என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • மதுரை - பழனி இடையே முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்
    • காலை 6.00 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு அதே நாளில் காலை 8.30 மணிக்கு பழனி வந்தடையும்.

    பிப்ரவரி 1 அன்று பழனியில் தைப்பூச விழாவையொட்டி மதுரை சந்திப்புக்கும் பழனிக்கும் இடையே முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

    ரெயில் எண் 06145: மதுரை சந்திப்பு - பழனி முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரெயில் 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 06.00 மணிக்கு மதுரை சந்திப்பிலிருந்து புறப்பட்டு அதே நாளில் காலை 08.30 மணிக்கு பழனியை வந்தடையும்.

    மறுமார்க்கமாக ரெயில் எண். 06146: பழனி - மதுரை சந்திப்பு முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரெயில் 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பிற்பகல் 2.25 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு அதே நாளில் மாலை 5.00 மணிக்கு மதுரை சந்திப்பை வந்தடையும்.

    இந்த ரெயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தி.மு.க.வில் இணைந்தார்
    • ஓபிஎஸ் உடன் இருந்த 3 எம்.ஏ.க்களில் தற்போது ஐயப்பன் மட்டுமே அவருடன் உள்ளார்

    சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அ.தி.மு.க. உட்கட்சி மோதலினால் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்ட பலரும் தற்போது திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் ஆகியோரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தி.மு.க.வில் இணைந்தார்

    அவரைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓபிஎஸ்-ன் ஆதரவாளருமான குன்னம் ராமச்சந்திரன் அரசியல் பொது வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஓபிஎஸ் உடன் இருந்த 3 எம்.ஏ.க்களில் தற்போது ஐயப்பன் மட்டுமே அவருடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

      முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை தொடர்ந்து, சென்னையில் நடைபெற்று வந்த பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

      சிறப்பு மதிப்பெண் மூலம் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என சட்ட பேரவையில் முதலமைச்சர் உறுதியளித்திருந்தார்.

      இதையடுத்து பகுதிநேர ஆசிரியர்களின் கூட்டியக்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "17 நாட்களாக சென்னை DPIல் நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம், முதலமைச்சர் மற்றும் பள்ளிகல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகள் கொடுத்த உறுதியின் படி, எங்களுக்கு பாதகம் இல்லாத அரசாணை வரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்திவைக்கின்றோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

      • காவல்துறை வாகனம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள்.
      • ரவுடியின் பாதுகாப்பிற்காக வந்த 4 காவலர்கள் படுகாயம்

      எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழக சட்டமன்றத்தில் இன்று பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தன் முதுகை தானே தட்டிக்கொண்டு பெருமை பேசி வந்த நேரத்தில், திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெரம்பலூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறை வாகனம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள்.

      பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதுரையைச் சார்ந்த வெள்ளை காளி என்ற ரவுடியை காவலர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லும் போது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த வெடிகுண்டு வீச்சில் ரவுடியின் பாதுகாப்பிற்காக வந்த 4 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

      குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு காவல்துறையை பார்த்தோ, இந்த அரசை பார்த்தோ கிஞ்சித்தும் அச்சமில்லை என்ற நிலைதான் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைக்கும் நிலையில்,

      ஆட்சி சக்கரத்தை ஏனோ தானோ என்று சுழற்றி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார் என்று தெரியவில்லை. காவல்துறையை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

      • அமெரிக்க வர்த்தகர்கள் புதிய ஆர்டர்களை நிறுத்தவும், ரத்து செய்யவும் தொடங்கி உள்ளனர்.
      • இந்தியாவில் உள்ள ஏற்றுமதியாளர்கள் மாற்று சந்தைகளை உருவாக்குவது என்பது 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும்.

      திருப்பூரை சேர்ந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் சக்திவேல் புது டெல்லியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து இந்திய ஆயத்த ஆடை துறை எதிர்கொண்டு வரும் முக்கிய சவால்கள் குறித்தும் அமெரிக்காவில் சமீபத்திய இறக்குமதி வரி நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும் தெரிவித்துள்ளார்.

      இது தொடர்பாக ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      இந்தியாவின் மிகப்பெரிய ஆயத்த ஆடை ஏற்றுமதி சந்தையாக அமெரிக்காவிற்கு செல்லும் ஏற்றுமதிகளை பாதுகாக்க இந்தியா-அமெரிக்கா வரி விவகாரத்தில் உடனடியாக தீர்வு காண வேண்டிய தேவை உள்ளது.

      50 சத விகித அதிக வரி விதிப்பு காரணமாக வர்த்தகர்கள் ஆர்டர்கள் ரத்து செய்ய ப்படும் அபாயம் , உற்பத்தி குறைப்பு , வேலை வாய்ப்பு இழப்பு மற்றும் இந்தியாவின் சந்தைப்பங்கை நிரந்தரமாக இழக்கும் நிலை போன்ற கடுமையான சூழ்நிலைகள் உருவாகி வருகிறது.

      அமெரிக்க வாடிக்கை யாளர்களை தக்க வைத்து க்கொள்ள ஏற்றுமதி யாளர்கள் ஏற்கனவே 25 சதவீதம் விலை குறைப்பை ஏற்றுக்கொண்டு ள்ளதாகவும், இதன் காரணமாக நிறுவனங்களின் லாபம் முற்றிலும் இல்லாததுடன் சேமிப்புகளும் குறைந்து வருவதால் நீண்ட காலத்திற்கு இந்நிலையை தொடர முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

      தற்போது அமெரிக்க வர்த்தகர்கள் புதிய ஆர்டர்களை நிறுத்தவும், ரத்து செய்யவும் தொடங்கி உள்ளனர். அதற்கு ஈடாக இந்தியாவில் உள்ள ஏற்றுமதியாளர்கள் மாற்று சந்தைகளை உருவாக்குவது என்பது 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும். இச்சூழ்நிலையில் சலுகை வசதிகள் கொண்ட போட்டி நாடுகள் இந்தியாவின் இடத்தை நிரந்தரமாக பிடித்து விடும் அபாயம் உள்ளது.

      இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதியை பாதுகாக்க இந்தியா-அமெரிக்கா இறக்குமதி வரி சிக்கல் அல்லது வர்த்தக ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவு செய்ய வேண்டும். முடியாத பட்சத்தில் ஒப்பந்தம் முடியும் வரை இடைக்கால வரி தளர்வு அல்லது நிறுத்தம் வழங்க வேண்டும் என வலியுறுத்த ப்பட்டுள்ளது.

      மேலும் 3 முதல் 6 மாதங்கள் கூட தாமத மானால் இந்தியாவின் முக்கியமான ஆயத்த ஆடை ஏற்றுமதி துறை வளர்ச்சிக்கு திரும்ப முடியாத நிரந்தர இழப்பு ஏற்படும்.

      இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

      • வட மாநிலங்களில் கையாளும் 'வியூக, வித்தைகள்' தமிழ்நாட்டில் செலாவணி ஆகாது!
      • 2026 இல் ஸ்டாலின் ஆட்சி' என்பது உறுதி!

      தி.மு.க. தலைமையிலான கொள்கைக் கூட்டணி தன் சாதனைகளால் வெற்றி பெற்று மீண்டும் (2026 இல்) ஸ்டாலின் ஆட்சி என்பது உறுதி என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

      அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டில் கால் பதிக்க பி.ஜே.பி.யின் அமித்ஷாக்கள் பல தந்திரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. என்ற கூடாரத்தில் முதலில் நுழைந்து, பிறகு கூடாரத்தையே தன் வசமாக்கும் தந்திரம்! தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எந்த சூழ்ச்சி வாண வேடிக்கைகளைக் காட்டினாலும், மீண்டும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கொள்கைக் கூட்டணியே வெற்றி பெறும். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி உறுதி! உறுதி!! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

      தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி, நேற்று (23.1.2026) வந்து, மதுராந்தகத்தில் தங்களது கூட்டணியின் சார்பில், தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். வட நாட்டில் பார்க்கும் 'சுப நாள்' என்னும் ('வசந்த பஞ்சமி' நாளாம்!) நாளில் தொடங்கி வைத்துள்ளார்!

      கடந்த ஆறு மாதங்களாக பி.ஜே.பி.யின் சிந்தனை எத்தகையது?

      கடந்த ஆறு மாதங்களாக, தி.மு.க. தலைவர் (மு.க.ஸ்டாலின்) அவர்களது தலைமையில் அமைந்து, தொடர்ந்து வெற்றிக் கனிகளைப் பறித்து வரும், கூட்டணிக்கு எதிராக வலுவான ஒரு கூட்டணியை அமைக்க முயற்சித்து, அது தனது சொந்தக்காலில் நிற்க முடியாததால், அ.தி.மு.க. போன்ற 'திராவிட' முத்திரையுள்ள எதிர்க்கட்சியான 'பெரிய கட்சி'யின் தோள்மீது சவாரி செய்தால்தான் முடியும்; இல்லையேல், தி.மு.க. கூட்டணியை அசைக்கவே முடியாது என்பதை ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. உணர்ந்துள்ளதால்,

      உள்துறை அமைச்சரான அமித்ஷாமூலம், அச்சுறுத்தல்களின் காரணமாக – எதிர்க்கட்சித் தலைவர் (அ.தி.மு.க. பொதுச்செயலாளர்) எடப்பாடி பழனிசாமிமூலம், ஒரு நிர்ப்பந்தக் கூட்டணியை – அ.தி.மு.க. என்ற பெரிய (தமிழ்நாட்டில்) கட்சியைத் தங்களது அரசியல் கூண்டுக்குள் (சாக்கில்) அடைத்து, சவுக்கெடுத்த ரிங் மாஸ்டர் போல பா.ஜ.க. தனது வெகுநாளைய ஆசையான, தமிழ்நாட்டைக் காவி அரசியல் மண்ணாக்கிட 'வியூகம்' வகுத்துக் களம் இறங்கி, வடக்கே செய்த வித்தைகளைக் கையாண்டு பார்த்தது.

      இது தந்தை பெரியாரின் பகுத்தறிவு – சுயமரியாதை மண் ஆகும்.

      இதில், ஜாதி, வர்ணாசிரமப் பாதுகாப்பு அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ேஸா, அதன் அரசியல் அமைப்போ ஆழமாக ஒருபோதும் காலூன்றிவிட முடியாது என்பது பட்டாங்கமான சுவரெழுத்து.

      கூடாரத்தில் நுழையும் ஒட்டகம்!

      வட மாநிலங்களில் அமித்ஷா போன்றவர்கள் கையாண்ட வித்தைகளும், வியூகங்களும் இங்கே செலாவணி ஆகாது!

      அந்தக் கட்சித் தாவல் எம்.எல்.ஏ.,க்கள் ''ஆயாராம் காயாராம்'' பாடிக்கொண்டே முதலில் கூடாரத்தில் நுழைந்த ஒட்டகம், பிறகு கூடாரத்துக்காரர்களையே வெளியே துரத்திவிட்டு, கூடாரத்தைத் தனதாக்கிக் கொண்ட பழமொழி – தத்துவப்படி நடந்துகொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். அது இங்கே ஒருபோதும் பலிக்காது!

      சென்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்குக் கிடைத்த 4 உறுப்பினர்களின் எண்ணிக்கையாவது, இம்முறை கிடைக்குமா? என்பதே சந்தேகந்தான்! கட்சிகளைப் பிளந்து, ''விபீடணர்களையும், சுக்ரீவன்களையும்'' தங்கள் வசம் – ஆசைகாட்டியோ, பயமுறுத்தியோ ''திரிசூல'' அரசியலை எல்லாம் பயன்படுத்தியோ, களம் காண ஆயத்தமாகிய நிலையில்தான், பா.ஜ.க.வின் தலைமைத் தேர்தல் பிரச்சாரகரையே முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து, அரசியல் ஆலாபனக் கச்சேரி செய்துள்ளனர்!

      ஆனால், அவரது அணியோ, பரிதாபத்திற்குரிய கூட்டணியாக மேடையை ''அலங்கரித்தது!'' மாநிலத் தலைவர் மீதே 4 கோடி ரூபாய் தேர்தல் வழக்கு நிலுவை!

      பிரதமர் மோடி பேசிய கூட்ட மேடையில், கூனிக் குறுகி உட்கார்ந்தோர் எத்தகையவர்கள்?

      வழக்கில் சிக்கிக்கொண்டோர், வெளியே வருவதற்கு வழி தேட முனைவோர், வழக்கில் சிக்கி விடக்கூடாதே என்று கவலையோடு, முகவரி இழந்து முகாரி பாடிய சிலர், தனது பேச்சுகள் தன்னையே வறுத்தெடுக்கும் என்ற நிலையில்,

      ''ஆசை வெட்கமறியாது' அச்சுறுத்தலால் பணிவு வேறு வழியறியாது'' என்பதால்,

      'சரணம்', 'சரணம்', 'காவிச் சரணம்' என்று மேடையில், கூனிக் குறுகி, 'தம் நெஞ்சே தம்மைச் சுடும்' என்று அமர்ந்திருந்தனர் சிலர்.

      சென்ற முறை இருந்த கட்சிகள்கூட, அந்தத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முழுமையாகக் கூட இல்லை. வெடிப்புகள், சுவர் போல ஒன்று சேர்ந்து, மகிழ்ச்சியில்லாத ஒரு கூட்டணிக் காட்சியாகவே இருந்தது.

      பேசிய பிரதமர் மோடி 45 நிமிடங்களில், முன்பு அரைத்த மாவையே அரைத்தார்; இதனால் அவர்களுக்கு எந்த உருப்படியான அரசியல் அறுவடையும் கிடைக்காது!

      மழையிலே நனைந்து ('சாவி'யான) நெற்கதிர்கள் மூலம் என்ன கிடைக்கும்? அதைத்தான் அவர்கள் தங்கள் அரசியல் களத்து மேட்டு அறுவடைப் பயனாகப் பெற முடியும்?

      ஒரு என்ஜினால் இழுக்க முடியாதோ!

      'டபுள் என்ஜின்' என்பதைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்தால், ஒரு எஞ்சினால் இழுக்க முடியாது போனதாலோ என்னவோ அப்படி ஒரு சொல்லாடல்!

      ஆனால், தமிழ்நாட்டில் 'திராவிட மாடல்' ஆட்சியின் சாதனைகள், கல்வி, மருத்துவம், அமைதி, வளர்ச்சி என்பன வட மாநிலங்களில் இருக்கும் 'டபுள் என்ஜின்'கள் - பா.ஜ.க. அரசுகள் எட்ட முடியாத உயரத்திற்குச் சென்று, உலகப் பாராட்டைப் பெற்று வலம் வருகின்றன!

      தமிழ்நாட்டு மக்கள் தெளிவும், உறுதியும் பெற்று, பலனடைந்தவர்கள், நன்றியை மறக்காதவர்கள் என்பதால்,

      எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் சுருக்கென்று சொன்ன 'டப்பா என்ஜின்'களால் பிரச்சாரம் வெறும் பெருவெளிக் கூத்தாகவே முடிவது உறுதி!

      எவ்வளவு 'மத்தாப்பு – வாண வேடிக்கைகளை'க் காட்டினாலும், தெளிவான நிலைப்பாட்டை மேற்கொண்டு, தி.மு.க. கூட்டணி என்ற கொள்கைக் கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் ஸ்டாலின் ஆட்சி என்ற முத்திரைப் பதிப்பார்கள் என்பது முக்காலும் உண்மையே!" என்று தெரிவித்துள்ளார்.

      • இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 ஊதிய முரண்பாடு நிலவுகிறது
      • இடைநிலை ஆசிரியர்கள் கடந்த டிசம்பர் 26 முதல் சென்னையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

      மாணவர்களின் நலன் கருதி இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

      இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2009-மே மாதம் 31-05-2009 தேதி வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதனால் 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை குறைவான ஊதியம் தான் அளிக்கப்படுகிறது.

      2006-11 ம் ஆண்டு காலத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் தான் மக்கள் நலப்பணியாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி போல இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டது. பின்னர் 16 ஆண்டுகளை கடந்தும் இந்த அநீதி துடைக்கப்படவில்லை. இந்த அநீதியைக் களைய வேண்டும்; சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி 2009-ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கடந்த டிசம்பர் 26 முதல் சென்னையில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

      போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை கைது செய்து அடைத்து வைப்பது, போராடும் ஆசிரியர்களை கைது செய்து இரவு நேரங்களில் சென்னைக்கு வெளியில் வெகுதொலைவில் கொண்டு சென்று இறக்கி விடுவது என திமுக அரசு ஈடுபட்டு வருகிறது.

      டிசம்பர் 26-ம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தைத் தொடங்கிய போது, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதனால், ஆசிரியர்களின் போராட்டத்தால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. அதன்பின் நடக்கும் போராட்டத்தால் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

      அண்மைக்காலங்களில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் இவ்வளவு நாள்கள் நீடித்ததில்லை; மாணவர்களின் படிப்பும் இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டதில்லை. இன்னும் ஒரு மாதத்தில் ஆண்டுத் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், ஆசிரியர்களின் போராட்டம் நீடித்தால் மாணவர்கள் மேலும் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.

      ஆனால், இதுகுறித்த எந்தக் கவலையும் திமுக அரசுக்கு இல்லை. ஒருபுறம் ஆசிரியர்களுக்கு அநீதி தொடர்கிறது; இன்னொருபக்கம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது எனும் போது, ஆசிரியர்களுடன் பேச்சு நடத்தி சிக்கலுக்குத் தீர்வு காண்பது தான் மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசின் கடமையாக இருக்க முடியும்.

      ஆனால், 25-ஆம் நாளாக போராட்டம் நீடிக்கும் போதிலும், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள திமுக அரசு மறுத்து வருகிறது. இது தொடர்பாக பல முறை பேச்சுகள் நடத்தப்பட்ட போதிலும், ''நிதிநிலை சரியானவுடன் ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்'' என்பதையே அரசு மீண்டும், மீண்டும் கூறி வருகிறது. இதை ஏற்றுக்கொள்ள ஆசிரியர்கள் தயாராக இல்லை. அவர்களின் நிலைப்பாடு சரியானதும் கூட.

      சென்னையில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை போராட்டம் நடைபெற்றது. அதையடுத்து ஆசிரியர்களுடன் பேச்சு நடத்திய அமைச்சர்கள் குழுவினர், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு கோரிக்கை தொடர்பாக ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய 3 உறுப்பினர் குழு அமைக்கப் பட்டிருப்பதாகவும், அந்தக் குழு அடுத்த 3 மாதங்களில் தாக்கல் செய்த பின், அதனடிப்படையில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தனர்.

      ஆனால், அதன்பின் 3 ஆண்டுகளாகும் நிலையில் அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை; ஆசிரியர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. இப்படிப்பட்ட அரசின் வெற்று வாக்குறுதிகளை ஏற்க மறுக்கும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டும் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்பதில் உறுதியாக உள்ளனர்.

      மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் திமுக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது. அடக்குமுறைகள் மூலம் ஆசிரியர்களை பணிய வைத்து விடலாம் என்ற மனப்பான்மையை கைவிட்டு, இடைநிலை ஆசிரியர்களின் சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

      • இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை!
      • எத்தனை தடைகள் போட்டாலும், மக்களின் ஆதரவோடு அதை உடைத்தெறிவோம்!

      தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

      "அதிகாரத் திமிரா? தோல்வி பயமா?

      திருச்செங்கோட்டில் சட்டவிதிகளுக்கு உட்பட்டு, முறைப்படி வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் வரவேற்பு பதாகைகளை (Banners), எந்த முன்னறிவிப்பும் இன்றி, அதிகார பலத்தைப் பயன்படுத்தி அகற்றியுள்ளனர்.

      தகவல் அறிந்து நேரில் சென்று தடுத்து நிறுத்தினேன். "எந்த விதியின் அடிப்படையில் அகற்றுகிறீர்கள்?" என்று காவல்துறையிடம் கேட்டால் பதிலே இல்லை! காரணமே இல்லாமல் எங்கள் பதாகைகளை அகற்றுவது அப்பட்டமான காழ்ப்புணர்ச்சி மற்றும் அதிகார துஷ்பிரயோகம்!

      இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை!

      எத்தனை தடைகள் போட்டாலும், மக்களின் ஆதரவோடு அதை உடைத்தெறிவோம்!

      நாங்கள் விதை... புதைக்க நினைத்தால் முளைப்போம்

      என்று தெரிவித்துள்ளார்.

      • சட்டமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல.
      • தமிழர் பெருமையை வெளிப்படுத்தும் அகழாய்வு அறிக்கைகளை முடக்குவதற்கு கண்டனம்.

      மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

      இந்த கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களுக்கு கண்டனம்.

      சட்டமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல.

      தமிழர் பெருமையை வெளிப்படுத்தும் அகழாய்வு அறிக்கைகளை முடக்குவதற்கு கண்டனம்.

      மீண்டும் மீண்டும் பல்வேறு வடிவங்களில் இந்தியை திணிப்பதையும் கண்டிப்பதாக மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

      பழைய ஓய்வூதியத்திட்ட பலனை வழங்கும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்திய முதல்வருக்கு நன்றி உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

      மேலும், சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்பமனு அளிக்கலாம் என மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

      • மாநாடு நடக்கும் திடல் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
      • மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு கருப்பு, சிவப்பு நிறத்தில் சேலைகள், இளம் வயதினருக்கு சுடிதார் போன்றவை வழங்கப்பட உள்ளன.

      தஞ்சாவூர்:

      தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் வருகிற 26-ந்தேதி தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற தலைப்பில் தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது.

      இதையடுத்து மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு மேற்பார்வையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

      இந்தநிலையில் அமைச்சர் கே.என்.நேரு முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்த்து ஆய்வு செய்தார்.

      மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.

      மேலும் இந்த மாநாட்டில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, மு.பெ.சாமிநாதன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், துணை பொதுச்செயலாளர் பொன்முடி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மகளிரணி தலைவர் விஜயா தாயன்பன் உள்பட பலர் பங்கேற்று பேச உள்ளனர்.

      200 ஏக்கரில் மிக பிரமாண்டமாக இந்த மாநாடு நடக்கிறது. 100 ஏக்கரில் மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 100 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

      மாநாடு நடக்கும் திடல் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

      மாநாட்டு திடலில் தி.மு.க. கட்சி கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் 1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

      மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு தட்டுப்பாடில்லாமல் தரமான குடிநீர் வசதி, 200-க்கும் அதிகமான மொபைல் கழிவறை வசதி, பஸ் வசதி என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

      மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு கருப்பு, சிவப்பு நிறத்தில் சேலைகள், இளம் வயதினருக்கு சுடிதார் போன்றவை வழங்கப்பட உள்ளன.

      மேலும் மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு கைப்பையில் நொறுக்கு தீனிகளும் வழங்கப்பட உள்ளன. இதில் கேக், மிக்சர், குடிநீர் பாட்டில், பிஸ்கட், ஹாட்பாக்சில் பிரியாணி போன்றவை இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. 

      • ஆளுநர் உரையாற்ற வந்தபோது மைக்கை யாரும் ஆப் செய்யவில்லை.
      • ஆளும் கட்சி தயார் செய்து அளிக்கும் அறிக்கையை ஆளுநர் வாசிப்பது தான் மரபு.

      சென்னை:

      கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகத்தைச் சீரமைக்கவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும், பதிவாளருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வழிவகை செய்யும் சட்டமசோதா கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

      இந்த சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் திருப்பி அனுப்பினார். இந்த மசோதா இன்று சட்டசபையில் மறு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை ஆளுநருக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்து பேசினார்.

      இதை தொடர்ந்து பா.ம.க. எம்.எல்.ஏ. ஜி.கே.மணி, வி.சி.க. எம்.எல்.ஏ. பாலாஜி, மார்க்சிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. நாகை மாலி, ம.தி.மு.க. சதன் திருமலைக் குமார், ம.ம.க. ஜவாஹிருல்லா ஆகியோர் பேசினார்கள்.

      அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையாற்ற வந்தபோது மைக்கை யாரும் ஆப் செய்யவில்லை. பேரவைத் தலைவர் பேசத் தொடங்கியதும் மற்ற மைக்குகள் தானாக ஆப் ஆகி விடும் வகையில் உள்ளது.

      எனவே யாரும் ஆளுநர் மைக்கை ஆப் செய்யவில்லை. அவர் உரையை வாசித்து இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆளுநர் உரையை வாசிக்காமல் பேச முயன்ற காரணத்தால் பேரவைத் தலைவராக பேசினேன். அப்போது அனைத்து மைக்குகளும் ஆப் ஆகிவிடும் என்று தெரிவித்தார்.

      இதனைத் தொடர்ந்து பேசிய கொங்கு ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நாம் எவ்வளவு கண்ணியமாக, நாகரிகமாக நடந்து கொண்டாலும் ஆளுநர் மாறுவதாக இல்லை. சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை கண்டிக்கிறேன் என்று தெரிவித்தார்.

      இறுதியாக பேசிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. (ஓ.பி.எஸ்.ஆதரவாளர்) ஐயப்பன் பேசுகையில், ஆளும் கட்சி தயார் செய்து அளிக்கும் அறிக்கையை ஆளுநர் வாசிப்பது தான் மரபு. ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்றது கண்டத்திற்குரியது. எனவே ஆளுநரை திரும்பபெற வேண்டும் என்று தெரிவித்தார்.

      இதனைத் தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களின் சட்ட மசோதா மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

      • தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.14,620-க்கு விற்பனை செய்யப்பட்டது.
      • வெள்ளியின் விலை காலையில் கிராமுக்கு ரூ.10 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.10 உயர்வு.

      தங்கம் விலை கடந்த 16-ந்தேதியில் இருந்து தாறுமாறாக எகிறி வருகிறது. தினமும் விலை அதிகரித்து புதிய உச்சத்தை பதிவு செய்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் கடந்த 21-ந்தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

      தொடர்ந்து எகிறி வந்த நிலையில், நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.1,720 சரிந்து, சற்று ஆறுதலை கொடுத்து, நேற்று மீண்டும் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது.

      இந்நிலையில், இன்று காலை தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,16,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.14,620-க்கு விற்பனை செய்யப்பட்டது.

      இன்று காலையில் அதிகரித்த தங்கம் விலையை தொடர்ந்து, மாலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

      அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

      ஆபரணத்தங்கம் சவரனுக்கு இன்று காலை ரூ.560 உயர்ந்த நிலையில், தற்போது மேலும் ரூ.1040 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

      வெள்ளியின் விலை காலையில் கிராமுக்கு ரூ.10 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.365-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, வெள்ளியின் விலை ஒரே நாளில் ரூ.20 உயர்ந்த நிலையில் ஒரு கிராம் ரூ.365க்கும், ஒரு கிலோ ரூ.3.65 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

      ×