என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • தற்போதைய நிலவரப்படி 234 தொகுதிகளுக்கும் தலா 3 வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்துள்ளது.
    • கொளத்தூர் தொகுதியில் பிரபல தொழிலதிபர் வேட்பாளராக களம் காண இருக்கிறார்.

    சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாகியுள்ளது. இதையடுத்து வரும் 27-ந்தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது. தற்போது அதற்கான முன்னெடுப்புகளை அந்த கட்சி தொடங்கியுள்ளது. மறுபக்கம் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வும் மும்முரமாக நடந்து வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி 234 தொகுதிகளுக்கும் தலா 3 வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்துள்ளது. இதில் 80 சதவீதம் பேர் மாவட்ட செயலாளர்கள் என்று கூறப்படுகிறது. இதுதவிர மாநில நிர்வாகிகள், முக்கிய நிர்வாகிகளின் பெயர்களும் இடம் பெற்று இருப்பதாகவும் தெரிகிறது.

    இதில் வில்லிவாக்கம் தொகுதியில் சமீபத்தில் த.வெ.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் மகன் வேட்பாளராக அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கொளத்தூர் தொகுதியில் பிரபல தொழிலதிபர் வேட்பாளராக களம் காண இருக்கிறார்.

    இதேபோல், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் பிரபல தியேட்டர் அதிபரின் மகனும், வாசுதேவநல்லூர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரும், த.வெ.க. வேட்பாளர்களாக களம் இறங்க அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

    அதேநேரத்தில், கட்சியின் தலைவரான விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று ஒரு விவாதமே தமிழக அரசியல் களத்தில் நிலவி வருகிறது. தற்போது விஜய் போட்டியிடும் தொகுதி குறித்து நம்பகமான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி விஜய் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தொகுதியில் களம் காண இருக்கிறார்.

    வேதாரண்யம் தொகுதியில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இவர் முன்னாள் அமைச்சர் ஆவார். இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தார்.

    வேதாரண்யம் தொகுதி மீனவர்கள், விவசாயிகள் நிறைந்த தொகுதி. இந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விஜய் இந்த தொகுதியில் உறுதியாக களம் காண்பார் என்றே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    • நாடு முழுவதும் மொத்தம் 474 அரசியல் கட்சிகளின் பதிவுகளை தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது.
    • இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சமத்துவ மக்கள் கழகம் உள்பட பல அரசியல் கட்சிகள் வழக்குகள் தொடர்ந்தன.

    சென்னை:

    கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிட்டு செலவுக்கணக்கை தாக்கல் செய்யாத அரசியல் கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்து இந்திய தேர்தல் கமிஷன் உத்தர விட்டது. அதாவது தமிழ்நாட்டில் 42 கட்சிகள் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 474 அரசியல் கட்சிகளின் பதிவுகளை தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி. மனித நேய மக்கள் கட்சி. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மனிதநேய ஜனநாயக கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி. சமத்துவ மக்கள் கழகம் உள்பட பல அரசியல் கட்சிகள் வழக்குகள் தொடர்ந்தன.

    அதில், கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்த தேர்தல் கமிஷன் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதற்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் விசாரிக்கப்பட்டது. அப்போது. அரசியல் கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்ய தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இல்லை. தேர்தல் கமிஷனின் இந்த முடிவு அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. நடந்து முடிந்த தேர்தல்களில் மனுதாரர் கட்சிகள் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டது. கட்சிகளின் அங்கீகாரத்தை வேண்டுமானால் தேர்தல் கமிஷன் ரத்து செய்ய முடியுமே தவிர பதிவை ரத்து செய்ய முடியாது என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

    தேர்தல் கமிஷன் சார்பில், "தொடர்ந்து 6 ஆண்டுகள் போட்டியிடாத அரசியல் கட்சிகள், தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத அரசியல் கட்சிகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டப்படி இவ்வாறு நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது" என்று வாதிடப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "உள்ளாட்சி தேர்தல் அல்லது சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டதாகவும், கூட்டணி கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டோம் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், மனுதாரர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் கொடுத்து, விளக்கத்தை பெற்றுத்தான் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்தநிலையில், அந்த உத்தரவுக்கு தடை விதித்தால், வருகிற சட்டசபை தேர்தலுக்கு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற அந்தஸ்தை இந்த கட்சிகளுக்கு வழங்கியது போல ஆகிவிடும். எனவே, தேர்தல் கமிஷன் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது. இடைக்கால தடை கேட்கும் மனுவை நிராகரிக்கிறோம். தேர்தல் கமிஷனின் உத்தரவை எதிர்க்கும் பிரதான வழக்கை, வருகிற மார்ச் 2-வது வாரத்துக்கு விசாரணைக்காக தள்ளிவைக்கிறோம்" என்று உத்தரவிட்டுள்ளனர்.

    • கடந்த 5 ஆண்டுகளில் 4,192 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.
    • 14 திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் நடைபெறுகிறது.

    சென்னை:

    அன்னதான திட்டத்தில் இந்த ஆட்சி புரட்சி செய்திருக்கிறது என்றும், கடந்த 5 ஆண்டு களில் 4,192 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது என்றும் சட்டச பையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

    சட்டசபை கேள்வி நேரத்தின்போது, மடத்துக்கு ளம் தொகுதி எம்.எல்.ஏ. சி.மகேந்திரன், மடத்துக்குளம் தொகுதி, சோழ மாதேவி, குங்குமவள்ளியம்மன் உடனுறை குலசேகரசாமி கோவிலுக்கு தரைத்தளம் அமைத்து சுற்றுச்சுவர் கட்ட அரசு ஆவன செய்யுமா? என கேள்வி எழுப்பினார். அதற்கு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில் அளித்தார்.

    அதன் விவரம் வருமாறு:-

    இந்த கோவிலுக்கு ரூ.24 லட்சம் செலவில் ஏற்கனவே தரைத்தளம் அமைக்கும் பணி நடக்கிறது. அதனோடு சேர்த்து ரூ.25 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது. தரைத்தளம் அமைக்கும் பணி முடிந்ததும் இந்த பணி மேற்கொள்ளப்படும். தரைத்தளப் பணி 50 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதப்பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிவு பெற்று. சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொடங்கும்.

    அன்னதானம் திட்டத்தில் இந்த ஆட்சி புரட்சி செய்திருக்கிறது. 14 திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் நடைபெறுகிறது. ஒரு வேளை அன்னதான திட்டம் 764 கோவில்களில் வழங்கப்படுகிறது. அன்னதான திட்டத்தில் ரூ.120 கோடி செலவில் 3.5 கோடி மக்கள் ஆண்டுக்கு பயன் பெறுகின்றனர். திருவிழா காலங்களில் நெல்லையப்பர் கோவில் உள்பட 27 கோவில்களில் அன்னதான திட்டத்தின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருக்கிறது. பழனியில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத்துக்கு 20 நாட்கள் 4 லட்சம் பக்தர்களுக்கும், வடலூரில் 3 நாட்களுக்கு 30 ஆயிரம் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கி, அன்னதான பிரபுவாக இந்த ஆட்சியும், முதல்-அமைச்சரும் காட்சியளிக்கின்றனர்.

    கடந்த 5 ஆண்டுகளில் 4,192 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாதத்தில் மட்டும் 130 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆக இந்த மாத இறுதிக்குள் 4,322 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும். மக்களோடு இறைவனையும், இறைவியையும் மகிழ்ச்சியோடு வைத்து கொண்டிருக்கிற ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.

    இவ்வாறு அவர் பதிலளித்தார்.

    • ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.
    • மீனவர்கள் 22 பேரை 4 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.

    எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.

    இந்நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 22 பேரை 4 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசந்துறை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் மீன்வர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் 25 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    • அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் சமீபத்தில் எல்-வடிவ மேம்பாலம் திறக்கப்பட்டது.
    • தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்ட எந்த பாலமும் தரமானதாக இல்லை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட எல்-வடிவ மேம்பாலம் மிக மோசமான தரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. சற்று நேரத்திற்கு முன் அந்தப் பாலத்தில் பயணம் செய்தபோது அதன் மோசமான தரத்தை நானே அனுபவித்து தெரிந்து கொண்டேன். ரூ.61 கோடி மக்கள் பணத்தைக் கொட்டி அமைக்கப்பட்டுள்ள பாலம் சிறுவர்களால் விளையாட்டுக்கு கட்டப்பட்டதை விட மிக மோசமான தரத்துடன் அமைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    மத்திய கைலாஷ் பாலத்தை கடந்த 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைதான் முதல்வர் திறந்துவைத்தார். ஆனால், 652 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களை தூக்கித் தூக்கி போடும் அளவுக்கு மேடும் பள்ளமுமாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    அந்தப் பாலத்தில் பயணிக்கும்போது W வடிவத்தில் அமைக்கப்பட்ட பாலத்தில் பயணித்த உணர்வுதான் ஏற்பட்டது. சாலையே அமைக்கப்படாத மலைப்பாதைகளில் பயணிப்பதை விட மிக மோசமான அனுபவத்தை இந்தப் பாலம் மக்களுக்கு அளிக்கும். இதற்கு காரணம் மிக மோசமான வடிவமைப்பும், கட்டுமானமும்தான்.

    மொத்தம் 652 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலத்தை கட்டுவதற்கான ஒப்பந்தத் தொகையாக ரூ.60.68 கோடி , அதாவது ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.100 கோடி என்ற அளவில் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு உலகத்தரத்தில் பாலத்தை அமைக்க முடியும்.

    ஆனால், இந்தப் பாலம் உள்ளூர் தரத்தில் கூட இல்லை. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்ட 3-வது மாதத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தைக் கட்டிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரின் மேற்பார்வையில் கட்டப்பட்ட பாலம் இந்த லட்சணத்தில் தான் இருக்கும்.

    தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்ட எந்தப் பாலமும் தரமானதாக இல்லை. அதற்குக் காரணம் பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் நடைபெறும் ஊழல்கள்தான். இத்தகைய ஊழல்களை சென்னை உயர் நீதிமன்றமே சுட்டிக்காட்டியிருக்கிறது. மத்திய கைலாஷ் பாலம் இவ்வளவு மோசமான தரத்தில் கட்டப்பட்டிருப்பதற்கும் ஊழல் தான் காரணமாக இருக்க முடியும்.

    எனவே, மத்திய கைலாஷ் பாலத்தைக் கட்டுவதில் ஊழல்கள் நடந்ததா என்பது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். மிக மோசமான தரத்தில் இந்தப் பாலத்தைக் கட்டிய ஒப்பந்ததாரர் நிறுவனம்மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • 45 நாட்கள் புதிய கால அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    சென்னை:

    எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 10, 11 நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டு வரும் மின்சார ரெயில்கள் 5 மற்றும் 6 எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடைக்கு மாற்றப்பட்டுள்ளது. வருகிற 20-ம் தேதி முதல் அனைத்து மின்சார ரெயில்களும் 5 மற்றும் 6 -ம் நடைமேடையில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. 45 நாட்கள் புதிய கால அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    இதற்கிடையே, பயணிகள் நலன் கருதி தாம்பரம், கிளாம்பாக்கம் ஆகிய இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தாம்பரம், கிளாம்பாக்கத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில்களின் சேவையில் பிப்ரவரி 20-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மாநகர் போக்குவரத்து கழகம் தற்போது ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம், கிளாம்பாக்கம் வழியாக கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் தடம் எண். இ18-ல் 16 பேருந்துகளும், கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் தடம் எண்.18ஏ-ல் 28 பேருந்துகள் என 44 பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து 35 பேருந்துகள் கிளாம்பாக்கம் வரையும், பல்லாவரத்திலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பேருந்துகள் என மொத்தம் 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.

    பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கவும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    • தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.
    • அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில், தேர்தல் பணிகள் தொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தமிழகம் வருகிறார்.

    சட்டசபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள பிப்ரவரி 26, 27-ம் தேதிகளில் சென்னை வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அப்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் முக்கியமானது ரம்ஜான்
    • நேற்று சவுதி அரேபியாவில் ரமலான் நோன்பிற்கான பிறை தெரிந்தது.

    தமிழ்நாட்டில் ரமலான் நோன்புக்கான பிறை தென்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில், நாளை (பிப்.19) முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது.

    இன்று மாலை பிறை தென்பட்டதை தொடர்ந்து நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கலாம் என தலைமை காஜி தெரிவித்துள்ளார். ரமலான் மாதம் வழக்கமாக 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும். மார்ச் 18 அல்லது 19 அன்று ரமலான் முடிவடைந்து, அதைத் தொடர்ந்து ஈத்-அல்-பித்ர் (ரம்ஜான் பண்டிகை) கொண்டாடப்படும்.

     

    • விண்ணப்ப கட்டணம் மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ. 15,000-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் திருப்பித் தரப்படும்.

    தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.20 முதல் விருப்ப மனு பெறலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நடைபெறவிருக்கும் தமிழ்நாடு -புதுச்சேரி மாநில சட்டப் பேரவை பொதுத்தேர்தலுக்கு திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் பிப். 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் மார்ச் 2 ஆம் தேதி திங்கள்கிழமை வரை திமுக அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

    சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம் பொதுத் தொகுதிக்கு ரூ. 25,000-ஆகவும், மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ. 15,000-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும். விண்ணப்ப படிவத்தை திமுக தலைமை அலுவலகத்தில் ரூ. 1,000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம் என்பது காரணம் கிடையாது என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.
    • தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்திற்கும், அமைதிக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற வகையில் இச்சம்பவம் அரசியலாக்கப்பட்டது.

    கடந்த 2022ஆம் ஆண்டு உயிரை மாய்த்துக் கொண்ட பள்ளி மாணவி லாவண்யா விவகாரத்தில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், 

    "தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டியில் பள்ளி மாணவி லாவண்யா கடந்த 2022 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மதமாற்ற அழுத்தம் காரணமாகவே அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக அப்போது பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த அண்ணாமலை ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை கூறியது, தற்போது சி.பி.ஐ. விசாரணையின் மூலம் அம்பலமாகியுள்ளது.

    தூய இருதய மேல்நிலை பள்ளியில் படித்து வந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டது மதமாற்ற அழுத்தத்தினால் இல்லை என்று சி.பி.ஐ. தனது அறிக்கையில் கூறியிருக்கிறது. ஆனால், பா.ஜ.க.வினர் மாணவி கட்டாய மதமாற்றம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டி பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தினர்.

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது என்பதை சி.பி.ஐ. உறுதி செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம் என்பது காரணம் கிடையாது என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.

    இந்நிலையில், அண்ணாமலையின் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டு மூலமாக மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து, மத அமைதிக்கு கேடு விளைவித்து அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடியது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பா.ஜ.க.வின் கீழ்த்தரமான மதவெறுப்பு அரசியல் வெளிப்பட்டிருக்கிறது.

    பா.ஜ.க.வின் அப்போதைய மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாவட்ட பா.ஜ.க. தலைவர் உள்ளிட்டோர் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இது மதமாற்ற தற்கொலை என்று முத்திரை குத்தி, தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்திற்கும், அமைதிக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற வகையில் இச்சம்பவம் அரசியலாக்கப்பட்டது. மகளை இழந்து துயரத்தில் இருந்த பெற்றோரை ஆறுதல்படுத்தாமல் அவர்களை தவறாக வழிநடத்தி, மகளின் உடலைப் பெற விடாமல் தடுத்து போராட்டக் களத்திற்கு இழுத்து வந்த பா.ஜ.க. தலைவரின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

    தமிழ்நாட்டில் பல ஆண்டுகாலமாக கல்விச் சேவை மூலம், சிறுபான்மை கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் ஏழை,எளிய மக்களுக்கு ஆற்றி வருகிற தூய்மையான பணியை கொச்சைப்படுத்துகிற வகையில் மதமாற்றத்திற்கு துணை போகிறார்கள் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறி மதநல்லிணக்கத்தை சீர்குலைத்த அண்ணாமலையின் செயல் சி.பி.ஐ. விசாரணையின் மூலமாக அம்பலத்திற்கு வந்துள்ளது.

    இத்தகைய சட்டவிரோத செயல்களை செய்து மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்ற அன்றைய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஆகியோர் மீது தமிழ்நாடு காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். " எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • காமராசர் நிலையில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.
    • கூட்டணியில் இருந்து மம்தா ஏற்கனவே வெளியேறிவிட்டார்.

    இந்தியா கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் பொறுத்தமான தலைவர் என முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மணி சங்கர் அய்யர் தெரிவித்திருந்தார். மேலும் நேருவுக்கு பின் பிரதமராகும் வாய்ப்பைப் பெற்றவர் காமராசர். ஆனால் காமராசர் தனக்கு ஆங்கிலம், ஹிந்தி தெரியாது என மறுத்தார். இன்று ஸ்டாலினும் அதேபோன்ற சூழலில்தான் இருக்கிறார் என நினைக்கிறேன்.

    நாட்டின் பிரதமராக ராகுல் காந்தி வருவதற், கூட்டணியை ஒருங்கிணைக்க ஒரு ஆளுமை தேவை. ஸ்டாலின் வெற்று அரசியல் முழக்கங்களை எழுப்பிவருபவர் அல்ல. கடந்த சில வருடங்களாக அவர் பேசிவரும் ஒவ்வொரு தத்துவமும் நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது. நாட்டின் முக்கியமான பிரச்சனைகளையே பேசுகிறார். எனவே ராகுல் பிரதமராக ஸ்டாலினால் துணைநிற்க முடியும். அவர் திறமையானவர். அந்தத் திறன் ஸ்டாலினிடம் மட்டும்தான் உள்ளது. ராகுல் காந்தியின் பிரதமர் பதவிக்கு அவர் ஒருபோதும் தடையாக இருக்கமாட்டார். எனவும் தெரிவித்தார்.

    மேலும் இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் இந்தியா கூட்டணியின் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்மொழிந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 

    "இந்தியா கூட்டணியிலேயே வலுவாக இருப்பது திமுகதான். ஏனெனில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது. காங்கிரஸிற்கு 10 உறுப்பினர்களை தந்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் காங்கிரஸிற்கு இந்த வலு இல்லை. அதனால் மு.க.ஸ்டாலின் வெளியேறிவிட்டால் இந்தியா கூட்டணி என்பது எழுத்தில் மட்டும்தான் இருக்கும். வேறு எந்த வலுவான தலைவர்களும் அந்த அணியில் இருக்கமாட்டார்கள். கூட்டணியில் இருந்து மம்தா ஏற்கனவே வெளியேறிவிட்டார். கூட்டணியில் இருந்தால்கூட சிலர் தனித்தே தேர்தலை சந்திக்கின்றனர்.

    இந்த சூழலில் ஸ்டாலினும் வெளியேறிவிட்டால், இந்தியா கூட்டணி எங்கு இருக்கும்? இந்தக் கூட்டணியில் தற்போது வலுவாக இருப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். என தெரிவித்தார்.

    • விளம்பர வெளிச்சத்தில் காலத்தை கடத்தும் விடியல் அரசு தேசிய அரசியலுக்கு வழித்தேடப்போகிறதாம்.
    • கையில் குறிப்பு இல்லாமல் மேடையில் ஒரு நிமிடம் கூட பேசத்தெரியாதவர் இந்திய தலைவர்களுக்கு ஆலோசனை.

    இந்தியா கூட்டணிக்கு தேசிய அளவில் மு.க.ஸ்டாலின் அல்லது மம்தா பானர்ஜியை தலைவராக்க வேண்டும் என்று உத்தவ் சிவசேனா கட்சியின் சாம்னா நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து விமர்சித்த தவெக பரப்புரை செயலாளர நாஞ்சில் சம்பத்," இந்தியா கூட்டணிக்கு ஸ்டாலின் தலைமையேற்க வேண்டுமென சிலர் பிதற்றுவதை கேட்டால் ரத்தக்கண்ணீர் தான் வருகிறது" என்றார்.

    இதுகுறித்து நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தலைமை தகுதிக்கு ஒரு தராசு வேண்டாமா?

    இண்டி (I.N.D.I.A) கூட்டணிக்கு அண்ணன் ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும் என்று சிலர் பிதற்றுகிறார்கள். இதைக் கேட்கும்போது எனக்கு சிரிப்பு வரவில்லை, நாட்டின் கதியை நினைத்து ரத்தக் கண்ணீர் தான் வருகிறது!

    தமிழகத்தின் திசையெங்கும் திராவிட மாடல் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, திக்கெட்டும் வெறும் விளம்பர வெளிச்சத்திலேயே காலத்தைக் கடத்தும் ஒரு விடியல் அரசு, இப்போது தேசிய அரசியலுக்கு வழி தேடப் போகிறதாம்! கதர் சட்டையை குறைத்து மதிப்பிடுகிறார்களா?

    மதிப்பிற்குரிய முதல்வர் அவர்கள், கையில் குறிப்பு எடுத்துத் தராமல் மேடையில் ஒரு நிமிடம் கூட பேசத் தெரியாதவர். அகில இந்தியத் தலைவர்களுக்கு ஆலோசனைக் கூறப் போகிறாராம். பீகாரில் பரப்புரை தாக்கத்தை நாடு பார்த்ததே. தமிழ்நாட்டிலேயே விடிவெள்ளி எப்போது வரும் என்று மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் தேசிய அளவில் டார்ச் அடிக்கப் போவதாகக் கிளம்பிவிட்டார்கள்.

    கொள்கைக் குன்றாக, மக்களின் நாடித்துடிப்பை அறிந்த தலைவர் விஜய் அவர்கள் களமிறங்கிய பிறகு, பலருக்குக் கை, கால் நடுக்கம் எடுக்கத் தொடங்கிவிட்டது. அதிலிருந்து தப்பிக்கவே 'தேசியத் தலைமை' என்கிற பொருந்தா பட்டத்தை சூட்டி, இவரை இங்கிருந்து அனுப்பிவிட சிலர் துடிக்கிறார்கள் போலிருக்கிறது.

    தலைமை என்பது பெறுவது அல்ல; அது தகுதியால் தானாக சேர வேண்டிய இடம். இங்கே பலருக்கு தகுதியே தட்டுப்பாடாக இருக்கும்போது, தலைமைக்கு ஆசைப்படுவது 'ஆகாசத் தாமரைக்கு' ஆசைப்படுவது போன்றது! சரிதான், தாமரை அவர்களுக்கு பிடித்த ஒன்று தானே..

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×