என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
லட்சத்தீவு - கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
3-ந்தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
4-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
5-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
6-ந்தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதனிடையே 2-ந்தேதி முதல் முதல் 4-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1-2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது.
- திராவிடம் செத்துப் போய் ரொம்ப நாள் ஆகி விட்டது.
சென்னை:
சென்னை கோயம்பேட்டில் நாம் தமிழர் கட்சியின் வக்கீல்கள் பிரிவு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலையொட்டி பிப்ரவரி 21-ந் தேதி திருச்சி மாநாட்டில் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளேன். யாரை சேர்ப்பது, யாருடன் செல்வது என்ற எந்தவித குழப்பமும் இன்றி நாங்கள் தனியாக பயணிக்க உள்ளோம்.
பொங்கலுக்கு ரூ.6800 கோடி இனாம் கொடுத்து உள்ளார்கள். இது ஓட்டுக்கு கொடுக்கப்பட்ட காசுதான். குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. ஆனால் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கொடுக்கிறார்கள். ஆனால் ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது. படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் நடுரோட்டில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்களும், துப்புரவு பணியாளர்கள் என எல்லோரும் வீதியில் நிற்கிறார்கள். ஆனால் நல்லாட்சி நடப்பதாக கூறுகிறார்கள்.
போக்குவரத்து துறையில் 1 லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில் பேருந்துகளில் இலவச பயணம் எதற்கு? மத்திய- மாநில அரசுகள் கடன் வாங்கி அரசை 3 நடத்தியும் எந்த பயனும் இல்லை. ஆசிரியர்களை கண்டு கொள்ளாமல் இருக் கும் அரசு இருப்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எங்கள் கொள்கைக்கு யாரும் போட்டி இல்லை. திராவிடம் என்பது எந்த மொழிச் சொல் என்று யாருக்கும் தெரியாது. மாநில உரிமையில் இருந்து கல்வி பறிக்கப்பட்டது தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் தான்.
இது பிரபாகரன் பிள்ளைகளின் காலம். தமிழ் தேசியம் எழுச்சி பெற்றுள்ளது. குரு மூர்த்திக்கு பிறந்தவன் என்று ஒருவன் என்னைப் பற்றி குறிப்பிடுகிறான். இதுதான் பெரியார் சொல்லி கொடுத்த பண்பாடா? பெரியாரை சீமான் எதிர்த்து பேசி விட்டார். அவருக்கு ஓட்டு போடாதீர்கள் என்று தேர்தல் காலத்தில் ஒருத்தனாவது பேச முடியுமா? பெரியாரை நாங்கள் போற்றுகிறார். எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று உங்களால் கேட்க முடியுமா? எந்த தலைவனுக்கு இங்கு ஓட்டு உள்ளது.
எனக்கு விழுந்த ஓட்டு எனது கொள்கைக்காக விழுந்த ஓட்டாகும். பணம் கொடுக்காமல் எனக்கு மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் போட்டியிட்டு என்னை வெல்ல முடியுமா? திராவிடம் செத்துப் போய் ரொம்ப நாள் ஆகி விட்டது.
பெரியாரை நாங்கள் பேசும் முன்னே திருமாவளவன் கடுமையாக பேசி உள்ளார். அண்ணா, கலைஞருமே பெரியாரைப் பற்றி பேசி உள்ளார்கள்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஆகியோர் எனது ரோல் மாடல் என்று விஜய் கூறி இருப்பது பற்றி கேட்கிறீர்கள். அது தம்பியின் விருப்பம். அவர்களை ஏற்றுக்கொண்டது எப்படி? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். நான் எல்லா இடத்திலும் உங்களை (பத்திரிகையாளர்களை) சந்தித்து பேசுகிறேன். ஆனால் விஜய் உங்களையெல்லாம் சந்திக்கவே மாட்டார்.
ஆனால் அவரைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். இதுவும் ஒரு கொடுமைதானே.
இவ்வாறு சீமான் கூறினார்.
- வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு நியமனம்.
- இந்தக் குழுவிற்கு கழக நிர்வாகிகளும், தோழர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கழக தோழர்களுக்கு வணக்கம். வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு "சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு" பின்வரும் வகையில் நியமிக்கப்படுகிறது.
இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், பொருளாளர்-வெங்கட ரமணன், மாநில வழக்கறிஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் அறிவழகன், எஸ்.குமரேசன் சட்ட ஆலோசனை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனைப் பிரிவு பி.பாண்டி (எ) கே.பி.பாண்டியன், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு ஆர்.எஸ்.இந்திரா தன்ராஜ், ஆர்.சக்கரவர்த்தி, ஆர்.செல்வபாரதி, மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு எஸ்.ஏ.வெலிங்டன், எம்.தன்ராஜ், ஜெ.விஜயகுமார், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் ரேவந்த் சரண், தேசிய செய்தி தொடர்பாளர் எம்.சத்ய குமார், சென்னை ஜெ.லெனின், மதுரை வி.சி.சங்கரநாராயணன், சென்னை டி.ராஜரத்தினம், சென்னை கே.உதயகுமார், திருப்பத்தூர் ஆர்.சுரேஷ் பாபு, திருவாரூர் பி.அன்பர சன், சென்னை டி.அஜித் குமார், செங்கல்பட்டு கே. மகேந்திரன், நாகப்பட்டினம் வி.இளமாறன், தஞ்சாவூர் வி.முத்துகுமரன், திருவள்ளூர் ஆர்.வெற்றிச்செல்வன், திருச்சி பி.கோகிலா ராணி, திருப்பத்தூர் ஆர்.லூயிசாள் ரமேஷ், திருவண்ணாமலை தலித் டைகர் சி.பொன்னுசாமி, கடலூர் தங்ககொளஞ்சிநாதன், சோழவந்தான் எம்.தியாகராஜன், விழுப்புரம் கே.முனியப்பன், மதுரை பி.தனசேகரன், காஞ்சிபுரம் டி.நரேந்திர குமார், திருவண்ணாமலை எஸ்.சுகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனது ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவிற்கு கழக நிர்வாகிகளும், தோழர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காமனூர் தனியார் பகுதியில் நடந்த அகழாய்வை தொடர்ந்து கொடைக்கானல் மலைப்பகுதியில் 3 ஆண்டுகள் அகழாய்வு பணிகள் நடக்க உள்ளன.
- தாண்டிக்குடியில் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த அகழாய்வு குறித்து களஆய்வு மேற்கொண்டுள்ளோம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை காமனூரில் மத்திய தொல்லியல்துறையின் மைசூர் கண்காணிப்பாளர் குமரன் தலைமையில் முதல் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது.
இதில் 10 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வில் 2500 முதல் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்பதுகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து கண்காணிப்பாளர் கூறுகையில்,
தாண்டிக்குடியில் கடந்த 2004 முதல் 2006ஆம் ஆண்டு வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மூலம் அகழாய்வு பணிகள் நடந்தன. இதில் கற்திட்டை, கற்பதுகை, அறைகள், பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை தலைமை இயக்குனர் ராவத் உத்தரவின் பேரில் கற்காலம், இரும்பு காலத்திற்கு முன்பிருந்த பகுதிகள் குறித்து அகழாய்வுகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் காமனூர் தனியார் பகுதியில் நடந்த அகழாய்வை தொடர்ந்து கொடைக்கானல் மலைப்பகுதியில் 3 ஆண்டுகள் அகழாய்வு பணிகள் நடக்க உள்ளன.
காமனூரில் கற்பதுகை மூலம் நினைவுச் சின்னங்கள், ஆதிகால மனிதர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாலி, பயன்படுத்தப்பட்ட பொருள், வாழ்க்கை முறை, கலாச்சாரம் குறித்த தடயங்கள் பற்றி அகழாய்வு நடக்கின்றது. தற்போது கண்டறியப்பட்டுள்ள கற்பதுகை சுமார் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ஆண்டுகள் வரை பழமையானதாகும்.
இங்கு கண்டறியப்பட்டுள்ள கற்பதுகையை சுற்றி கற்களான சுற்றுச்சுவர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே காண முடிந்தது. தற்போது தமிழகத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குகை ஓவியம், பாறை ஓவியம், குகை ஆதிகால மனிதர்களின் கலாச்சாரம், பெருங்கற்கால மனிதர்களின் சின்னம், வரலாற்று எச்சம் உள்ளிட்டவை குறித்து அகழாய்வு செய்து மத்திய அரசுக்கு சமர்பிக்கப்படும் என்றார்.
மேலும் தாண்டிக்குடியில் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த அகழாய்வு குறித்து களஆய்வு மேற்கொண்டுள்ளோம். இரும்பு காலத்திற்கு முந்தைய கற்கால மனிதர்களின் வாழ்க்கை முறை, வாழ்ந்த அடையாளங்கள், நினைவுச் சின்னங்கள் உள்ளிட்டவை கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் ஏராளமாக உள்ளன. இவை குறித்து 3 ஆண்டுகள் அகழாய்வு நடக்கும். தற்போது அகழாய்வுகள் குறித்த தகவல்களை பள்ளி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் நேரில் வந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றார்.
- 5 ஆண்டு கால சாதனைகளையும் மக்களிடம் எடுத்து சொல்ல பரப்புரை பயணம் தொடங்க உள்ளோம்.
- 4 துறைகளில் பல சீரிய திட்டங்களை வழங்கி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் அனைவரும் கல்வி கற்க வேண்டுமென முதலமைச்சர் பல திட்டங்களை அறிவித்துள்ளார் என்று டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் அனைவரும் கல்வி கற்க வேண்டுமென முதலமைச்சர் பல திட்டங்களை அறிவித்துள்ளார்.
கல்வி, மருத்துவம், உணவு பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகிய 4 துறைகளில் பல சீரிய திட்டங்களை வழங்கி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் நாளை முதல் திராவிட முன்னேற்றக் கழகம் பிரச்சாரத்தை தொடங்குகிறது.
திமுக அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களையும், 5 ஆண்டு கால சாதனைகளையும் மக்களிடம் எடுத்து சொல்ல பரப்புரை பயணம் தொடங்க உள்ளோம்.
திமுக மீது சொல்லப்படும் குற்றங்களை பொதுமக்களிடம் விளக்க தமிழ்நாடு தலைகுனியாது திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் மற்றும் துரோகம் செய்யும் அரசாக மத்திய அரசு உள்ளது. தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களையும் மத்திய பாஜக அரசு வழங்கவில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதத்தில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
- கோர்ட்டு உத்தரவு காரணமாக தற்போது நாளை முதல் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வடவள்ளி:
கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.
இதன் அருகே 7-வது மலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். இது தென் கைலாயம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த மலைக்கு அடர்ந்த வனப்பகுதி வழியாகவும், மலைமீதும் நடந்து செல்ல வேண்டும் என்பதால், கால நிலை காரணமாக குளிர்காலத்தில் செல்ல அனுமதி அளிப்பது இல்லை.
மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதத்தில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவு காரணமாக தற்போது நாளை முதல் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து வெளியூர்களில் இருந்தும் வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக பக்தர்கள் வர தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களுக்கு வனத்துறை சார்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை மாவட்ட வன அதிகாரி ஜெயராஜ் கூறியதாவது:-
வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் பாதுகாப்புடன் செல்ல வேண்டும். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் செல்லக்கூடாது.
பக்தர்களின் வசதிக்காக வெள்ளியங்கிரி மலையடி வாரத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு இருக்கும். மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உடல் தகுதியுடன் இருக்கும் பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
3,6 மற்றும் 7-வது மலையில் மருத்துவ முகாம் அமைக்கப்பட உள்ளது. அதில் மருத்துவ ஊழியர்களுடன் வனத்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்படுவார்கள். வனத்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் அடிவாரத்தில் தயாராக இருப்பார்கள். அத்துடன் 8 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவினர் மலைமீது ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மலைமீது செல்லும் பக்தர்கள் யாரும் போதைப் பொருட்கள் கண்டிப்பாக உபயோகிக்கக்கூடாது. அதுபோன்று பிளாஸ்டிக் பொருட்களை எக்காரணத்தை கொண்டும் எடுத்து செல்லக்கூடாது.
இதனை அடிவாரத்தில் இருந்து கண்காணித்து, பிஸ்கெட் போன்ற பொருட்கள் கொண்டு வரும் போது அதில் உள்ள பிளாஸ்டிக் கவர்களை அப்புறப்படுத்தி காகிதத்தில் வைத்து கொடுக்கப்படும்.
கடந்த ஆண்டில் மலையேறிய 9 பேர் உயிரிழந்தனர். எனவே தற்போது உயிரிழப்பை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. எனவே மலையேறும் பக்தர்கள் மிகவும் பாதுகாப்புடன் சென்று திரும்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- நேர்காணல் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
- நாளை மற்றும் நாளை மறுநாள் மீதி உள்ள மாவட்டங்களுக்கு நேர்காணலை ராமதாஸ் நடத்துகிறார்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பா.ம.க. சார்பாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுவை பெற்றார். இதையடுத்து அதற்கான நேர்காணல் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இந்த நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கான முதற்கட்டமான வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. நாளை மற்றும் நாளை மறுநாள் மீதி உள்ள மாவட்டங்களுக்கு நேர்காணலை ராமதாஸ் நடத்துகிறார்.
இந்த நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் முடிவு எடுக்கவில்லை. விரைவில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். நம்பிக்கையின் அடிப்படையில் தான் உலகம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டணி அமைப்பதில் டாக்டர் ராமதாசுக்கு எந்த சிக்கலும் இல்லை.
- தேர்தலில் ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வார்கள்.
திண்டிவனம்:
பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி தைலாபுரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு தேர்தலில் வெற்றி என்பது கட்சியின் பலம். அந்த கட்சியை வழிநடத்தக் கூடிய தலைவருக்கான மிகப்பெரிய சக்தி, அதையும் தாண்டி கூட்டணி. அதற்கும் மேல் அந்த தொகுதியில் வேட்பாளர்களுக்குரிய முக்கியத்துவம். இதெல்லாம் சேர்ந்ததுதான் வெற்றி.
அந்த அடிப்படையில் இதையெல்லாம் கூட்டி கழித்து நேர்காணல் நடத்தி டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஒரு நல்ல முடிவு எடுப்போம்.
பா.ம.க. இன்று ஒரு நெருக்கடியான சூழலை சந்தித்தால் கூட டாக்டர் ராமதாஸ் பின்னால் கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்கள், பா.ம.க.வின் அனுதாபிகள், மூத்த நிர்வாகிகள் ஆகியோர் உள்ளனர். அவர்கள் இந்த தேர்தலில் டாக்டர் ராமதாசின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.
டாக்டர் ராமதாசை பாதுகாக்க வேண்டும் என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த தேர்தல் டாக்டர் ராமதாசுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
கேள்வி: கூட்டணி தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும்?
பதில்: கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க டாக்டர் ராமதாசுக்கு பொதுக்குழு அதிகாரம் கொடுத்து உள்ளது. அதற்கு பிறகு 3 கட்ட நிர்வாக குழு கூட்டம் நடத்தப்பட்டது. நிர்வாக குழுவிடம் டாக்டர் ராமதாஸ் கருத்து கேட்டார். மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களிடம் தனித்தனியாகவும் கருத்து கேட்டார். அந்த கருத்தின் அடிப்படையில் நல்ல முடிவு எடுப்பார். முடிவை வேகமாக அறிவிக்காமல் சற்று காலதாமதம் ஆவதற்கு என்ன காரணம் என்றால் நல்ல முடிவாக இருக்கணும்.
வெற்றி பெறக்கூடிய கூட்டணியாக இருக்க வேண்டும். டாக்டர் ராமதாஸ் இடம் பெறுகிற கூட்டணிதான் ஆட்சியை பிடிக்கக் கூடிய கூட்டணியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர் அலசி ஆராய்ந்து, யோசனை செய்து கொண்டிருக்கிறார். நல்ல முடிவை விரைவில் அறிவிப்பார்.
கேள்வி: த.வெ.க. சார்பில் கூட்டணி தொடர்பாக பேசினார்களா?
பதில்: எல்லா தரப்பும் பேசுகிறார்கள். தேர்தல் என்று சொன்னாலே சில கட்சிகள் தலைமையில் நேரடியாக பேசுவார்கள். சில கட்சியின் சார்பில் யாராவது ஆள் அனுப்பி பேசுவார்கள். இதெல்லாம் இயல்பானது. இறுதி முடிவுதான் உறுதியானது. இறுதி முடிவை டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார்.
கேள்வி: கூட்டணி அமைப்பதில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா?
பதில்: கூட்டணி அமைப்பதில் டாக்டர் ராமதாசுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஒரே ஒரு சிக்கல். வெற்றி கூட்டணி எது என்று கண்டறிவதை தவிர வேறு எதுவும் இல்லை.
கேள்வி: மாம்பழம் சின்னம் யாருக்கு?
பதில்: கட்சி யாருக்கு, மாம்பழம் சின்னம் யாருக்கு என்பதை மிக தெளிவாக விரைவில் உங்களிடம் டாக்டர் ராமதாஸ் சொல்வார்.
கேள்வி: அ.தி.மு.க. தலைமையில் இருந்து உங்களிடம் பேசினார்களா?
பதில்: எல்லா தரப்பிலும் பேசப்பட்டு வருகிறது. அதை இப்போது வெளியில் சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது.
கேள்வி: பா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என்று திருமாவளவன் கூறி இருக்கிறாரே?
பதில்: தேர்தலில் ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வார்கள். இன்னொருவர் கருத்துக்கு நாம் பதில் சொல்லக்கூடாது. அது சரியாக இருக்காது. தேர்தலின் போது எல்லோருடனும் இணக்கமாக இருக்க வேண்டும். நான் அப்படித்தான் இருப்பேன்.
கேள்வி: திருமாவளவனை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்ததா?
பதில்: அப்படி எதுவும் எனக்கு தெரியவில்லை.
கேள்வி: பா.ம.க.வுக்கு கடந்த காலங்களை போல தொகுதிகள் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா?
பதில்: பா.ம.க. வலிமையான சக்தி. டாக்டர் ராமதாசின் வலிமை எப்போதும் குறையாது. தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக பா.ம.க.வும், டாக்டர் ராமதாசும் இருக்கிறார்கள்.
கேள்வி: கூட்டணி தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலுவிடம் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறதே?
பதில்: இது உங்கள் கற்பனை மற்றும் யூகம்தான்.
கேள்வி: உங்களை தி.மு.க.வின் கைக்கூலி என்று விமர்சித்து சொல்லப்படுகிறதே?
பதில்: டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் ஏற்பட்ட பிரிவுக்கு நான் தான் காரணம் என்று சொல்கிறார்கள். கைக்கூலி என்றும் சொல்கிறார்கள். டாக்டர் ராமதாசையும், அன்புமணியையும் பிரிப்பதற்கு எனது மனசாட்சி இடம் கொடுக்குமா? ஒன்றாக இணைக்கும் முயற்சியை 5 மாதமாக மேற்கொண்டேன். அது நடக்கவில்லை என்ற வருத்தம் இன்று வரை இருக்கிறது. அவர்கள் இருவரும் ஒன்றாக பேச வேண்டும் என்று நினைக்கிற முதல் ஆள் நான்தான். அவர்கள் இணைய தடையாக இருக்க மாட்டேன். கைக்கூலி என்று சொல்வதை கனத்த இதயத்துடன் தாங்கிக் கொண்டு வாழ்கிறேன் என்றார்.
- இந்திய நாட்டிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
- வர்த்தக ஒப்பந்தம் தங்களுக்கு எத்தகைய நன்மைகளை பயக்கவுள்ளது என்பதை பல்வேறு வர்த்தக மற்றும் தொழில் பிரதிநிதிகள் விளக்கினர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சமீபத்தில் நம் இந்திய நாட்டிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம் குறித்து, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சார்ந்த பல்வேறு வர்த்தக மற்றும் தொழில் பிரதிநிதிகள் என்னைத் தொடர்பு கொண்டு, இந்த வர்த்தக ஒப்பந்தம் தங்களுக்கு எத்தகைய நன்மைகளை பயக்கவுள்ளது என்பதை விளக்கி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, தொடர்ந்து இதுபோன்ற நல்ல திட்டங்களை மத்திய அரசு சார்பிலும், விரைவில் தமிழ்நாட்டில் அமையவுள்ள அ.தி.மு.க. அரசு சார்பிலும் அளித்திட தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இத்தருணத்தில், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த வர்த்தக ஒப்பந்தத்தை சாத்தியப்படுத்திய மாண்புமிகு இந்தியப் பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- 2011, 2016-ல் அ.தி.மு.க. கொடுத்த எந்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றியதா?
- அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கையை தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து காரைக்குடி கழனிவாசலில் ரூ.100.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சட்டக் கல்லூரி, சிவகங்கை மாவட்டத்திற்கு கூட்டுக்குடிநீர் திட்டம், ரூ.2.559.50 கோடி மதிப்புள்ள 49 முடிவுற்ற திட்டப் பணிகள், ரூ.13.36 கோடி மதிப்புள்ள 28 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அப்போது முதலமைச்சர் கூறியதாவது:
* தி.மு.க. அரசின் திட்டங்களை காப்பியடித்து வாக்குறுதிகள் என அள்ளி வீசுகிறார் இ.பி.எஸ்.
* 2011, 2016-ல் அ.தி.மு.க. கொடுத்த எந்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றியதா?
* சென்னை- கன்னியாகுமரி இடையே கடலோர சாலை என அ.தி.மு.க. அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதா?
* அ.தி.மு.க. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற போவதில்லை என்பது மக்களுக்கு தெரியும்.
* தமிழ்நாட்டுக்காக குரல் கொடுக்க முடியாதவர் பத்து தோல்வி பழனிசாமி.
* வாக்குறுதி அளித்தபடியே மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கி வருகிறோம்.
* அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கையை தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது.
* 17 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 58 விழுக்காடாக உயர்த்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
- பொதுமக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை, ஊழல் திமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
சென்னை:
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில்,
சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என்ற திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311 ஐ நிறைவேற்றக் கோரி, ஐந்து ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தும், அதனைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வந்தது திமுக அரசு. வேறு வழியின்றி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஒரு மாத காலமாக போராடி வருகின்றனர். அவர்களை இப்படி சாலைக்கு வர வைத்தது திமுக அரசின் திட்டமிட்ட அலட்சிய மனப்பான்மை மட்டுமே.
தற்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஜனவரி மாத ஊதியத்தை வழங்காமல், மேலும் அவர்களுக்கு அநீதி இழைத்திருக்கிறது திமுக அரசு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் நிர்வாகத் தவறுகளுக்காக, ஆசிரியப் பெருமக்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு.
தமிழகத்தில், குற்றவாளிகள் எந்த பயமுமின்றி கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
பொதுமக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை, ஊழல் திமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக, ஆசிரியர்களுக்கு, ஜனவரி மாத ஊதியத்தை முழுமையாக வழங்குவதோடு, சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்று அடையும்.
- அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்.
சென்னை:
சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் நிர்வாகிகள் வருகிற 3-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.
இதையொட்டி அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்று அடையும். இதில் அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதே போல அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா நினைவிடத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






