search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யார் லாபம் அடைவதற்கு சென்னை- சேலம் 8 வழிச்சாலை?- கமல்ஹாசன் கேள்வி
    X

    யார் லாபம் அடைவதற்கு சென்னை- சேலம் 8 வழிச்சாலை?- கமல்ஹாசன் கேள்வி

    சென்னை- சேலம் 8 வழிச்சாலை வந்தே தீரும் என்று நிதின் கட்காரி பேசியது, யார் லாபம் அடைவதற்கு என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். #KamalHassan #ChennaiSalem8wayroad

    நாகர்கோவில்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன், நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    கனிம வளம், மண் வளம் என மக்களை சுரண்டிவிட்டு காசை எங்கு கொண்டு செல்கிறார்கள். நாளை நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் கிடக்கும்போது பணம் பயன்படாது. அதனை கண்கூடாக பார்த்துவிட்டோம். நாளைய சமுதாயத்தை பற்றி எண்ணி பார்க்க வேண்டும்.

    ஒரு கலைஞனாக வாழ்ந்து விட்டேன். எஞ்சிய வாழ்வை தொண்டனாக உங்களோடு கழிக்க விரும்புகிறேன். மத்திய மந்திரி (நிதின்கட்காரி) பேசுகிறார் 8 வழிச்சாலை வந்தே தீரும், கோர்ட்டு உத்தரவிட்டாலும் வந்து விடும் என்கிறார். யாருக்காக இந்த சாலை, மக்களுக்காகத் தானே, மக்கள் வேண்டாம் என்று சொன்ன பிறகு யாரிடம் யாரை விலை பேசுகிறீர்கள். எங்களுக்கு அது தெரிய வேண்டும். ஒரு தனிப்பட்ட வியாபாரிக்கு வருமானம் வர வேண்டும் என்பதற்காக இவர்கள் இங்கு வரக்கூடாது.

    ஜாலியன் வாலாபாக் படுகொலை நடத்தியவர்கள், இங்கு ஆளவந்தவர்கள், தூத்துக்குடியில் நாம் நியமித்த அரசாங்கம் நம்மை நோக்கி சுட்டிருக்கிறது. இதற்கு காரணம் நாம் மெத்தனமாக இருந்தது, உரிமைகளை கேட்க மறந்தது.

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக நிகழ்ந்தது. ஜல்லிக்கட்டு போராட்டம். அப்படி போராட்டம் மீண்டும் வராமல் ஜனநாயக முறையில் வெல்ல வேண்டும். அவ்வாறு வெல்ல முடியாவிட்டால் மீண்டும் ஜல்லிக்கட்டு போல் ஒரு போராட்டம் வரும். நான் அந்த கூட்டத்தில் இருப்பேன். இங்கு டாஸ்மாக் மழையில் நனைந்து கொண்டு சிலர் நின்று கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு விடிந்தால் நான் பேசியது புரியும். டாஸ்மாக் வீரர்கள் மக்கள் நீதிமய்யத்தில் ஓரங்கட்டப்படுவார்கள்.

    எங்களுக்கு தொழிலுக்காக மக்கள் சாக வேண்டும் என்றால் அந்த தொழில் இங்கு தேவையில்லை. மேற்கு கடற்கரையில் கப்பல் கட்டும் பாதைகள் உள்ளதுபோல் கார் தொழிற்சாலைகள் வரலாம். வேலைகளை வழங்க முடியும். ஆலைகளை உருவாக்க முடியும்.


    ஐ.பி.எல். போட்டியை தடுக்க சென்றவர்களிடம் நான் கூறினேன். சற்று தள்ளி செல்லுங்கள், 234 பேர் கோட்டையில் விளையாடுகிறார்கள். அவர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கூறினேன். அதில் இப்போதும் நான் உறுதியாக உள்ளேன். அந்த விளையாட்டை நிறுத்த ஆரம்பம் ஏப்ரல் 18-ந் தேதி.

    இது ஒரு புரட்சியின் அமைதியான ஆரம்பம் தான். இனி செல்லும் தூரம் நிறைய இருக்கிறது. எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் இவ்வளவு சிறப்பான இடத்தை வேறு எங்கும் ஒதுக்கவில்லை. மேடை போட்ட பின்பு அதனை அகற்ற கூறுவார்கள். ஊருக்குள் வரக்கூடாது என்று ஊருக்கு வெளியே பேச சொல்வார்கள். வந்தால் பேசக்கூடாது என்பார்கள். இத்தனையும் கடந்து மக்கள் நீதி மய்யம் மக்களை சென்றடைந்துள்ளது.

    திறமையானவர்கள் பலர் காவல்துறையில் இருக்கிறார்கள். ஆனால் சிலரை ஏவல் துறையாக மாற்றி இருக்கிறது இந்த அரசு. எனவே இந்த அரசாங்கம் அகற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நான் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு சரியாக செயல்படாவிட்டால் என்னை மாற்றி விடலாம் என்று வேட்பாளர் எழுதிக் கொடுத்த கடிதத்தை தொண்டர்கள் மத்தியில் நடிகர் கமல்ஹாசன் காண்பித்தார். #KamalHassan #ChennaiSalem8wayroad

    Next Story
    ×