என் மலர்
தேர்தல் செய்திகள்

பாராளுமன்ற-சட்டசபை தேர்தல்களில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அதிகமாக உள்ளது.
இது சம்பந்தமாக ஜனநாயக மறுசீரமைப்பு என்ற அமைப்பு மற்றும் ஆர்.ஏ. ஆஸ்டரைஸ் கம்ப்யூட்டிங் நிறுவனம், டேட்டா சொலிஷன் நிறுவனம் ஆகியவை இணைந்து மாநிலம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், புதுவையில் 43 சதவீத மக்கள் காசு வாங்கி கொண்டு அதற்கு தகுந்த மாதிரி ஓட்டு போடுவதாக தெரிவித்தனர்.

காசு வாங்கி கொண்டு ஓட்டு போடுவது சட்டப்படி குற்றம் என்று 65 சதவீதம் பேர் தெரிவித்தனர். 39 சதவீதம் பேர் பணம் பெறுவதில் தவறு இல்லை என்றும், பணத்துக்கு ஈடாக நாங்கள் ஓட்டு போட்டு விடுகிறோம் என்று கூறினார்கள்.
மேலும் இந்த ஆய்வில் குறிப்பிட்ட வேட்பாளர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களுக்கு உதவி செய்தால் போதாது, தொடர்ந்து அவர்கள் உதவி செய்தால் தான் மக்களின் ஆதரவை தக்க வைக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது.
மக்களின் வாக்குகளை பெறுவதற்கு முதல்-அமைச்சரின் செயல்பாடு அவசியமானது என்று 46 சதவீதம் பேர் கூறினார்கள். அதில் 36 சதவீதம் பேர் முதல்-அமைச்சரின் செயல்பாடு மிக, மிக முக்கியம் என்று தெரிவித்தனர்.
67 சதவீத வாக்காளர்கள் வேட்பாளரின் தகுதியை முக்கியமாக வைத்துதான் ஓட்டு போடுவோம் என்று தெரிவித்தனர்.
அதில், 12 சதவீதம் பேர் வேட்பாளர் தகுதி மிக முக்கியமானது என்று கூறினர். 46 சதவீதம் பேர் எந்த கட்சி வேட்பாளர் என்பதை பார்த்து ஓட்டு போடுவதாக கூறினார்கள்.
82 சதவீத வாக்காளர்கள் தன்னிச்சையாக சிந்தித்து ஓட்டு போட முடிவை எடுப்பதாக தெரிவித்தனர். 9 சதவீதம் பேர் தனது கணவர் அல்லது மனைவி சொல்படி முடிவு எடுப்பதாக கூறினார்கள்.
3 சதவீதம் பேர் அரசியல் தலைவர்கள் ஆலோசனையின் பேரில் ஓட்டு போடுவோம் என்று சொன்னார்கள்.
பாராளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்கள் கிரிமினல் குற்ற பின்னணி இருந்தால் ஓட்டு போட மாட்டோம் என்று 99 சதவீதம் பேர் கூறினார்கள். ஆனால், தங்கள் வேட்பாளரின் குற்ற பின்னணி குறித்து சரியாக தெரிவதில்லை என்று பெரும்பாலானோர் தெரிவித்தனர்.
32 சதவீதம் பேர் வேட்பாளர்களின் குற்ற பின்னணி தெரியும் என்று கூறினர். #LokSabhaElections2019 #Voters
திருப்போரூர்:
காஞ்சிபுரம் பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம்குமரவேல் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் உத்திரமேரூர். வாலாஜாபாத், காஞ்சிபுரம் பகுதிகளில் கொளுத்தும் வெயிலில் இரட்டைஇலைக்கு வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து மக்கள் குறைகளை தீர்த்து வைப்பேன். மத்திய மாநில அரசின் திட்டங்கள் ஏழைகளுக்கு கிடைக்க பாடுபடுவேன் என கூறி வாக்கு சேகரித்தார். முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், மேற்குமாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மைதிலிதிருநாவுக்கரசு, அ.தி.மு.க. நிர்வாகிகள், பா.ம.க. தே.மு.தி.க., பா.ஜ.க, த.மா.கா. புரட்சிபாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வேட்பாளருடன் சென்று வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019
கேரள மாநிலத்தையொட்டி குமரி மாவட்டம் அமைந்துள்ளது. இதனால் கேரளாவின் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதி மற்றும் குமரி மாவட்டத்தின் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி என்று 2 தொகுதியிலும் பல வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
கேரள மாநிலத்தின் பாறசாலை நெய்யாற்றின் கரை, கோவளம் பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் குமரி மாவட்டத்தின் களியக்காவிளை, விளவங்கோடு, ஈச்சவிளை, கோழிவிளை, பனச்சமூடு, ஊரம்பு, காக்க விளை பகுதிகளில் இது போன்ற இரட்டை பதிவுகள் இடம் பெறுகிறது.

பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் பெயர் சரிபார்க்கும் பணி நடந்தபோது, திருவனந்தபுரம், கன்னியாகுமரி தொகுதியில் 200 வாக்காளர் பெயர் 2 இடங்களிலும் இடம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர். #LokSabhaElections2019 #ThiruvananthapuramConstituency #KanyakumariConstituency
வேலூர்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.
பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
காட்பாடியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோரது வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோதனை நடைபெற்றது.
அப்போது தி.மு.க. பிரமுகரின் சிமெண்டு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மற்றும் நாமக்கல்லில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.11 கோடி பிடிபட்டது. இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்ட பணமா? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் வருமானவரித் துறை அதிகாரிகள் தங்களது சோதனையை மேலும் தீவிரப் படுத்தி உள்ளனர்.
அரக்கோணம், திருப்பத்தூரில் அ.தி.மு.க. பிரமுகர் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.1¼ கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கொரட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் அ.தி.மு.க. பிரமுகரான இவர், பைனான்ஸ், சீட்டு, நடத்தி வருகிறார்.
இவரது வீட்டில் வருமான வரி துறை இணை கமிஷனர் அபிநயா தலைமையில், 9 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
நேற்று மதியம் 1 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 9 மணியளவில் முடிந்தது. இதில் ரூ.26 லட்சம் பணம் சிக்கியது.

இந்த பணத்தை வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கண்ணன் வைத்திருந்தாரா? என்று விசாரணை நடந்து வருகிறது.
அரக்கோணத்தை அடுத்த மின்னல் அருகே உள்ள நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் தீனதயாளன். தொழிலதிபரான இவர் லுங்கி உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
பல்வேறு மாநிலங்களில் இருந்து லுங்கிகளை வாங்கி அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இவரது உறவினர் மாதவன் அ.தி.மு.க. ஊராட்சி செயலாளராக உள்ளார்.
நேற்று மாலை 4 மணியளவில் தீனதயாளன் வீட்டில் வருமானவரி சோதனை நடந்தது. அவரது அலுவலகம், தொழிற்சாலை ஆகியவற்றிலும் சோதனையில் ஈடுபட்டனர். மாதவன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இரவு முழுவதும் நடந்த சோதனை அதிகாலை 2 மணியளவில் முடிந்தது. தீனதயாளன் வீடு, அலுவலகம், தொழிற்சாலை ஆகியவற்றில் இருந்து ரூ.1 கோடியே 1 லட்சமும், மாதவன் வீட்டில் இருந்து ரூ.3 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில் பஸ்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.54 லட்சம் பணமும் பிடிபட்டுள்ளது.
விழுப்புரத்திலிருந்து மேல்மலையனூர் நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஸ்கூல் பேக் கேட்பாரற்று கிடந்தது. அதில் கட்டுக்கட்டாக 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்தது. அனைத்தும் ரூ.500, 200 ரூபாய் நோட்டுகளாக இருந்தன.
அந்த பணத்தை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். இந்த பணத்தை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக யாரேனும் எடுத்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விளாத்திகுளம் அருகே பஸ்சில் பயணம் செய்த ராமராஜ் என்பவரின் துணிப் பையில் கட்டுக்கட்டாக ரூ.31 லட்சம் பணம் இருந்தது.
ராமராஜிடம் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பணம், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
ராமராஜ், அ.தி.மு.க. புதூர் ஒன்றிய செயலாளர் ஞானகுருசாமியின் உறவினர் ஆவார்.
இதற்கிடையே அரக்கோணம் அருகே உள்ள நெமிலியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
இதில் நெமிலி முன்னாள் பேரூராட்சி தலைவரான காங்கிரஸ் பிரமுகர் வினோபா, தி.மு.க. உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த 2 லட்சத்து 4 ஆயிரத்து 500 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று வரையில் ரூ.182 கோடி பணம் பிடிபட்டுள்ளது. 991 கிலோ தங்கமும், 611 கிலோ வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.284.67 கோடி ஆகும். #LokSabhaElections2019 #ITRaids
பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று கடந்த மாதம் சென்னை திரும்பினார்.
அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தபோது உடன்பாட்டில் கையொப்பமிட வந்த விஜயகாந்த் தன்னால் பேச முடியவில்லை என்று நிருபர்களிடம் சைகை மூலம் கூறிய சம்பவம் கட்சி பாகுபாடின்றி தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘நமது தலைவர் கேப்டன் நாளையும் நாளை மறுநாளும் நமது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையின் சில பகுதிகளில் பிரசாரம் செய்வார்’ என்று தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Vijayakanth #Vijayakanthcampaign
பாலிவுட் சினிமாக்களில் 1970 மற்றும் 1980-களில் பிரபல முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த நடிகை ஹேமமாலினி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா பாராளுமன்ற தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யாக உள்ளார்.
முன்னர் இந்திப்பட ரசிகர்களால் ‘கனவுக் கன்னி’ (டிரீம் கேர்ள்) என்றழைக்கப்பட்ட ஹேமமாலினி(70) இந்த தேர்தலிலும் மதுரா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா சார்ந்த விழாக்களில் அதிகம் பங்கேற்பதை தவிர்த்துவந்த பிரபல முன்னாள் அதிரடி பாலிவுட் கதாநாயகனும் ஹேமமாலினியின் கணவருமான தர்மேந்திரா(83) இன்று அவரை ஆதரித்து மதுரா தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். #Dharmendracampaigns #HemaMalini #Mathuracampaign #LSpolls
காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.
60 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் இழைத்த அநீதிகளுக்கு யார் பரிகாரம் செய்வார்கள்? என்று கேள்வி எழுப்பிய மோடி, 1984-ம் ஆண்டில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்கும், காஷ்மீரில் பண்டிதர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு நீதி வழங்க காங்கிரஸ் தயாரா? என்று கேட்க விரும்புவதாக தெரிவித்தார்.
‘காங்கிரஸ் அரசின் கொள்கைகளால்தான் காஷ்மீர் பண்டிதர்கள் நம் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஓட்டு வங்கிக்காக காஷ்மீர் பண்டிதர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை காங்கிரஸ் கட்சியினர் பெரிதுப்படுத்தவில்லை.
காஷ்மீர் பண்டிதர்கள் தங்களது வீடுகளை இழந்து, இங்கிருந்து வெளியேறி பாகிஸ்தானுக்கு செல்ல காங்கிரசின் கொள்கைகளே காரணமாக இருந்தது.
ஆனால், எங்கள் ஆட்சியில் காஷ்மீர் பண்டிதர்கள் மீண்டும் இங்கே வந்து தங்களது சொந்த மண்ணில் வாழ்வதற்கான நடைமுறைகள் தொடங்கி விட்டன. பாகிஸ்தானில் இருந்து அவதிப்பட்டு பாரத அன்னையை நம்பி இங்கு வந்திருப்பவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிப்பதற்கு சட்டம் இயற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
காஷ்மீர் மாநிலத்தை ஆட்சி செய்த அப்துல்லா குடும்பமும் முப்தி குடும்பமும் 3 தலைமுறை மக்களின் வாழ்க்கையை சீரழித்து விட்டன. இந்த குடும்பங்களுக்கு விடை கொடுக்கும்போது தான் காஷ்மீரின் ஒளிமயமான எதிர்காலம் உருவாகும். இவர்கள் மோடியை ஒழிப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால், இந்த நாட்டை ஒருபோதும் இவர்களால் பிளவுப்படுத்த முடியாது.
சமீபத்தில் இங்கு நடைபெற்ற முதல்கட்ட பாராளுமன்ற தேர்தலில் பாரமுல்லா, ஜம்மு மாவட்டங்களில் பெருவாரியான அளவில் வாக்களித்ததன் மூலம் நமது நாட்டின் ஜனநாயக வலிமையை நீங்கள் நிலைநாட்டி இருக்கிறீர்கள். பயங்கரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் சந்தர்ப்பவாதிகளுக்கும் சரியான பதிலடியை தந்து விட்டீர்கள்.
இந்த தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக சக்திவாய்ந்த பேரலை வீசுகிறது. கருத்துக் கணிப்புகளின்படி காங்கிரஸ் கட்சியை விட மூன்று மடங்கு அதிகமான இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்பதை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனவும் மோடி கூறினார். #powerfulwave #favourofBJP #BJPwave #Modi #LSpolls
ராயபுரம்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலோடு பெரம்பூர் உள்பட 18 சட்டசபை இடைத்தேர்தலும், இதைத் தொடர்ந்து மே 19-ந் தேதி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம்-பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஓட்டுக்கு பணம் வாங்கும் சில வாக்காளர்களை குறி வைத்து புதுப்புது விதத்தில் அரசியல் கட்சியினர் பணம் கொடுத்து வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் பெரம்பூர் பகுதியில் வாக்காளர்களுக்கு தபாலில் 500 ரூபாய் நோட்டு டன் கடிதம் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஆலை பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அந்த தொழிற் சாலையின் தொழிற்சங்கம் பெயரில் இந்த தபால் வந்து உள்ளது. அந்த தபாலில் கடிதத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டும் இருந்தது.

கடிதத்தில், தேர்தலில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்கு அளிக்கும்படி எழுதப்பட்டு இருந்தது. இதேபோல் 500 ரூபாய் நோட்டுடன் கூடிய தபால் பெரம்பூர், கொடுங்கையூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வந்து இருப்பதாக தெரிகிறது.
ரூபாய் நோட்டுடன் வந்த கடிதத்தை சிலர் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்ததால் இது வெளிச்சத்துக்கு வந்தது. அந்த தபால் பெரம்பூர் தபால் நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்டதாக தெரிகிறது.
இதேபோல் ரூபாயுடன் மேலும் கடிதம் வருமா? என்றும் சிலர் ஏக்கத்துடன் காத்து உள்ளனர். இதற்கிடையே ஓட்டுக்காக வாக்காளர்களின் வீட்டுக்கே தபாலில் ரூ. 500 நோட்டு அனுப்பப்பட்டது பற்றி தேர்தல் அதிகாரிகளுக்கும் புகார் வந்தது. அவர்கள் அரசியல் கட்சியினரை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் தபாலில் பணம் அனுப்பியவர்கள் யார்? என்பது பற்றி ரகசிய விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
பெரம்பூர் சட்டசபை இடைத்தேர்தலில் வேட்பாளர்களாக ஆர்.எஸ். ராஜேஷ் (அ.தி.மு.க.), ஆர்.டி.சேகர்(தி.மு.க.), வெற்றிவேல் (அ.ம.மு.க.) ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதேபோல பெரம்பூர் தொகுதியை உள்ளடக்கிய வட சென்னை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கலாநிதி வீராசாமியும், அழகாபுரம் மோகன்ராஜ் (தே.மு.தி.க.), சந்தான கிருஷ்ணன் (அ.ம.மு.க.) போட்டியிடுகிறார்கள். #LokSabhaElections2019 #Peramburconstituency
திருவள்ளூர்:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு அளிக்கும் வகையில் பணம் மற்றும் பரிசு பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்க பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருத்தணியை அடுத்த கனகம்மா சத்திரம் பகுதியில் திருவள்ளூர் வேளாண் விற்பனை மைய கண்காணிப்பாளர் பொன்னிவளவன் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ரூ. 88 ஆயிரம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் காரில் வந்தவர் அரக்கோணம் பகுதியை சேர்ந்த பிரபு என்பதும் இவர் ஏர்செல் வினியோகஸ்தர் என்றும் தெரிந்தது. அவரிடம் பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருவள்ளூர் கருவூலகத்தில் ஒப்படைத்தனர். #LokSabhaElections2019
மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் இயக்கத் தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி இந்த பாராளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள கிசான்கஞ்ச் தொகுதியில் தனது கட்சியின் சார்பில் அக்தாருல் இமாம் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இந்த தொகுதியில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்தாருல் இமாமுக்கு ஆதரவாக வாக்கு திரட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் ஆகியோரை கடுமையாக தாக்கிப் பேசிய அவர், மோடிக்கும் நிதிஷ் குமாருக்கும் இப்போதுள்ள உறவு மிகவும் வலிமையானது. லைலா-மஜ்னு காதலை விடவும் வலிமையானது.
இந்த காதல் கதை புத்தகமாக எழுதப்படும்போது இவர்களில் யார் மஜ்னு? என்று என்னை கேட்காதீர்கள் நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
ஆனால், இந்த லைலா-மஜ்னுவின் கதை எழுதப்படும்போது காதலுக்கு பதிலாக அதில் வெறுப்புணர்வு இருக்கும். இந்த ஜோடி ஒன்று சேர்ந்த பிறகு இந்தியாவில் இந்து-முஸ்லிம் இடையே பதற்றம் அதிகரித்தது என அதில் எழுதப்பட்டிருக்கும் எனவும் ஒவைசி கூறினார்.
கடந்த 2015-ம் ஆண்டில் நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலை காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்று முதல் மந்திரியான நிதிஷ் குமார், பின்னர் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக பாஜகவுக்கு ஆதரவாக தனது போக்கை மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #ModiNitishLove #Modi #NitishKumar #LailaMajnu #Owaisi
சென்னை:
பாராளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் விரிவாக செய்துள்ளது.
இந்த தேர்தலில் 67 ஆயிரத்து 500 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
திருத்தப்பட்ட பட்டியல் படி தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஓட்டு போடுவதற்கு வசதியாக புதிதாக பெயர் சேர்த்தவர்களுக்கும், புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு வீடு வீடாக வினியோகிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 18-ந்தேதி ஓட்டு போட கொண்டு செல்லக் கூடிய ‘பூத்’ சிலிப் தேர்தல் அலுவலர்கள் மூலம் இப்போதே வீடு வீடாக வினியோகிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வாக்காளரின் புகைப்படமும் பெரிய அளவில் அச்சிட்டு பெயர், பாகம் எண், வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிக்கூட விவரம் அனைத்தும் அதில் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த பூத் சிலிப்புடன் ஓட்டு போட காண்பிக்க வேண்டிய 11 ஆவணங்களுக்கான பட்டியல் விவரத்தையும் இணைத்து வீடு வீடாக வழங்கி வருகிறார்கள்.
அந்தந்த பகுதியில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் வழக்கமான ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீடு வீடாக இந்த பூத் சிலீப் வழங்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
வருகிற 17-ந்தேதிக்குள் பூத் சிலிப் அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்பட்டு விடும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #LokSabhaElections2019






