளமான மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரை உருவாக்கியிருக்கக் கூடும். சில ஆசிரியர்கள் இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி அதிகாரிகளைக் கூட உருவாக்கியிருப்பார்கள்.
அப்படிப்பட்டவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெறவில்லை என்பதற்காக பணி நீக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி ஆகும்.
இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன் தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் போட்டித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். அவர்களும் இப்போது தகுதித்தேர்வு எழுத வேண்டும் என்பது நியாயமற்றது.
இந்தியா முழுவதும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு இல்லை. அவ்வாறு இருக்கும் போது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது சரியல்ல. இது தொடர்பான நியாயங்களை உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைக்க தமிழக அரசு தவறியதன் விளைவு தான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்; அது தான் தீர்வு காண வேண்டும்.
கல்வி உரிமை சட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பாக பணியில் சேர்ந்த பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அதிலும் வெற்றி கிடைக்கவில்லை என்றால், பாதிக்கப்படவுள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தி, அவர்கள் அனைவரும் பணியில் நீடிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
- செமிகண்டக்டர் உலகில் எண்ணெய் கருப்பு தங்கம் என்று கூறப்படுகிறது.
- அனைத்து முதலீட்டாளர்களையும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நவீன மின்னணுவியலில், செமிகண்டக்டர்கள் ஒரு முக்கியமான பாகம்.
ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், வாகனங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் வரை பரந்த அளவிலான தயாரிப்புகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் இவற்றிற்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளதால் இத்தயாரிப்பிற்கு பல நாடுகள் போட்டி போடுகின்றன.
மின்னணு சிப் தயாரிப்பில் இந்தியாவை உலகின் ஒரு முக்கியமான மையமாக உருவாக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற "செமிகான்இந்தியா 2025" மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மாநாட்டில் பேசிய மோடி, "உலகம் இந்தியாவை நம்புகிறது, உலகம் இந்தியாவுடன் சேர்ந்து செமிகண்டக்டர் எதிர்காலத்தை உருவாக்கத் தயாராக உள்ளது என்ற நம்பிக்கையுடன் இன்று நான் இங்கே இருக்கிறேன். அனைத்து முதலீட்டாளர்களையும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
செமிகண்டக்டர் உலகில் எண்ணெய் கருப்பு தங்கம் என்று கூறப்படுகிறது, ஆனால் 'சிப்'கள் டிஜிட்டல் வைரங்கள். நமது கடந்த நூற்றாண்டு எண்ணெயால் வடிவமைக்கப்பட்டது... ஆனால் 21 ஆம் நூற்றாண்டின் சக்தி ஒரு சிறிய சிப்புடன் மட்டுமே உள்ளது. இந்த சிப்உலகின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது. இந்தியாவின் மிகச்சிறிய சிப் உலகத்தால் இந்தியா உச்சி முகரப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை" என்று தெரிவித்தார்.
- தாய்கள்தான் எங்கள் உலகம். அவர்கள் மரியாதைக்குரியவர்கள்.
- துஷ்பிரயோகம் எனது தாயாருக்கு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த தாயாருக்கும் அவமானமாகும்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி இன்று பீகார் மாநில வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பை காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசியதாவது:-
தாய்கள்தான் எங்கள் உலகம். அவர்கள் மரியாதைக்குரியவர்கள். பாரம்பரியம் நிறைந்த இந்த பீகாரில் சில நாட்களுக்கு முன்பு ராஷ்டிரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் மேடையில் எனது தாயாரை அவமானப்படுத்தினார்கள். இந்த துஷ்பிரயோகம் எனது தாயாருக்கு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த தாயாருக்கும் அவமானமாகும். அம்மாக்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு அவமானம்.
இவ்வாறு மோடி பேசினார்.
- தமிழக கவர்னர் ஆர்.என். ரவி ஜனாதிபதிக்கு விருந்தளித்து உபசரிக்கிறார்.
- இன்று இரவு அவர் கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.
சென்னை:
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார்.
மைசூருவில் இருந்து சிறப்பு இந்திய விமானப் படை விமானம் மூலம் மதியம் 11.40 மணிக்கு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.
மேலும் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மாநகர மேயர் பிரியா, டி .ஆர்.பாலு எம்.பி., தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு காவல் துறை டி.ஜி.பி. வெங்கட்ராமன், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், இந்திய ராணுவத்தின் முப்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் ஜனாதிபதியை வரவேற்றனர்.
பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து காரில் நந்தம்பாக்கம் சென்றார். அங்கு உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இதில் மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி ஜனாதிபதிக்கு விருந்தளித்து உபசரிக்கிறார். இன்று இரவு அவர் கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.
சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றும், நாளையும் டிரோன்கள் பறப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
நந்தம்பாக்கம் வர்த்தக மையம், கிண்டி கவர்னர் மாளிகை, சென்னையில் ஜனாதிபதி பயணம் செய்யும் சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பின்னர் நாளை காலை 9:30 மணி அளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு செல்கிறார். பின்னர் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.
இந்த விழா நிறைவடைந்ததும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஹெலிகாப்டர் மூலமாக திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு செல்கிறார். அங்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். ரங்கநாதரை தரிசித்து விட்டு அதே ஹெலிகாப்டரில் மீண்டும் திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து தனி விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஸ்ரீரங்கம் பஞ்சகரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் நேற்று ஹெலிகாப்டரை இறக்கி ராணுவ அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு இன்று முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நந்தம்பாக்கம் வர்த்தக மையம், கிண்டி கவர்னர் மாளிகை, திருச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் திருவாரூர் நீலக்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள். ஜனாதிபதி சென்னை மற்றும் திருச்சி வந்து செல்லும் அவரது பயணத்திட்ட வழித்தடத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை பழைய விமான நிலைய வளாகத்தில் உள்ள சரக்கு மற்றும் கூரியர் சேவைகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் தங்கள் அடையாள அட்டையை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- அமெரிக்காவின் வரி விதிப்பால் தமிழகத்தில் திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
- திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆ.ராசா எம்.பி. தலைமை தாங்கினார்.
திருப்பூர்:
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் தமிழகத்தில் திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆ.ராசா எம்.பி. தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. அவைத்தலைவர் அர்ச்சுன்ராஜ், எம்.பி.க்கள் சுப்பராயன், வெங்கடேசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது அபுபக்கர், மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, மக்கள் நீதி மய்யம் மாநில துணை தலைவர் தங்கவேல், தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன், ஆதி தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தொழில்துறையினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை கண்டித்தும், பாதிப்புகளை சரிகட்ட மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மோடி பாதி ட்ரம்ப் பாதி இருக்கும் முகமூடி அணிந்து கட்சியினர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
- மோடியின் பினாமிகள் அம்பானி-அதானி.
- கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தும் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது.
திருப்பூர்:
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகள் எடுக்க கோரி திருப்பூரில் இன்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆனால் இது மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக இருந்திருக்க வேண்டும். தனது நண்பர்களுக்காக வெளியுறவு கொள்கை அமைத்துள்ளார். மோடியின் பினாமிகள் அம்பானி-அதானி. நம் மீது அபராதம் விதிப்பதற்கு டிரம்ப் யார் .
மோடிக்கு தண்டனை என்றால் இந்திய மக்களுக்கும் அது தண்டனை. உக்ரைன் மீது ரஷியா போர் நடத்துகிறது. அதற்கு பொருளாதார உதவி செய்யும் வகையில் வர்த்தகம் நடைபெறுகிறது. அதனை நிறுத்து என்கிறது அமெரிக்கா. அம்பானி ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறார். இந்த ஒப்பந்தத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசி முடிக்கிறார். அரசு வணிகம் தவிர்த்து தனியாருக்கு வாங்கி தருகிறது. அவர்களுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு விற்பனை செய்யாமல் ஐரோப்பாவில் விற்பனை செய்கிறார்கள். இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவிற்கு பயன் இல்லை.
கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தும் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. இந்த லாபம் முழுவதும் அம்பானிக்கு சென்று சேர்கிறது. பல காரணங்கள் இருந்தாலும் இந்த வர்த்தகம் காரணமாகவே வரி விதிக்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். நம் நாட்டு பொருள் அமெரிக்காவில் கூடுதலாக இருக்கும். மற்ற நாட்டு தயாரிப்புகள் விலை குறைவாக இருக்கும். இதனால் நம் பொருட்கள் விற்பனை ஆகாது. வெறும் ஜவுளி மட்டும் அல்ல. இறால் ஏற்றுமதி, நவரத்தின கற்கள் என அனைத்து தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு சிம்பிள் சொல்யூசன் அதானியை அழைத்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த சொல்ல வேண்டும். இந்த வரி விதிப்பால் பெருமுதலாளிகள் பாதிக்கப்பட போவதில்லை . ஏழை எளிய மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாம் பாதிக்கப்படுகிறோம். சனாதன அரசியலை திணிக்கிறார்கள், மதவெறியை தூண்டுகிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க., பருப்பு வேகவில்லை. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தான் பாதுகாப்பு அரண். மு.க.ஸ்டாலினுடன் கை கோர்த்து நிற்பது தான் நமது கடமை. இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழகம் விளங்க வேண்டும் என்றார்.
- விசாரணை படத்தின் ஆஸ்கார் பிரச்சாரத்திற்காக தனுஷ் ரூ.3.5 கோடி செலவு செய்தார்
- விசாரணை படம் தியேட்டரில் கிட்டத்தட்ட ரூ. 3 கோடியே 75 லட்சங்கள் வரை வசூலித்தது.
வெற்றிமாறன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான 'விசாரணை' படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ஆங்கில யூடியூப் சேனலான தி ஹாலிவுட் ரிபோர்ட்டர் சேனலுக்கு பேட்டி அளித்த வெற்றிமாறன், விசாரணை படம் குறித்து இதுவரை தெரியாத பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
பேட்டியில் பேசிய வெற்றிமாறன், "விசாரணை படத்தின் கதையோடு தனுஷைச் சந்திக்கச் சென்றேன். படத்திற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்று மட்டும் கேட்டார். நான் சொன்ன பணத்தை அவர் கொடுத்தார். பின்பு விசாரணை படத்தின் ஆஸ்கார் பிரச்சாரத்திற்காக தனுஷ் ரூ.3.5 கோடி செலவு செய்தார். அந்த மாதிரியான தயாரிப்பாளர் கிடைக்கமாட்டார்.
விசாரணை படத்தை நாங்கள் ரூ.2 கோடியே 75 லட்சத்திற்கு எடுத்தோம். இந்த படத்தில் நானும் நடிகர் தினேஷும் நடிகர் கிஷோரும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரும் எடிட்டர் கிஷோரும் சம்பளம் வாங்கவில்லை.
சமுத்திரக்கனி மட்டும் ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டார். அவருக்கு நாங்கள் சம்பளம் வாங்கவில்லை என்று தெரியாது. தெரிந்திருந்தால் அவரும் அட்வான்ஸ் வாங்கி இருக்கமாட்டார்.
விசாரணை படம் தியேட்டரில் கிட்டத்தட்ட ரூ. 3 கோடியே 75 லட்சங்கள் வரை வசூலித்தது. அந்த வகையில் அந்த படம் வெற்றிப் படம் தான். ஒருவேளை அந்த படத்திற்கான நாங்கள் சம்பளம் வாங்கி இருந்தால் அந்த படத்தை அப்போது வணிக ரீதியாக வெற்றி படமாக மாற்றி இருக்க முடியுமா என்று தெரியவில்லை.
இன்று விசாரணை படத்தை உருவாக்க வேண்டும் என்றால் ரூபாய் 8 கோடிகள் வரை செல்வாகும். நாங்கள் அந்த படத்தை மிகவும் உணர்வுப்பூர்வமாக எடுத்தோம். இந்த கதையை உலகத்திற்குச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தேன்" என்று தெரிவித்தார்.
- டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் நேற்று 7-8 கி.மீ. நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- முதலமைச்சர் ரேகா குப்தா மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார்.
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டியது. டெல்லி-என்சிஆரில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. குறிப்பாக டெல்லி-குருகிராம் எல்லையில், நீர்மட்டம் அதிகரிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நேற்று முதல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் யமுனை நதியின் நீர்மட்டம் இன்று காலை அபாய அளவைத் தாண்டியது. இதனால் யமுனை நதியின் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
யமுனை உட்பட சில ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்ததால், யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையின் மதகுகளை அதிகாரிகள் திறக்க தொடங்கினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிப்பு ஏற்படக்கூடிய சில பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் நேற்று 7-8 கி.மீ. நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குருகிராமில் பெய்த கனமழையால் மக்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்தனர்.
யமுனை நதியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால், பழைய ரெயில் பாலத்தில் இன்று மாலை 5 மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
வெள்ள அச்சுறுத்தலுக்கு மத்தியில், முதலமைச்சர் ரேகா குப்தா மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில் யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வயல்களில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மீட்புக் குழுவை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தற்போது நிலைமை மோசமாகி உள்ளது. நேற்று இரவு முதல் மக்களை மீட்டு வருகிறோம். மக்களை பாதுகாப்பாக மீட்டுள்ளோம்.
நேற்று இரவு முதல் 50-60 பேரை மீட்டுள்ளோம். சிக்கித் தவிக்கும் கால்நடைகளையும் மீட்டு வருகிறோம். இந்த படகுகள் டெல்லி அரசின் சார்பாக இயக்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.






