என் மலர்
இந்தியா

தண்ணீர் என நினைத்து ஆசிட்டை ஊற்றி சமைத்த உறவுக்கார பெண்... சாப்பிட்ட குடும்பத்தினர் 6 பேர் கவலைக்கிடம்!
- பாதிக்கப்பட்ட சாந்து சன்யாசி, செம்பு மற்றும் வெள்ளி வேலைகளில் ஈடுபடுபவர் என்பதால் வீட்டில் அமிலம் இருந்துள்ளது
- இந்த செயல் தவறுதலாக நடந்ததா? அல்லது முழு குடும்பத்தையும் அழிக்கும் நோக்கில், திட்டமிட்ட சதியா? எனவும் போலீசார் விசாரணை
மேற்குவங்கத்தின் மிட்னாபூர் மாவட்டம் கட்டாலில், தண்ணீர் என நினைத்து ஆசிட்டை ஊற்றி சமைத்த உணவை சாப்பிட்ட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் 2 குழந்தைகளும் அடங்குவர். மதிய உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அனைவருக்கும் வாந்தி, கடுமையான வயிற்று வலி, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அறிகுறிகள் தீவிரமாக உடனே ஆறுபேரும் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் ஒரு குழந்தை மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அமிலம் கலந்த உணவை உட்கொண்டதே பாதிப்புக்கான காரணம் என மருத்துவர்கள் கண்டறிந்த நிலையில், ஆரம்பக்கட்ட சிகிச்சைகளை அளித்துள்ளனர். ஆனால் குடும்பத்தினரின் உடல்நிலை மோசமடையை கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
மருத்துவமனையில் சேர்க்கும்போதே ஒரு குழந்தையின் உடல்நலம் மோசமாக இருந்துள்ளது
தற்போது அங்கு மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தண்ணீருக்குப் பயன்படுத்தப்படும் கொள்கலன்களைப் போன்ற மற்றொரு கொள்கலனில் அமிலம் வைக்கப்பட்டிருந்ததே இந்த குழப்பத்திற்கு காரணம் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த சாந்து சன்யாசி, செம்பு மற்றும் வெள்ளி வேலைகளில் ஈடுபடுபவர் என்பதால் வீட்டில் அமிலத்தை வைத்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை, சன்யாசியின் வீட்டிற்கு வந்த உறவினர் தண்ணீர் என நினைத்து அமிலத்தை ஊற்றி சமைத்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தைகள் இருக்கும் வீடுகளில் ஆபத்தான பொருட்களை எச்சரிக்கையாக வைத்திருக்குமாறு அப்பகுதியில் உள்ள மற்ற குடியிருப்பாளர்களுக்கு பஞ்சாயத்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இந்த செயல் தவறுதலாக நடந்ததா? அல்லது முழு குடும்பத்தையும் அழிக்கும் நோக்கில், திட்டமிட்ட சதியா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






