search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குச்சாவடிகளில் 50 சதவீதம் ஒப்புகை சீட்டு முறை - சுப்ரீம் கோர்ட்டை அணுக எதிர்க்கட்சிகள் முடிவு
    X

    வாக்குச்சாவடிகளில் 50 சதவீதம் ஒப்புகை சீட்டு முறை - சுப்ரீம் கோர்ட்டை அணுக எதிர்க்கட்சிகள் முடிவு

    வாக்குச்சாவடிகளில் 50 சதவீதம் வி.வி.பாட் இயந்திரங்களை நிறுவி ஒப்புகை சரிபார்ப்புசீட்டு முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டை அணுக எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. #Oppositionparties #Oppositiontoapproach #approachSC #papertrails
    புதுடெல்லி:

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை  தேர்தல்களில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் சோதனை முயற்சியாக ஒரு வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரம் (VVPAT) அமைக்கப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது. ஆனால், இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

    மின்னணு இயந்திரங்களில் வாக்கு எண்ணும் அதேவேளையில் வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்களில் உள்ள 50 சதவீதம் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் திமுக, காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட 21 கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் முன்னர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், இது சாத்தியமில்லாதது என்றும், 50 சதவீத வி.வி.பாட் ஒப்புகை சீட்டுகளை எண்ணி பார்த்தால், 6 நாள் கழித்துதான் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியும் என்றும் தெரிவித்தது.

    வி.வி.பாட் இயந்திர ஒப்புகை சீட்டுக்களை எண்ணுவது தொடர்பாக ஊழியர்களுக்கு எந்த பயிற்சியையும் அளிக்கவில்லை. இனி அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் சாத்தியமில்லை என்றும் தெரிவித்தது.

    இந்நிலையில், இவ்வழக்கில் கடந்த 8-ம்  தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் 5 வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்களை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் உடனடியாக இதை நடைமுறைப்படுத்துவோம் என உறுதி அளித்திருந்தது.

    இதற்கிடையில், பாராளுமன்றத்துக்கான முதல்கட்ட தேர்தல் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் ஆகியவை கடந்த 11-ம் தேதி நடைபெற்றது.



    ஆந்திராவில் நடந்த தேர்தலில் பல வாக்குச்சாவடிகளில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி நடந்ததாக தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் அம்மாநில முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.

    எந்த கட்சிக்கும் வாக்களித்தாலும் பாஜக வேட்பாளருக்கு வாக்குகள் விழும் வகையில் இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

    இதுதொடர்பாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையாளரிடம் புகார் அளிப்பதற்காக அவர் டெல்லி வந்துள்ளார்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில் இன்று எதிர்க்கட்சிகளின் சார்பில் ‘ஜனநாயகத்தை பாதுகாப்போம்’ என்ற பெயரில் இந்த வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.

    காங்கிரஸ், தெலுங்கு தேசம், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பிரதிநிதிகளும் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினர்.

    தற்போதைய தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் X கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தால் Y கட்சிக்கு வாக்குகள் விழுகின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி குறிப்பிட்டார்.

    வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்களில் 7 வினாடிகள் வரை ஒளிர வேண்டிய விளக்குகள் 3 வினாடிகளில் அணைந்து விடுகிறது.

    சரியான வகையில் நேரடியாக களஆய்வு செய்து பரிசீலிக்காமல் ஆன்லைன் மூலம் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதுபோல் தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்க எங்களிடம் ஏராளமான புகார்கள் உள்ளன.

    இவற்றில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி பிரச்சனை மிக முக்கியமானதாகும். எனவே,வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையில்  50 சதவீதம் அளவுக்கு வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்களை அமைக்க வேண்டும் என 21 எதிர்க்கட்சிகளும் ஒருமனதாக தீர்மானித்துள்ளன.

    இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் போதிய அக்கறை காட்டவில்லை என்று நாங்கள் கருதுகிறோம். எனவே கோரிக்கையை முன்வைத்து நாங்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுக முடிவு செய்துள்ளோம் என அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார். #Oppositionparties #Oppositiontoapproach #approachSC #papertrails
    Next Story
    ×