என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • பிரதமர் அவருடைய கூட்டணி கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கின்றார்.
    • தி.மு.க. 5 ஆண்டு காலத்தில் திட்டங்கள் நிறைவேற்றவில்லை என்று மக்களிடம் கருத்து இருக்கிறது.

    தூத்துக்குடி:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற தலைப்பில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடியில் பிரசாரத்தை மேற்கொள்கிறார். இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பிப்ரவரி 3-ந் தேதி வரை சுற்றுப்பயணம் இருக்கிறது.

    கூட்டணி குறித்து கூறுவதற்கு நேரம் இருக்கிறது.பிப்ரவரி 20-ந் தேதிக்கு பின்பு தான் தேர்தல் தேதி அறிவிக்க இருக்கிறது. அதனால் உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுத்து தலைமைக் கழகத்தில் அறிவிப்பேன்.

    தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு எதிர்காலத்தில் எந்த கூட்டணி நல்லதோ, மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள் யாரை அதிகம் விரும்புகிறார்களோ, தே.மு.தி.க.விற்கு எதிர்காலத்திற்கு எது நல்லதோ அந்த வகையில் தாயாக இருந்து கழகத்தை கட்டிக்காக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு என்னுடையது. இந்த கடமையை கேப்டன் கையில் கொடுத்து இருக்கிறார். சரியான நேரத்தில் கூட்டணியை அறிவிப்பேன்.

    பிரதமர் அவருடைய கூட்டணி கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கின்றார். அவருடைய கூட்டணி சார்பாக பங்கேற்று இருக்கின்றார்.

    விஜய் படத்திற்கு தொடர்ந்து இடையூறுகள் வருவது குறித்து கேட்கிறீர்கள். படத்தில் ஏதேனும் இருக்கிறதா? என்று உரியவரான விஜய் தான் பதில் சொல்ல வேண்டும். சட்டம் தன் கடமையை செய்யும் அதைத்தான் நான் சொல்கிறேன்.

    தி.மு.க. 5 ஆண்டு காலத்தில் திட்டங்கள் நிறைவேற்றவில்லை என்று மக்களிடம் கருத்து இருக்கிறது. பல தடவை எந்த மார்க் என்று நான் கூறி இருக்கின்றேன். 50 சதவீதம் நல்லது நடந்து இருக்கிறது. நடக்க வேண்டியதும் இருக்கின்றது. எல்லா காலத்திலும் போராட்டம் இருக்க தான் செய்கின்றது. இடைநிலை ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், செவிலியர்கள் எல்லோரின் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. அரசை கண்டித்தும், புதிய அரசு தலைமை மருத்துவமனையை உடனடியாகத் திறந்திட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம்.
    • குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குடியாத்தம் நகரில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு தலைமை மருத்துவமனையை திறந்து வைக்காமல் காலம் தாழ்த்தியும், நகராட்சி வாழ் மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றாமலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் தி.மு.க. அரசு மற்றும் குடியாத்தம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்கள் நலன் கருதி புதிய அரசு தலைமை மருத்துவமனையை உடனடியாகத் திறந்திட வலியுறுத்தியும் வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வருகிற 27-ந்தேதி குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரமணி தலைமையிலும், வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் த. வேலழகன், குடியாத்தம் நகர செயலாளர் பழனி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வேலூர் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

    • சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • தமிழக முதலமைச்சரின் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரை வரையில் செல்லும் வழித் தடங்கள் ‘சிவப்பு மண்டலமாக’ அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மெரினா காமராஜர் சாலை-வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

    இதனையொட்டி காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையாளர்கள் இணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    சென்னை விமான நிலையம், ரெயில் நிலையங்கள், பஸ் முனையங்கள் மற்றும் பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது தவிர சென்னை பெருநகர் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகனங்கள் மூலம் ரோந்து பணிகளும் தீவிரபடுத்தப்பட உள்ளன. மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து காவல் துறையினர் மூலம் வாகனத் தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மக்கள் அதிகம் கூடும் இடங்களான மீனம்பாக்கம் விமான நிலையம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள், கோயம்பேடு, மாதவரம் பேருந்து முனையங்கள் உட்பட அனைத்து முக்கிய இடங்களிலும், சென்னை பாதுகாப்பு பிரிவின் காவல் அதிகாரிகள் வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழத்தல் பிரிவு மோப்பநாய் பிரிவு மற்றும் மெரினா கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு படைபிரிவினருடன் இணைந்து நாசவேலை தடுப்பு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும், குடியரசு தினத்தை முன்னிட்டு நாளையும், நாளை மறுநாளும் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ராஜ்பவன் முதல் மெரினா கடற்கரை வரை மற்றும் தமிழக முதலமைச்சரின் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரை வரையில் செல்லும் வழித் தடங்கள் 'சிவப்பு மண்டலமாக' அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அந்த பகுதிகளில் டிரோன் கேமராக்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி பொருட்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகரப் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • இனிமேல் கால அவகாசம் வழங்க முடியாது என்று எச்சரிக்கை செய்தனர்.
    • வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் தள்ளிவைத்தனர்.

    சென்னை:

    தமிழகத்தில் சுற்றுலா மலைப்பகுதிகளில், மதுபான பாட்டில்கள் வீசப்படுவதை தடுக்க, ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்து விட்டு, காலி பாட்டில்களை திரும்ப தரும் பட்சத்தில் 10 ரூபாயை திரும்ப அளிப்பது என்ற காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் என்.சுரேஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டது.

    பின்னர் இந்த திட்டத்தை மாநில முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்குகள் நீதிபதிகள் என். சதீஷ்கு மார், டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.

    அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள 28 மாவட்டங்களில் மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு விட்டது.

    3 மாவட்டங்களில் பாதி அளவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 7 மாவட்டங்களில் இத்திட்டத்தை எதிர்த்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்துவதால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக இந்த திட்டம் அமல்படுத்தப்படும். இதே போல் கியூ ஆர் கோடுமுறை அமல்படுத்த மீண்டும் டெண்டர் கோரப்பட்டு உள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

    அதற்கு நீதிபதிகள், பண்டிகை காலங்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.1000 கோடி என சாதனை படைக்கிறது. ஆனால் இந்த திட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதில் என்ன பிரச்சனை? இனிமேல் கால அவகாசம் வழங்க முடியாது என்று எச்சரிக்கை செய்தனர். பின்னர், வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் தள்ளிவைத்தனர்.

    • ஆளுநர் ரவி அவர்களுக்கு மாற்றுக்கருத்து இருக்குமேயானால் அவர் ஒன்றிய அரசைத்தான் கேள்வி கேட்க வேண்டும்.
    • நாம் சொன்னது அனைத்தும் ஒன்றிய அரசு அளித்த தரவுகள்தான்.

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியிருப்பதாவது:-

    Dravidian Model: மீண்டும் நாங்கதான் வருவோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்!

    ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு நான் அளித்த பதிலுரை, ஆளுநருக்கே அளித்த விளக்கவுரையாக, 5 ஆண்டு சாதனை அறிக்கையாக அமைந்துவிட்டது!

    தமிழ்நாடு 'நம்பர் 1' என நாம் ஆளுநர் உரையில் குறிப்பிட்டதில் ஆளுநர் ரவி அவர்களுக்கு மாற்றுக்கருத்து இருக்குமேயானால் அவர் ஒன்றிய அரசைத்தான் கேள்வி கேட்க வேண்டும். ஏனென்றால், நாம் சொன்னது அனைத்தும் ஒன்றிய அரசு அளித்த தரவுகள்தான்.

    2021-இல் நிர்ணயித்த இலக்கில் வென்றுவிட்டோம்! இனி 2026-லும் #வெல்வோம்_ஒன்றாக! என்று கூறியுள்ளார். 



    • கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கவுன்சிலர்களிடமும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
    • புளியந்தோப்பு பகுதியில் புதிதாக கட்டப் பட்டு வரும் ஆட்டிறைச்சி கூடத்தை மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழைக்கு பிறகு சென்னையில் கொசுக்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. கொசுக்கடியால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    பொதுவெளி பகுதிகளிலும் கொசுக்கள் அதிகமாக காணப்படுகிறது. கொசுக்கடி காரணமாக பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களும் பரவி வருகின்றன.

    இதையடுத்து சென்னையில் கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி எந்த அக்கறையும் காட்டவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கவுன்சிலர்களிடமும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொசுக்களை ஒழிப்பதற்காக நூதன முயற்சி ஒன்றை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக மழைநீர் வடிகால்களுக்கு கொசுவலை போர்த்தி வருகிறார்கள்.

    முதல் கட்டமாக திருவொற்றியூர், திரு.வி.க.நகர் உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களில் இந்த பணிகள் நடந்தது.

    மழைநீர் வடிகால்வாயில் உள்ள தொட்டிகளின் மூடியை திறந்து அதில் கொசுவலை போர்த்தி, அதன் மேல் மீண்டும் மூடி வைக்கப்பட்டது. மழைநீர் வடிகால்வாய் தொட்டிக்குள் உள்ள கொசுக்கள் மூடியில் உள்ள துளை வழியே வெளியேறுவதை தடுக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டது.

    சென்னை மாநகராட்சி ஊழியர்களின் இந்த முயற்சியானது பேசுபொருளாக மாறியது. இது தொடர்பான விமர்சனங்களும், கேலி-கிண்டல் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைகை அணையில் தெர்மாகோல் மிதக்கவிட்ட சம்பவத்தை தொடர்புபடுத்தி வீடியோக்கள் பரவின.

    இந்த நிலையில் மழைநீர் கால்வாயில் கொசுவலை பொருத்தியது தொடர்பாக மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.

    சென்னை புளியந்தோப்பு பகுதியில் புதிதாக கட்டப் பட்டு வரும் ஆட்டிறைச்சி கூடத்தை மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவரி டம், 'மழைநீர் வடிகாலில் கொசுவலை போர்த்திய வீடியோ வைரலாகி வருகிறதே? அது தொடர்பான விமர்சனங்கள் எழுகிறதே?' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, 'மழைநீர் கால்வாயில் கொசுவலை போர்த்துவது கொசுக்களுக்காக போடுவது கிடையாது. கவுன்சிலர் ஒருவர் வேண்டுகோள் வைத்ததால் போடப்பட்டது.

    மாநகராட்சியில் அறிவிப்பாக வெளியிட்டு போடப்பட்டது கிடையாது. ஒரு கவுன்சிலர் ஐடியா கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போட்டு இருக்கிறார்கள். இந்த அளவுக்கு சர்ச்சையாக்கும் வகையில் அது பெரிய விஷயம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகம் - இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை (Easterly waves) நிலவுகிறது.

    இன்று வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.

    நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யக்கூடும்.

    26-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இதனிடையே இன்று முதல் 26-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை வடதமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • கடந்த 2 நாட்களாக கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.
    • சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    சென்னை:

    நடப்பாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரையை வாசிக்காமலேயே சட்டசபையில் இருந்து வெளியேறினார்.

    அதனை தொடர்ந்து ஆளுநர் வாசிக்க இருந்த தமிழ்நாடு அரசு உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார்.

    கூட்டத்தொடரின் 2-ம் நாளான 21-ந்தேதி மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். அதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

    இந்த நிலையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதில் உரை அளித்த நிலையில் சட்டசபைக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வருகை தராமல் முழுவதுமாக புறக்கணித்தனர்.

    அதே சமயத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர் ஐயப்பன் எம்.எல்.ஏ. ஆகிய இருவரும் சட்டசபைக்கு வந்திருந்தனர். சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    • ஓ.பன்னீர்செல்வத்தின் மற்றொரு ஆதரவாளரான ஜே.சி.டி. பிரபாகர் த.வெ.க.வில் இணைந்தார்.
    • கூட்டணி தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் முடிவு எடுக்க தாமதம் ஆனதால் அவரை விட்டு விலகி தி.மு.க.வில் இணைந்ததாக வைத்திலிங்கம் கருத்து தெரிவித்தார்.

    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தார்.

    பின்னர் அந்த அமைப்பின் பெயரை அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக மாற்றினார். வருகிற சட்டசபை தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவதற்கான முயற்சிகளை ஓ.பன்னீர் செல்வம் மேற்கொண்டார்.

    ஆனால் அவரை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்து விட்டார். ஆனாலும் ஓ.பன்னீர்செல்வம் பொறுமையாக காத்திருந்தார்.

    இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் அவரிடம் இருந்து விலகி மாற்று கட்சியில் சேர தொடங்கினார்கள். ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் தங்களின் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

    கூட்டணி தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் முடிவு எடுக்க தாமதம் ஆனதால் அவரை விட்டு விலகி தி.மு.க.வில் இணைந்ததாக வைத்திலிங்கம் கருத்து தெரிவித்தார்.

    இதே போல் ஓ.பன்னீர்செல்வத்தின் மற்றொரு ஆதரவாளரான ஜே.சி.டி. பிரபாகர் த.வெ.க.வில் இணைந்தார். இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டத்திலும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு இல்லை. இதற்கிடையே தை மாதம் முடிவதற்குள் கூட்டணி தொடர்பான முடிவை அறிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் இன்று ஓ.பன்னீர் செல்வம் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றார். சட்டசபை கூட்டம் இன்று நிறைவடைந்ததும் ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சந்தித்து பேசினார். சட்டசபை வளாகத்தில் சுமார் 15 நிமிடங்கள் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

    ஆனால் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் பலரும் தி.மு.க.வில் ஐக்கியம் ஆகி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடமில்லை என்கிற நிலையில் அவர் தி.மு.க. ஆதரவு நிலைப்பாடு எடுக்கக்கூடும் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில்தான் ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும் சந்தித்து பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒருவார காலத்துக்குள் எனது நிலைப்பாட்டை அறிவிப்பேன்.
    • கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் கூட்டணிக்கு என சில வழி முறைகள் வைத்திருந்தனர்.

    கோவை:

    புதிய தமிழகம் கட்சி எந்த கூட்டணியில் இடம்பெறும் என்று தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. கடந்த தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தற்போது வரை எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளார். நேற்று நடந்த பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

    இதுபற்றி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    கூட்டணி குறித்து புதிய தமிழகம் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் ஒருவார காலத்துக்குள் எனது நிலைப்பாட்டை அறிவிப்பேன். யாருடன் கூட்டணி என்பது குறித்து கலந்து பேசி வருகிறோம். வருகிற சட்டசபை தேர்தலில் கொள்கை ரீதியான ஆட்சி அமைக்கும் வகையில் திட்டங்களை வகுத்து வருகிறோம்.

    மதுவிலக்கு, ஊழல், கனிம வள கொள்ளை, அரசு வேலைக்கு விலை என தமிழ்நாட்டின் நிலை மாறி உள்ளது. எங்கள் கொள்கைகளுக்கு ஒத்துப் போகிறவர்களுடன் பூரண மதுவிலக்கு உள்ளிட்டவற்றை குறைந்தபட்ச செயல்திட்டத்தில் கொண்டு வரும் கட்சியுடன் கூட்டணி அமைக்க சிந்தித்து வருகிறோம்.

    கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் கூட்டணிக்கு என சில வழி முறைகள் வைத்திருந்தனர். ஆனால் இப்போது அதுபோன்று இல்லை. புதிய தமிழகத்தை அதிகாரப்பூர்வமாக எந்தக்கட்சியும் அணுகவில்லை.

    தமிழ்நாட்டில் புதிய தமிழகம் இன்றி வெற்றி பெற முடியாத சூழ்நிலையில் தமிழ்நாட்டில் 100 தொகுதிகளில் வலுவாக உள்ளோம். புதிய தமிழகம் கட்சி இல்லாமல் தென்மாவட்டங்களில் யாரும் வெற்றி பெற முடியாது. நாங்கள் தனித்து விடப்படவில்லை.

    புதிய தமிழகம் கட்சி ஒரு சில பகுதிகளில் மட்டும் போட்டியிடும் என்பதால் தேர்தலுக்கு 5 நாட்கள் முன்புதான் சின்னம் கொடுப்பார்கள் என்றார். 

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேர இருப்பதாக கூறுகிறார்கள்.
    • தே.மு.தி.க.வை பொறுத்தவரையில் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி தெளிவான முடிவை எடுப்போம்.

    சென்னை:

    தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி தே.மு.தி.க. இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் இன்று அளித்த பேட்டி வருமாறு:-

    தூத்துக்குடியில் இன்று 4-ம் கட்ட பிரசார பயணத்தை தொடங்குகிறேன். இந்த பிரசாரம் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடைபெறுகிறது. கன்னியாகுமரியில் இருந்து விருதுநகர் வரையிலும் பயணம் மேற்கொள்ள உள்ளோம்.

    கேள்வி: ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் கூட்டணியை இறுதி செய்துள்ளன. தே.மு.தி.க. கூட்டணி முடிவை எடுப்பதில் ஏன் தாமதமாகிறது?

    பதில்: தாமதம் எல்லாம் இல்லை. தேர்தல் தேதி அறிவித்து விட்டார்களா? யார், யார் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்று முடிவெடுத்து வேட்பாளர்களை அறிவித்து விட்டார்களா? இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. நீங்கள் தான் (பிரபல பத்திரிகையாளர்கள்) அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

    பிப்ரவரி 20-ந்தேதிக்கு பிறகுதான் தேர்தல் தேதியே அறிவிக்கப் போகிறார்கள். எனவே இப்போதே அவசரம் ஒன்றுமில்லை. தே.மு.தி.க. எங்கள் குழந்தை. ஒரு அம்மாவாக எனக்கு கடமைகள், பொறுப்புகள் அதிகம் உள்ளன. எந்த நேரத்தில் அந்த குழந்தையை யாருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

    கூட்டணி தொடர்பாக உரிய நேரத்தில் எல்லோரும் போற்றக்கூடிய நல்ல முடிவை எடுப்பேன்.

    கேள்வி: தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தே.மு.தி.க. தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறதே?

    பதில்: எல்லா பக்கமும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பத்திரிகைகளில் தினமும் ஒரு செய்தியை போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. நான் தெளிவாக பல முறை கூறி உள்ளேன். உரிய நேரத்தில் நல்ல முடிவை நிச்சயம் எடுப்போம்.

    கேள்வி: தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் முக்கிய பிரமுகர் ஒருவரை சந்தித்து பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதே?

    பதில்: அப்படியெல்லாம் ரகசியம் ஒன்றும் இல்லை. அதுபோல் எதுவும் இருந்தாலும் வெளிப்படையாகவே பேசி கூட்டணி அமைப்போம்.

    கேள்வி: தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?

    பதில்: அதுவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேர இருப்பதாக கூறுகிறார்கள். எதுவுமே இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதுதான் உண்மையாகும்.

    எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம். யார் வேண்டுமானாலும் எந்த கூட்டணியையும் அமைக்கலாம். தே.மு.தி.க.வை பொறுத்தவரையில் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி தெளிவான முடிவை எடுப்போம்.

    கேள்வி: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான கவுண்டவுன் தொடங்கி இருப்பதாக பிரதமர் மோடி கூறி இருக்கிறாரே? அதனை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்: எப்படி இருந்தாலும் தேர்தலுக்கு பிறகு ஒரு ஆட்சி வரத்தான் போகிறது. 2026-ம் ஆண்டில் நல்லது நடக்கும். நல்லாட்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமாகும். எனவே எல்லோருக்கும் நல்லதே நடக்கும்.

    இவ்வாறு பிரேமலதா கூறினார்.

    • தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் முதல் கட்ட நேர்காணலை கடந்த 9-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.
    • கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி கொடுத்தது போக 170 தொகுதிகளில் அ.தி.மு.க.வை களம் இறக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க. தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனித்தனியாக களமிறங்கிய அ.தி.மு.க.வும் பாரதிய ஜனதா கட்சியும் வருகிற சட்டமன்றத் தேர்தலை ஒன்றாக இணைந்து சந்திக்க உள்ளன. அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பா.ம.க., டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் சேர்ந்துள்ள நிலையில் பல்வேறு சிறிய கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளன.

    இதனைத் தொடர்ந்து சென்னையை அடுத்துள்ள மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த லட்சக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்றனர்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமையாமல் இருந்து வந்த நிலையில் தற்போது டி.டி.வி. தினகரன் மற்றும் பா.ம.க.வும் இந்த கூட்டணியில் சேர்ந்து இருப்பது அதிரடி திருப்பமாகவே பார்க்கப்படுகிறது.

    இந்த கட்சிகளோடு சேர்ந்து அந்தந்த பகுதிகளில் செல்வாக்குடன் திகழும் 10 கட்சிகளும் இந்த கூட்டணியில் சேர்ந்து இருப்பதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணியாகவே மாறி இருப்பதாக அந்த கட்சியினர் கூறி வருகிறார்கள்.

    இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தொடர்பாக தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள தொடங்கியுள்ளார்.

    அ.தி.மு.க.வில் சட்டமன்ற தொகுதி வாரியாக போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.

    இதுபோன்று தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் முதல் கட்ட நேர்காணலை கடந்த 9-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். இந்த நேர்காணல் கடந்த 10,12 ,13 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக 4 நாட்கள் நடைபெற்றது. இந்த நேர்காணலின்போது சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தகுதியான நபர்களை எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்திருக்கிறார்.

    இதன் பிறகு பொங்கல் பண்டிகை விடுமுறை மற்றும் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொதுக் கூட்டம் ஆகியவை இருந்ததால் நேர்காணல் உடனடியாக நடத்தப்படவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு 5-வது நாள் நேர்காணல் 24-ந்தேதி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் நேர்காணலை நடத்தினார்.

    இன்றைய நேர்காணலில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அ.தி.மு.க. கூட்டணியில் பல்வேறு கட்சிகளும் இணைந்து பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்ற பிறகு கட்சி அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வினர் மிகுந்த உற்சாகத்துடனே வரவேற்றார்கள்.

    இன்று காலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, தென்காசி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

    காலை 9.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளிடமும், அதன் பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க.வினரிடமும் நேர்காணல் நடத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு மற்றும் திருவண்ணாமலை வடக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட நிர்வாகிகளிடமும் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தினார்.

    இன்று மாலையில் திருவண்ணாமலை கிழக்கு திருவண்ணாமலை மத்திய மாவட்ட நிர்வாகிகளுடன் முதலில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    இந்த ஆலோசனைக் கூட்டம் மாலை 4 மணிக்கு தொடங்கும் நிலையில் இதன் பிறகு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடமும் நேர்காணல் நடைபெறுகிறது.

    சட்டமன்றத் தேர்தலில் மக்களை கவரும் வகையில் குறிப்பாக செயல்பட்டு வரும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் யார் யார் என்பதை? எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே ரகசிய சர்வே மூலமாக கண்டறிந்து வைத்துள்ளார். அதுபோன்ற நபர்களில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு துடிப்பான அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

    தற்போது நடைபெற்று உள்ளது முதல் கட்ட நேர்காணல் என்றும் அடுத்தடுத்து 2 அல்லது 3 நேர்காணல்களை நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இருப்பதாகவும் கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

    இப்படி அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடமும் நடத்தி முடிக்கப்பட்ட பிறகு அ.தி.மு.க. சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் யார் யார் என்கிற பட்டியல் இறுதி செய்யப்படுகிறது.

    வருகிற சட்டமன்றத் தேர்தலில் அரிதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளார். இதற்காக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளார்.

    கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி கொடுத்தது போக 170 தொகுதிகளில் அ.தி.மு.க.வை களம் இறக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஒருவேளை கூட்டணி கட்சிகளுக்கு 2 அல்லது 3 இடங்களை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அ.தி.மு.க. குறி வைத்து உள்ள இந்த 170 தொகுதிகள் மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதுபோன்று ஏற்பட்டால் 20 தொகுதிகளை விட்டுக் கொடுத்து விட்டு 150 தொகுதிகளுக்கு குறையாமல் அ.தி.மு.க. களமிறங்கும் என்று தெரிகிறது.

    பா.ஜ.க.வுக்கு 25 தொகுதிகள், பா.ம.க.வுக்கு 17 தொகுதிகள், டி.டி.வி. தினகரனுக்கு 7 முதல் 10 தொகுதிகள் வரை ஒதுக்குவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    இதேபோன்று கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற சிறிய கட்சிகளுக்கு 2 அல்லது 3 இடங்கள் வரையிலும் சில கட்சிகளுக்கு ஒரு இடம் வரையிலும் ஒதுக்குவதற்கு அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பான தொகுதி பங்கீடு விரைவில் முடிவடைந்து எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்கிற அறிவிப்பும் வெளியிடப்பட உள்ளது.

    இப்படி தொகுதி பங்கீடு முடிவடைந்ததும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளார்.

    ×