search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  கரூர் தேர்தல் அலுவலகத்தில் ஜோதிமணி- செந்தில்பாலாஜி உள்ளிருப்பு போராட்டம்
  X

  கரூர் தேர்தல் அலுவலகத்தில் ஜோதிமணி- செந்தில்பாலாஜி உள்ளிருப்பு போராட்டம்

  இறுதி கட்ட பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கரூர் தேர்தல் அலுவலகத்தில் ஜோதிமணி- செந்தில்பாலாஜி ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #senthilbalaji #jothimani

  கரூர்:

  கரூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் நாளை 16-ந்தேதி நிறைவு பெறுகிறது. அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோதிமணி சார்பில் கரூர் பஸ் நிலையம் மனோகரா கார்னர் பகுதியில் இறுதிக்கட்ட பிர சாரம் செய்ய அனுமதி கேட்டு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது.

  ஆனால் அதிகாரிகள் தரப்பில் அ.தி.மு.க.வினர் முன்னதாகவே விண்ணப்பித்துள்ளதால், அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

  இதையடுத்து முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி, வேட்பாளர் ஜோதிமணி, விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி, நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் உள்பட ஏராளமான தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கரூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு சென்றனர்.

  பின்னர் அங்கிருந்த உதவி தேர்தல் அதிகாரி சரவண மூர்த்தியிடம் இறுதிக்கட்ட பிரசாரத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

  மேலும் அவர்கள் கூறும்போது, தேர்தல் விதிமுறைப்படி இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட நாங்கள் முறையான அனுமதி பெற்றுள்ளோம். ஆனால் அ.தி.மு.க.வுக்கு, நாங்கள் குறிப்பிட்ட மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே பிரசாரத்தை முடித்திட அனுமதி வழங்கியது முறை கேடானது என குற்றஞ்சாட்டினர். இதனால் அதிகாரிகளுக்கும், தி.மு.க. கூட்டணி கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

  உடனே அங்கு ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். கலவரத்தை அடக்க பயன்படுத்தப்படும் வஜ்ரா வாகனமும் வரவழைக்கப்பட்டது. அலுவலக வாயிற் கதவுகள் பூட்டப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

  இதனிடையே உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தை விட்டு வெளியே வராமல் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி, வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்ட தி.மு.க.வினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  பின்னர் தேர்தல் பொதுப்பார்வையாளர் பிரசாந்த் குமார், செலவின பார்வையாளர் மனோஜ்குமார் ஆகியோர் வந்து, இந்த பிரச்சினை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது அ.தி.மு.க.- காங்கிரஸ் வேட்பாளர்கள் சார்பில் இறுதி கட்ட பிரசாரத்திற்காக அளித்த தகவல் விவரங்கள், பிரசார அனுமதி வழங்கியதற்கான ஒப்புதல் விவரம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு விசாரித்தனர்.

  இதைத்தொடர்ந்து நாளை மாலை 4-6 மணியளவில் மனோகரா கார்னர் அருகே காங்கிரஸ் வேட்பாளருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. அ.தி.மு.க.வுக்கு முன்னதாக அதே இடத்தில் மதியம் 12 முதல் பிற்பகல் 2 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டது.

  இதைத்தொடர்ந்து 6 மணி நேரமாக நடந்த உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு, அதிகாரிகளிடம் இருந்து அதற்குரிய ஆணையை பெற்று கொண்டு ஜோதிமணி, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் அங்கிருந்து வெளியே வந்தனர்.

  காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தெரிவிக்கையில், 16-ந்தேதிக்கான பிரசார இடங்களுக்கு அனுமதி பெற 11-ந்தேதி தான் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க. சார்பில் 10-ந்தேதியே விண்ணப்பித்திருக்கின்றனர். தேர்தல் பார்வையாளர் வந்து அ.தி.மு.க. சார்பில் நேரம் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததை கண்டு பிடித்தார் எனக்கூறினார்.

  செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறும்போது, நாளை (செவ்வாய்க்கிழமை) இறுதி கட்ட பிரசாரத்திற்காக 15 இடங்களை தேர்வு செய்து கொடுத்திருந்தோம். காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெறப்போகிறார். ஆகவே அவரது பிரசாரத்தை முடக்கும் நோக்கிலேயே இத்தகைய பித்தலாட்டத்தில் ஆளும்கட்சியினர் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு போலீஸ் அதிகாரி உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகளும் துணை போயிருக்கின்றனர். இந்த விவகாரத்தை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம். தம்பிதுரையின் தோல்வி உறுதியாகிவிட்டது. அவர் டெபாசிட் இழப்பது உறுதி என்றார். #senthilbalaji #jothimani

  Next Story
  ×