என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    ம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்து விட்டார் என்று ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கி பேசினார். #LokSabhaElections2019 #Vaiko
    ஈரோடு:

    அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் நேற்று ஈரோடு பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற ஜி.மணிமாறனுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு ஈரோடு கஸ்பாபேட்டை, பன்னீர்செல்வம் பூங்கா, சூளை பகுதிகளில் பேசினார்.

    முன்னதாக காங்கேயத்தில் இருந்து திறந்த வேனில் வந்த அவருக்கு கஸ்பாபேட்டை பகுதியில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்பு அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்தவேனில் நின்று கொண்டே வாக்கு சேகரித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இங்கே தேர்தல் பிரசார பொதுக்கூட்டமா?, வெற்றி விழா கூட்டமா? என்று நினைக்கும் அளவுக்கு கடல்போல மக்கள் திரண்டு இருக்கிறீர்கள். நீங்கள் ஈரோடு பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மணிமாறனுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

    நம்முடைய தலைமையில் அமைந்திருப்பது மெகா கூட்டணி. மக்கள் விரும்பும் கட்சிகளின் கூட்டணி. தி.மு.க. தலைமையில் ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி, கொள்கை இல்லாத கட்சிகளின் கூட்டணி அமைந்திருக்கிறது. நம்முடைய கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்து இருக்கிறோம். ஆனால் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மட்டுமே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் என்று அறிவித்து உள்ளார். அந்த கட்சியில் உள்ள வேறு எந்த கட்சியும் அவரை பிரதமர் வேட்பாளர் என்று கூறவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூட தேர்தலுக்கு பின்னர்தான் பிரதமரை தேர்ந்து எடுப்போம் என்று கூறி உள்ளார். மற்ற கூட்டணி கட்சிகளும் அப்படியே நினைக்கின்றன. எனவே அந்த கூட்டணி குழப்பம் நிறைந்த கூட்டணி.

    நமது அரசு தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை செய்து உள்ளது. ஆனால், மு.க.ஸ்டாலின் என்ன வளர்ச்சித்திட்டம் கொண்டு வந்தீர்கள் என்று கேட்கிறார். ஜெயலலிதா இருந்தபோது அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறோம்.

    அதே ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவித்து இருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடகாவில் பேசும்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டுவோம், காவிரி மேலாண்மை வாரியத்தை கலைப்போம் என்று கூறி இருக்கிறார். 50 ஆண்டுகள் நமது உரிமைக்காக போராடி, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஆணைத்தை அமைத்து இருக்கிறோம்.

    ஆனால் காவிரி மேலாண்மை வாரித்தை கலைப்போம் என்று ஸ்டாலின் அறிவித்து உள்ள பிரதமர் வேட்பாளர் கூறுகிறார். காவிரி தண்ணீர்தான் நமக்கு ஒரே நீர் ஆதாரம். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் 63 டி.எம்.சி. தண்ணீர் தேக்கப்படும். அப்போது காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வராது. தமிழகம் பாலைவனம் ஆகும். எனவே தமிழகத்துக்கு தண்ணீர் வருவதை தடுக்கும் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.

    அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால் ஸ்டாலின் அவர்களே, உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்கள் கூட்டணியில் நீங்கள் அறிவித்த பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி கர்நாடகாவில் அணை கட்டுவோம் என்று கூறி இருக்கிறாரே இதற்கு நீங்கள் என்ன பதில் கூறுகிறீர்கள். இதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இந்த தொகுதியில் ம.தி.மு.க. கட்சி வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது. ம.தி.மு.க. கட்சியை வைகோ நடத்தி வருகிறார். தி.மு.க.வில் இருந்து பிரிந்து வந்தபோது ஸ்டாலின் ஒரு வார்டு கவுன்சிலருக்கு கூட தகுதியில்லாதவர் என்று விமர்சித்தவர் வைகோ. அதுமட்டுமா?, தி.மு.க. ஒரு கார்ப்பரேட் நிறுவனம், இலங்கை தமிழர்களை கொன்றொழித்தவர் கருணாநிதி. மீத்தேனுக்கு கையொப்பமிட்டவர் துரோகி ஸ்டாலின், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி மக்களை ஏமாற்றி மோசடி செய்கிறது.

    வாய்திறந்தால் ஈழத்தமிழர்கள், இலங்கை தமிழர்கள் என்று பேசும் வைகோ, இன்று கூனிக்குறுகி, தி.மு.க. முன்பு மண்டியிட்டு பிச்சை எடுத்து தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுகிறார்.

    பச்சோந்திகளை பார்த்திருக்கிறோம். அதுபோன்று நிறம் மாறுபவர் வைகோ. அவர் ஒரு திறமையான பேச்சாளர், திறமையான அரசியல்வாதி என்று நினைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு தரம் தாழ்ந்து போவார் என்று நினைக்கவில்லை.

    தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது. ஒரு கட்சியின் வேட்பாளர் அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது என்றால் அவர் அந்த கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். இங்கு போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் எந்த கட்சியின் உறுப்பினர். அவர் ம.தி.மு.க. உறுப்பினர் என்பதா? தி.மு.க. உறுப்பினர் என்பதா? ம.தி.மு.க. கட்சியினர் எப்படி கூறி அவருக்கு வாக்கு சேகரிப்பார்கள்.



    ஒரு சீட்டுக்காக வைகோ அவருடைய கட்சியை தி.மு.க.விடம் அடகுவைத்து விட்டார் என்பது வெட்கமாக இருக்கிறது. துண்டை இழுத்து இழுத்து அவர் பேசும்போது அவரை ரசித்து இருக்கிறேன். ஆனால் இப்போது அவரது செயல்கள் அசிங்கமாக இருக்கிறது.

    தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தின் மின்சார தேவை 9 ஆயிரத்து 500 மெகாவாட். அதைக்கூட தி.மு.க. அரசால் கொடுக்க முடியவில்லை. இப்போது நமது தேவை 16 ஆயிரம் மெகாவாட். இந்த மின்சாரத்தை முழுமையாக தயாரித்து தொழிற்சாலைகள், விவசாயிகள் என்று அனைவருக்கும் தடையில்லாமல் கொடுக்கிறோம். அதுமட்டுமின்றி இன்னும் 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்ற அடிப்படையில் திட்டங்கள் தீட்டி மின்சாரம் உற்பத்தி செய்து மின்மிகை மாநிலமாக, உபரி மின்சார உற்பத்தி செய்பவர்களாக இருக்கிறோம். ஆனால் இதை எல்லாம் தெரியாமல் கொச்சைப்படுத்துவதையும், கேவலமாக பேசுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஸ்டாலின் வாய் திறந்தாலே பொய்யாக பேசுகிறார். உண்மையே பேசுவதில்லை.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல அறிவிப்புகளை கொடுத்து இருக்கிறார். அவர் ஏதோ ஆட்சியில் இருப்பது போலவும், நடப்பது சட்டமன்ற தேர்தல் போலவும் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இது பாராளுமன்ற தேர்தல். இது பிரதமரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல். ஆனால், ஆட்சியிலேயே இல்லாதவர் வாக்குறுதிகள் கொடுக்கிறார்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    அவருடன் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் தோப்பு என்.டி.வெங்கடாசலம், கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி ஆகியோர் இருந்தனர்.  #LokSabhaElections2019 #Vaiko
    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #AAP #kejriwal
    புதுடெல்லி:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில், “ ஆம் ஆத்மிகட்சியுடன் காங்கிரஸ் கட்சி டெல்லியில் கூட்டணி வைப்பதற்கு பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்கிற ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும். இதற்காக ஆம் ஆத்மி கட்சிக்கு 4 சீட்டுகளை ஒதுக்குவதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது. ஆனால் கெஜ்ரிவால் இதற்கு உடன்படவில்லை. எங்களது கதவுகள் திறந்தே இருக்கின்றன. ஆனால் அவகாசம் குறைவாக இருக்கிறது” என கூறியுள்ளார்.

    டெல்லியை பொறுத்த வரையில் கருத்துக்கணிப்புகள் அடிப்படையில், ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்துப் போட்டியிட்டால் அது பா.ஜனதாவுக்கு சாதகமாக அமையும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ##RahulGandhi #AAP  #kejriwal 
    பழனியில் குதிரை வண்டி ஓட்டி மன்சூர் அலிகான் பிரசாரம் செய்து வருவது பொதுமக்களை கவர்ந்துள்ளது. #mansooralikhan

    பழனி:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார்.

    திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குழந்தைகளை தாலாட்டுவது, வளைகாப்பு வீட்டுக்கு செல்வது, புரோட்டா செய்வது, பஞ்சர் ஒட்டுவது என வித்தியாசமான முறையில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பழனியில் வித்தியாசமான முறையில் மன்சூர்அலிகான் வாக்கு சேகரித்தது பொதுமக்களை கவர்ந்தது. உழவர் சந்தை, ஆர்.சி. சர்ச் பகுதியில் பாட்டு பாடி பிரசாரம் மேற்கொண்டார்.

    பின்னர் பஸ் நிலையம் அருகே குதிரை வண்டி ஓட்டி வாக்கு சேகரித்தார். சிறிது தூரம் குதிரை வண்டியில் பயணம் செய்து அப்பகுதி மக்களிடம் பிரசாரம் செய்தார். அம்பேத்கார் தெருவில் பைக்கில் சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.

    அடிவாரம் பகுதியில் ஆதரவற்ற மூதாட்டியிடம் கனிவுடன் பேசினார். அங்கிருந்த திருநங்கைகளிடமும் சிறிது நேரம் பேசி தனக்கு ஓட்டு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.


    திடீரென ஜூஸ் கடைக்குள் புகுந்து பழங்களை பிழிந்து ஜூஸ் போட்டு அனைவருக்கும் கொடுத்தார். நல்லவர்களுக்கே வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். தொடர்ந்து வித்தியாசமான முறையில் மன்சூர்அலிகான் பிரசாரம் செய்து வருவது பொதுமக்களை கவர்ந்துள்ளது.  #mansooralikhan

    தேர்தலுக்காக மட்டும் வரும் நடிகர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #ministersellurraju

    மதுரை:

    மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வரம்பு மீறி பேசி வருகிறார். அரசியல் நாகரீகம் இல்லாத தலைவராக ஸ்டாலின் இருக்கிறார்.

    தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன? இருளில் மூழ்க வைத்த தி.மு.க. எந்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கிறது? சாதனைகள் எதையும் அவர்களால் சொல்ல முடியவில்லை. இதனால் தனி நபர் விமர்சனம் செய்கிறார்கள்.

    நடிகர்கள் தேர்தலுக்கு மட்டுமே வந்து முதல்- அமைச்சராகி விடலாம் என்று நினைக்கிறார்கள். அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் என்பதால் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம். இந்த தேர்தலில் மோடி தான் கதாநாயகன். எனவே மீண்டும் மோடி பிரதமராக வருவார். அ.தி. மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ministersellurraju

    இறுதி கட்ட பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கரூர் தேர்தல் அலுவலகத்தில் ஜோதிமணி- செந்தில்பாலாஜி ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #senthilbalaji #jothimani

    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் நாளை 16-ந்தேதி நிறைவு பெறுகிறது. அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோதிமணி சார்பில் கரூர் பஸ் நிலையம் மனோகரா கார்னர் பகுதியில் இறுதிக்கட்ட பிர சாரம் செய்ய அனுமதி கேட்டு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது.

    ஆனால் அதிகாரிகள் தரப்பில் அ.தி.மு.க.வினர் முன்னதாகவே விண்ணப்பித்துள்ளதால், அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி, வேட்பாளர் ஜோதிமணி, விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி, நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் உள்பட ஏராளமான தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கரூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு சென்றனர்.

    பின்னர் அங்கிருந்த உதவி தேர்தல் அதிகாரி சரவண மூர்த்தியிடம் இறுதிக்கட்ட பிரசாரத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் அவர்கள் கூறும்போது, தேர்தல் விதிமுறைப்படி இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட நாங்கள் முறையான அனுமதி பெற்றுள்ளோம். ஆனால் அ.தி.மு.க.வுக்கு, நாங்கள் குறிப்பிட்ட மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே பிரசாரத்தை முடித்திட அனுமதி வழங்கியது முறை கேடானது என குற்றஞ்சாட்டினர். இதனால் அதிகாரிகளுக்கும், தி.மு.க. கூட்டணி கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    உடனே அங்கு ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். கலவரத்தை அடக்க பயன்படுத்தப்படும் வஜ்ரா வாகனமும் வரவழைக்கப்பட்டது. அலுவலக வாயிற் கதவுகள் பூட்டப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனிடையே உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தை விட்டு வெளியே வராமல் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி, வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்ட தி.மு.க.வினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் தேர்தல் பொதுப்பார்வையாளர் பிரசாந்த் குமார், செலவின பார்வையாளர் மனோஜ்குமார் ஆகியோர் வந்து, இந்த பிரச்சினை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது அ.தி.மு.க.- காங்கிரஸ் வேட்பாளர்கள் சார்பில் இறுதி கட்ட பிரசாரத்திற்காக அளித்த தகவல் விவரங்கள், பிரசார அனுமதி வழங்கியதற்கான ஒப்புதல் விவரம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு விசாரித்தனர்.

    இதைத்தொடர்ந்து நாளை மாலை 4-6 மணியளவில் மனோகரா கார்னர் அருகே காங்கிரஸ் வேட்பாளருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. அ.தி.மு.க.வுக்கு முன்னதாக அதே இடத்தில் மதியம் 12 முதல் பிற்பகல் 2 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து 6 மணி நேரமாக நடந்த உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு, அதிகாரிகளிடம் இருந்து அதற்குரிய ஆணையை பெற்று கொண்டு ஜோதிமணி, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் அங்கிருந்து வெளியே வந்தனர்.

    காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தெரிவிக்கையில், 16-ந்தேதிக்கான பிரசார இடங்களுக்கு அனுமதி பெற 11-ந்தேதி தான் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க. சார்பில் 10-ந்தேதியே விண்ணப்பித்திருக்கின்றனர். தேர்தல் பார்வையாளர் வந்து அ.தி.மு.க. சார்பில் நேரம் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததை கண்டு பிடித்தார் எனக்கூறினார்.

    செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறும்போது, நாளை (செவ்வாய்க்கிழமை) இறுதி கட்ட பிரசாரத்திற்காக 15 இடங்களை தேர்வு செய்து கொடுத்திருந்தோம். காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெறப்போகிறார். ஆகவே அவரது பிரசாரத்தை முடக்கும் நோக்கிலேயே இத்தகைய பித்தலாட்டத்தில் ஆளும்கட்சியினர் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு போலீஸ் அதிகாரி உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகளும் துணை போயிருக்கின்றனர். இந்த விவகாரத்தை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம். தம்பிதுரையின் தோல்வி உறுதியாகிவிட்டது. அவர் டெபாசிட் இழப்பது உறுதி என்றார். #senthilbalaji #jothimani

    மக்கள் பணம் வீணாவதை தடுக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காமராஜர் இருந்திருந்தால் நிச்சயம் மோடியை பாராட்டியிருப்பார் என்று தமிழிசை பேசியுள்ளார். #tamilisai #pmmodi #demonetization

    நாசரேத்:

    தூத்துக்குடி மக்களவை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நாசரேத் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் தீவிரமாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    சுமார் 30 வருடத்திற்கு முன்பாக எனது தந்தை குமரி அனந்தன் இந்த தொகுதியில் நிற்கும்போது நான் 3ம் வருட மருத்துவ கல்லூரி மாணவியாக இந்த தொகுதிக்கு வந்திருக்கிறேன். இந்த பகுதி எப்போதுமே தேசிய எண்ணம் கொண்ட அன்பர்கள் இருக்கும் பக்கம். அனைத்து மக்களுக்கும் மோடி பாதுகாப்பாக இருந்து வருகிறார். பணமதிப்பு இழப்பீடு மக்களின் நன்மைக்காக பிரதமர் மோடி எடுத்த முடிவாகும்.

    பாமர மக்களின் வரி பணம் வீணாகாமல் அவர்களிடமே சேருவதற்காகத்தான் இதனை செய்துள்ளார். பிரதமர் மோடிக்கு குடும்பம், பிள்ளைகள் என யாருமே கிடையாது. உண்மையான தலைவர் பெருந்தலைவர் காமராஜர் உயிரோடிருந்திருந்தால் இந்த செயலை பாராட்டியிருப்பார். நான் உங்கள் வீட்டு சகோதரியாக பெண்ணாக உங்களில் ஒருத்தியாக இருந்து உங்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு தாருங்கள். தற்போது கூட மோடி ஐயாவை சந்தித்து தூத்துக்குடி தொகுதிக்குரிய தேர்தல் அறிக்கையை கொடுத்துள்ளேன்.

    இந்த தொகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, புல்லட் ரெயில் விடுவதற்கும், ஐடி பார்க் கட்டுவதற்கு மற்றும் சிறு தொழிற்சாலைகள் அமைப்பதற்கும் இந்த அறிக்கையில் சமர்ப்பித்துள்ளேன். இத்தொகுதியில் நிற்கிற எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilisai #pmmodi #demonetization  

    சென்னை- சேலம் 8 வழிச்சாலை வந்தே தீரும் என்று நிதின் கட்காரி பேசியது, யார் லாபம் அடைவதற்கு என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். #KamalHassan #ChennaiSalem8wayroad

    நாகர்கோவில்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன், நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    கனிம வளம், மண் வளம் என மக்களை சுரண்டிவிட்டு காசை எங்கு கொண்டு செல்கிறார்கள். நாளை நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் கிடக்கும்போது பணம் பயன்படாது. அதனை கண்கூடாக பார்த்துவிட்டோம். நாளைய சமுதாயத்தை பற்றி எண்ணி பார்க்க வேண்டும்.

    ஒரு கலைஞனாக வாழ்ந்து விட்டேன். எஞ்சிய வாழ்வை தொண்டனாக உங்களோடு கழிக்க விரும்புகிறேன். மத்திய மந்திரி (நிதின்கட்காரி) பேசுகிறார் 8 வழிச்சாலை வந்தே தீரும், கோர்ட்டு உத்தரவிட்டாலும் வந்து விடும் என்கிறார். யாருக்காக இந்த சாலை, மக்களுக்காகத் தானே, மக்கள் வேண்டாம் என்று சொன்ன பிறகு யாரிடம் யாரை விலை பேசுகிறீர்கள். எங்களுக்கு அது தெரிய வேண்டும். ஒரு தனிப்பட்ட வியாபாரிக்கு வருமானம் வர வேண்டும் என்பதற்காக இவர்கள் இங்கு வரக்கூடாது.

    ஜாலியன் வாலாபாக் படுகொலை நடத்தியவர்கள், இங்கு ஆளவந்தவர்கள், தூத்துக்குடியில் நாம் நியமித்த அரசாங்கம் நம்மை நோக்கி சுட்டிருக்கிறது. இதற்கு காரணம் நாம் மெத்தனமாக இருந்தது, உரிமைகளை கேட்க மறந்தது.

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக நிகழ்ந்தது. ஜல்லிக்கட்டு போராட்டம். அப்படி போராட்டம் மீண்டும் வராமல் ஜனநாயக முறையில் வெல்ல வேண்டும். அவ்வாறு வெல்ல முடியாவிட்டால் மீண்டும் ஜல்லிக்கட்டு போல் ஒரு போராட்டம் வரும். நான் அந்த கூட்டத்தில் இருப்பேன். இங்கு டாஸ்மாக் மழையில் நனைந்து கொண்டு சிலர் நின்று கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு விடிந்தால் நான் பேசியது புரியும். டாஸ்மாக் வீரர்கள் மக்கள் நீதிமய்யத்தில் ஓரங்கட்டப்படுவார்கள்.

    எங்களுக்கு தொழிலுக்காக மக்கள் சாக வேண்டும் என்றால் அந்த தொழில் இங்கு தேவையில்லை. மேற்கு கடற்கரையில் கப்பல் கட்டும் பாதைகள் உள்ளதுபோல் கார் தொழிற்சாலைகள் வரலாம். வேலைகளை வழங்க முடியும். ஆலைகளை உருவாக்க முடியும்.


    ஐ.பி.எல். போட்டியை தடுக்க சென்றவர்களிடம் நான் கூறினேன். சற்று தள்ளி செல்லுங்கள், 234 பேர் கோட்டையில் விளையாடுகிறார்கள். அவர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கூறினேன். அதில் இப்போதும் நான் உறுதியாக உள்ளேன். அந்த விளையாட்டை நிறுத்த ஆரம்பம் ஏப்ரல் 18-ந் தேதி.

    இது ஒரு புரட்சியின் அமைதியான ஆரம்பம் தான். இனி செல்லும் தூரம் நிறைய இருக்கிறது. எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் இவ்வளவு சிறப்பான இடத்தை வேறு எங்கும் ஒதுக்கவில்லை. மேடை போட்ட பின்பு அதனை அகற்ற கூறுவார்கள். ஊருக்குள் வரக்கூடாது என்று ஊருக்கு வெளியே பேச சொல்வார்கள். வந்தால் பேசக்கூடாது என்பார்கள். இத்தனையும் கடந்து மக்கள் நீதி மய்யம் மக்களை சென்றடைந்துள்ளது.

    திறமையானவர்கள் பலர் காவல்துறையில் இருக்கிறார்கள். ஆனால் சிலரை ஏவல் துறையாக மாற்றி இருக்கிறது இந்த அரசு. எனவே இந்த அரசாங்கம் அகற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நான் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு சரியாக செயல்படாவிட்டால் என்னை மாற்றி விடலாம் என்று வேட்பாளர் எழுதிக் கொடுத்த கடிதத்தை தொண்டர்கள் மத்தியில் நடிகர் கமல்ஹாசன் காண்பித்தார். #KamalHassan #ChennaiSalem8wayroad

    பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த ஒரே பிரதமர் மோடி தான் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்தார். #BJP #Sarathkumar
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து வடசேரியில் தேர்தல் பிரசாரம் செய்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசியதாவது:-

    மத்தியில் வலுவான ஆட்சி, நிலையான ஆட்சி, பெரும்பான்மையான ஆட்சி வரவேண்டும் என்பதற்காக அ.தி.மு.க.-பாரதிய ஜனதா கூட்டணி உருவாகி உள்ளது. ஸ்டாலினும், காங்கிரஸ் கட்சியும் இந்த கூட்டணியை பார்த்து சந்தர்ப்பவாத கூட்டணி என கூறுகிறார்கள். வலுவான, நிலையான ஆட்சி வரவேண்டும் என்றால் சேர்ந்து தான் ஆக வேண்டும்.

    ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் மட்டும் சொல்லி வருகிறார். கூட்டணியில் உள்ள வேறு எந்த தலைவரும் ஏற்று கொள்ளவில்லை.

    கேரளாவில் கம்யூனிஸ்டு, ராகுல்காந்தியை தோற்கடித்தே தீருவோம் என சொல்லி வருகின்றனர். இங்கு அப்படி இல்லை என தெரிவிக்கின்றனர். இப்படி மாறி, மாறி கொள்கை கொண்டு இருந்தால் எப்படி நிலையான ஒரு ஆட்சியை தர முடியும்.

    மதவாதம் என்று சொல்லுகின்றனர். தி.மு.க., பா.ஜ.க. ஆட்சியில் சேர்ந்து இருந்த போது மதவாதம் என்பது தெரியவில்லையா? அனைவரும் ஒத்த கருத்துடன் இருந்து செயல்படும் தமிழக அரசும், மத்திய அரசும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கொடுக்கும் அரசாக இருந்து வருகிறது.

    புல்வாமா தாக்குதலுக்கு பிறகு சீனா, பாகிஸ்தான், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருந்தது. அந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த ஒரே பிரதமர் மோடி தான்.

    2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அறிவித்தபடி மடி கணினி கொடுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்த திட்டத்தை தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழகம் முதன்மை மாநிலமாக உருவாக வேண்டும் என்றால் மத்தியில் நிலையான, வலிமையான ஆட்சி அமைய வேண்டும்.

    1999 முதல் 2004-ம் ஆண்டு வரை பாரதிய ஜனதா அரசு இருந்தது. அதன் பிறகு 10 ஆண்டு காலம் காங்., ஊழல் ஆட்சி செய்துள்ளது. நிலக்கரி ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், காவிரி பிரச்சினை, கச்ச தீவு என மத்தியில் பிரச்சினைகள் நிறைந்த ஊழல் மிகுந்த ஆட்சியாகவே இருந்தது.

    மத்தியில், மாநிலத்தில் ஆட்சியை பற்றி குறை சொல்ல முடியாமல் தனி நபர் விமர்சனம் செய்து வருகின்றனர். மத்தியில் நிலையான ஆட்சி, வலிமையான ஆட்சி வரவேண்டும் என்றால் பொன்.ராதாகிருஷ்ணனை ஓட்டு போட்டு வெற்றிபெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசினார். #BJP #Sarathkumar
    நடிகை ஜெயப்பிரதாவை ஆசம் கான் தரக்குறைவாக விமர்சித்த விவகாரத்தில் மவுனமாக இருக்கும் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். #DraupadiinRampur #Draupadidisrobed #Sushma #Mulayam #AzamKhan #Khakhiunderwear #Jayaprada
    புதுடெல்லி:

    உத்தரபிரதேசம் மாநிலம் ராம்பூர் பாராளுமன்ற தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். 

    சமீபத்தில் இந்த தொகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதாவை கடுமையாக தாக்கி பேசினார். ஜெயப்பிரதா காக்கி நிற உள்ளாடை அணிந்திருந்தது தனக்கு தெரியும் என்று அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
     
    ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்தை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் கண்டித்துள்ளார். சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், அவர் மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பெண்களை தரக்குறைவாக விமர்சித்து பேசிய ஆசம் கானின் கருத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருக்கும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில் ‘சகோதரர் முலாயம் சிங் அவர்களே!  நீங்கள்தான் சமாஜ்வாதி கட்சியின் தலைவர். ராம்பூர் தொகுதியில் உங்கள் முன்னால் திரவுபதி துகிலுரிக்கப்பட்டுள்ளார். பீஷ்ம பிதாமகர் போல் அமைதியாக இருக்கும் தவறை நீங்கள் செய்ய வேண்டாம்’ என குறிப்பிட்டுள்ளார். #DraupadiinRampur #Draupadidisrobed #Sushma #Mulayam #AzamKhan #Khakhiunderwear #Jayaprada
    8 வழிச்சாலை நிறைவேற்றப்படும் என்று மத்திய மந்திரி நிதின்கட்காரி பேசியபோது எடப்பாடி பழனிசாமி மவுனமாக இருந்தது ஏன்? என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். #dinakaran #edappadipalanisamy #nitingadkari

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, ஆரணியில் தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    திருவண்ணாமலை என்பது ஒரு அக்னி ஸ்தலம். தீயவர்களையும், துரோகம் செய்பவர்களையும் அழித்துவிடும் அக்னியாக உள்ள இந்த தொகுதி மக்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்பவர்களை அக்னியாக இருந்து அழிக்க வேண்டும். அ.தி.மு.க. மெகா கூட்டணி சார்பில் இந்த தொகுதியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர்.

    மதச்சார்பற்ற கூட்டணி என்று தி.மு.க. சார்பில் கூறுகிறார்கள். கடந்த 15 ஆண்டு காலமாக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சியில் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மக்களை புறம்தள்ளி தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களையே பாதுகாத்தவர்கள் இவர்கள். இவர்களின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தால் காவிரி மேலாண்மை வாரியத்தை கலைத்து விடுவேன் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

    8 வழி சாலை திட்டம் தற்போது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய மந்திரி நிதின்கட்காரி சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல் -அமைச்சர் முன்னிலையிலேயே விவசாயிகள் ஆலோசனை பெற்று மீண்டும் 8 வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவேன் என கூறும் போது முதல் - அமைச்சர் வாய்மூடி கொண்டு அமர்ந்துள்ளார். இந்த 8 வழி சாலையானது 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் நீர் ஆதாரங்களை அழித்து தனியார் நிறுவனத்திற்காக அமைக்கப்படும் சாலை. மத்திய மந்திரி தேர்தல் நேரத்தில் எவ்வளவு தைரியமாக 8 வழி சாலையை அமைத்தே தீருவேன் என கூறுகிறார். இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இந்த பகுதி மக்கள் அ.தி.மு.க.விற்கு வாக்களித்தால் இந்த பகுதி விவசாயத்தையும், பசுமையையும் அழித்து விடுவார்கள். இந்த 8 வழி சாலை வருவதால் தொழில் வளர்ச்சி பெறும் என சட்டமன்றத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 8 வழி சாலை திட்டத்தை வரவேற்பதன் மூலம் தி.மு.க., பா.ஜ.க. உடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. 8 வழி சாலையை எதிர்த்து அ.ம.மு.க. பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி உள்ளது. நீதிமன்றமே தடைவிதித்த அந்த 8 வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவேன் என மத்திய மந்திரி கூறுவது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வது போன்றது.

    ஏற்கனவே ஆர்.கே. நகரில் ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்து அ.தி.மு.க.வால் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களான நமக்குத்தான் அந்த மக்கள் வெற்றியை தந்தார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #edappadipalanisamy #nitingadkari 

    பிரதமர் மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரில் இருந்து இறக்கிய இரும்பு பெட்டியில் என்ன இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. #PMModi #Congress
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திமோடி கடந்த 9-ந் தேதி கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்காவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    ஹெலிகாப்டர் மூலம் அவர் சித்ரதுர்கா வந்து இறங்கினார். அவருக்கு பாதுகாப்புக்காக மேலும் 3 ஹெலிகாப்டர்கள் வந்தன.

    அந்த ஹெலிகாப்டர்கள் தரை இறங்கிய நிலையில் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து பெரிய வடிவிலான கருப்பு நிற இரும்பு பெட்டியை பாதுகாப்பு வீரர்கள் இறக்கினார்கள்.

    2 பேர் மிகவும் கஷ்டப்பட்டு இறக்கி சென்று அருகில் நின்றிருந்த காரில் ஏற்றினர். பின்னர் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டது.

    அந்த பெட்டியில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. பெட்டியில் பணம் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்ற பேச்சும் எழுந்தது.

    ஆனால் அந்த பெட்டியில் பிரதமர் பாதுகாப்பு தொடர்பான தளவாடங்கள் இருந்ததாக பாதுகாப்பு படை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இதில் ஏதோ மர்மம் இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது.


    இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியதாவது:-

    பிரதமர் ஹெலிகாப்டரில் இருந்து இறக்கிய கருப்பு பெட்டியில் என்ன இருந்தது என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஒருவேளை அதில் பணம் இல்லாமல்கூட இருக்கலாம். ஆனால் அதில் என்ன இருந்தது என்ற உண்மை வெளியே வர வேண்டும். இது சம்பந்தமாக தேர்தல் கமி‌ஷன் விசாரணை நடத்தி அதன் விபரத்தை வெளியிட வேண்டும்.

    ஹெலிகாப்டரில் இருந்து இறக்கிய இரும்பு பெட்டியை தனியார் இன்னோவா காரில் ஏற்றி இருக்கிறார்கள். உடனே அந்த கார் மின்னல் வேகத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அந்த கார் சிறப்பு பாதுகாப்பு படையினர் அணிவகுப்பில் இடம் பெறவில்லை. இதுதான் பெரும் சந்தேகமாக உள்ளது.

    கர்நாடக மாநிலம் காங்கிரஸ் சார்பில் இதுபற்றி தேர்தல் கமி‌ஷனிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்து தேர்தல் கமி‌ஷன் தான் தனது கடமையை செய்ய வேண்டும்.

    இவ்வாறு ஆனந்த்சர்மா கூறினார். #PMModi #Congress
    ஆர்.எஸ்.ராஜேசை ஆதரித்து என்.எம்.பாஸ்கரன் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019

    பெரம்பூர்:

    பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் வடசென்னை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோரை ஆதரித்து 36-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் என்.எம்.பாஸ்கரன் தலைமையில் 36-வது வட்ட கிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.

    36-வது கிழக்கு வட்ட பொறுப்பாளர் என்.எம்.பாஸ்கரன் தலைமையில், பொறுப்பாளர்கள் அசாம்பாக்கியம், செந்தாமரைக் கண்ணன், தேவி, ஆனந்தன், ஜோசப், பிரகாஷ், மூர்த்தி,மேரி ராஜகுமாரி, செல்வராஜ், குண சேகர், மீனா, ரவிசங்கரன், பிச்சா பதி, செல்வராஜ், பாலமுருகன், நெல்சன், அன்னக்கிளி, உதயராஜ், பாபுராவ், ராமய்யா, மங்களம், ஜான்பாஸ்கோ, சேட்டு,சுரேஷ், ஸ்ரீநாத்ராஜ், விஜயன், நாகராஜ், வசந்தி, சந்தோஷ்பாபு, தாமோதரன், செல்வி, முத்துசிவா, கார்மேகம், ரோசி, ஜெயக்குமார், தாமோதரன், ராஜி, பால்ச்சாமி, இருதயராஜ், சண்முகம், ஆறுமுகம், முனிரத்தினம், மோகன், கனகசபை, கோட்டீஸ்வரன், மனோகரன், கஜேந்திரன், பிரேம் குமார், மணிவண்ணன், சுரேஷ், திருநாவுக்கரசு மற்றும் கூட்டணி கட்சியினர் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். #LokSabhaElections2019

    ×