search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayawati"

    • பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் மாயாவதியை விடவும் ஆகாஷ் ஆனந்தின் பங்கே அதிகம்.
    • ஆகாஷ் ஆனந்த் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை மாயாவதி தெரிவிக்கவில்லை.

    லக்னோ:

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடந்த ஆண்டு இறுதியில் தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாகவும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் அறிவித்து இருந்தார் .

    அதன்படி கடந்த ஒரு வருடமாக தீவிரமாக செயல்பட்டு வந்தார் ஆகாஷ் ஆனந்த். பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் மாயாவதியை விடவும் ஆகாஷ் ஆனந்தின் பங்கே அதிகம்.

    இந்த நிலையில் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்ப பெற்றுக் கொள்வதாக மாயாவதி அறிவித்து உள்ளார். அவர் 'அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையும் வரை' கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

    என்ன காரணத்துக்காக ஆகாஷ் ஆனந்த் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை மாயாவதி தெரிவிக்கவில்லை.

    கடந்த மாத இறுதியில், தேர்தல் கூட்டத்தில் ஆட்சேபகரமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறி, நடத்தை விதிகளை மீறியதாக ஆகாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சீதாபூர் பேரணியில் பேசிய ஆகாஷ் ஆனந்த், "இந்த அரசாங்கம் ஒரு புல்டோசர் அரசு, துரோகிகளின் அரசு. ஆப்கானிஸ்தானில் தலிபான் போன்று பா.ஜ.க. அரசாங்கத்தை நடத்துகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க பா.ஜ.க. அரசு தவறிவிட்டது. தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.16,000 கோடி எடுத்த திருடர்களின் கட்சி பா.ஜ.க." என்று கடுமையாக விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
    • "வாய்ப்பிருந்தால் தேர்தலுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி மற்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும்"

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கின. இண்டியா கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இதுவரை எந்த ஒரு விஷயத்திலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. பாஜக தனது ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில், வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இன்று(ஜன.15) அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது, "பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் முஸ்லீம்களின் ஆதரவுடன், 2007-ல் உ.பி.யில் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தோம், அதனால்தான் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். எங்களுடைய அனுபவத்தில் கூட்டணிகள் ஒருபோதும் எங்களுக்கு பலன் அளித்ததில்லை. கூட்டணியால் நாங்கள் இழந்ததே அதிகம் என தெரிவித்தார். மேலும், நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகள் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றன. தேர்தல் முடிந்தபிறகு கூட்டணி குறித்து பரிசீலிக்கலாம். வரும் பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும். வாய்ப்பிருந்தால் தேர்தலுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி மற்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

    • பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் லக்னோவில் இன்று நடந்தது.
    • இதில் மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக மாயாவதி அறிவித்துள்ளார்.

    லக்னோ:

    உத்தரப் பிரதேச முன்னாள் முதல் மந்திரியான மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.

    இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் லக்னோவில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாயாவதி தனது அரசியல் வாரிசை அறிவித்தார்.

    இதுதொடர்பாக, அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான உதய்வீர் சிங் கூறுகையில், மருமகன் ஆகாஷ் ஆனந்தை அவர் அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார் என தெரிவித்தார்.

    • டேனிஷ் அலியை பாராளுமன்றத்தில் பாஜக உறுப்பினர் ரமேஷ் பிதுரி அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • மஹுவா மொய்த்ராவுக்கு ஆதரவாக கழுத்தில் பதாகை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து டேனிஷ் அலி எம்.பி. தற்காலிகமாக நீக்கி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

    கடந்த செப்டம்பர் மாதத்தில், டேனிஷ் அலியை பாராளுமன்றத்தில் பாஜக உறுப்பினர் ரமேஷ் பிதுரி அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நியாயம் கேட்டு டேனிஷ் அலி புகாரளித்தார். ரமேஷ் பிதுரியும் டேனிஷ் அலிக்கு எதிராக புகார் அளித்தார். தனக்கு நியாயம் கேட்டும் பாராளுன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதைதொடர்ந்து, நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, தன்னைப் போலவே அவரும் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறி மொய்த்ராவுக்கு ஆதரவாக கழுத்தில் பதாகை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இந்நிலையில், டேனிஷ் அலியை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியின் கொள்கைகள், சித்தாந்தம் மற்றும் ஒழுக்கத்திற்கு எதிரான அறிக்கைகள் அல்லது செயல்களுக்கு எதிராக நீங்கள் பலமுறை எச்சரிக்கப்பட்டீர்கள். ஆனால், அதையும் மீறி நீங்கள் தொடர்ந்து கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறீர்கள்" என்று குறிப்பிட்டிருந்தது.

    இருப்பினும், தனது கட்சியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள டேனிஷ் அலி, "எந்தவிதமான கட்சி விரோதப் பணிகளையும் செய்யவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியை வலுப்படுத்த நான் விடாமுயற்சியுடன் முயற்சித்தேன். கட்சிக்கு எதிரான எந்த வேலையும் செய்யவில்லை. இதற்கு எனது அம்ரோஹா பகுதி மக்களே சாட்சி.

    பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை நான் கண்டிப்பாக எதிர்த்துள்ளேன், அதைத் தொடருவேன். இதைச் செய்வது ஒரு குற்றம் என்றால், அதற்காக எந்த தண்டனையையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.

    தனக்கு எதிரான கட்சியின் முடிவு "துரதிர்ஷ்டவசமானது". அதே நேரத்தில், தனக்கு மக்களவைச் சீட்டு வழங்கியதற்காக மாயாவதிக்கு நன்றி" என்று கூறினார்.

    • சமத்துவ சமுதாயம் உருவாக்க காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. போன்ற கட்சிகளால் முடியாது.
    • 80 மக்களவை தொகுதிகளை கொண்டுள்ள உத்தரபிரதேசத்தின் தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளை அணிதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், நாளை பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட கூட்டத்தை கூட்டியிருக்கிறார். இக்கூட்டத்தில் பங்கேற்க பாஜகவுக்கு எதிரான கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி தனது குடும்ப நிகழ்வு காரணமாக கூட்டத்தில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை நடைபெறும் கூட்டத்தில், உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் மாயாவதி கூறியிருக்கிறார். இக்கூட்டத்தை தவிர்க்கும் வகையில் மாயாவதி டுவிட்டரில் சில பதிவுகளை செய்திருப்பது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. அவர் டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது:

    பாட்னா கூட்டமானது, தலைவர்களின் கைகளை கோர்ப்பதை போன்றுதான் தெரிகிறதே தவிர, இதயங்களை இணைப்பது போல இல்லை. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், வறுமை, வன்முறை போன்றவற்றால் நாடு அல்லல்படும்போது அம்பேத்கர் கட்டமைத்து கொடுத்த அரசியல் சாசனம் மூலம் சமத்துவ சமுதாயம் உருவாக்க காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. போன்ற கட்சிகளால் முடியாது.

    இதுபோன்ற கூட்டத்தை கூட்டும் முன்பாக, "பேசுவது ஒன்றும், நோக்கம் வேறாகவும்" உள்ள இப்படிப்பட்ட கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி விடுவது நல்லது.

    மேலும், எந்த கூட்டணிக்கும் வெற்றி தேடித் தர அவசியமான, இந்தியாவிலேயே அதிகமான எண்ணிக்கையாக 80 மக்களவை தொகுதிகளை கொண்டுள்ள உத்தரபிரதேசத்தின் தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை.

    அவசியமான விஷயங்களுக்கு முன்னுரிமை தராமல் மேற்கொள்ளப்படும் மக்களவை தேர்தல் கூட்டணிக்கான ஏற்பாடுகள் எவ்வாறு பயனளிக்கும்?

    இவ்வாறு மாயாவதி தெரிவித்திருக்கிறார்.

    உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் மற்றும் தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என சில தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கட்சிகள் பொதுவாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடமிருந்து விலகி இருப்பவை. எனினும், பிரச்சனைகளின் அடிப்படையில் இந்த கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதால் அழைப்பு விடுக்கவில்லை என தெரிகிறது.

    ஐக்கிய ஜனதா தளம் கட்சியின தலைமை செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி கூறுகையில், "2024-ல் பாஜகவுக்கு எதிராக போராட தயாராக உள்ள கட்சிகளுக்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். ஆனால் இந்த கூட்டணியில் அங்கம் வகிக்காது என்று பகுஜன் சமாஜ் கட்சி கூறுகிறது, பிறகு நாங்கள் ஏன் எங்கள் அழைப்பை வீணடிக்க வேண்டும்?" என்றார். 

    • ராகுல் காந்தி, இந்தியாவில் தலித்துகள், முஸ்லிம்கள் பரிதாபகரமான நிலையில் இருப்பதாக கருத்து தெரிவித்தார்.
    • காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

    லக்னோ :

    அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் தலித்துகள், முஸ்லிம்கள் பரிதாபகரமான நிலையில் இருப்பதாக கருத்து தெரிவித்தார்.

    அவரது கருத்தை உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி ஒப்புக்கொண்டுள்ளார்.

    இது குறித்து அவர் நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், " காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது, கோடிக்கணக்கான தலித்துகள் மற்றும் முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலை, அவரது வாழ்க்கைக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பது குறித்து குறிப்பிட்டுள்ளார். அவர் கூறி இருப்பது கசப்பான உண்மை ஆகும். இதற்கு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் பிற கட்சிகள்தான் பொறுப்பு ஆவார்கள்" என கூறி உள்ளார்.

    • பிரவீன்குமாரை நீங்கள் முதலமைச்சர் பதவியில் அமர்த்தினால் தெலுங்கானா ஒரு மின் மிகை மாநிலமாக உருவாக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.
    • மாநாட்டில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 114 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அதன் வேட்பாளர்களை ஆதரித்து பெங்களூர் அரண்மனை மைதானத்தில் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தேசிய தலைவரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்-அமைச்சருமான மாயாவதி கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து தேர்தல் பிரசாரம் செய்தார்.

    அதன்பின்பு பெங்களூரில் தனியார் விடுதியில் தங்கி இருந்த மாயாவதியை புத்த பூர்ணிமா தினத்தன்று பகுஜன் சமாஜ் கட்சி தமிழக மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவருடைய மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், ஆகியோர் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

    அப்பொழுது ஆம்ஸ்ட்ராங் தம்பதியினரின் பெண் குழந்தைக்கு இந்திய முதல் பெண் ஆசிரியரான சாவித்திரி பாய் பெயரை மாயாவதி சூட்டி, குழந்தையை முத்தமிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார்.

    பின்னர் ஹைதராபாத்தில் நடைபெற்ற தெலுங்கானா நம்பிக்கை மாநாட்டில் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டார். மாநாட்டிற்கு தெலுங்கானா மாநிலத் தலைவரும் முன்னாள் டிஜிபி ஆர். எஸ். பிரவீன் குமார், (ஐபிஎஸ்) தலைமை தாங்கினார். இந்த மாநாட் டில் மாயாவதி கலந்து கொண்டு பேசியதாவது:-

    தெலுங்கானா மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி அமைத்தால் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு சமமான இட ஒதுக்கீடு மற்றும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். இந்த தெலுங்கானா நம்பிக்கை மாநாட்டிற்கு வருகை தந்த அனைவரும் நம்பிக்கையோடு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது ஆண்டு கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து அதனை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

    எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தெலுங்கானாவில் ஆட்சி அமைந்தால் உங்கள் நம்பிக்கையின் நட்சத்திரமான பிரவீன்குமாரை நீங்கள் முதலமைச்சர் பதவியில் அமர்த்தினால் தெலுங்கானா ஒரு மின் மிகை மாநிலமாக உருவாக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநாட்டில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் சித்தார்த்த மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    • உத்தரபிரதேசம் வழியாக பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கும் ராகுல் காஷ்மீரில் ஜனவரி 26-ந்தேதி பாத யாத்திரையை நிறைவு செய்ய உள்ளார்.
    • காஷ்மீரில் ராகுல் பாதயாத்திரை நுழையும் போது உரிய ராணுவ பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று அம்மாநில கவர்னரிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்வர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டு உள்ளார்.

    இதுவரை அவர் 9 மாநிலங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்டு கடந்த வாரம் டெல்லியை சென்றடைந்தார். சுமார் 3000 கி.மீ. தூரம் ராகுல் நடந்துள்ளார்.

    தற்போது வடமாநிலங்களில் அளவுக்கு அதிகமான குளிர் நிலவுவதால் ராகுல்காந்தியின் பாதயாத்திரைக்கு தற்காலிகமாக 9 நாட்கள் ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந்தேதி மீண்டும் ராகுல்காந்தி ஒன்றுமை யாத்திரையை தொடங்க உள்ளார்.

    உத்தரபிரதேசம் வழியாக பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கும் அவர் காஷ்மீரில் ஜனவரி 26-ந்தேதி பாத யாத்திரையை நிறைவு செய்ய உள்ளார். காஷ்மீரில் ராகுல் பாதயாத்திரை நுழையும் போது உரிய ராணுவ பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று அம்மாநில கவர்னரிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்வர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ஒவ்வொரு மாநிலத்திலும் ராகுல் நடைபயணம் மேற்கொண்ட போது அந்ததந்த மாநில கட்சி தலைவர்களை யாத்திரைக்கு காங்கிரசார் அழைத்தனர். அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் போது ராகுலுடன் பாத யாத்திரையில் பங்கேற்க வருமாறு சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவிற்கும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கும் காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

    ஆனால் ராகுலுடன் பாத யாத்திரையில் பங்கேற்க இயலாது என்று அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    உத்தரபிரதேத்தில் 2 பெரிய கட்சி தலைவர்கள் ராகுல்யாத்திரையை புறக்கணிப்பது காங்கிசாரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • ஹபூருக்கு அழைத்து வந்த விசாரணை கைதி சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்.
    • ஹமிர்பூரில் வலியை கொடுக்கும் கூட்டு பாலியல் பலாத்காரம் நடந்துள்ளது.

    லக்னோ

    உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா சார்பில் யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக உள்ளார். அங்கு சமீப நாட்களாக தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.

    இதை முன்வைத்து மாநில அரசை பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'யமுனை நதியில் பணி முடிக்கப்படாத பாலம் காரணமாக ஏராளமான மக்கள் படகு விபத்தில் கொல்லப்பட்டு உள்ளனர். ஹபூருக்கு அழைத்து வந்த விசாரணை கைதி சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார். தற்போது ஹமிர்பூரில் வலியை கொடுக்கும் கூட்டு பாலியல் பலாத்காரம் நடந்துள்ளது. இந்த சம்பவங்கள் அனைத்தும், மாநிலத்தில் காட்டாட்சி நடப்பதை நிரூபித்து உள்ளன. மாநிலத்தில் வளர்ச்சியை பற்றி அரசு தம்பட்டம் அடிப்பது வெறும் ஏமாற்று வேலை' என சாடியுள்ளார்.

    மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கடுமையான வறுமை மற்றும் வேலையின்மை உள்ளதாக கூறியுள்ள மாயாவதி, அரசு இதில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • தலித் சிறுவன் பள்ளி ஆசிரியரால் தாக்கப்பட்டு உயிரிழந்தான்.
    • சாதிக்கொடுமைகள் ராஜஸ்தான் மாநிலத்தில் தினமும் நடக்கின்றன.

    லக்னோ :

    ராஜஸ்தான் மாநிலம் சுரானா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்திரகுமார் மேக்வால் என்ற தலித் சிறுவன் படித்துவந்தான்.

    9 வயதான அந்தச் சிறுவன், பள்ளியில் உள்ள தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்துள்ளான். அப்போது பள்ளி ஆசிரியர் அவனை தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் படுகாயமடைந்த அச்சிறுவன், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவன் உயிரிழந்தான்.

    இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'இதுபோன்று வலி ஏற்படுத்தும் சாதிக்கொடுமைகள் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏறக்குறைய தினமும் நடக்கின்றன. தலித் மக்கள் உள்ளிட்டோரின் உயிர், கவுரவத்தை காக்க காங்கிரஸ் அரசு தவறுவதையே சிறுவனின் சாவு காட்டுகிறது. எனவே ராஜஸ்தானில் தற்போதைய அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.

    • துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 6-ந்தேதி நடக்கிறது.
    • மார்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

    லக்னோ :

    நமது நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நாளை மறுதினம் (6-ந் தேதி) நடக்கிறது. இந்த தேர்தலில் பாராளுமன்றத்தின் இரு சபைகளின் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

    இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்காள மாநிலத்தின் கவர்னராக இருந்த ஜெகதீப் தன்கர் (வயது 71) போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் கவர்னர் மார்கரெட் ஆல்வா (80) களம் காண்கிறார்.

    துணை ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்பதிவுக்கான தேதி நெருங்கிவிட்ட தருணத்தில், பா.ஜ.க. வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதையொட்டி மாயாவதி நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

    நாட்டின் உச்ச பதவியான ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் மத்தியில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்பது நன்றாக தெரிந்த ஒன்றுதான்.

    தற்போது 6-ந் தேதி நடக்கிற துணை ஜனாதிபதி தேர்தலிலும் அதே நிலைதான் நிலவுகிறது. அப்படிப்பட்ட ஒரு சூழலில், பரந்த பொது நலனையும், அதன் நகர்வையும் மனதில்கொண்டு, எங்கள் கட்சி ஜெதீப் தன்கருக்கு தனது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    பகுஜன் சமாஜ் கட்சிக்கு மக்களவையில் 10 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் ஒரு எம்.பி.யும் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தலில் மாயாவதியின் கட்சி, பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக களம் கண்ட திரவுபதி முர்முவுக்கு தனது ஆதரவை வழங்கியது நினைவுகூரத்தக்கது.

    இதற்கிடையே எதிர்க்கட்சி பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இந்த தகவலை அந்த கட்சி எம்.பி. சஞ்சய்சிங் அறிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்தது.
    • ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா களமிறங்கியுள்ளார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா களமிறங்கியுள்ளார்.

    இதற்கிடையே, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்மு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் இருவரும் பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவினை திரட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

    ×