என் மலர்
தேர்தல் செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி, ஓசூரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. குழப்பம் நிறைந்த கூட்டணி. ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் உள்ள ப.சிதம்பரம் பாராளுமன்ற தேர்தல் முடிவுக்குப்பிறகு யார் பிரதமர் என்பதை முடிவு செய்வோம் எனக் கூறுகிறார். இப்படி முரண்பட்ட கருத்துடைய கூட்டணியால் நிலையான, உறுதியான ஆட்சியை எப்படி தரமுடியும்.
இந்தியா முழுவதும் மாநிலக் கட்சிகளுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
இந்த கூட்டணி வெற்றி பெற்றால் நரேந்திர மோடிதான் பிரதமர் என அனைத்துக்கட்சிகளும் அறிவித்து மக்களிடத்திலே வாக்குகள் கேட்டு வருகின்றனர். நரேந்திரமோடி ஒருவரால் மட்டும் தான் ஒரு நிலையான ஆட்சியை தர முடியும்.
தி.மு.க. கூட்டணியில் வைகோ கட்சியும் உள்ளது. இந்த கட்சியின் வேட்பாளர் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கட்சி சின்னத்தில் போட்டியிடுகிறார். அதாவது ஒருவர் ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்றால் அவர் அந்த கட்சியில் இணைந்து போட்டியிடுகிறார் என்பது தான் அர்த்தம். இதுபற்றி வைகோ என்ன சொல்லப்போகிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறது ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் தி.மு.க. கட்சி சின்னத்திலும் போட்டியிடுகிறது. இந்த இரட்டை நிலைப்பாடு ஏன்? தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கட்சியின் கொள்கையை விட்டுத்தரக்கூடாது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் எதிரணியினர் குழப்பத்தில் தான் உள்ளனர்.
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டப்படும் என ராகுல்காந்தி அறிவித்திருக்கிறார். அவ்வாறு அணை கட்டப்பட்டால் ரூ.2000 கோடியில் நிறைவேற்றப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் எப்படி ஒரு போதும் முதல்-அமைச்சராக முடியாதோ, அதே போன்று தான் இந்தியாவின் பிரதமராக ராகுல்காந்தி ஒரு போதும் வர முடியாது.
கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்புத்திட்டம் நிச்சயமாக செயல்படுத்தப்படும். அந்த திட்டம் செயல்படுத்தப்படும் போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்களில் நீர் நிரப்புவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும். பாராளுமன்ற தேர்தல் என்பது ஒட்டு மொத்த இந்தியா முழுவதும் நடைபெறுகின்ற தேர்தல். இந்த தேர்தலில் யார் அதிக இடங்களில் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் தான் ஆட்சிக்கு வர முடியும்.
மத்திய அரசின் மூலம் மாநிலத்தில் நிறைவேற்றக்கூடிய திட்டங்களை மத்திய அரசிடம் எடுத்துக் கூறி அந்தந்த மாநிலங்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 2021-ல் தான் தேர்தல் நடைபெறும்.
ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஏதோ, தமிழ்நாடு சட்ட மன்றத்திற்கு தேர்தல் நடைபெறுவது போல எண்ணிக்கொண்டு, மாநில அளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களை செயல்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
நான் முதலமைச்சராக இருக்கும் போது ஸ்டாலின் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை எவ்வாறு நிறைவேற்ற முடியும். வாக்காளர் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக இது போன்ற நிறைவேற்ற முடியாத தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். காவிரி பிரச்சினைக்காக தி.மு.க. ஒரு துரும்மைக் கூட கிள்ளிப் போடவில்லை.
ஆனால் தி.மு.க. தான் காவிரி பிரச்சினைக்கு குரல் கொடுத்தது என பொய் பிரசாரம் செய்து வருகிறார் ஸ்டாலின். எந்த கட்சி காவிரி பிரச்சினைக்காக குரல் கொடுக்கிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். இந்தப் பகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. தொழிலாளர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ரூ.2000 சிறப்பு நிதி வழங்கப்படும் என அறிவித்து திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததால் ரூ.2000 வழங்கும் திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். #EdappadiPalanisamy
இந்த ஒப்பந்தத்தில் தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதன் மூலம் முறை கேடுகள் நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
ரபேல் ஒப்பந்த விவகாரம் பற்றி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் ஒப்பந்த ஆவணங்களை ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட், எந்த முறைகேடும் நடந்து இருப்பதாக தெரியவில்லை என்று கூறியது. இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சில ரகசிய ஆவணங்களை ஒரு ஆங்கில நாளிதழ் வெளியிட்டது.
அந்த ஆவணங்கள் அடிப்படையில் ரபேல் ஒப்பந்தம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் பாஜக முன்னாள் மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண்ஷோரி ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் புதிய ஆவணங்கள் அடிப்படையில் மறு ஆய்வு விசாரணை நடத்தலாம் என்று கடந்த வாரம் அறிவித்தது.

இந்த மறு ஆய்வு விசாரணை எப்போது நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தபடி உள்ளனர்.
இதற்கிடையே ராகுல் காந்தி தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் மோடியை மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்து பேசி வரு கிறார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் மோடியை திருடன் என்று சுப்ரீம்கோர்ட் நீதிபதியே கூறி விட்டார் என்றும் ராகுல் பேசி வருகிறார்.
அதுமட்டுமின்றி ராகுல் காந்தி ரபேல் போர் விமானம் வாங்க ஒதுக்கீடு செய்த பணத்தை எடுத்து தொழில் அதிபர்களிடம் கொடுத்துவிட்டதாகவும், பொதுக்கூட்டங்களில் கூறி வருகிறார். ராகுலின் இந்த பேச்சுக்கு பாஜக மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர்.
டெல்லி தொகுதி பாஜக எம்.பி. மீனாட்சி லேகி கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரீம்கோர்ட்டில் ராகுலுக்கு எதிராக ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் அவர், “ரபேல் குறித்த உத்தரவில் பிரதமர் மோடியை பற்றி நீதிபதி எதுவும் கூறாத நிலையில் அந்த உத்தரவை ராகுல் திரித்து கூறி வருகிறார். இது மிகப்பெரிய நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ராகுல் பொய் சொல்லி பிரசாரம் செய்வதற்கு சுப்ரீம்கோர்ட் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
அதுபோல் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து ராகுல் மீது புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள், “ராகுல் தேவையில்லாமல் பிரதமரை மிகவும் தரக்குறைவாக பேசுகிறார். மோடி மீது அவர் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக பொய் சொல்லும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில் பாஜக எம்.பி. மீனாட்சி லேகி தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ்கண்ணா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணை நடத்தப்பட்டது.
பெண் எம்.பி. சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோதகி ஆஜராகி வாதாடினார். அவர், “பிரதமரை நீதிபதியே திருடன் என்று கூறி விட்டார் என ராகுல் பொய் பிரசாரம் செய்து வருகிறார். இது கோர்ட்டு அவமதிப்பு ஆகும்” என்று வாதாடினார்.
ரபேல் ஒப்பந்தம் மறு ஆய்வு விசாரணை குறித்து சுப்ரீம்கோர்ட் தெளிவான கருத்தை தெரிவித்து உள்ளது. ஆனால் பொதுக்கூட்டங்களிலும், பத்திரிகையாளர்களிடமும் ராகுல்காந்தி தவறாக பேசி இருப்பது இந்த கோர்ட்டுக்கு தெரிய வந்துள்ளது.
பிரதமர் பற்றி எந்த ஒரு கருத்தையும் இந்த கோர்ட் தெரிவிக்கவில்லை என்பதை நாங்கள் தெளிவாக தெரிவித்துக் கொள்கி றோம். எனவே ராகுல் இந்த விவகாரத்தில் வரும் 22ம் தேதிக்குள் உரிய விளக்கத்தை கோர்ட்டுக்கு அளிக்க வேண்டும்.
இதற்காக ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அறிந்ததும் பாஜக பெண் எம்.பி. மீனாட்சி லேகி மகிழ்ச்சி அடைந்தார். அவர் கூறுகையில், “ராகுல் வேண்டுமென்றே கோர்ட் சொல்லாததை நாட்டு மக்களிடம் தவறாக பரப்பி வருகிறார். ஊடகங்களில் அவர் பேசியதை கோர்ட் கவனித்து இருக்கும். கோர்ட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார். #RahulGandhi #SupremeCourt
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை இடைத்தேர்தலிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது.
அந்த கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியவை அச்சிடப்பட்ட பேப்பர்கள் ஓட்டுவது வழக்கம்.
அப்படி ஓட்டப்பட்ட நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னம் தெளிவாக இல்லை என்று அந்த கட்சி புகார் தெரிவித்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு எந்த பலனும் இல்லை.

இந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரத்தில் தங்களது சின்னம் தெளிவாக இருக்கு மாறு செய்ய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி நாம் தமிழர் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
அந்த கட்சியின் பொதுச் செயலாளர் என்.சந்திரசேகரன் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. #NaamThamizharKatchi #LokSabhaElections2019
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய மோடி இதுவரை கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றியதில்லை. இந்த நிலையில் தான் மீண்டும் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டியிருக்கிறது.
கடந்த ஐந்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் ஜூன் 2018 நிலவரப்படி 4.27 கோடி பேர் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். ரெயில்வே துறையில் 90 ஆயிரம் கேங் மேன், ஸ்விட்ச்மேன் போன்ற வேலைகளுக்கு 2 கோடியே 80 லட்சம் பேர் மனு செய்திருக்கிறார்கள். மத்திய அரசில் 18 பியூன் வேலைக்கு 12,453 பேர் மனு செய்திருக்கிறார்கள். இதில் 129 பொறியியல் பட்டதாரிகள், 23 சட்டம் படித்தவர்கள், 323 சட்ட மேற்படிப்பு படித்தவர்கள் அடங்குவர். தகுதியானவர்கள், தகுதிக்கு குறைவான வேலைக்கு மனு செய்ய வேண்டிய அவலநிலைக்கு யார் பொறுப்பு?
விவசாயிகளின் விளை பொருளுக்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைவாகவே சந்தையில் விற்கப்படுகிறது. அதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு, கடன்சுமை அதிகரித்துள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அறிவித்தார். இதனால் கருப்புப் பணமோ, கள்ளப் பணமோ, பயங்கரவாதமோ ஒழிந்ததாக தெரியவில்லை. செல்லாது என அறிவிக்கப்பட்ட மொத்த தொகையில் 99 சதவீதம் வங்கிகளுக்கு திரும்ப வந்து விட்டது. ரூபாய் 4 லட்சம் முதல் 5 லட்சம் கோடி வரை கருப்பு பணம் இருப்பதாக கருதியே மோடி இதை அறிவித்தார். ஆனால் அறிவிப்பினால் எந்த பலனும் ஏற்படவில்லை. அப்பாவி மக்கள் 140 பேர் உயிரை இழந்தனர். 35 லட்சம் வேலைகள் பறிபோயின. ஆயிரக்கணக்கான சிறு தொழில்கள் மூடப்பட்டன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூபாய் 2.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

பா.ஜ.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களில் முதன்மை இடத்தில் இருப்பது ரபேல் விமான கொள்முதல் ஊழல். காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடி என 126 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு எவரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக பேரம் பேசியதன் விளைவாக வாங்கப்பட்ட விமானத்தின் விலை ரூ.1670 கோடி. மூன்று மடங்கு விலை உயர்வினால் அரசுக்கு இழப்பு ரூ.41 ஆயிரம் கோடி. பாராளுமன்றம், நீதித்துறை, அமைச்சரவை, மத்திய ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வுத்துறை, தேர்தல் ஆணையம், மத்திய கண்காணிப்பு ஆணையம் ஆகிய அமைப்புகள் மோடியின் எதேச்சதிகார நடவடிக்கையினால் தன்னாட்சி உரிமையை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றன.
சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாக்குதல் தொடர்கிறது. தலித் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. வன்முறையினால் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களிடையே பாதுகாப்பற்ற தன்மை அதிகரித்துள்ளது. மதக்கலவரங்களினால் பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை. எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சிந்தனையாளர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். தமிழகத்திலுள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களின் எதிர்கால நலனுக்கு உலை வைக்கிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு நீட் தேர்வை திணித்தது.
மத்திய -மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கிற்கு முடிவுகட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களின் சின்னங்களுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டுமென்று முன்மொழிந்திருக்கிறார். அதேபோல, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சராக வேண்டுமென்ற விருப்பத்தை ராகுல் காந்தி வெளியிட்டிருக்கிறார். இதனடிப்படையில் தமிழக வாக்காளர்கள் வாக்களித்து மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுகிறேன்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அடுத்த எடக்குப்பம் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரி லெனின் தலைமையினான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதி வழியாக வந்த ஒரு ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் 12 மூட்டைகள் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். உடன் லெனின் தலைமையிலான அதிகாரிகள் அந்த ஆட்டோவை குட்கா மூட்டைகளுடன் பறிமுதல் செய்து விருத்தாசலம் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். தாசில்தார் கவியரசு அதிகாரி லெனினிடம் காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
உடன் விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் விருத்தாசலம் போலீசார் பறிமுதல் செய்த இடம் விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதிக்கு அப்பாற்பட்ட இடம் எனக் கூறினார்கள். இதனால் நிலையான கண்காணிப்புக்குழு ஆலடி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் விளாங்காட்டூர் தாமோதரனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர். #Gutkhaseized #LSPolls
பாராளுமன்ற தேர்தல் மற்றும் பெரம்பலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலையொட்டி சென்னையில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பெரம்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் சீதாராம் நகர் 7-வது தெருவில் உள்ள முத்தமிழ் நகர் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் சிலர் வாக்காளர்களுக்கு மிட்டாய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசுப் பெட்டியை கொடுப்பதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
பறக்கும்படை அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதற்காக 210 பரிசுப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக அ.ம.மு.க.வை சேர்ந்த மணிவண்ணன், வட்டச் செயலாளர் மாதவன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Loksabhaelections2019 #AMMK
ரிஷிவந்தியம்:
தேர்தல் நிலையகண் காணிப்பு குழு அலுவலர் தனபால் தலைமையிலான குழுவினர், விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே புதுபேட்டை கிராமத்தில் வாகன சோதனை மேற் கொண்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த புதுபேட்டையை சேர்ந்த ராஜேந்திரன், என்பவர் உரிய ஆவணமில்லாமல் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை சங்கராபுரம் தாசில்தார் பாண்டியனிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் ரிஷிவந்தியம் பறக்கும்படை அலுவலர் சாமிதுரை தலைமையில் மணலூர் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் அதிரடிபடையினர் வாகன சோதனை நடத்தினர்.
மோட்டார் சைக்கிளில் வந்த பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த மாணிக்கம், வெங்கடேசன் ஆகியோரிடம் சோதனை செய்தனர். அவர்கள் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்து, சங்கராபுரம் தாசில்தார் பாண்டியனிடம் ஒப்படைத்தனர்.
பண்ருட்டி தொகுதி பறக்கும் படை தேர்தல் அலுவலர் கல்யாணசுந்தரம் தலைமையில் பறக்கும் படை போலீசார் ஜெயக்குமார், வெங்கடேசன் ஆகியோர் வானமாதேவி அணைக்கட்டு பகுதியில் தீவிர வாகன சோதனை செய்தனர்.
அப்போது அவ்வழியே வந்த குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த சரவணக்குமார் என்பவரின் மோட்டார் சைக்கிளில் எந்தவித ஆவணமின்றி 1 லட்சத்து 19 ஆயிரம் 980 ரூபாய் இருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை பறக்கும்படையினர் பண்ருட்டி தாசில்தார் கீதாவிடம் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு நேற்று குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பாரதிய ஜனதா கட்சியையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார். குறிப்பாக பிரதமர் மோடி, ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து அவர் பொய் மட்டுமே கூறிவருகிறார். மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று குஷ்பு கூறினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய மந்திரியும், கன்னியாகுமரி தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி பொய் பேசுவதாக கூறும் சகோதரி குஷ்பு, சமீபத்தில் அவரிடம் தவறு செய்தவர் யார் என்பதை இதுவரை வெளிப்படுத்தவில்லை.
பிரதமர் மோடி கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு என்ன செய்தார்? என்பது இங்குள்ள வாக்காளர்களுக்கு தெரியும். இம்மாவட்டத்தில் நடந்த வளர்ச்சி திட்டங்கள் அதற்கு பதிலாக அமையும்.
ராகுல் காந்தி பிரதமராக வந்தால் தான் மாற்றம் ஏற்படும் என்று குஷ்பு சொல்வது உண்மைதான். அவர் பிரதமர் ஆனால் இப்போது விழித்து இருக்கும் மக்கள் அனைவரும் தூங்கி விடுவார்கள்.
உலக நாடுகளின் தலைவர்கள் முன்பு தலை நிமிர்ந்து பேசியவர் தான் பிரதமர் மோடி. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்தவர்கள் யாராவது இவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று இவர்களால் கூறமுடியுமா?

தேர்தல் ஆணையம் நடத்தும் சோதனைகளில் உள்நோக்கம் இருப்பதாகவும், பின் நோக்கம் இருப்பதாகவும் யாரும் நினைக்க வேண்டாம்.
நான் பிரசாரத்திற்கு சென்றபோது கூட தேர்தல் அதிகாரிகள் பல முறை என் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அவர்களுக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்தேன்.
பிச்சை எடுப்பவர்கள் பிச்சை போடுபவர்களை தர்ம பத்தினி என கூறுவார்கள். அதுவே அவர்கள் பிச்சை போடாவிட்டால் அவர்களை மூதேவி என்பார்கள்.
கூட்டணிக்கு அ.தி.மு.க.வை பா.ஜ.க. மிரட்டி பணிய வைத்ததாக குற்றச்சாட்டுகள் கூறும் மு.க. ஸ்டாலின் அதனை வேட்பு மனு தாக்கல் செய்த போதே கூறி இருக்க வேண்டும். தேர்தலுக்கு 3 நாட்கள் இருக்கும்போது கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #LoksabhaElections2019 #BJP #PonRadhakrishnan
கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து நேற்று குமரி மாவட்டத்தில் நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார். சுசீந்திரம், கொட்டாரம், நாகர்கோவில் ராமன் புதூர் உள்பட 15 இடங்களில் திறந்த ஜீப்பில் சென்று அவர் பேசினார்.
பாராளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நாளான வருகிற 18-ந்தேதி நீங்கள் ஓட்டுப்போடும் முன்பு கடந்த 5 ஆண்டு பாரதிய ஜனதா ஆட்சியில் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டு இருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்து வாக்களியுங்கள்.
பிரதமர் மோடி உங்கள் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக சொன்னாரே அதை அவர் செய்தாரா? 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக சொன்னாரே வேலை கிடைத்ததா? பாரதிய ஜனதா ஆட்சியில் 2 கோடி பேர் வேலை இழந்து உள்ளனர்.
பாரதிய ஜனதா தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. டெல்லியில் விவசாயிகள் 60 நாட்கள் போராடிய போதும் அவர்களை பிரதமர் பார்க்கவில்லை. பிரதமர் மோடி பணக்கார நண்பர்களுக்கு மட்டும்தான் பிரதமராக உள்ளார். இந்த ஆட்சியில் விலைவாசி எந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.
காங்கிரஸ் ஆட்சியின் போது 450 ரூபாயாக இருந்த கியாஸ் விலை இன்று 950 ரூபாய் அளவிற்கு உயர்ந்து விட்டது. கேபிள் டி.வி. கட்டணம் 150 ரூபாயில் இருந்து 350 ரூபாய் ஆகி விட்டது. அதிக பணம் கொடுத்தால் தான் எல்லா சேனல்களையும் பார்க்க முடியும். நீங்கள் விரும்பும் சேனல்களைக்கூட உங்களால் பார்க்க முடியாது.
பாரதிய ஜனதா ஆட்சியில் அவர்கள் சொல்வதைதான் நீங்கள் கேட்க வேண்டும். அவர்கள் சொல்வதைதான் நீங்கள் சாப்பிட வேண்டும். யாரை காதலிக்க வேண்டும், யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதைக்கூட அவர்கள்தான் சொல்வார்கள். ஒரு சர்வாதிகார ஆட்சியை நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

ஆட்சிக்கு வந்தபிறகு காங்கிரஸ் கட்சி சொன்னதை எல்லாம் நிறைவேற்றும். நாங்கள் சொல்வதைதான் செய்வோம், செய்வதைத் தான் சொல்வோம். மக்களின் குரலுக்கு மோடி செவிசாய்க்கவில்லை. ஆனால் ராகுல் மக்களின் தேவை அறிந்து செயலாற்றுவார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.72 ஆயிரம் உங்கள் வீடு தேடி வரும்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஊரக வேலை திட்டத்தில் ரூ.300 வழங்கப்படும். கல்விக்கடன், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். சிறு தொழில் தொடங்க வங்கியில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் கடன் வழங்கப்படும்.
இவ்வாறு குஷ்பு பேசினார். #LokSabhaelections2019 #Kushboo
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமாகி உள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு பறக்கும் படையினருடன் சேர்ந்து வருமான வரித்துறையினரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூரில் நடைபெற்ற சோதனையில் ரூ.11 கோடி பணம் சிக்கியது. சென்னை மற்றும் நாமக்கல்லில் கட்டுமான நிறுவனங்களில் நடந்த சோதனையில் ரூ.14 கோடி பணம் பிடிபட்டது.
இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதுபோன்று தமிழகம் முழுவதும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக பல்வேறு இடங்களில் கட்டு கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகளும், தேர்தல் பறக்கும் படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனைக்கு பயந்து பலர் தாங்கள் எடுத்துச் செல்லும் பணக்கட்டுகளை பஸ்களிலும், சாலைகளிலும் விட்டுச் செல்லும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
நேற்று ஒரே நாளில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கில் பணம் பிடிபட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வருமான வரித்துறையினரும், பறக்கும் படை அதிகாரிகளும் நடத்திய சோதனையில் ரூ.1.16 கோடி சிக்கியது.

கோவில்பட்டி அருகே உள்ள பீக்கிலிப்பட்டி பகுதியில் கலைமணி என்பவரின் தோட்டத்தில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பறக்கும் படையினர் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு மரத்தின் அடியில் ரூ.7½ லட்சம் மண்ணில் புதைக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டி ருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பணம் விளாத்திகுளம் உதவி தாசில்தார் ராஜ்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக இந்த பணத்தை அரசியல் கட்சியினர் பதுக்கி வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எட்டயபுரம் கருப்பூர் பகுதியில் அந்தோணிசாமி என்பவரின் பனை தோட்டத்தில் கருப்பட்டி தயாரிக்கும் குடிசையிலும் பணம் பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது. அட்டைப் பெட்டியில் ரூ.68 லட்சத்து 50 ஆயிரத்து 100 பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
49 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தோட்டத்து உரிமையாளர் அந்தோணிசாமியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும், மதுபாட்டில்களையும் அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி மெயின் ரோட்டில் வேகமாக வந்த காரை நிறுத்தினர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது.
இதையடுத்து அந்த காரை பறக்கும் படை அதிகாரிகள் விரட்டி சென்றனர். முதலில் ஊத்தாங்கரைவிளை ரோட்டில் சென்ற கார் பின்னர் மெயின்ரோட்டில் செல்ல முயன்றது. அதனை பறக்கும் படையினர் வழி மறித்து நிறுத்தினர். காரில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.40 லட்சம் இருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
காரில் வந்தது உடன்குடி கொட்டங்காட்டைச் சேர்ந்த வசீகரன், அவரது மகன் அஜீத் என்று தெரியவந்தது. வசீகரன் தி.மு.க. பொதுக் குழு உறுப்பினராக உள்ளார்.
அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.40 லட்சம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணம் வருமானவரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிவகங்கை மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கிராமத்தில் அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாக தகவல் வந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த ரூ. 12 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மானாமதுரை நாகலிங்க நகரைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் நமச்சிவாயம் வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்க பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கும் சோதனை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுபேட்டை கிராமத்தில் நடந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் எடுத்து செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ரிஷிவந்தியத்தில் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சம் சிக்கியது. பண்ருட்டியில் ரூ. 1 லட்சத்து 19 ஆயிரமும் கும்பகோணத்தில் செல்வம் என்பவர் மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்ற ரூ.2 லட்சத்து 5 ஆயிரமும் பிடிபட்டது.
கள்ளக்குறிச்சி அருகே வேங்கைவாடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்றுக்கொண்டிருந்த சிலர் தாங்கள் வைத்திருந்த பையை சாலை ஓரமாக வீசி விட்டு தப்பி ஓடினர். அந்த பையை எடுத்து போலீசார் சோதனை நடத்தியதில் ரூ.70 ஆயிரம் பணம் இருந்தது தெரிய வந்தது.
பணப்பையை போட்டு விட்டு தப்பி ஓடியவர்கள் யார் என்று விசாரணை நடந்து வருகிறது. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அரசியல் கட்சி பிரமுகர்கள் எடுத்து சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
குமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியில் வாகன சோதனையில் ரூ.87 ஆயிரம் பிடிபட்டது.
வாழப்பாடி அருகே தினகரன் கட்சி பிரமுகர் வீரமுத்து வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஆனால் பணம் எதுவும் பிடிபடவில்லை.
தேர்தல் நெருங்குவதையொட்டி வருமான வரித் துறையினரும், பறக்கும் படையினரும் நடத்தி வரும் இந்த சோதனை நாளையும், நாளை மறுநாளும் மேலும் தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #LokSabhaElections2019
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரதா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ஆசம் கான், “இங்கு 10 வருடங்களாக ஒருவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தார். ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன்” என்றார்.
ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும், ஆசம் கானின் கருத்து மிகவும் அருவருப்பான அவமானகரமான கருத்து என பாஜக செய்தித் தொடர்பாளர் சந்திர மோகனும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து ஆசம் கான் கூறிய சர்ச்சை கருத்து தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெயப்பிரதா கூறியதாவது:

ஆசம் நிச்சயமாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும். ஒரு வேளை அவர் வெற்றி பெற்றால் ஜனநாயகம் என்ன ஆகும்? என சிந்தியுங்கள். சமூகத்தில் பெண்களுக்கென இடமே கிடைக்காது. நாங்கள் உரிமைக்காக எங்கே போக வேண்டும்? நான் இறந்தால் நீங்கள் திருப்தியாக இருப்பீர்களா? இப்படி பேசியதால் நான் பயந்து ராம்பூரை விட்டு சென்றுவிடுவேன் என நீங்கள் நினைத்தால், நான் அவ்வாறு செய்யமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார். #AazamKhan #Jayaprada
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு வருகிற 18-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அத்துடன், தமிழகத்தில் காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காலியாக உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.



முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் தொகுதியிலும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடும் தேனி தொகுதியிலும், மு.க.ஸ்டாலின் மத்திய சென்னையிலும், டிடிவி தினகரன் காஞ்சிபுரம், தென்சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூரிலும், வைகோ சங்கரன்கோவில், புளியங்குடி மற்றும் தென்காசியிலும் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தர்மபுரி பாராளுமன்ற தொகுதியிலும், கமல் திருச்சி, கரூர் மற்றும் நாமக்கல் பகுதியிலும், சீமான் சென்னையிலும் இன்று தீவிர பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் தீவிர பிரசாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியுடன் ஒய்கிறது. வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஏற்கனவே 10 கம்பெனி (சுமார் 100 வீரர்கள்) துணை ராணுவப்படை வீரர்கள் தமிழகம் வந்து உள்ளனர். இந்தநிலையில் நேற்று மேலும் 150 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்தனர். வாக்குப்பதிவு நாள் நெருங்கி வருவதால், இறுதிக் கட்டத்தில் நடைபெறும் பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷன் தீவிரமாக கண்காணித்து வருகிறது. பறக்கும்படை அதிகாரிகள் மும்முரமாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
7 கட்டமாக நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் கடந்த 11-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 18-ம் தேதி நடைபெற உள்ள 2ம் கட்டத் தேர்தலில் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் (புதுவை) உள்ள 97 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #FinalCampaign






