என் மலர்
இந்தியா
- சித்தமுனி என்பவர் 30 வருடங்களாக ஒரு கிளியை வைத்து ஜோதிடம் கூறி வந்தார்.
- ஒருவர் எலி ஜோதிடம் சொல்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வடமலைப்பேட்டை மண்டலத்தில் உள்ள எஸ்.வி.புரம் அஞ்சேரம்மா கோவிலில் எலி ஜோதிடம் சொல்லுதல் பலரையும் கவர்ந்து வருகிறது.
நாராயணவனம் கிராமத்தில் வசிக்கும் சித்தமுனி என்பவர் 30 வருடங்களாக ஒரு கிளியை வைத்து ஜோதிடம் கூறி வந்தார். ஒரு வருடம் முன்பு சென்னைக்கு சென்றபோது அங்கு ஒருவர் எலி ஜோதிடம் சொல்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.
எனவே அங்கிருந்து பயிற்சி பெற்ற எலியை வாங்கி வந்தார். சிறிது காலம் பிறகு உள்ளூர் கோவிலில் எலியைக் கொண்டு ஜோதிடம் சொல்லத் தொடங்கினார். இந்த எலியின் பெயர் கணேஷ். எலி விநாயகரின் வாகனம் என்பதால் பலரும் ஜோதிடம் பார்க்க வருவதாக தெரிவித்தார்.
- இடைக்கால பிரதமாராக இடைக்கால தலைவராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.
- நேபாள பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த வருடம் மார்ச் 21 தேர்தல் அறிவிக்கப்பட்டது.
சமூக வலைதள தடை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளைக் தொடர்ந்து ஏற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தால் கடந்த செப்டம்பர் 9 ஆம் நீதி நேபாள் பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் நேற்று இடைக்கால பிரதமாராக இடைக்கால தலைவராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.
அதேவேளை நேபாள பாராளுமன்றமும் கலைக்கப்பட்டு அடுத்த வருடம் மார்ச் 21 தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சுசிலா கார்கிக்கு பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "நேபாள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திருமதி சுசிலா கார்கிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேபாள மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் " நேபாளத்தில் திருமதி சுசிலா கார்கி தலைமையில் ஒரு புதிய இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். இது அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வளர்ப்பதற்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.
நெருங்கிய அண்டை நாடு மற்றும் நீண்டகால வளர்ச்சி கூட்டாளியாக, இந்தியா நமது இரு மக்கள் மற்றும் நாடுகளின் நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக நேபாளத்துடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும்" என்று தெரிவித்திருந்தது.
- நிலக்கரி, லிக்னைட் ஆகியவை 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- வாடகை கார்களிலும், தனியார் போக்குவரத்து சேவைகளிலும் பயணச் செலவு கூடும்.
பிரதமர் மோடி, தனது சுதந்திர தின உரையில் நாட்டு மக்களுக்கு இந்தாண்டு இரட்டை தீபாவளி என்றும், அதற்காக ஜி.எஸ்.டி.யில் வரி சீர்த்திருத்தம் செய்யப்படும் என்றார். அதன்படி கடந்த 3-ந்தேதி டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இதுவரை இருந்த 5, 12, 18, 28 என்ற வரி விகிதங்கள் 5 மற்றும் 18 சதவீதம் என்ற இரட்டை அடுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் 12 சதவீதத்தில் இருந்த பொருட்கள் எல்லாம் 5 சதவீதத்திற்கும், 28 சதவீதத்தில் இருந்தவை 18 சதவீதத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய வரி மாற்றங்கள் வருகிற 22-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த மாற்றத்தால் மக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் விலை குறைந்து இருக்கிறது. உதாரணமாக வீட்டு உபயோக பொருட்களான பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் மற்றும் கார்கள் 28 சதவீதத்தில் இருந்து 18-க்குள் வந்து விடுகிறது. மேலும் பென்சில், ரப்பர் போன்ற ஸ்டேஷனரி பொருட்கள், மருத்துவ காப்பீடுகள் ஆகியவற்றுக்கு முழுமையாக வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில் சில பொருட்களுக்கும், சேவைகளுக்கு வரி அதிகரித்துள்ளது. அதன்படி நெய்த மற்றும் நெசவு செய்யப்பட்ட ஆடைகள் மற்றும் பஞ்சை இடையில் வைத்து தைக்கப்படும் பொருட்கள் அதாவது குயில்ட் மெத்தைகள் போன்ற பொருட்கள் ரூ.2 ஆயிரத்து 500-க்கு மேல் இருந்தால் தற்போதைய வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கம்பளிகள் 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக வரி உயர்ந்துள்ளது. அதனால் இந்த பொருட்களின் தற்போதைய விலையில் இருந்து அதிகரித்து விடும்.
அதே போல வேலைகளை பிறருக்கு அளிக்கும் ஜாப் வொர்க் சேவைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு சுரங்கம் தொடர்பான தொழில்நுட்ப சேவைகள், சுரங்க ஆதரவு சேவைகள் என அனைத்து 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் அரசு சார்ந்த பணிகளான கடல்சார் பணிகள், மண் அகழ்வு பணிகள், துணை ஒப்பந்தங்கள் ஆகியவை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதேபோல் நிலக்கரி, லிக்னைட் ஆகியவை 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பான்மசாலா, அனைத்து இனிப்புப் பானங்கள், ஆல்கஹால் இல்லாத குளிர்பானங்கள், கார்பனேட்டு பழசாறுகள், பழசாறுகள், புகையிலை, சிகரெட், பிற புகையிலை தயாரிப்புகள், நிக்கோடின் பொருட்கள்ஆகியவை அனைத்தும் 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கேசினோ, சூதாட்டம், ரேஸ் கிளப்புகள், ஆன்லைன் விளையாட்டுகள், ஐ.பி.எல். போட்டிக்கான வரி ஆகியவை 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக இருக்கிறது.
விமானப் பயணங்களில் எகானமி அல்லாத முதல் வகுப்பு, பிசினஸ் கிளாஸ் பயணங்களுக்கு இதுவரை 12 சதவீத ஜி.எஸ்.டி. இருந்தது. ஆனால் தற்போது அது 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக விமானக் கட்டணங்கள் அதிகரிக்க உள்ளன. அதேபோல், எரிபொருள் செலவு சேர்த்து வசூலிக்கப்படும் மோட்டார் வாகனப் பயண கட்டணங்களும் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளன. இதனால், வாடகை கார்களிலும், தனியார் போக்குவரத்து சேவைகளிலும் பயணச் செலவு கூடும். சரக்கு போக்குவரத்திலும் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிறது.
இந்திய ரெயில்வே தவிர்த்த பிறரால் இயக்கப்படும் ரெயில் கன்டெய்னர் போக்குவரத்து, இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் பைப் லைன் மூலம் கொண்டு செல்லப்படும் சேவைகள், மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய அனைத்தும் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், வாடகை வாகன சேவைகளில் - மோட்டார் வாகனங்களும், லாரி போன்ற சரக்கு வாகனங்களும் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களின் தாக்கமாக, சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் அனைத்தும் அதிகரிக்கின்றன. இதன் விளைவாக மக்கள் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் மட்டுமல்லாமல், சந்தையில் பொருட்களின் விலைகளும் கூடும் வாய்ப்பு உள்ளது.
- சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் புகைப்படங்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கேமரா செல்பி ஸ்டிக் போன்ற உபகரணங்களை எடுத்துவர தடை விதிக்கப்படுகிறது.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட் பாதுகாப்பு குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது:
சுப்ரீம் கோர்ட்டில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் பேட்டி எடுப்பது, நேரலை செய்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
உயர் பாதுகாப்பு வளையப் பகுதிகளுக்குள் புகைப்படங்கள் எடுக்கவும், வீடியோ பதிவு செய்யவும் முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க பயன்படுத்தப்படும் 'கேமரா செல்பி ஸ்டிக்' போன்ற உபகரணங்களை எடுத்து வரவும் தடை விதிக்கப்படுகிறது.
இந்தக் கட்டுப்பாடுகளை மீறினால், சுப்ரீம் கோர்ட்டின் உயர் பாதுகாப்பு பகுதிகளுக்குள் ஊடகத்தினர் நுழைய ஒரு மாதம் தடை விதிக்கப்படும்.
சுப்ரீம் கோர்ட் ஊழியர்கள் இந்த விதிமீறல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தக் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் அதிகாரம் பணியமர்த்தப்பட்டுள்ள பாதுகாப்பு படைவீரர்களுக்கு வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
- நேற்று இரவு லாரி ஒன்று விநாயகர் சிலை ஊர்வலத்திற்குள் புகுந்தது.
- இந்த கோர விபத்தில் 25-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
பெங்களூரு:
கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று இரவு லாரி ஒன்று விநாயகர் சிலை ஊர்வலத்திற்குள் புகுந்தது.
ஒரு பைக் மீது மோதுவதை தவிர்க்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்டர்மீடியனில் பாய்ந்து, விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற மக்கள் மீது வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் 8 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். 25-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
தகவலறிந்து விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார் பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி சித்தராமையா, மத்திய மந்திரி எச்.டி.குமாரசாமி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல் மந்திரி சித்தராமையா அறிவித்தார்.
விபத்து தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டை தடுக்க வேண்டும்.
- தடுக்காவிட்டால் இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும் என்றார் அகிலேஷ்.
லக்னோ:
பாராளுமன்றம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் ஆளும் பா.ஜ.க. அரசு வாக்குத் திருட்டில் ஈடுபட்டே தொடர்ந்து பல தேர்தல்களில் வெற்றி பெற்றது என காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல் மந்திரியும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நம் நாட்டில் நடக்கும் பல தேர்தல்களில் வாக்குத் திருட்டு நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர், அயோத்யா உள்ளிட்ட பல இடங்களில் நடந்த தேர்தல்களில், வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகள் மிரட்டப்பட்டனர்.
இன்று சமூக வலைதளங்களின் காலம். இளைஞர்கள் அவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர். நம் அண்டை நாடுகளில் அரசுக்கு எதிரான புரட்சிகளை நம்மால் பார்க்க முடிகிறது.
வாக்குத் திருட்டை தடுக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தேர்தல் ஆணையத்தின் தலையாய கடமை.
வாக்குத் திருட்டை தடுக்காவிட்டால், இன்று நம் அண்டை நாடுகளில் அரங்கேறும் அவல நிலை நம் நாட்டிலும் நடக்க வாய்ப்புள்ளது.
அங்கு அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்குத் திருட்டை தடுக்காவிட்டால், நம் நாட்டிலும் மக்கள் வீதிகளில் இறங்கும் நிலை வந்துவிடும் என தெரிவித்தார்.
- உலகத் தலைவர்களில் யாராவது ஒருவர், தான் நோபல் பரிசுக்கு தகுதியானவர் எனக் கூறியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா?.
- இந்தியா- ரஷியா பொருளாதாரம் செத்துப்போனது எனக் கூறியதை கேட்டதுண்டா?.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்கள் மீது 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இதனால் இந்திய ஏற்றுமதி கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ரத்தின கற்கள் மற்றும் நகைத்துறை, கடல்உணவு, உற்பத்தி துறைகள் அதிக அளவில் பாதித்துள்ளது.
இந்த நிலையில் CREDAI மாநாட்டில் காங்கிரஸ் கட்சி எம்.பி. சசி தரூர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அமெரிக்க அதிபர் அடிக்கடி தனது மனநிலையை மாற்றக்கூடிய தனிநபர். அமெரிக்க சிஸ்டம் அந்நாட்டு அதிபருக்கு அதிக சுதந்திரத்தை கொடுத்துளளது. இவருக்கு முன்னதாக 44 அல்லது 45 அதிபர்கள் வெள்ளை மாளிகையில் இருந்துள்ளனர். ஒருவர் கூட இவரை போன்று பழக்க வழக்கம் கொண்டவராக இருந்ததை பார்த்ததில்லை.
எல்லா நிலைகளிலும் வழக்கத்திற்கு மாறான அதிபர். உலகத் தலைவர்களில் யாராவது ஒருவர், தான் நோபல் பரிசுக்கு தகுதியானவர் எனக் கூறியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா?. அல்லது அனைத்து நாட்டு தலைவர்களும் என்னுடைய A**யை முத்தமிட வேண்டும்? அல்லது இந்தியா- ரஷியா பொருளாதாரம் செத்துப்போனது எனக் கூறியதை கேட்டதுண்டா?. டிரம்ப் வழக்குத்திற்கு மாறானவர். அவருடைய நடத்தையை வைத்து எங்கள் செயல்திறனை மதிப்பிட வேண்டாம் என்று நான் உங்களிடம் கெஞ்சுகிறேன்.
இந்தியா ஏற்றுமதி சந்தைகளை பன்முகப்படுத்த வேண்டும். சூரத்தின் ரத்தினக் கற்கள் மற்றும் நகைத் துறையிலும், கடல் உணவு மற்றும் உற்பத்தித் துறையிலும் ஏற்கனவே 1.35 லட்சம் வேலைகள் இழக்கப்பட்டுள்ளன.
ஆரம்ப 25 சதவீத வரி பல பொருட்களை சாத்தியமற்றதாக்கியது. மேலும் கூடுதலாக 25 சதவீத அபராதம் அமெரிக்க சந்தையில் போட்டியிடுவதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்கியுள்ளது. கூடுதல் வரி என்பது ஒரு வரி அல்ல. இது ரஷிய எண்ணெயை வாங்குவதற்கான தடைகள். சீனா அதிகமாக இறக்குமதி செய்யும்போது, இந்தியாவுக்கான வரி விதிப்பு நியாயமற்றது.
இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.
- கண்ட்லா விமான நிலையத்தில் டேக்ஆஃப் ஆனபோது டயர் கழன்று விழுந்தது.
- மும்பை விமான நிலையத்தில் தற்காலிக எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது.
குஜராத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்படும்போது டயர் கழன்று விழுந்த நிலையில், மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் உள்ள கண்ட்லா விமான நிலையத்தில இருந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. டேக்ஆஃப் ஆன நிலையில் டயர் ஒன்று கழன்று விழுந்தது. இதை விமானத்தில் இருந்து பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அவர் விமானத்தின் டயர் கழன்று விழுந்தது என தொடர்ந்து சத்தம் போடுவது வீடியோவில் பார்க்க முடிந்தது.
மும்பை விமான நிலையத்தில தற்காலிக எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டு, விமானம் தரையிறக்கப்பட்டது, விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதால், பயணிகள் பாதுகாப்பாக வெளியேறினர்.
முன்னெச்சரிக்கை காரணமாக தற்காலிக எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டதால், எப்போதும் பரபரப்பாக இயங்கப்படும் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமானத்தில் சுற்று பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
- தங்களுக்கும், தங்களுடைய நிலைக்கும் என்னவாகும் என்று உலக மக்கள் பயப்படுகிறார்கள்.
- இதனால்தான் இந்திய பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்தது. மேலும், ரஷியாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தாததால் கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்துள்ளது.
50 சதவீதம் வரி விதிப்பால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:-
இந்தியா வலிமையாக வளர்ந்தால் தங்களுக்கும், தங்களுடைய நிலைக்கும் என்னவாகும் என்று உலக மக்கள் பயப்படுகிறார்கள். இதனால்தான் இந்திய பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது. அநீதியானது. எந்தவொரு நெருக்கடிக்கும் அரசு அடி பணியக் கூடாது.
இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
- சஞ்சய் கபூரின் 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்தில் 5-ல் ஒரு பங்கு மகனுக்கு தரப்பட வேண்டும் என கரிஷ்மா கபூர வழக்கு.
- கரிஷ்மா கபூருக்காக மூத்த வழக்கறிஞர் ஜெத்மலானி ஆஜராக வாதாடினார்.
சஞ்சய் கபூர் திடீரென காலமானதால், அவருடைய சொத்துக்காக தற்போதைய மனைவி மற்றும் கரிஷ்மா கபூருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
தொழில் அதிபர் சஞ்சய் கபூரின் 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து தொடர்பாக கரிஷ்மா கபூர் வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் சஞ்சய் கபூரின் முன்னாள் மனைவி ஆவார். இவரது மகனுக்கு ஐந்தில் ஒரு பங்கு வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார். சஞ்சய் கபூர் தன்னுடைய சொத்துகள் அனைத்தும், 2ஆவது மனைவி பிரியாவுக்கு எனக் கூறப்படுவதை எதிர்த்து, அவர் அதுபோன்று உயில் ஏதும் எழுதிவைக்கவில்லை என அதில் குறிப்பிட்டுள்ளார்.
கரிஷ்மா கபூர் தொடர்ந்த வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. கரிஷ்மா கபூர் சார்பாக மூத்த வழக்கறிஞர் ஜெத்மலானி ஆஜரானார். சஞ்சய் கபூரின் மனைவி பிரியா சார்பில் வழக்கறிஞர் நாயர் ஆஜரானார்.
விசாரணையின்போது ஜெத்மலானி: ஏனென்றால் என நாயர் வாதத்தின்போது குறுக்கிட முயன்றார்.
அப்போது நாயர் "தயவு செய்து என்னுடைய வாதத்தின்போது குறுக்கிட வேண்டாம். எனக்கு குறுக்கீடு பிடிக்காது" என்றார்.
உடனே ஜெத்மலானி, "அப்படி என்றால் தனியாகத்தான் வாதிட வேண்டும். என்னிடம் கத்த வேண்டாம். தயவு செய்து என்னிடம் கத்தாதீர்கள்" என்றார்.
நாயர் மீண்டும் "நீங்கள் என்னை குறுக்கீடு செய்கிறீர்கள்" என்றார்.
ஜெத்மலானி அதற்கு, "என்னைப் பார்த்து கத்தாதே. கவுன்சிலுக்கு கொஞ்சம் மரியாதை கொடுக்கவும். நீ கத்தினால், உனக்கு நாணயமாக பணம் திரும்பக் கிடைக்கும்" என்றார்.
அதற்கு நாயர் "உங்களுக்கு பழக்கமில்லையா.." என்ற தொணியில் பேச நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- இந்தப் பாட்டி டைம் இதழில் இடம்பெற்ற அதே வலிமையான இந்தியப் பெண்மணி. அவர் இப்போது ரூ.100க்குக் கிடைக்கிறார்.
- நீங்கள் உங்கள் கருத்தில் மசாலாவை சேர்த்துளீர்கள்
2021 ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதற்காக நடிகையும் பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் மீதான கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
2021 ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்ட வீடியோவை ரீட்வீட் செய்த கங்கனா ரனாவத், மூத்த போராட்டக்காரரான மஹிந்தர் கவுருக்கு எதிராக, "இந்தப் பாட்டி டைம் இதழில் இடம்பெற்ற அதே வலிமையான இந்தியப் பெண்மணி. அவர் இப்போது ரூ.100க்குக் கிடைக்கிறார்" என்று கிண்டல் செய்யும் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
இந்த அறிக்கைக்கு எதிராக மஹிந்தர் கவுர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கனா உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், "உங்கள் அறிக்கைகள் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இது வெறும் ரீ ட்வீட் அல்ல. நீங்கள் உங்கள் சொந்த கருத்துக்களை சேர்த்துள்ளீர்கள். நீங்கள் உங்கள் கருத்தில் மசாலாவை சேர்த்துளீர்கள்" என்று கூறி கங்கனாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
- வெடிகுண்டு மிரட்டல் குறித்து நீதிபதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- டெல்லி போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
டெல்லி ஐகோர்ட்டுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை பதிவாளர் ஜெனரலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுதொடர்பாக டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து நீதிபதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் தங்கள் நீதிமன்ற அறைகளை விட்டு வெளியேறத் தொடங்கினர். இதைத்தொடர்ந்து டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இன்று நடைபெற இருந்த வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் டெல்லி போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். நீதிமன்றம் காலி செய்யப்பட்டுள்ளது. டெல்லி ஐகோர்ட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.






