என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டே நடத்திய துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்களை ஆட்சியில் இருந்து அகற்றவேண்டும் என்று நெல்லை, தூத்துக்குடியில் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். #ParliamentElection #KamalHaasan #MakkalNeedhiMaiam

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரசாரம் செய்தார். தூத்துக்குடி ஏ.வி.எம். கமல வேல் மகாலில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-

    தூத்துக்குடி என்றால் துப்பாக்கி சூடும், அரசின் அராஜகமும் தான் நினைவுக்கு வருகிறது. தூத்துக்குடியை பொறுத்தவரை ஆலை வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் மாசு ஏற்படுத்தும் தொழிற் சாலைகள் வேண்டாம். இங்கு மக்களுக்கு வந்த நோய்கள் அரசின் அஜாக்கிரதையால் வந்தது.

    மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று ஒரு கட்சி அனுமதி வழங்கியது. மற்றொரு கட்சி விரிவாக்கம் செய்ய மாசுகட்டுப்பாட்டு வாரியம் அனுமதி இல்லாமல் தொழிற்சாலையை இயங்க அனுமதித்தது. யார் பிரதமராக வந்தாலும் தமிழகத்தை நசுக்க முடியாது. 1,000 பேர் இறப்பதை தடுக்க 13 பேர் இறந்து உள்ளனர் என்று கூறுகிறார்கள். அவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டே துப்பாக்கி சூட்டை நடத்தியது. என்னை போன்றவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்து இருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது.


    நம் நாட்டின் காவல் தெய்வங்கள் ராணுவத்தினரை ஓட்டுக்காக அடையாளம் காட்டுகிறார்கள். அவர்களின் ரத்தத்தை வைத்து பிரதமர் ஓட்டு கேட்கிறார். அரசியல் மாண்பை மீட்டெடுக்க வந்த கட்சி மக்கள் நீதி மய்யம். எனக்கு பல சவால்கள் உள்ளன. எனக்கு ஓய்வு என்பதில் நம்பிக்கை இல்லை. நான் உழைத்தால் பார்ப்பதற்கு நீங்கள் இருக்கிறீர்கள். எனது எஞ்சிய வாழ்க்கை மக்களாகிய உங்களுக்காகத்தான். என் வாழ்வை ஏற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுடையதாகட்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் திறந்த காரில் நின்றவாறு  கமல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த தேர்தல் இந்திய நாட்டின் பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல் ஆகும். இதில் நெல்லை பாராளுமன்ற தொகுதியின் நிலை என்ன? டெல்லிக்கு சென்று கேள்வி கேட்டும் ஒரு பிரதிநிதியை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர் என்னோடு பிரசாரம் நடந்த இடத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் மக்கள் நீதிமய்யத்தை தத்தெடுத்து இருக்கிறார்கள்.

    நமது மக்களுக்கு தேசிய வியாதியாக மறதி உள்ளது. இன்று நடக்கும் பெரிய பிரச்சினைகளை நாளை மறந்து விடுகிறார்கள். அது அரசியல்வாதிகளுக்கு வசதியாக போய் விடுகிறது.

    தூத்துக்குடியில் கருணாநிதி மகளை விரட்டி அடித்து உள்ளனர். ஏனென்றால் ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டும் போது அந்த கட்சியினர் உடனிருந்து உள்ளனர். பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் அவர்கள் ஆட்டுகிறார்கள்.

    மற்றொரு கழகம் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சத்தம் போட்டால் வாயிலே சுடுமாறு கூறிஉள்ளது. தேவைப்பட்டால் ராணுவத்தை அனுப்புவதாகவும் கூறிஇருக்கிறார்கள். இந்த நிலை நெல்லைக்கும் வந்து விடக்கூடாது.

    இந்த தேர்தலில் புரட்சிக்கு பெயர் பெற்ற பாளையங்கோட்டை மக்கள் மீண்டும் ஓர் அமைதி புரட்சியை ஏற்படுத்த வேண்டும். வருகிற 18-ந்தேதி டார்ச்லைட் சின்னத்தை வெற்றி பெறச்செய்யுங்கள். முதன் முறையாக ஓட்டு போடும் இளைஞர்கள் நல்ல திசையை நோக்கி தமிழகத்தை நகர்த்த ஓட்டு போடுங்கள். வருகிற 18-ந்தேதி மக்கள் நீதிமய்யத்தை வெற்றி பெறச்செய்ய புறப்படுங்கள். இதை செய்தால் நாளை நமதே, வெற்றியும் நமதே.

    இவ்வாறு அவர் பேசினார். #ParliamentElection #KamalHaasan #MakkalNeedhiMaiam

    கும்பகோணத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    கும்பகோணம்:

    தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் அரசு அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படை அமைத்து 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை தொகுதியிலும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கும்பகோணத்தை அடுத்த அண்ணலக்கிரஹாரம் மாத்தி கேட் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி உஷா தலைமையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 44) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரது வாகனத்தை நிறுத்தி பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் அவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் எடுத்து செல்வது தெரியவந்தது. அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தாசில்தார் நெடுஞ்செழியனிடம் ஒப்படைத்தனர்.

    செல்வத்திடம் நடத்திய விசாரணையில் அவர் வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாகவும், தன்னிடம் கடன் பெறுபவர்களுக்கு பணத்தை கொடுக்க எடுத்து சென்றதாக கூறினார். அவரிடம் உரிய ஆவணம் இல்லாதததால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தாசில்தார் மூலம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது. #LokSabhaElections2019

    ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை என்றும், அப்படி பேசியதாக நிரூபித்தால் தேர்தலில் இருந்து விலக தயாராக இருப்பதாகவும் ஆசம் கான் விளக்கம் அளித்துள்ளார். #LokSabhaElections2019 #AzamKhan
    ராம்பூர்:

    உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ஆசம் கான் பேசும்போது, ஜெயப்பிரதா குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரதா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ஆசம் கான், “இங்கு 10 வருடங்கள் ஒருவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தார். ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன்” என்றார்.

    ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்தை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் கண்டித்துள்ளார். சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் கூறினார்.



    இந்நிலையில் பிரசாரத்தின்போது பேசியது குறித்து ஆசம் கான் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    பாஜக வேட்பாளர் ஜெயப்பிரதா குறித்து நான் ஆட்சேபனைக்குரிய வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை.

    வேறு ஒருவரைப் பற்றி நான் பேசினேன். தன்னிடம் 150 துப்பாக்கிகள் இருப்பதாகவும், ஆசம் கானைப் பார்த்தால் சுட்டுக்கொல்வேன் என்றும் கூறிய ஒருவரின் உண்மையான முகத்தை மக்கள் அறிந்துகொண்டார்கள் என்று பேசினேன். அவர் ஆர்எஸ்எஸ் கால்சட்டை அணிந்தவர் என்பது இப்போது தெரியவந்துள்ளது. கால்சட்டை என்பது ஆண்கள் அணிவது.

    நான் இந்த தொகுதியில் 9 முறை எம்எல்ஏவாக இருந்தவன். மந்திரியாகவும் பதவி வகித்துள்ளேன். என்ன பேச வேண்டும் என்பது எனக்கு தெரியும். யாருடைய பெயரையாவது நான் குறிப்பட்டு அவமதிக்கும் வகையில் பேசியதாக நிரூபித்தால், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிவிடுவேன். ஊடகங்கள் எனது கருத்தை திரித்து கூறிவருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகை ஜெயப்பிரதா 2004 மற்றும் 2009 பொதுத்தேர்தலில் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக 2010ல் அவர் நீக்கப்பட்டார். அதன்பின்னர் சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #AzamKhan

    தமிழின படுகொலைக்கு காரணமாக இருந்த தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார். #LokSabhaElections2019 #PremalathaVijayakanth
    விழுப்புரம் :

    விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து நேற்று விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், திறந்த வேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அமைந்த ஒரு ராசியான கூட்டணிபோல் தற்போது இந்த பாராளுமன்ற தேர்தலிலும் ராசியான கூட்டணி அமைந்துள்ளது. இது மெகா கூட்டணி. மோடி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக ஆட்சி அமைக்கப் போவது உறுதி.



    நம்மை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மக்களால் புறக்கணிக்கப்பட்ட கூட்டணி. தமிழின படுகொலைக்கு காரணமாக இருந்த தி.மு.க., காங்கிரசுக்கு ஒட்டுமொத்த மக்களும் ஓட்டுப்போட மாட்டார்கள். நம் தொப்புள்கொடி உறவுகளின் இனப்படுகொலைக்கு காரணமாக இருந்தது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி என்பதை தமிழக மக்கள் மறக்கவில்லை. இந்த தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.

    தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி என்றாலே ஊழல் கூட்டணி. 2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் இப்படி அனைத்திலும் ஊழல் செய்த கூட்டணி. விஜயகாந்தை தொட்டவர்களின் கதி என்னவென்று துரைமுருகனை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் செஞ்சி நான்குமுனை சந்திப்பில் ஆரணி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை ஆதரித்து திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், பெண்கள் நன்றாக இருக்க வேண்டும். பெண்கள் நல்லா இருந்தால் இந்த வீடு நல்லா இருக்கும். மேலும் ஆரணி தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற செஞ்சி ஏழுமலைக்கு இரட்டை சிலை சின்னத்தில் வாக்களித்து அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்றார். #LokSabhaElections2019 #PremalathaVijayakanth
    முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும், தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதருமான ராகுல் டிராவிட் இந்த முறை தேர்தலில் வாக்களிக்க முடியாது என தெரிய வந்துள்ளது. #LokSabhaElections2019 #RahulDravid
    பெங்களூரு:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது கர்நாடகா மாநிலத்தில்  இந்திரா நகர் எனும் பகுதியில்  வசித்து வந்தார். அதன்பின்னர் இடம் மாறிய ராகுல், தற்போது சாந்தி நகர் பகுதியில் வசிக்கின்றார்.

    ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மாற்றம் செய்தால் அந்த இடத்தின் முகவரியை வாக்காளர், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது வழக்கம். ஆனால் ராகுல் அவ்வாறு செய்யவில்லை.



    இதையடுத்து தேர்தல் ஆணைத்தின் சார்பில் அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு இது குறித்து விசாரிக்க 2 முறை   நேரடியாக சென்றுள்ளனர்.  ஆனால்  ராகுல் வெளிநாடு சென்றிருந்ததால்  வீட்டில் நுழைய அனுமதி தரப்படவில்லை.அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

    ராகுல் ஸ்பெயினில் இருந்தார். வாக்களிக்க வேண்டி கர்நாடகா வருவதற்கு ஆர்வத்துடன் இருந்தார்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுவிட்டது.

    இது குறித்து சிறப்பு தேர்தல் தலைமை அதிகாரி ரமேஷ் கூறுகையில்,  ‘வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க கடந்த மார்ச் 16ம் தேதிக்குள் படிவம் 6 சமர்ப்பித்திருக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்காவிட்டால் எதுவும் செய்ய முடியாது. ராகுல் சமர்ப்பிக்க தவறிவிட்டார். எனவே அவரது பெயர் நீக்கப்பட்டது’ என கூறினார்.

    கர்நாடகா மாநிலத்தில்  தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக ராகுல் டிராவிட் இருப்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #RahulDravid
    நடிகையும் பாஜக வேட்பாளருமான ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆசம் கானுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. #AazamKhan #LokSabhaElections2019
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரதா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ஆசம் கான், “இங்கு 10 வருடங்கள் ஒருவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தார் . ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன்” என்றார்.



    ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்து மிகவும் அருவருப்பான அவமானகரமான கருத்து என பாஜக செய்தித் தொடர்பாளர் சந்திர மோகன் கண்டித்தார். இதைவிட தரம் தாழ்ந்த அரசியல் இருக்க முடியாது என்றும், சமாஜ்வாடி கட்சியின் உண்மையான முகத்தை இது காட்டுவதாகவும் அவர் கூறினார்.

    ஆசம் கானின் கருத்தை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் கண்டித்துள்ளார். சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் கூறினார்.

    ஆனால், காக்கி என்று ஆசம் கான் குறிப்பிட்டது, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அணியும் அரைக்கால் சட்டை என சமாஜ்வாடி கட்சி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #AazamKhan #LokSabhaElections2019
    சபரிமலை விவகாரத்தில் மோடி பொய் கூறுவது மட்டுமின்றி, இரட்டை வேடமும் போடுவதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம்சாட்டி உள்ளார். #PinarayiVijayan #Sabarimala #PMModi
    திருவனந்தபுரம் :

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிராக கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளா முழுவதும் பெரும் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. தற்போது இந்த பிரச்சினை அடங்கி இருக்கும் நிலையில், பா.ஜனதா போன்ற அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை தங்கள் பிரசாரத்தில் பயன்படுத்தி வருகின்றன.

    குறிப்பாக தமிழகத்தில் சமீபத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆபத்தான விளையாட்டில் ஈடுபடுவதாக புகார் கூறினார். சபரிமலை விவகாரத்தில் போராடிய பக்தர்களை கேரள அரசு சிறையில் அடைத்திருப்பதாக குற்றம் சாட்டிய அவர், இந்துக்களின் கலாசாரம் மற்றும் நம்பிக்கையை மாநில அரசு சீரழிப்பதாக தெரிவித்தார்.

    இவ்வாறு சபரிமலை விவகாரத்தில் மாநில அரசை குற்றம் சாட்டிய பிரதமர் மோடிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்து உள்ளார். கொல்லத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    சபரிமலை விவகாரத்தில் மோடி கூறியிருப்பது முற்றிலும் பொய். இதுபோன்ற ஒரு தவறான கருத்தை பிரதமர் எப்படி கூற முடியும்? சபரிமலை விவகாரத்தில் யாராவது கைது செய்யப்பட்டால், அவர்கள் சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு இருப்பார்கள்.



    மற்ற மாநிலங்களில் சங் பரிவார் அமைப்பு தொண்டர்கள் சிறைக்கு செல்லாமல் இருக்கலாம் அல்லது பிரதமரின் தலையீடு காரணமாக அவர்களுக்கு எதிராக எந்த வழக்கும் இல்லாமல் இருக்கலாம். இதில் பிரதமரின் தயவுக்கு நன்றி. ஆனால் கேரளாவில் அது நடக்காது. யார் எந்த தவறு செய்தாலும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

    சபரிமலை விவகாரத்தில் மோடி பொய் கூறுவது மட்டுமின்றி, இரட்டை வேடமும் போடுகிறார். சபரிமலையில் கடந்த ஆண்டு உச்சக்கட்ட போராட்டம் நடந்து கொண்டிருந்த போது, அங்கே 144 தடை உத்தரவு போடக்கூறியது மத்திய அரசுதான். அதைப்போல அங்கு போராட்டத்தை கட்டுப்படுத்த மத்திய படைகளை அனுப்பவும் அவர்கள் முன் வந்தார்கள். அப்படி கூறியவர்கள் தற்போது மாநில அரசு மீது பழிபோடுகிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக சபரிமலை விவகாரத்தையோ, ஐயப்ப சுவாமியின் பெயரையோ கட்சியினர் பயன்படுத்தக்கூடாது என மாநில தலைமை தேர்தல் கமிஷனர் தீகரம் மீனா கூறி இருக்கிறார். எனவே இந்த விவகாரத்தை தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தி இருக்கும் பிரதமர் மீது தேர்தல் நடத்தை விதி மீறல் நடவடிக்கை எடுக்கவும் முடியும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு பினராயி விஜயன் கூறினார். #PinarayiVijayan #Sabarimala #PMModi
    பிரதமர் மோடியையும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவையும் தோற்கடிக்க எதுவும் செய்வோம். அவர்களை தோற்கடித்து, அவர்களிடம் இருந்து நாட்டை காப்பதற்கான எங்களது முயற்சி தொடரும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். #ArvindKejriwal #PMModi
    புதுடெல்லி :

    முதல்கட்ட தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது குறித்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாடு தற்போது ஆபத்தில் உள்ளது. பிரதமர் மோடியையும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவையும் தோற்கடிக்க எதுவும் செய்வோம். அவர்களை தோற்கடித்து, அவர்களிடம் இருந்து நாட்டை காப்பதற்கான எங்களது முயற்சி தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடிக்கிறது. டெல்லியில் மட்டும் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. ஆனால், ஆம் ஆத்மியோ அரியானா மாநிலத்திலும் கூட்டணி அமைக்க விரும்புகிறது. இந்த கருத்து வேறுபாடு காரணமாக, டெல்லியில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று காங்கிரஸ் பொறுப்பாளர் பி.சி.சாக்கோ கூறியுள்ளார்.

    நேற்றைய கூட்டத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கலந்துகொண்ட காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வியிடம் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், “காங்கிரசின் நிலைப்பாடு உங்களுக்கு தெரியும். டெல்லியில் ஏறக்குறைய முடிவு செய்துவிட்டோம். ஆனால், கூட்டணியை பிற மாநிலங்களுடன் இணைப்பது சரியல்ல” என்று கூறினார். #ArvindKejriwal #PMModi
    எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் எனது மகன் அபிஷேக் கவுடா, நடிகர்கள் தர்ஷன், யஷ் ஆகியோர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்வதாக நடிகை சுமலதா குற்றம் சாட்டியுள்ளார். #ActressSumalatha #Mandya
    மண்டியா :

    கர்நாடக மாநிலம் மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சுயேச்சையாக நடிகை சுமலதா அம்பரீஷ் களமிறங்கியுள்ளார். இந்த நிலையில் மண்டியாவில் பிரசாரம் செய்த நடிகை சுமலதா பேசியதாவது:-

    எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் எனது மகன் அபிஷேக் கவுடா, நடிகர்கள் தர்ஷன், யஷ் ஆகியோரை அச்சுறுத்தும் வகையில் குமாரசாமி பேசி வருகிறார். எங்கள் மீது ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் எத்தகைய தாக்குதலும் நடத்த தயாராக உள்ளனர்.

    மேலும் எனது உயிருக்கும், எனது குடும்பத்தினருக்கும், நடிகர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மேலும் இறுதி பிரசார நாளான 16-ந் தேதி என் மீது கல்வீசி தாக்குதல் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். தனது மகன் நிகில் தேர்தலில் தோற்றுவிடுவார் என்ற பயத்தில் குமாரசாமி எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தி வருகிறார். எனவே எனது உயிருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #ActressSumalatha #Mandya 
    தொண்டர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விஜயகாந்த் இன்று (திங்கட்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். சென்னையில் 3 தொகுதிகளிலும் அவர் வேன் மூலம் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார். #DMDK #Vijayakanth
    சென்னை :

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலம் குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று, கடந்த பிப்ரவரி மாதம் சென்னை திரும்பினார். சாலிகிராமம் வீட்டில் ஓய்வில் இருந்த அவரை அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். உடல் நலக்குறைவு ஏற்பட்டபோதிலும், நாடாளுமன்ற தேர்தல், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்தும், கூட்டணி விஷயத்திலும் விஜயகாந்த் கவனம் செலுத்தினார்.

    அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட நேரத்தில் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த நேரத்தில், தன்னால் பேச இயலவில்லை என்பதை நிருபர்களுக்கு கை சைகை மூலம் விஜயகாந்த் வெளிப்படுத்தினார்.

    அதேநேரத்தில், தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் விஜயகாந்த், பிரசார கூட்டங்களில் கலந்துகொள்ளாதது தே.மு.தி.க.வினர் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அவர்களின் ஏமாற்றத்தை போக்கும் வகையில் விஜயகாந்த் சார்பாக அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன் விஜய பிரபாகரன், மைத்துனர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.



    இந்தநிலையில், தான் நன்றாக இருப்பதாகவும், விரைவில் அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாகவும், இந்த தேர்தல் தர்மத்துக்கும்-அதர்மத்துக்கும் இடையே நடப்பதாகவும், இதில் தர்மம் வெற்றி பெறும் என்றும், 40 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற தே.மு.தி.க. தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றும் விஜயகாந்த் வீடியோ மூலம் கேட்டுக்கொண்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, அக்கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    இருப்பினும் விஜயகாந்த் எப்போது தேர்தல் பிரசாரத்திற்கு வருவார்? என்ற எதிர்பார்ப்பு மட்டும் தே.மு.தி.க.வினர் மனதில் இருந்து நீங்காத குறையாக இருந்தது. தேர்தல் பிரசாரம் நாளை ஓயும் நிலையில், விஜயகாந்த் சென்னையில் 3 தொகுதிகளிலும் இன்று (திங்கட்கிழமை) பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான அறிவிப்பை தே.மு.தி.க. நேற்று வெளியிட்டது. இந்த அறிவிப்பை கேட்டு தே.மு.தி.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    அதன்படி, வட சென்னை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன், மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் சாம்பால் ஆகியோரை ஆதரித்து அவர் வாக்கு சேகரிக்க உள்ளார்.

    3 தொகுதிகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் விஜயகாந்த் வேன் மூலம் பிரசாரம் செய்ய இருக்கிறார். இன்று மாலை 4 மணிக்கு மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கம் பகுதியில் விஜயகாந்த் பிரசாரத்தை தொடங்குகிறார். அதனை தொடர்ந்து வட சென்னை தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூர், மூலக்கடை, கொடுங்கையூர் கண்ணதாசன் நகர், திரு.வி.க. நகர் ஆகிய பகுதிகளில் அவர் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். அதனை தொடர்ந்து தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதியில் விஜயகாந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். #DMDK #Vijayakanth
    அசாமில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரியங்கா காந்தி, உலகத்தை சுற்றிவரும் மோடி வாரணாசியில் உள்ள மக்களுடன் சில நிமிடமாவது செலவிட்டுள்ளாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். #LokSabhaElections2019 #Congress #PriyankaGandhi #PMModi
    திஸ்பூர்:

    பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டம் கடந்த 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்திக்கு அக்கட்சியில் பொது செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கிழக்கு பகுதி தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்ப்ட்டு உள்ளார்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பிரியங்கா காந்தி இன்று அசாம் மாநிலம் சென்றார். அவரை காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர்.

    இதையடுத்து, அசாம் மாநிலம் சிலிசார் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    பிரதமர் நரேந்திர மோடி உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். ஆனால் அவர் வாரணாசியில் உள்ள எந்த குடும்பத்தினருடன் சில நிமிடங்களாவது தங்கியுள்ளாரா?

    இன்று மகா புருஷர் அம்பேத்கர் பிறந்த தினம். அரசியலமைப்பை உருவாக்கியவர். அனைத்து தலைவர்களும்
    அரசியலமைப்புக்கு உரிய மரியாதை அளித்து வருகின்றனர். ஆனால், தற்போது அரசியலமைப்பை அழிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார். #LokSabhaElections2019 #Congress #PriyankaGandhi #PMModi
    தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சோழிங்க நல்லூர் பகுதிக்கு உட்பட்ட மா. பொ.சி நகர் பகுதியில் பிரசாரம் தொடங்கி வீதிவீதியாக வாக்கு சேகரித்தார். #LokSabhaElections2019


    தென் சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சோழிங்க நல்லூர் பகுதிக்கு உட்பட்ட மா. பொ.சி நகர் பகுதியில் பிரசாரம் தொடங்கி வீதிவீதியாக வாக்கு சேகரித்தார். அப்போது தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது:-

    “இந்த மண்ணின் மகள் நான், இதே பகுதியில் இருக்கும் நீலாங்கரையில் தான் என் வீடு உள்ளது. நீங்கள் எந்த பிரச்னைக்காகவும் என்னை அணுகலாம், உங்களுக்கு உழைப்பதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள், நம் பகுதி பிரச்னை என்னவென்று எனக்கு நன்றாகவே தெரியும். குடிநீரும், போக்குவரத்து பிரச்சனை தான் இந்த பகுதியில் பிரதானப்பிரச்சனைகள்.

    இந்த பிரச்னைகளை நிரந்தரமாக தீர்பதற்கான திட்டங்கள் என்னிடம் உள்ளது. என்று பேசினார். நைனார் குப்பம் வந்தபோது உத்தண்டி 4-வது வார்டு முன்னாள் உறுப்பினர் குணசேகர் தலைமையில் வரவேற்றனர்.

    அதே பகுதியில் இதயதுல்லா, மவுலானா, மீரான் மொய்தீன், உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழச்சி தங்கபாண்டியனை வரவேற்று ஆதரவை தெரிவித்தனர். மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., பெருங்குடி ரவி அரவிந் ரமேஷ் எம்.எல்.ஏ, வட்டசெயலாளர் ராஜேந்திரன், பிரதீப், ம.தி.மு.க. கழக குமார் உள்ளிட்டவர்கள் வேட்பாளருடன் வாக்கு கேட்டு சென்றனர். #LokSabhaElections2019

    ×