என் மலர்
தேர்தல் செய்திகள்
ஈரோடு:
தி.மு.க கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சந்திரகுமார் மாலைமலர் நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தே.மு.தி.க. தற்போது அரசியல் மறுவாழ்விற்காக மாறிமாறி அலைந்து கொண்டு இருக்கிறது.
பிரேமலதா கட்சி விஷயங்களில் எப்போது தலையிட ஆரம்பித்தாரோ அப்போது இருந்தே தே.மு.தி.க.வை பணம் கொழிக்கும் கட்சியாக மாற்றி வருகிறார். அதிமுக, திமுக ஆட்சியில் கட்சிகளிடமும் ஒரே நேரத்தில் கூட்டணி பேரம் பேசிய செயலை இதுவரை தமிழகத்தில் யாரும் செய்ய வில்லை.

பிரேமலதா திமுக பற்றியும் தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றியும் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். கருணாநிதி உடல் நலம் சரியில்லாமல் இருந்த போது அவரை விஜயகாந்த் சந்திக்க அனுமதி கேட்ட போது மு.க.ஸ்டாலின் மறுத்ததாக பிரேமலதா கூறி வருகிறார். இது சுத்தப் பொய். பிரேமலதா பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இல்லை என்றால் உங்களைப் பற்றிய முழு விவரங்களையும் தமிழக மக்களிடம் எடுத்துக்கூற வேண்டி இருக்கும்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க கூட்டணி மிக பெரிய தோல்வியை சந்திக்கும். காரணம் இது மக்கள் ஏற்றுக் கொள்ளாத கூட்டணி. திமுக- காங்கிரஸ் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும். மு.க.ஸ்டாலின் மக்கள் விரும்பும் தலைவராக உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். #premalatha #dmk #mkstalin
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள அய்யலூர் பகுதியில் பொதுமக்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மனுக்களை பெற்றார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அதில் வெற்றி பெறுவதுதான் அ.தி.மு.க.வின் முதல் குறிக்கோள்.
எனவே மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. தனித்து நின்று வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளபோதிலும் 21 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலை மனதில் வைத்து அவை அனைத்திலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதற்காகவே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம்.
1998-ல் நடந்த மக்களவை தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பா.ஜ.க. மற்றும் பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்திருந்தார். அதன் அடிப்படையில்தான் தற்போதும் கூட்டணி அமைத்துள்ளோம். இந்த கூட்டணி அமைவதன் மூலம் பல்வேறு திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைக்கும்.
எங்களுடைய பல கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக கூறியதன் அடிப்படையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
கூட்டணி அமைப்பது தொடர்பாக தே.மு.தி.க.வின் அரசியல் நடவடிக்கைகளை துரைமுருகன் வெளியிட்டது அரசியல் நாகரீகம் இல்லை. காட்டி கொடுப்பது துரைமுருகனுக்கு மட்டும் அல்ல தி.மு.க.வுக்கு கைவந்த கலை.
இவ்வாறு அவர் கூறினார். #ThambiDurai #BJP #ADMK
பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியது. தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து வருகிறது.
அ.தி.மு.க., தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அதன் தோழமை கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து விட்டது.
தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 40 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். அவரது அணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தவிர ஒரு சில கட்சி தலைவர்களும் தினகரனுடன் பேசி வருகிறார்கள். தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிப்பதற்காக கூட்டத்தை அ.ம.மு.க. ஏற்பாடு செய்துள்ளது.
நாளை மறுநாள் (11-ந் தேதி) சென்னையில் இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகரில் உள்ள தலைமைக்கழக அலுவலகத்தில் அன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.
டி.டி.வி. தினகரன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டணியில் யார்- யாரை சேர்ப்பது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, பாராளுமன்ற தேர்தலோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதனை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
கூட்டணியில் சேர விரும்பும் கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்க வியூகம் அமைப்பது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. #LSPolls #AMMK #TTVDhinakaran
திருச்சி:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேசிய அளவிலான நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நமது நாட்டை பொறுத்தவரை எல்லை தாண்டும் பயங்கரவாதிகளைக்கூட எளிதில் துவம்சம் செய்து விடலாம். ஆனால் உள்நாட்டில் மதம் மூலம் பிளவுப்படுத்தி பார்க்கும் அரசியலும், அதனால் ஏற்படுகின்ற பின்விளைவுகளும் மிகவும் மோசமானது.
எனவே நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தி.மு.க. தலைமையில் ம.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. எங்களது நோக்கம் நரேந்திர மோடியை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்க வேண்டும். தேசத்துக்காக புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்.
அதே வேளையில் ராணுவத்துக்காக ரபேல்பேரம் நடத்தப்பட்டு இமாலய ஊழலில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டுள்ளது. அரசின் இலாகா வசம் இருந்த ராணுவத்துக்கு சொந்தமான ரபேல் பேர முக்கிய ஆவணங்கள் திருட்டு போய் உள்ளன. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது பா.ஜ.க. அரசு ஊழலில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. இது மட்டுமல்லாமல் தமிழகத்துக்கு பா.ஜ.க. அரசு மீத்தேன் திட்டம், முல்லைபெரியாறு, கர்நாடகாவில் காவிரியை தடுத்து அணை கட்டும் திட்டம் என்று பல்வேறு துரோகங்களை செய்து கொண்டே இருக்கிறது. இதனால் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச்செய்வது மக்களின் கடமை.

பா.ஜ.க. ஆட்சியின் துரோகத்தை மக்கள் புரிந்து கொண்டு 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச்செய்வார்கள். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டை தே.மு.தி.க.வினர் முற்றுகையிட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன. இந்த தகவல் உண்மை என்றால் தே.மு.தி.க.வின் செயல்பாட்டை ம.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. எங்களை பொறுத்தவரை கூட்டணி என்றால் உயிரையும் கொடுக்க தயங்கமாட்டோம். தே.மு.தி.க.வின் செயல்பாடு பல விபரீதங்களை ஏற்படுத்தி விடும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #vaiko #dmdk #parliamentelection
ஆண்டிப்பட்டி:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் ஆண்டிப்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி குறித்து துணைப் பொதுச் செயலாளர் தினகரன் ஏற்கனவே அறிவித்து விட்டார். எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் கூட்டணி அமைத்துஅவர்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கி விட்டோம். இரு கட்சியுடன் பேசிக் கொண்டுள்ளோம். இன்னும் இரண்டு நாளில் கூட்டணி இறுதியாகி விடும்.
நாங்கள் 38 தொகுதிகளில் போட்டியிடுவோம். தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பின் தலைமை வெற்றிடமாக உள்ளது. புதிய தலைமையை மக்கள் எதிர்பார்க்கின்றனர். தினகரனை மக்கள் விரும்புகின்றனர். அந்த நம்பிக்கையில் தான் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம். தமிழக மக்கள் நலன் கருதியே தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவில்லை.
கடந்த இரு ஆண்டுகளாக எம்.எல்.ஏ. இல்லாமல் ஆண்டிப்பட்டி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தினால் ஆண்டிப்பட்டி தொகுதியில் நிச்சயம் போட்டியிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilselvan
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது.
கட்சியின் தலைவர் கமல்ஹாசன், செயற்குழு உறுப்பினர்கள் கமீலா நாசர், ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மகளிர்தின ஒளியை கமல் ஏற்றி வைத்தார். கோவையை சேர்ந்த மருத்துவர் உஷா இளங்கோ, நடிகை கோவை சரளா ஆகியோர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர்
நிகழ்ச்சியில் முதலில் பேசிய கமீலா நாசர் ‘மக்கள் நீதி மய்யம் ஆட்சியில் ஆண்களுக்கு சமமான சம்பளம் பெண்களுக்கும் வழங்குவோம். நவம்பர் 19 அன்று ஆண்கள் தினத்தையும் நாம் கொண்டாட வேண்டும்’ என்றார்.
கட்சியில் சேர்ந்த நடிகை கோவை சரளா கூறியதாவது:-
‘போகிற போக்கை பார்த்தால் மக்கள் நீதி மய்யம் கட்சியே மகளிர் நீதி மய்யமாக மாறிவிடும் போல் தெரிகிறது. பெண்கள் நாட்டின் கண்களாக இருக்க வேண்டும். பெண்கள் தமிழ்நாட்டில் நலிந்துபோய் உள்ளோம். தூர்வார தெரியாதவன் துப்புரவு தொழிலாளியை குறை சொன்னானாம். அதுபோல் நாம் இருக்க கூடாது.
ஆண்களை நம் கட்சி வாக்களிக்கச்செய்ய வேண்டும். சினிமாவில் இருப்பவர்கள் கட்சி ஆரம்பித்து என்ன கிழிப்பார்கள் என்றார்கள். கலைஞர்களுக்கு தான் மக்களின் மனநிலை தெரியும். அதனால்தான் உணர்வுப்பூர்வமாக கமல் கட்சியில் இணைந்துள்ளேன்’

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:-
‘நான் அரசியல் பிரவேசம் செய்வதற்கு ஊக்கியாக இருந்தவர்கள் ஸ்ரீபிரியா, சரளா உள்ளிட்ட பெண்கள் தான். உங்க வீட்டில் எந்த ஆட்சி? சிதம்பரமா... மதுரையா... என கேட்பார்கள். என் வீட்டைப் பொறுத்தவரை மதுரை தான். நான் வீட்டில் வளரும்போது என்னை சுற்றி ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் இருந்தார்கள்.
பெண்களுக்கான உரிமைகள் இங்கு உள்ளது. பெண்கள் அதனை கைப்பற்ற வேண்டும். எனக்கு படிப்பு பள்ளிக்கூடத்தில் வரவில்லை. ஆனால் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கிறேன். அரசியல் வாதிகள் ஏழைகளை ஏழைகளாகவே வைத்துள்ளார்கள். அதுதான் அவர்களின் வெற்றிக்கான சாவி. வாக்குக்கு பணம் வாங்காமல் சரியாக வாக்களித்தால் நமக்கு லட்சக்கணக்கில் பணம் வந்து சேரும்.
இங்கு தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்த வேண்டியது நமது கடமை. அரசு பணிகளில் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களை பணிக்கு வைப்பது சூழ்ச்சி. சட்டமன்றத்தில் மட்டும் அல்லாமல், பாராளுமன்றத்திலும் நமது குரல் ஒலிக்க வேண்டும். நமது கட்சி வேட்பாளர்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மருத்துவர்கள் என இருப்பார்கள். கைக்கு அடக்கமான ஆளை வேட்பாளராக போடும் அரசியல் நடக்காது.
தனக்கு பின் தன் மகனோ, மகளோ, மைத்துனரோ வருவார்கள் என்ற அரசியல் கூடாது. நான் தமிழன் என்று வாய்ப்பு கேட்காதீர்கள். தகுதியை வைத்து வாக்கு கேளுங்கள். தமிழர்கள் என்பது விலாசம். திறமை இல்லாத தமிழனுக்கு எல்லா வாய்ப்பையும் அளிக்க வேண்டும் என்பது இல்லை. திறமை உள்ள தமிழனுக்கே வாய்ப்பு.’
இவ்வாறு கமல் பேசினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
சமத்துவ மக்கள் கட்சி வெளிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சரத்குமார் உத்தரவுப்படி வருகின்ற 9, 10-ந்தேதிகளில் கட்சி தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் தேர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது.
9-ந்தேதி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர் உள்ளிட்ட பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனு பெறப்படும்.
10-ந்தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு பெறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உலக மகளிர் தினத்தையொட்டி அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

மூத்த அரசியல் தலைவரான திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக நிர்வாகிகள் சந்திக்க சென்றது தொடர்பாக சுதீஷ் முன்னிலையில் இருவரும் விளக்கம் அளித்துவிட்டனர். மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்கு வீட்டிற்கு வந்தவர்களை இப்படித்தான் அவமானப்படுத்துவதா?
துரைமுருகனை சந்திப்பதற்காக இருவரும் உள்ளே போகும்போது மீடியாக்கள் அங்கு இல்லை, வெளியே வரும்போது எப்படி வந்தது? எனவே, அரசியல் ரீதியாக தேமுதிகவை பழிவாங்கும் நோக்கத்தில் இதை திமுக கையாண்டிருக்கிறது. சாதாரணமான விவகாரத்தை சூழ்ச்சி மூலம் இதை திமுக பூதாகரமாக்கிவிட்டது. ஆரம்ப காலத்தில் இருந்தே திமுக என்கிற கட்சிக்கான விளக்கத்தை நான் தெளிவாகி பதிவு செய்து வருகிறேன். திமுக என்றால் ‘தில்லு முல்லு கட்சி’ தான் என்று தொடர்ந்து கூறி வருகிறேன்.
தன்னை சந்திக்க வந்தவர்களை முதலில் தெரியும் என்றார். அதன்பின்னர் தெரியாது என்கிறார். தெரியாத நபர்களை எப்படி உள்ளே விடுவார்? இப்படி கீழ்த்தரமான அரசியலை அவர் செய்வார் என எதிர்பார்க்கவில்லை.
ஒரே நேரத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிடமும் ஒரே சமயத்தில் கூட்டணி தொடர்பாக எழுப்பப்படும் கேள்வியே தவறு. ஒரு வீட்டில் மணப்பெண் இருந்தால் 10 பேர் பெண் கேட்டு வரத்தான் செய்வார்கள். அதேபோல் தான் தேர்தலும். கூட்டணிக்காக கட்சிகள் வரும்.
எங்கள் தலைவர் விஜயகாந்தை சந்தித்தபோது அரசியல் பேசவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் முதலில் சொல்ல வேண்டும். கலைஞர் உடல்நலம் இல்லாதபோது சந்திக்க விஜயகாந்த் அனுமதி கேட்டார்; ஆனால் ஸ்டாலின் அனுமதி கொடுக்கவில்லை. தேமுதிகவின் கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #Premalatha #DMDK
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்று பயணம் மேற்கொண்ட பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியேற்றினார். நேற்று இரவு திருச்செந்தூர் வந்த அவருக்கு கட்சி நிர்வாகிகள் மேளதாளத்துடன் வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து அவர் தேரடி திடலில் முகப்பில் உள்ள கட்சி கொடிக்கம்பத்தில் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாரதிய ஜனதா, அ.தி. மு.க. கூட்டணி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாளை நமதே என்பது போல 40 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றிபெறும். தே.மு.தி.க.வினர் எங்களது கூட்டணிக்கு வருவார்கள். அவர்களுடன் சுமூகமான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. கூட்டணியில் நாங்கள் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கேட்டுள்ளோம். அது முடிவானால் கட்சி மேலிடம் யாரை அறிவிக்கிறதோ அவர்கள் போட்டியிடுவார்கள். நாங்கள் அமைத்த கூட்டணி தான் வெற்றி கூட்டணியாக உள்ளது. அதனால் ஸ்டாலின் எதை எதையோ பேசி வருகிறார்.
எதிர்கட்சிகள் பா.ஜ.க கூட்டணி குறித்து புறம் பேசி வருகிறார்கள். ஆனால் எங்கள் கூட்டணியில் நல்ல கட்சிகள் திரண்டு வருகிறார்கள். இதனை பார்த்து ஸ்டாலின் மிரண்டு வருகிறார் என்பது தான் உண்மை. மோடி கூட்டணியை மிரட்டவில்லை, கூட்டணி கட்சியுடன் நல்ல மரியாதை வைத்துள்ளார். இதை நீங்கள் மேடையில் பார்த்திருப்பீர்கள். ஸ்டாலின் மோடியை பார்த்து தமிழகத்துக்கு என்ன செய்தார் என்று கேட்கிறார். தமிழகத்திற்கு மூன்று முறை மோடி வந்துள்ளார். அப்போது அவர் பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
ராணுவ தளவாட கண்காட்சியை 3.50 லட்சம் தமிழர்கள் பார்த்தனர். இந்த கண்காட்சி தமிழகத்தில் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பதற்கான தொழில் புரிவதற்கான முன்னோட்டம் தான். கன்னியாகுமரியில் ரூ.40 ஆயிரம் கோடியில் சாலை உள்பட பல்வேறு திட்டங்களை துவங்கி வைத்தார். திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தையும் மோடி துவக்கி வைத்தார். ஸ்டாலினுக்கு வரலாறும் தெரியாது பூகோளமும் தெரியாது.
சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய பணிகள் ஆரம்பித்துள்ளது. இந்த திட்டங்கள் எல்லாம் மோடி தமிழகத்திற்கு செய்தது ஸ்டாலினுக்கு தெரியாதா? காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சி காலத்தில் போலி சட்டமன்றத்தை மன்மோகன்சிங் திறந்து வைத்தார். சென்னை - மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தால் என்ன பயன் என்று ஸ்டாலின் கேட்கிறார். 6 மணி நேரத்தில் வரும்போது மக்கள் மட்டுமல்லாமல் வணிகர்களும் பொது மக்களும் பயன்பெறுவார்கள்.
இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட 1900 மீனவர்களை மோடி மீட்டுக் கொண்டுவந்துள்ளார். இதில் 5 மீனவர்கள் தூக்கு மேடை விளிம்பில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்கள். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கிரஸ், தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் சிறை பிடிக்கப்பட்டார்கள் அப்போது இவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள். காஞ்சிபுரத்தில் துவங்கியுள்ள இந்த நல்லவர்கள் கூட்டணி வெற்றிபெறும். தி.மு.க. தலைவர் ஸ்டாலினை மக்கள் நம்ப தயாராக இல்லை என அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP

ஆங்கிலம்-தமிழ் இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையை தலைமை கழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பொன்னையன் இன்று சமர்ப்பித்தார்.
தேர்தல் அறிக்கையில் ஏதும் திருத்தம் செய்ய வேண்டுமானால் அதை சரி செய்து பின்னர் முறையாக மக்கள் பார்வைக்கு வெளியிடப்படும். #LSPolls #ADMK #ADMKManifesto
விழுப்புரத்தில் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-
மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில், அவர் வழிகாட்டியதை போல், ஏழைகள் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்காக, நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகிறோம்.
அ.தி.மு.க.வில் 1½ கோடி தொண்டர்கள் விசுவாசமாக இருந்தனர். ஆனால் சதி திட்டத்தால், ஒரு கொலைகார கூட்டத்தால் ஜெயலலிதாவை நாம் பறி கொடுத்து விட்டோம். ஜெயலலிதா இறுதியாக சட்டசபை கூட்டத்தில் பேசியபோது, எனக்குப் பின்னரும் 100 ஆண்டுகளுக்கு மேல் அ.தி.மு.க. தமிழக மக்களுக்காக நல்லாட்சி செய்யும் என்றார்.
எதிரிகள் நம் மீது எத்தனை வழக்குகள் போட்டு தடுத்தாலும், ஆட்சியே இருக்காது என கூறியபோதும், ஜெயலலிதா ஆசியால் 2 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறோம். அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தையும் மீட்டுள்ளோம்.
அம்மா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. அழிந்தது, அ.தி.மு.க.வுக்கு எதிர்காலம் இல்லை என்று சொன்னவர்கள் தற்போது அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்தால்தான் தங்களுக்கு எதிர்காலம் என்று கருதி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கும் நிலையை உருவாக்கி காட்டி உள்ளோம். அ.தி.மு.க. நல்லாட்சியை கண்டு பலரும் போட்டி போட்டுக்கொண்டு நம்முடன் கூட்டணி வைக்க வருகின்றனர்.
பிரதமர் மோடியும் நமது சாதனையை பாராட்டியுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஸ்டாலின் நடை உடை பாவனை எல்லாம் தான் பிரதமர் ஆகிவிட்டது போல இருந்தது. ஆனால் தற்போது ஸ்டாலின் நிலைமை என்ன? எங்களோடு கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சுகின்ற நிலை இன்று உருவாகி இருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். #LSPolls #ADMK #CVeShanmugam






