என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    பிரதமர் மோடி போட்டியிடவுள்ள வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #PMModi #BJP #PriyankaGandhi

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வதோதரா தொகுதியிலும், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டார்.

    இரு தொகுதியிலும் வெற்றி பெற்ற அவர் பின்னர் வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். வாரணாசி எம்.பி.யாக நீடித்தார்.

    இந்த தேர்தலில் அவர் மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நபர் யார் என்று இதுவரை தெரியவில்லை.

    இறுதிக்கட்ட தேர்தல் மே 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கான பெரும்பாலான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்து விட்டது.

    வாரணாசி தொகுதி தேர்தலும் 19-ந் தேதிதான் நடைபெறுகிறது. ஆனாலும், இதற்கான வேட்பாளரை மட்டும் காங்கிரஸ் இன்னும் அறிவிக்கவில்லை. நேற்று 18 தொகுதி வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

    அதில், வாரணாசி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதிலும் வேட்பாளர் பெயரை அறிவிக்கவில்லை.

    காங்கிரஸ் ஏதோ ரகசிய திட்டம் ஒன்றை வைத்திருப்பதாகவும், இதனால் தான் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

     


    காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவை வாரணாசி தொகுதியில் போட்டியிட வைக்க இருப்பதாகவும், கடைசி நேரத்தில் அவரை வேட்பாளராக அறிவிப்பார்கள் என்றும் தகவல்கள் வந்துள்ளன.

    பிரியங்கா இதுவரை நேரடி அரசியலில் ஈடுபடாத நிலையில் திடீரென கடந்த மாதம் அவர் அரசியலுக்கு இழுத்து வரப்பட்டார். அவருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டு உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதி பொறுப்பும் வழங்கப்பட்டது.

    அங்கு தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ள பிரியங்கா பம்பரமாக சுழன்று வருகிறார். இவரது வருகையால் உத்தரபிரதேசத்தில் காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

    பிரியங்கா கங்கை நதியில் 3 நாள் தொடர்ந்து படகு பயணம் செய்து நதிக்கரை ஓரம் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று தேர்தல் பிரசாரம் செய்தார். அந்த பயணத்தை இறுதியாக வாரணாசியில் முடித்தார்.

    அப்போது வாரணாசி தொகுதி எம்.பி.யாக இருக்கும் மோடியை கடுமையாக விமர்சித்தார். அயோத்தியில் பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா மோடியை பற்றி காரசாரமாக பேசினார்.

    வாரணாசியில் மோடி 5 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்துள்ளார். இந்த 5 ஆண்டில் ஏதேனும் ஒரு கிராமத்துக்கு அவர் வந்திருக்கிறாரா? அவருக்கு வெளிநாட்டுக்கு செல்லத்தான் நேரம் இருக்கிறது. கிராம மக்களை சந்திப்பதற்கு நேரம் இல்லை என்று கூறினார்.

    வாரணாசியை குறி வைத்து அவர் பிரசாரம் செய்ததே அந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் என்று கூறப்படுகிறது.

    மேலும் அவர் கடந்த 28-ந் தேதி தொண்டர்கள் மத்தியில் பேசும் போது, நான் வாரணாசி தொகுதியில் போட்டியிட வேண்டுமா? என்ற கேள்வியையும் கேட்டார்.

    ராகுல்காந்தியும் இது சம்பந்தமாக சூசகமாக தெரிவிக்கும் போது, பிரியங்கா தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா? என்பது பற்றி அவரே முடிவு எடுத்து கொள்ளலாம் என்றார்.

    பிரியங்கா தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றால் அதை ராகுல்காந்தி உறுதியாக கூறி இருப்பார். ஆனால், இப்படி மழுப்பலாக சொல்லி இருப்பதால் பிரியங்கா போட்டியிடுவது உறுதி என்றே கூறப்படுகிறது.

    அவர் வாரணாசி வேட்பாளராக மனு தாக்கல் செய்யும் இறுதி நாள் அன்று அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

    இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சூரஜ்வாலாவிடம் கேட்ட போது, இதுபற்றி என்னால் ஒன்றும் சொல்ல முடியாது. கட்சி உரிய முடிவை எடுக்கும் என்று கூறினார்.

    பாரதிய ஜனதா தலைவர் ஷா நவாஸ் உசேன் கூறும்போது, சில அனுமானமான வி‌ஷயங்கள் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. மோடியை எதிர்த்து போட்டியிட காங்கிரசுக்கு பொறுத்தமான வேட்பாளர் கூட இல்லை என்பது தெளிவாக தெரிகிறது என்று கூறினார்.

    வாரணாசி தொகுதியில் கடந்த தேர்தலில் மோடி போட்டியிட்ட போது 3 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது அவரை எதிர்த்து ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டு 2-ம் இடம் பிடித்தார். #PMModi #BJP #PriyankaGandhi

    18-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் பெங்களூருவில் 8,514 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் அதிகாரி மஞ்சுநாத் பிரசாத் கூறினார். #LokSabhaElections2019
    பெங்களூரு:

    பெங்களூரு மாநகராட்சி கமிஷனரும், பெங்களூரு நகர மாவட்ட தேர்தல் அதிகாரியுமான மஞ்சுநாத் பிரசாத் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெங்களூரு நகரில் பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு மத்திய என 3 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 3 தொகுதிகளுக்கும் வருகிற 18-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பெங்களூரு வடக்கு தொகுதியில் 31 பேரும், பெங்களூரு மத்திய தொகுதியில் 22 பேரும், பெங்களூரு தெற்கு தொகுதியில் 25 பேரும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

    பெங்களூருவில் 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 72 லட்சத்து 64 ஆயிரத்து 796 வாக்காளர்கள் உள்ளனர்.

    தேர்தல் ஆணைய வழிக்காட்டுதலின்படி படம் பொறிக்கப்பட்ட வாக்குச்சீட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. நாளை (அதாவது இன்று) மாலை 5 மணிக்குள் இந்த பணி முழுவதுமாக முடிக்கப்பட்டு விடும். மேலும் வாக்குச்சாவடியை கண்டுபிடிப்பது, வாக்களிப்பது எப்படி?, புகார்கள் தெரிவிப்பது எப்படி? என்பன போன்ற அம்சங்கள் அடங்கிய வழிக்காட்டு புத்தகம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

    தேர்தல் அடையாள அட்டையை பிறரிடம் கொடுப்பது குற்றமாகும். இவ்வாறு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 3 தொகுதிகளையும் சேர்த்து பல்வேறு செயல்களுக்காக அனுமதி கேட்டு ‘சுவிதா’ செயலி மற்றும் நேரில் வந்தவர்களிடம் இருந்து 1,298 விண்ணப்பங்கள் வந்தன. இதில், 1,202 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. 49 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதோடு, 47 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. ‘சி-விஜில்’ செயலி வழியாக மொத்தம் 101 புகார்கள் வந்தன. இதில் 29 புகார்கள் நிராகரிக்கப்பட்டன. 69 புகார்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.

    3 பாராளுமன்ற தொகுதிகளிலும் பணம்-பரிசு பொருட்கள் வினியோகிப்பதை தடுக்க பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள், செலவு கணக்கீடு குழு உள்பட மொத்தம் 551 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. பெங்களூரு நகரில் உள்ள 3 தொகுதிகளிலும் இதுவரை ரூ.3.20 கோடி ரொக்கம், ரூ.5.75 கோடி மதுபானம், 45 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை பறக்கும் படை, போலீசார் உள்பட பல்வேறு குழுவினர் சார்பில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கலால் சட்டத்தின் கீழ் மொத்தம் 2,573 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

    வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு 2 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியானது உதவி தேர்தல் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 11-ந் தேதி நடந்த பயிற்சியில் 42 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். வாக்குச்சாவடியில் ஊழியர்களை நியமிக்கும் கூட்டம் வருகிற 16-ந் தேதி நடக்கிறது.

    3 பாராளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 28 உதவி தேர்தல் அதிகாரிகளின் அலுவலகத்திலும் தபால் ஓட்டுகள் செலுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தம் 5,499 தபால் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பெங்களூரு நகரில் மொத்தம் 8,514 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் பெங்களூருவில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளுக்காக 6,869 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளன. மொத்தம் 982 கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள் உள்பட 1,437 வாகனங்கள் தேர்தல் பணிக்காக பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பெண்கள் அதிகாரியாகவும், ஊழியர்களாகவும் பணி செய்ய உள்ளனர்.

    பெங்களூரு நகரில் மொத்தம் 477 வாக்குச்சாவடிகள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. 1,234 பேர் நுண்பார்வையாளர்களாக செயல்பட உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ‘வீல்சேர்’, பூதக்கண்ணாடி வசதி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகளை அழைத்து வருவதற்காக வாடகை கார் வசதிகள் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் 16-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

    தேர்தல் தொடர்பான அனைத்து விவரங்களை கேட்டு பெறவும், புகார்களை அளிக்கவும் பெங்களூரு மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் தொடர்பு மையம தொடங்கப்பட்டுள்ளது. வாரத்தின் 7 நாட்களும், 24 மணிநேரம் செயல்படும் இந்த மையத்தை 1950 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். இதுவரை 34 ஆயிரத்து 5 அழைப்புகள் வந்துள்ளது.

    15-ந் தேதிக்குள் (நாளை) வேட்பாளர்கள் தேர்தல் செலவு விவரங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள், கட்சிகள் உணவு வழங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வாகன கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 16-ந் தேதியில் இருந்து 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட இருக்கிறது. ஓட்டல்களில் தங்கும் நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.



    16-ந் தேதி மாலை 6 மணியுடன் பகிரங்க பிரசாரம் ஓய்கிறது. வாக்குப்பதிவு தினத்தில் வாக்குச்சாவடியை சுற்றி 100 மீட்டர் சுற்றளவில் பிரசாரம் செய்யவும், செல்போன் பயன்படுத்தவும், வீடியோ எடுக்கவும் தடை விதிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் கூறிய ஆவணங்களை தவிர்த்து பிற ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்க முடியாது. வாக்குப்பதிவுக்கு பிறகு மத்திய ஆயுதப்படை மற்றும் போலீசாரின் உதவியுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்து செல்லப்படுகின்றன.

    பெங்களூரு வடக்கு தொகுதியில் பதிவாகும் வாக்குகள் விட்டல் மல்லையா ரோட்டில் உள்ள செயின்ட் ஜோசப் இந்தியன் உயர்நிலைப்பள்ளி(பெங்களூரு வடக்கு), பேலஸ் ரோட்டில் உள்ள மவுண்ட் கார்மல் பெண்கள் பி.யூ. கல்லூரி (பெங்களூரு மத்திய தொகுதி), ஜெயநகரில் உள்ள எஸ்.எஸ்.எம்.ஆர்.வி. பி.யூ. கல்லூரி (பெங்களூரு தெற்கு) ஆகியவற்றில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையானது மே மாதம் 23-ந் தேதி காலை 8 மணி முதல் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LokSabhaElections2019

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலையிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறினார். #LokSabhaElections2019 #RahulGandhi
    சித்ரதுர்கா:

    கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா, கோலார் உள்பட சில இடங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த தேர்தல் வெறுப்பு, கோபம் மற்றும் பிளவுபடுத்தும் அரசியலுக்கும், அன்பு, பாசம் மற்றும் சகோதரத்துவத்துக்கும் இடையேயான போர். ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவோம் என்ற பிரதமர் மோடியின் பொய் பிரசாரத்துக்கும், வறுமை கோட்டுக்கு கீழே வாழும் ஒவ்வொரு பெண்ணின் வங்கி கணக்கிலும் ரூ.3.6 லட்சம் (வருடத்துக்கு ரூ.72 ஆயிரம் வீதம் 5 வருடங்களுக்கு) செலுத்தப்படும் என்ற காங்கிரஸ் வாக்குறுதிக்கும் இடையேயான போர்.

    அனில் அம்பானிக்கும், சாதாரண மக்களுக்கும் இடையேயான போர். 5 வருட அநியாயங்களுக்கும், காங்கிரசின் ‘நியாய்’ (குறைந்தபட்ச வருமானம்) திட்டத்துக்கும் இடையேயான போட்டி. திருடர்களுக்கும், கவுரவமான மக்களுக்கும் இடையேயான போட்டி.

    விவசாயி, தொழிலாளர், வேலையில்லாதவர் வீட்டு வாசல்களில் காவலாளி நிற்பதை பார்த்திருக்கிறீர்களா? அனில் அம்பானி வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள். இந்த காவலாளி 15 முதல் 25 பணக்காரர்களின் வீடுகளில் மட்டுமே காவலுக்கு இருக்கிறார். கடனை செலுத்தாத விவசாயிகளை சிறையில் அடைக்கிறார். ஆனால் அனில் அம்பானியை சிறையில் அடைப்பதில்லை.

    நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று ஏன் எல்லா திருடர்களும் மோடி என்ற துணைப்பெயரை கொண்டிருக்கிறார்கள்? இன்னும் இதுபோல எத்தனை மோடிகள் வருவார்களோ நமக்கு தெரியாது. ரபேல் விவகாரத்தில் காவலாளி நிச்சயம் திருடர் தான். பிரதமர் மோடி ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று கூறியதை, அமித்‌ஷா சும்மா தேர்தலுக்காக சொன்னது என்று சொல்கிறார்.



    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல் நடவடிக்கையாக மகளிருக்கு சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகியவைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். அரசு வேலையிலும் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கப்படும். ஜி.எஸ்.டி. வரி முறையில் மாற்றம் செய்யப்படும். ஒருமுனை வரியாக மாற்றுவதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைவார்கள். இந்திய பொருளாதாரத்தையும், மக்களையும் சீரழித்த கப்பர் சிங் டாக்ஸ் (ஜி.எஸ்.டி.) வரிமுறைக்கு முடிவுகட்டப்படும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். #LokSabhaElections2019 #RahulGandhi
    ஒடிசா மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் 5 கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். #DharmendraPradhan #BJP
    புவனேஸ்வர்:

    பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களின் சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் கட்டாக் மாவட்டத்திற்குட்பட்ட சவுத்வார் நகரில் இன்று நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பங்கேற்று பேசினார்.



    ஒடிசா மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் 5 கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு மற்றும் உப்பு ஆகியவை  ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் வாக்குறுதி அளித்தார்.

    தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் இவற்றால் மாநிலத்தில் உள்ள சுமார் 3.26  கோடி மக்கள் பயனடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். #BJPwillprovide #5kgrice #5kgriceOdisha #DharmendraPradhan 
    கர்நாடக மாநிலம், மங்களூருவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி 21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தேர்தல் இது என குறிப்பிட்டார். #Modi
    பெங்களூரு:

    பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம், மங்களூருவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ’இந்த முறை நடைபெறும் பாரளுமன்ற தேர்தல் அடுத்த பிரதமர் யார்? அடுத்த ஆட்சியை எந்த கட்சி அமைப்பது? என்பதற்கான தேர்தல் அல்ல.

    21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியா எப்படி இருக்க வேண்டும்? என்பதை நிர்ணயம் செய்வதற்கான தேர்தல் இது’ என குறிப்பிட்டார்.



    இந்த வாய்ப்பை நமது நாடு 20-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு அளித்திருந்தது. ஆனால், ஒரே குடும்பத்திடம் ஆட்சியை ஒப்படைத்ததன் மூலம் காங்கிரஸ் நாட்டை முன்னேற்றும் வாய்ப்பை இழந்து விட்டது. காங்கிரசின் கலப்பட கூட்டணியால் நமது பாரம்பரியங்கள் சீரழிக்கப்பட்டதுடன், நாட்டின் பொருளாதாரமும், பாதுகாப்பும் பலவீனமாகிப் போனது.

    இந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி பரம்பரை ஆட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால், நாங்கள் தேசியத்துக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்றும் மோடி தெரிவித்தார். #LSpolls #NewIndia #21stcentury #Modi #21stcenturyIndia 
    கர்நாடகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்த தேர்தல் அனில் அம்பானிக்கும் சாமானிய மக்களுக்கும், திருடர்களுக்கும் நேர்மையான மக்களுக்கும் இடையிலானது என குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #Congress #RahulGandhi #AnilAmbani
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் சித்ரதுர்கா பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்த தேர்தல் அனில் அம்பானிக்கும், சாமானிய மக்களுக்கும் இடையிலானது. திருடர்களுக்கும் நேர்மையான மனிதர்களுக்கும் இடையில் நடைபெறும் தேர்தல். உண்மைக்கும் பொய்யான வாக்குறுதிகளுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் இது.



    கடந்த 5 ஆண்டு காலமாக நடைபெற்ற அநியாய ஆட்சிக்கும், நியாய் என்ற வறுமை ஒழிப்பு திட்டத்துக்கும் இடையிலான தேர்தல் இதுவாகும் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #Congress #RahulGandhi #AnilAmbani
    நாட்டின் காவலாளியான பிரதமர் மோடி 100 சதவீதம் திருடன் என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார். #Chowkidar #Chowkidaristhief #Rahul
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பங்கேற்று பேசினார்.

    தனது பேச்சினிடையே ரபேல் ஊழல் விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசிய ராகுல், ‘இந்த நாட்டின் காவலாளி என்று தன்னை கூறும் மோடி 100 சதவீதம் திருடன் என்று நான் குற்றம்சாட்டுகிறேன்.

    30 ஆயிரம் கோடி ரூபாயை திருடி தனது திருட்டு நண்பன் அனில் அம்பானிக்கு அவர் கொடுத்து விட்டார்.



    நிரவ் மோடி, மெகுல் சோக்சி, லலித் மோடி, விஜய் மல்லையா, அனில் அம்பானி, நரேந்திர மோடி என்று ஒரு திருட்டுக் கூட்டமே உருவாகியுள்ளது.

    என்னிடம் ஒரு கேள்வி உள்ளது. நிரவ் மோடி ஆகட்டும், லலித் மோடி ஆகட்டும், நரேந்திர மோடி ஆகட்டும், எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்? இன்னும் இதைப்போல் எத்தனை மோடி வரப்போகிறார்களோ நமக்கு தெரியாது’ என குறிப்பிட்டார். #Chowkidar #Chowkidaristhief #Rahul 
    கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க.வின் வாக்கு வங்கி குறைந்துவிட்டதாக கடலூரில் நடந்த தேர்தல் பொதுகூட்டத்தில் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran
    கடலூர்:

    கடலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து கடலூர் உழவர் சந்தையில் அம்மா மக்கள் முன்னேற்றகழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்தார்.

    பாரதிய ஜனதாவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என கூறியவர் ஜெயலலிதா. அவருக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றம் சென்றதோடு ஜெயலலிதா உயிரோடு இருந்தால் சிறைக்கு சென்றிருப்பார். என்று கூறியவர்கள் பா.ம.க. வினர். அவர்களுடன் தமிழகத்தை ஆளுவோர் கூட்டணி வைத்துள்ளனர்.

    ஜெயலலிதா இருக்கும் வரை ஜி.எஸ்.டி. வரியை தடுத்து வந்தார்.

    மதச்சார்பற்ற கூட்டணி எனக் கூறும் தி.மு.க. இந்து மதத்தை விமர்சித்து வருகிறது. தற்போது முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் தி.மு.க.வை. கைவிட்ட நிலையில், இந்துக்களுக்கு நாங்கள் விரோதியல்ல, எங்கள் வீட்டு பெண்களும் கோவிலுக்கு செல்வார்கள் என்று கூறி வருகிறார் மு.க.ஸ்டாலின்.

    எந்த மதத்தினரும் யாரையும் தரம் தாழ்த்துவது இல்லை. ஆனால் தாங்கள்தான் இந்து மதத்தை கண்டுபிடித்தவர்கள் போல பாரதிய ஜனதா கட்சியினர் கூறிக்கொள்கின்றனர். இந்துக்களுக்கு பாதுகாவலர்கள் என்று கூறுகின்றனர்.

    தி.மு.க. இந்து எதிர்ப்பு நிலையை எடுத்துள்ளது. அரசியல்வாதிகள் ஜாதி மதத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

    நீட் தேர்வு, குடிநீர், மீனவர் பிரச்சினை, என்.எல்சி. நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை, விவசாயவிளை பொருள்களுக்கு விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

    இதுகுறித்து அரசியல்வாதிகள் பேச வேண்டும். தற்போது தமிழகத்தை மட்டுமன்றி இந்தியாவையும் மீட்க வேண்டிய நிலைஉள்ளது. தமிழகத்தில் படித்த இளைஞர்கள் ஒரு கோடிபேர் வேலைக்காகக் காத்திருக்கிறார்கள்.

    மத்தியில் முந்தைய காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் வைப்பு தொகையை தி.மு.க. இழந்தது.

    கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க.வின் வாக்கு வங்கி குறைந்துவிட்டது என்பது உண்மை. அதை மறைப்பதற்காகத்தான் பல கட்சிகளை கூட்டணி வைத்துக்கொண்டு அவர்கள் தான் வெற்றிபெறுவார்கள் என்பது போன்ற மாய தோற்றத்தை உருவாக்கிறார்கள்.

    ஆனால் உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டில் 80 சதவீதம் இளைஞர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தாய்மார்களும், பெரியோர்களும் இன்று புதிய மாற்றம் தேவை என்று நினைக்கிறார்கள். அவர்களும் எங்களை ஆதரிக்கிறார்கள்.

    எனவே பொதுமக்கள் ஜாதி, மதம், குறித்துப் பேசு வோரைப் புறக்கணித்து அ.ம.மு.க.வை ஆதரிக்க வேண்டும். மாநில கட்சிகளால் மட்டுமே மாநில பிரச்சினைகளை தீர்க்க முடியும். தேசியக் கட்சிகளை மக்கள் நம்பக் கூடாது. பணம் கொடுத்து மக்களை வாங்கிவிடலாம் என்று நினைப்பவர்களை புறக்கணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TTVDinakaran
    100 நாள் வேலை திட்டம் குறித்து காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்து வருவதாக கன்னியாகுமரி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #PonRadhakrishnan #MGNREGA
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பா.ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பெருக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இதுவரை 99,952 நபர்களுக்கு நமது மாவட்டத்தில் வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.



    மேலும் இவர்களுடைய ஊதியம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரூ.163 ஆக இருந்த சம்பளம் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் ரூ.229 ஆக தினக்கூலி உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 100 நாள் வேலை உறுதி திட்டம் 150 நாளாக உயர்த்தப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த உண்மைகளை வேண்டுமென்றே மறைத்து காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ரத்து செய்யப்படும் என்ற பொய் செய்தியை தொடர்ந்து கிராமங்களில் பரப்பி வருகிறார்.

    இந்த பொய்யுரைகளை நமது மாவட்ட மக்கள் நம்ப மாட்டார்கள். எனினும் இது குறித்த உண்மையை நமது மக்களுக்கு சொல்வதை எனது கடமையாக கருதுகிறேன். மத சார்பற்ற கூட்டணி என்று தெரிவித்துவிட்டு காங்கிரஸ் வேட்பாளர் செல்லும் இடங்களில் எல்லாம் மத கலவரத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தனது நிறுவன பொருட்கள் மூலம் பணத்தை கொடுப்பதாக செய்திகள் வருகின்றன.

    படிப்பறிவு உள்ள நமது மாவட்ட மக்களின் வாக்குகளை எவராலும் விலை கொடுத்து வாங்கிடமுடியாது என்பதை கூடிய விரைவில் காங்கிரஸ் வேட்பாளர் உணர்ந்து கொள்வார்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார். #PonRadhakrishnan #MGNREGA

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாமக வேட்பாளர் வைத்திய லிங்கம் ஒரத்தூர் ஊராட்சியில் வீதி வீதியாக சென்று தீவிர பிரசாரம் செய்தார். #LoksabhaElections2019

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திய லிங்கம் ஒரத்தூர் ஊராட்சியில் வீதி வீதியாக சென்று தீவிர பிரசாரம் செய்தார்.

    அவருடன் கே.பழனி எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் என்.டி.சுந்தர், ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம்சுந்தர், மாவட்ட பாசறை தலைவர் என்.டி.எஸ்.சுபாஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். முன்னதாக வேட்பாளருக்கு ஒரத்தூர் என்.டி.சுந்தர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். #LoksabhaElections2019

    வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தலைமை தேர்தல் ஆணையரிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புகார் அளித்துள்ளார். #ChandrababuNaidu
    புதுடெல்லி:

    ஆந்திராவில் கடந்த 11-ம் தேதி மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டது. இதில், சுமார் 400 வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதம் ஆனது. இதனால் சில பகுதிகளில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நீடித்தது. இதேபோல் தெலுங்குதேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாகவும் சில பூத்களில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

    வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக, காலை 9.30 மணிவரை வாக்குப்பதிவு தொடங்காத இடங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியிருந்தார்.



    இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து, புகார் மனு கொடுத்தார். அதில், ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிவர இயங்காதது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தேர்தலின்போது பிரச்சினை செய்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். #ChandrababuNaidu
    காஞ்சிபுரம் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்ட மன்ற வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் முட்டுக்காடு, தையூர் உள்ளிட்ட பல கிராமங்களில் வாக்குகள் சேகரித்தனர். #LoksabhaElections2019

    திருப்போரூர்:

    காஞ்சிபுரம் பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்ட மன்ற வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாவலூர், முட்டுக்காடு, படூர், கேளம்பாக்கம், தையூர் உள்ளிட்ட பல கிராமங்களில் வாக்குகள் சேகரித்தனர்.

    ஒவ்வொரு கிராமத்திலும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், கூட்டணி கட்சியினர் திரண்டு வந்து மேள தாளத்துடன் ஆளுயுர மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.

    வேட்பாளர்கள் பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு வாக்களித்து நாங்கள் வெற்றிபெற்றால் இப்பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மற்றும் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் கிராமப்புற மக்களையும் சென்றடைய பாடுபடுவோம் மேலும் தங்கள் பகுதி குறைகளை நேரிடையாக சந்தித்து தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

    தையூரில் ஜேபி எந்திரம் மூலம் மலர்தூவி வேட்பாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். முன்னாள் எம்.பி காஞ்சி பன்னீர்செல்வம், பா.ம.க. ஏகாம்பரம், வாசு, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் அனகை முருகேசன், மாவட்ட துணைசெயலாளர் எஷ்வந்த்ராவ், மாவட்ட அம்மாபேரவை ஆனூர் பக்தவச்சலம், மாவட்ட வர்த்தக பிரிவு ராகவன், திருப்போரூர் ஒன்றியசெயலாளர் தையூர் குமரவேல், நாவலூர் ரகு, முட்டுக்காடு பாஸ்கரன், கேளம்பாக்கம் வினோத்கண்ணன், தையூர் ராஜா, த.மா.கா கோவிந்தராஜ், பிஜேபி கோதண்டன், புரட்சி பாரதம் சிவலிங்கம்;, தே.மு.தி.க. ஒன்றியசெயலாளர் கோபிநாத், உள்ளிட்ட கூட்டணி கட்சிநிர்வாகிகள், தொண்டர்கள் வேட்பாளருடன் சென்று வாக்குகள் சேகரித்தனர். #LoksabhaElections2019

    ×