search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாரணாசி தவிர மோடி போட்டியிடும் இரண்டாவது தொகுதி எது?
    X

    வாரணாசி தவிர மோடி போட்டியிடும் இரண்டாவது தொகுதி எது?

    பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தவிர மோடி போட்டியிடும் இரண்டாவது தொகுதியை தேர்வு செய்ய பாஜக மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். #Loksabhaelections2019 #BJP #PMModi
    போபால்:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது குஜராத் மாநிலம் வதேதரா, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.

    அந்த இரு தொகுதிகளிலும் மோடி வெற்றி பெற்றார். வாரணாசி தொகுதியில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சுமார் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    இதையடுத்து வதேதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்த மோடி, வாரணாசி தொகுதியை தக்க வைத்துக் கொண்டார். மீண்டும் 2-வது முறையாக வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிட உள்ளார்.

    வாரணாசி தொகுதியில் மே 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பிரதமர் மோடி வருகிற 26-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதி தவிர மேலும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    மத்தியபிரதேச மாநிலம் விதிஷா தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 1967-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதி வி.வி.ஐ.பி. தொகுதி என்ற அந்தஸ்தைப் பெற்ற அதிர்ஷ்டமான தொகுதியாகும்.

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 1991-ம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகானும் தொடர்ச்சியாக 5 தடவை இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜூம் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எனவே இந்த தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்ற கோ‌ஷம் வலுத்து வருகிறது.

    விதிஷா தொகுதிக்கு இன்னும் பாரதிய ஜனதா வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படவில்லை. இதனால் இந்த தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #Loksabhaelections2019 #BJP #PMModi
    Next Story
    ×