என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தவிர மோடி போட்டியிடும் இரண்டாவது தொகுதியை தேர்வு செய்ய பாஜக மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். #Loksabhaelections2019 #BJP #PMModi
    போபால்:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது குஜராத் மாநிலம் வதேதரா, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.

    அந்த இரு தொகுதிகளிலும் மோடி வெற்றி பெற்றார். வாரணாசி தொகுதியில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சுமார் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    இதையடுத்து வதேதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்த மோடி, வாரணாசி தொகுதியை தக்க வைத்துக் கொண்டார். மீண்டும் 2-வது முறையாக வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிட உள்ளார்.

    வாரணாசி தொகுதியில் மே 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பிரதமர் மோடி வருகிற 26-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதி தவிர மேலும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    மத்தியபிரதேச மாநிலம் விதிஷா தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 1967-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதி வி.வி.ஐ.பி. தொகுதி என்ற அந்தஸ்தைப் பெற்ற அதிர்ஷ்டமான தொகுதியாகும்.

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 1991-ம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகானும் தொடர்ச்சியாக 5 தடவை இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜூம் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எனவே இந்த தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்ற கோ‌ஷம் வலுத்து வருகிறது.

    விதிஷா தொகுதிக்கு இன்னும் பாரதிய ஜனதா வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படவில்லை. இதனால் இந்த தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #Loksabhaelections2019 #BJP #PMModi
    மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆசை பலிக்காது என்று திண்டுக்கல்லில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். #opanneerselvam #mkstalin

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்து போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவில் அருகே தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசியதாவது:-

    தமிழகத்துக்கு நல்லாட்சி கொடுத்தவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை என பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். விவசாயத்தில் தமிழகம் தொடர்ந்து 4 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்துள்ளது.

    உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்துக்கு ரூ.3 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். இதன் மூலம் மக்களின் ஆதரவை அ.தி.மு.க. பெற்றுள்ளது. எனவே மு.க. ஸ்டாலினின் முதல்- அமைச்சர் ஆகும் ஆசை பலிக்காது.

    தேர்தல் பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்துக்கு தீ வைத்துவிட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் வன்முறை ஆட்சி செய்து மக்கள் மனதில் தீ வைத்தது தி.மு.க. தான். மேலும் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு, சாதி, மத கலவரம் ஆகியவை ஏற்பட காரணமும் தி.மு.க. தான்.

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க காரணமாக இருந்தது தி.மு.க. தான். அந்த தடையை தகர்த்தெறிந்து தமிழர்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்தவர் பிரதமர் மோடி. எனவே மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே நீடிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #opanneerselvam #mkstalin

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் தேர்தல் விதிகளை மீறியதால், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. #ECNotice #ModelCodeofConduct
    புது டெல்லி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 6 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    அந்த வகையில் கடந்த ஏப்ரல் 7 மற்றும் ஏப்ரல் 9 ஆகிய தேதிகளில் உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி ஆகியோர் சகரன்பூர் பகுதியில் உள்ள டியோபாண்ட் என்ற இடத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து ஏப்ரல் 7ம் தேதி  மாயாவதி பேசுகையில் , 'முஸ்லிம் வாக்காளர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் வாக்குகளை உறவினர்கள் என்பதாலோ, நண்பர்கள் என்பதாலோ பதிவிடக்கூடாது. உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த எண்ணினால், உங்கள் வாக்குகளை பிரிக்காதீர்கள். அதற்கு பதிலாக மாபெரும் கூட்டணிக்கு பதிவிடுங்கள்.  இதனை முஸ்லிம் மக்களுக்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன்' என பேசினார்.

    மாயாவதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏப்ரல் 9ம் தேதி மீருட்டில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், 'ஒரு நாளுக்கு முன்னர் மாயாவதி என்ன பேசினார் என்பதை கேட்டிருப்பீர்கள். அவருக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணி மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை. உங்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்குபலி மீது நம்பிக்கை உள்ளது' என பேசினார்.



    இதையடுத்து தேர்தல் விதிகளை மீறி பேசியது தொடர்பாக   யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு அம்மாநில தேர்தல் ஆணையம், நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவர்கள் இருவரும்  24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் தரப்பில் எந்த பதிலும் அனுப்பப்படாததால், தேர்தல் ஆணையம் இன்று சாட்டையை சுழற்றியது.

    16ம் தேதி (நாளை) காலை 6 மணி முதல் அடுத்த 72 மணி நேரத்திற்கு யோகி ஆத்தியநாத் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதேப்போல் முன்னாள் முதல்வர் மாயாவதியும் 16ம் தேதி (நாளை) காலை 6 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், பொதுக்கூட்டங்களில் பேசுவது மட்டுமின்றி தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தல், பத்திரிக்கை செய்தியாளர்களை சந்தித்தல் ஆகியவற்றிற்கும்  இந்த தடை பொருந்தும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  #ECNotice  #ModelCodeofConduct




    வேலூர் தேர்தல் விவகாரத்தில் பாரதிய ஜனதாவுடன் தி.மு.க. ரகசிய உறவு வைத்திருப்பதாக அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #AMMK #TTVDhinakaran
    சென்னை:

    அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசால் பொருளாதாரம் சீரழிந்து, தொழில்கள் முடங்கி, வேலை வாய்ப்பை இழந்து, தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கிறார்கள் தமிழக மக்கள். இன்னொருபுறம்... ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்த எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியையும் ஆட்சியையும் பா.ஜனதாவிடம் அடகு வைத்துவிட்டு, அவர்களுக்கு அடிமை சேவகம் செய்து வருகிறார்கள்.

    இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் சிக்கி தமிழகம் தத்தளிக்கும் நேரத்தில்தான், பாராளுமன்றப் பொதுத்தேர்தலும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது. தமிழக மக்களின் ஒட்டுமொத்த துயரத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பாக, ஒரு வரமாக நமக்கு அமைந்திருக்கிறது இந்தத் தேர்தல்.

    தமிழகத்தின் நலன்களைக் கூட்டணி போட்டு சூறையாடியது போதாது என்று, தேர்தல் களத்திலும் கூட்டணி அமைத்து வருகிறார்கள் அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும். அம்மாவின் மரணத்திற்குப் பிறகும் அவரைத் தரம் தாழ்ந்து விமர்சித்த பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. கட்சிகளையும் இணைத்து துரோகம் கலந்த ஒரு சுயநலக் கூட்டணியை அமைத்திருக்கிறது அ.தி.மு.க.

    மக்கள் நலன் சார்ந்த வி‌ஷயங்களில் இவர்கள் போடும் இரட்டைவேடத்தை இவர்களே இப்போது அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.

    கிராமப்புற மாணவர்களின் டாக்டராகும் கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அ.தி.மு.க. சொல்ல ‘அவர்கள் எங்களிடம் அப்படிக் கேட்கவில்லை. நீட் தேர்வு அவசியம் எனும் எங்கள் நிலைப்பாட்டை சொல்லி அவர்களையும் ஏற்கச் செய்வோம்’ என்று பா.ஜனதா சொல்கிறது. எவ்வளவு பெரிய பித்தலாட்டம் இது?

    ஐந்து மாவட்ட விவசாயத்தை, இயற்கை வளங்களை, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து உருவாக இருந்த சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை ரத்து செய்துவிட்டது உயர்நீதிமன்றம். ‘அந்தத் தீர்ப்பை மதிப்போம்’ என்று சொன்ன முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், ‘இந்தத் தீர்ப்பு எங்களுக்குக் கிடைத்த வெற்றி’ என்று சொன்ன டாக்டர் ராமதாசையும் மேடையில் வைத்துக் கொண்டு, இந்தத் தீர்ப்புக்கு மாறாக அத்திட்டத்தை செயல்படுத்தியே தீருவேன் என்று அறிவிக்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

    அதைக்கேட்டு ஒரு வார்த்தைகூட மறுப்பு சொல்லவில்லை இருவரும். மக்கள் நலன் சார்ந்த வி‌ஷயத்தில் இவர்களின் இரட்டை வேடத்தைப் பார்த்தீர்களா..?



    இன்னொரு புறம் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டே பா.ஜனதாவுடன் ரகசிய உறவை வைத்துள்ளது தி.மு.க. ஒரு துண்டுச் சீட்டை கைப்பற்றியதாகச் சொல்லி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நிறுத்திய தேர்தல் ஆணையம், வேலூரில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமான இடங்களில் சுமார் 12 கோடி ரூபாய் கைப்பற்றிய பிறகும் தேர்தல் நடப்பதை அனுமதிப்பது எதைக் காட்டுகிறது? பா.ஜனதாவுடன் ரகசிய உறவு இல்லாமல் எப்படி இது சாத்தியம்?

    அந்தக் காங்கிரசாவது நியாயமாக நடக்கிறதா என்றால் இல்லை. டெல்டாவை பாலைவனமாக்கும் வகையில் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம், காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கலைப்போம் என்று கர்நாடகாவில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்கிறது. தமிழ்நாட்டுக்கு வந்து நீட் தேர்வு பற்றி பேசும் ராகுல் காந்தி, மேகதாது அணை மற்றும் காவிரி பிரச்சனை பற்றி எதுவும் பேசுவதில்லை. தி.மு.க.வும் அதை வேடிக்கை பார்க்கிறது.

    அரசியலில் எதுவும் சாத்தியம்... எப்படி வேண்டுமானாலும் கூட்டணிகள் அமைக்கலாம் என்ற அருவெறுக்கத்தக்க அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கொள்கையற்ற, முரண்பட்ட, சுயநலமான, மக்கள் விரோத கூட்டணிகளை அமைக்காமல், தமிழக மக்களையும் அம்மாவின் உண்மை விசுவாசிகளையும் மட்டுமே நம்பி களம் காண்கிறது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

    ஆபத்து அரசியல் நடத்தும் மதவாத பா.ஜனதாவையும், அப்படிப்பட்ட கட்சியுடன் தேர்தல் உறவு இல்லை என்று சொல்லிவிட்டு, தேர்தலுக்குப் பின்பு ஒட்டிக்கொள்ளும் வகையில் பா.ஜனதாவுடன் ரகசிய உறவைப் பேணிவரும் இரட்டை வேட தி.மு.க.வையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவர்களைப் புறக்கணிப்பதன் மூலம், மக்கள் விரோத ஆட்சி ஒழிவது மட்டுமல்ல... சுயநல, சந்தர்ப்பவாத, இரட்டை வேட அரசியலும், கூட்டணி என்ற பெயரில் நடக்கும் அருவெறுக்கத்தக்க பேர அரசியலும் ஒழிக்கப்படும்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #AMMK #TTVDhinakaran
    குஜராத் மாநிலத்தில் குடிநீர் பற்றாக்குறைக்காக போராட்டம் நடத்திய பெண்களிடம் நீங்கள் எனக்கு போட்ட ஓட்டின் அளவுக்கு தான் தண்ணீர் கிடைக்கும் என்று கூறிய மந்திரியின் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது. #KunwarjiBavaliya #Gujaratminister
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் பல இடங்களில் ஏரிகளில் உள்ள நீர்மட்டம் குறைந்து சில மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்காக அம்மாநிலத்தின் ஆளும்கட்சியான பாஜக தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. குடிநீர் பிரச்சனையை மையமாக வைத்து ராஜ்கோட் மாவட்டத்தில் கனேசாரா கிராமத்தில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக குஜராத் மாநில குடிநீர் வினியோகம் மற்றும் கால்நடைத்துறை மந்திரி கன்வர்ஜி பவாலியா வாக்கு சேகரிக்க வந்தார். அவரை வழிமறித்த பெண்கள் தங்கள் பிரச்சனையை கூறி முறையிட்டனர்.


    அவர்களிடம் கடுகடுப்பாக பேசிய மந்திரி கன்வர்ஜி பவாலியா, கடந்த தேர்தலில் நான் உங்களிடம் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டு பிரசாரம் செய்தும் நீங்கள் எனக்கு 55 சதவீதம் வாக்குகளை தானே அளித்தீர்கள்? என்று கிண்டலாக கேட்டார்.

    அவருடன் வந்திருந்த அந்த தொகுதியின் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. பரத் கோக்ரா நீங்கள் ஓட்டு போட்டது போல் பாதி அளவு தண்ணீர் மட்டுமே கிடைக்கும் என கேலியாக குறிப்பிட்ட சம்பவம் குஜராத் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #KunwarjiBavaliya #Gujaratminister
    தேர்தல் பிரசாரத்தில் பொய்யான குற்றச்சாட்டை கூறி வரும் மு.க.ஸ்டாலின் மற்றும் இளங்கோவன் மீது வழக்கு தொடரப்போவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #LokSabhaElections2019 #MKStalin #EVKSElangovan
    தேனி:

    தேனியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    மேகதாது அணை கட்ட தேனியில் இருந்து நான் மணல் அனுப்புவதாக தேனி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிரசாரத்தின்போது பேசி உள்ளார். மேகதாதுவுக்காக நான் மணல் அனுப்புவதாக அவர் கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.


    அவதூறு பரப்பும் வகையில் அவர் இவ்வாறு பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் தந்துள்ளேம். பிரசாரத்தின்போது தவறான தகவலை கூறுவோர் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவதூறு பரப்பும் இளங்கோவன் மீது வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளோம். தேர்தல் பிரசாரத்தில் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.

    இதேபோல் பத்திரிகை செய்தியை சுட்டிக்காட்டி பொய்யான குற்றச்சாட்டை கூறும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் வழக்கு  தொடரப்படும். காவிரி விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் வரலாற்று பிழையை செய்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வாரிசு அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், தகுதியான நபராக இருந்தால் வாரிசு அரசியலில் எந்த தவறும் இல்லை என்றார். #LokSabhaElections2019 #MKStalin #EVKSElangovan
    ஒடிசா மாநிலத்தில் ரூர்கேலா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக ஆட்சியில் பாகிஸ்தான், சீனாவால் இந்தியாவிடம் வாலாட்ட முடியாது என கூறியுள்ளார். #YogiAdityanath #LoksabhaElections2019
    ரூர்கெலா:

    ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி  முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 3 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள ரூர்கேலா பகுதியில் இன்று நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் கட்சி நக்சல்கள் மற்றும் பயங்கரவாதிகளிடம் மென்மையான அணுகுமுறையையே கையாண்டு வருகிறது.  உத்தரபிரதேசம் மாநிலத்தில்  காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது சீன ராணுவத்தினர் தொடர்ந்து ஊடுருவி வந்தனர். பிரதமராக மோடி வந்த பின்னர் இது முடிவுக்கு வந்தது.  இதேப்போல் பாகிஸ்தான் ராணுவத்தினர், நம் இந்திய ராணுவ வீரர்களின் தலைகளை வெட்டினர்.



    ஆனால் பாஜக ஆட்சியில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவிடம் வாலாட்ட முடியாது. பாகிஸ்தான், புல்வாமாவில் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் இறந்தனர். இதற்கான பதிலடியும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் கொடுக்கப்பட்டது. இதன் நோக்கம் பயங்கரவாதிகளின் முகாம்களை அழிப்பது மட்டுமல்ல, பாகிஸ்தானின் முதுகெலும்பை உடைக்க செய்யப்பட்ட உறுதியான செயலாகும்.

    மோடி அலை நாடெங்கும் வீசுகிறது. எனவே மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக தலைமையிலான அரசை மீண்டும் கொண்டு வர ஒடிசா மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.  

    இவ்வாறு அவர் பேசினார். #YogiAdityanath  #LoksabhaElections2019


    பாமக வேட்பாளர் மருத்துவர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட நங்கநல்லூர் பகுதியில் அதிமுக காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் வீதிவீதியாக வாக்கு சேகரித்தார். #LokSabhaElections2019

    தாம்பரம்:

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் மருத்துவர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட நங்கநல்லூர் பகுதியில் அதிமுக காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் வீதிவீதியாக வாக்கு சேகரித்தார்.

    பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்து மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். அவர் பொதுமக்களிடம் பேசும்போது, நமது வேட்பாளர் வைத்திலிங்கம் நன்கு படித்தவர். பண்பாளர் டாக்டரான அவரால் உயிர்கள் காப்பாற்றப்படுகிறது. பொதுமக்கள் இதை சிந்தித்து பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டு மாம்பழ சின்னத்திற்கு வாக்களித்து வேட்பாளர் மருத்துவர் வைத்தியலிங்கத்தை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    அவருடன் ஆலந்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.என்.பி. வெங்கட்ராமன் அம்மன் வைரமுத்து சிவராஜ் எம்.எம்.பக்கிம் வானவம் எஸ். வரதராஜன், தனசேகர், ஆஷா பாஸ்கர் உட்பட கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக சென்று மாம்பழத்திற்கு வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019

    ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #AzamKhan
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்தை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் கண்டித்துள்ளார். சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.



    ஆனால், ஜெயப்பிரதா குறித்து அப்படி பேசவில்லை என்று கூறிய ஆசம் கான், தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் தேர்தலில் இருந்து விலகுவதாக கூறினார்.

    இந்நிலையில்,  ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆசம் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் அடிப்படையில், ஷகாபாத் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #AzamKhan
    தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மொத்தம் 7 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. #Loksabhaelections2019 #Tasmac
    சென்னை:

    பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது.

    தேர்தலுக்கு 2 நாட்கள் முன்னதாகவே டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

    இப்படி மூடப்படும் மதுக்கடைகளை தேர்தல் முடிந்த பின்னர்தான் 19-ந்தேதிதான் திறக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதன்படி தமிழகம் முழுவதும் நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மொத்தம் 7 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்படுகின்றன.

    இதையடுத்து மதுபாட்டில்களை முன்கூட்டியே வாங்கி பதுக்கி வைத்து 3 நாட்களும் கூடுதல் விலைக்கு சிலர் விற்பனை செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது.

    இதனை கண்காணிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த காலங்களில் டாஸ்மாக் கடைகள் விடுமுறையின் போது திருட்டுத்தனமாக மது விற்பனை செய்த பெண்கள் பலரும் சிக்கியுள்ளனர். அவர்களையும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #Loksabhaelections2019 #Tasmac
    பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்து இருப்பது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியாகும். #Loksabhaelections2019 #ElectionCommission
    புதுடெல்லி:

    பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் கடந்த நிதியாண்டில் எவ்வளவு செலவு செய்தன? வங்கியில் எவ்வளவு கையிருப்பு வைத்துள்ளன என்ற தகவலை தலைமை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளன.

    வரவு-செலவு கணக்கு தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்து இருப்பது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியாகும். கடந்த ஆண்டு இந்த கட்சி 665 கோடி ரூபாயை கையிருப்பு வைத்து இருந்தது. இந்த ஆண்டு அந்த தொகை ரூ.670 கோடியாக உயர்ந்துள்ளது.

    அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 2-வது இடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு வங்கிகளில் ரூ.471 கோடி கையிருப்பு உள்ளது. வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்திருக்கும் கட்சிகளில் முதல் 2 கட்சிகளும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.


    காங்கிரஸ் கட்சி ரூ.196 கோடி கையிருப்புடன் 3-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி ரூ.136 கோடியே வைத்திருந்தது. ஒரே ஆண்டில் 60 கோடி ரூபாயை வங்கியில் காங்கிரஸ் கட்சி சேர்த்துள்ளது.

    சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ரூ.107 கோடியுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி ரூ.82 கோடி கையிருப்புடன் 5-வது இடத்தில் உள்ளது.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ஆம்ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் தலா ரூ.3 கோடியை வங்கிகளில் கையிருப்பு வைத்துள்ளன. #Loksabhaelections2019 #ElectionCommission
    தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள தகவல்களின்படி அவர்களில் 13 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. #Loksabhaelections2019
    சென்னை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்களில் மொத்தம் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

    இவர்களில் 802 வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஜனநாயக சீர்திருத்தக் கழகம் ஆய்வு செய்தது. அதில் கிடைத்த தகவல்கள் நேற்று வெளியிடப்பட்டன.

    ஒவ்வொரு வேட்பாளரும் தங்களது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள தகவல்களின்படி பார்த்தால் மொத்த வேட்பாளர்களில் 13 சதவீதம் பேர் கிரிமினல் குற்ற வழக்குகள் பின்னணியுடன் இருப்பது தெரிய வந்துள்ளது. 67 வேட்பாளர்கள் மீது மிகக் கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஈஸ்வரன் மீது அதிகபட்சமாக 14 கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன.



    தர்மபுரி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது 12 வழக்குகள் இருக்கின்றன. மொத்த வேட்பாளர்களில் 50 சதவீதம் பேர் பட்டப்படிப்பு படித்துள்ளனர். மொத்த வேட்பாளர்களில் பெண் வேட்பாளர்கள் வெறும் 8 சதவீதம்தான். 54 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் 38 சதவீதம் பேர் உள்ளனர்.

    வேட்பாளர்களில் 23 சதவீதம் பேர் அதாவது 184 பேர் கோடீசுவரர்கள். நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் முதல் இடத்தில் இருக்கிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.417 கோடியாகும்.

    தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் இசக்கி சுப்பையா ரூ.237 கோடி சொத்துக்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். வேலூர் தொகுதியில் நிற்கும் ஏ.சி.சண்முகத்துக்கு ரூ.125 கோடியும், அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் ஜெகத்ரட்சகனுக்கு ரூ.114 கோடியும், பாரிவேந்தருக்கு ரூ.97 கோடியும் சொத்துக்கள் இருக்கிறது.

    சாருபாலா தொண்டமான் ரூ.92 கோடி, கார்த்தி சிதம்பரம் ரூ.79 கோடி, சி.பி.ராதாகிருஷ்ணன் ரூ.67 கோடி, பி.முருகேசன் ரூ.64 கோடி, எல்.கே.சுதீஷ் ரூ.60 கோடி சொத்துக்களுடன் உள்ளனர். துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் ரூ.58 கோடி சொத்து வைத்துள்ளார். பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி ரூ.47 கோடிக்கு சொத்துக்கள் வைத்துள்ளார்.

    அ.தி.மு.க.வின் 22 வேட்பாளர்களும், பாரதிய ஜனதாவின் 5 வேட்பாளர்களும், தே.மு.தி.க.வின் 4 வேட்பாளர்களும் கோடீசுவரர்கள் ஆவார்கள். #Loksabhaelections2019
    ×