அருணாசலப் பிரதேச பெண்ணை அலைக்கழித்த சீன அதிகாரிகள்! - முதலமைச்சர் பெமா காண்டு கண்டனம்

அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இந்திய பாஸ்போர்ட் செல்லாது என கூறி சுமார் 18 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அருணாசலப் பிரதேச பெண்ணை அலைக்கழித்த சீன அதிகாரிகள்! - முதலமைச்சர் பெமா காண்டு கண்டனம்
Published on

இங்கிலாந்தில் வசிக்கும் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக் என்ற பெண் கடந்த நவம்பர் 21 அன்று லண்டனில் இருந்து ஜப்பானுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். சீனாவின் ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர் அங்கிருந்து ஜப்பான் விமானத்தை பிடிப்பதற்காக காத்திருந்தார்.

ஆனால் அங்கு சீன அதிகாரிகள் பிரேமா, அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது இந்திய பாஸ்போர்ட் செல்லாது என கூறி சுமார் 18 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதுதொடர்பாக அவ்வப்போது சர்ச்சைக்குரிய வரைபடங்களை வெளியிட்டு வருகிறது.

இந்த சூழலில்தான் பிரேமாவை தடுத்து வைத்த சீன அதிகரிகள் அவருக்கு அடிப்படை வசதிகளையும் மறுத்து அலைக்கழித்துள்ளனர்.

அவருக்கு சரியான உணவு அல்லது அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை. அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு ஜப்பானுக்கு விமானத்தில் ஏற விடாமல் தடுக்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள அவரது தோழி ஷாங்காயில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகிய பிறகு, அதிகாரிகள் தலையிட்டு அவர் வேறு விமானத்தில் அனுப்பப்பட்டார்.

சீன அதிகாரிகளும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஊழியர்களும் தன்னைப் பார்த்து சிரித்ததாகவும், "சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்" என கூறி கேலி செய்ததாகவும் பிரேமா குற்றம் சாட்டினார்.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய பிரேமா, இது இந்தியாவின் இறையாண்மைக்கு அவமானம் என்றும். தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும், அருணாச்சலப் பிரதேச மக்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு அருணாச்சல முதலமைச்சர் பெமா காண்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஷாங்காய் விமான நிலையத்தில், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெருமைமிக்க இந்தியக் குடிமகனான பிரேமா வாங்ஜோம் தோங்டாக்கை சீன குடியேற்ற அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள முடியாத முறையில் நடத்திய விதம் எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட் இருந்தபோதிலும், அவரை அவமானப்படுத்துவதும், இன ரீதியாக கேலி செய்வதும் மிகவும் கொடூரமானது.

அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும். இது தொடர்பாக எந்தவொரு குற்றச்சாட்டும் அடிப்படையற்றது மற்றும் புண்படுத்தும் நோக்கம் கொண்டது. இத்தகைய செயல் சர்வதேச விதிமுறைகளை மீறுவதாகும். மேலும் நமது குடிமக்களின் கண்ணியத்திற்கு அவமானம் ஏற்படுத்துவதாகும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தை அவசரமாக எடுத்துக் கொள்ளும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com