search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் விரும்பும்போது 8 வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது- பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    மக்கள் விரும்பும்போது 8 வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது- பொன்.ராதாகிருஷ்ணன்

    மக்கள் விரும்பும்போது 8 வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #LoksabhaElections2019 #BJP #PonRadhakrishnan
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு நேற்று குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் பாரதிய ஜனதா கட்சியையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார். குறிப்பாக பிரதமர் மோடி, ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து அவர் பொய் மட்டுமே கூறிவருகிறார். மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று குஷ்பு கூறினார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய மந்திரியும், கன்னியாகுமரி தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி பொய் பேசுவதாக கூறும் சகோதரி குஷ்பு, சமீபத்தில் அவரிடம் தவறு செய்தவர் யார் என்பதை இதுவரை வெளிப்படுத்தவில்லை.

    பிரதமர் மோடி கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு என்ன செய்தார்? என்பது இங்குள்ள வாக்காளர்களுக்கு தெரியும். இம்மாவட்டத்தில் நடந்த வளர்ச்சி திட்டங்கள் அதற்கு பதிலாக அமையும்.

    ராகுல் காந்தி பிரதமராக வந்தால் தான் மாற்றம் ஏற்படும் என்று குஷ்பு சொல்வது உண்மைதான். அவர் பிரதமர் ஆனால் இப்போது விழித்து இருக்கும் மக்கள் அனைவரும் தூங்கி விடுவார்கள்.

    உலக நாடுகளின் தலைவர்கள் முன்பு தலை நிமிர்ந்து பேசியவர் தான் பிரதமர் மோடி. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்தவர்கள் யாராவது இவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று இவர்களால் கூறமுடியுமா?

    சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் உறுதியான வளர்ச்சி திட்டம் என்பதால் ஒரு சிலரின் தூண்டுதல் பேரில் தடை வந்துள்ளது.


    8 வழிச்சாலை திட்டத்தை மக்கள் விரும்பும் போது அதனை யாராலும் தடுக்க முடியாது. இதனை தான் மத்திய மந்திரி பியுஸ்கோயலும் கூறியுள்ளார்.

    தேர்தல் ஆணையம் நடத்தும் சோதனைகளில் உள்நோக்கம் இருப்பதாகவும், பின் நோக்கம் இருப்பதாகவும் யாரும் நினைக்க வேண்டாம்.

    நான் பிரசாரத்திற்கு சென்றபோது கூட தேர்தல் அதிகாரிகள் பல முறை என் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அவர்களுக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்தேன்.

    பிச்சை எடுப்பவர்கள் பிச்சை போடுபவர்களை தர்ம பத்தினி என கூறுவார்கள். அதுவே அவர்கள் பிச்சை போடாவிட்டால் அவர்களை மூதேவி என்பார்கள்.

    கூட்டணிக்கு அ.தி.மு.க.வை பா.ஜ.க. மிரட்டி பணிய வைத்ததாக குற்றச்சாட்டுகள் கூறும் மு.க. ஸ்டாலின் அதனை வேட்பு மனு தாக்கல் செய்த போதே கூறி இருக்க வேண்டும். தேர்தலுக்கு 3 நாட்கள் இருக்கும்போது கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #LoksabhaElections2019 #BJP #PonRadhakrishnan
    Next Story
    ×