search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக-அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும்  - தமிழிசை
    X

    பாஜக-அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் - தமிழிசை

    தமிழகம், புதுவையில் பாஜக -அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #BJP

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்று பயணம் மேற்கொண்ட பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியேற்றினார். நேற்று இரவு திருச்செந்தூர் வந்த அவருக்கு கட்சி நிர்வாகிகள் மேளதாளத்துடன் வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து அவர் தேரடி திடலில் முகப்பில் உள்ள கட்சி கொடிக்கம்பத்தில் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா, அ.தி. மு.க. கூட்டணி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாளை நமதே என்பது போல 40 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றிபெறும். தே.மு.தி.க.வினர் எங்களது கூட்டணிக்கு வருவார்கள். அவர்களுடன் சுமூகமான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. கூட்டணியில் நாங்கள் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கேட்டுள்ளோம். அது முடிவானால் கட்சி மேலிடம் யாரை அறிவிக்கிறதோ அவர்கள் போட்டியிடுவார்கள். நாங்கள் அமைத்த கூட்டணி தான் வெற்றி கூட்டணியாக உள்ளது. அதனால் ஸ்டாலின் எதை எதையோ பேசி வருகிறார்.

    எதிர்கட்சிகள் பா.ஜ.க கூட்டணி குறித்து புறம் பேசி வருகிறார்கள். ஆனால் எங்கள் கூட்டணியில் நல்ல கட்சிகள் திரண்டு வருகிறார்கள். இதனை பார்த்து ஸ்டாலின் மிரண்டு வருகிறார் என்பது தான் உண்மை. மோடி கூட்டணியை மிரட்டவில்லை, கூட்டணி கட்சியுடன் நல்ல மரியாதை வைத்துள்ளார். இதை நீங்கள் மேடையில் பார்த்திருப்பீர்கள். ஸ்டாலின் மோடியை பார்த்து தமிழகத்துக்கு என்ன செய்தார் என்று கேட்கிறார். தமிழகத்திற்கு மூன்று முறை மோடி வந்துள்ளார். அப்போது அவர் பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    ராணுவ தளவாட கண்காட்சியை 3.50 லட்சம் தமிழர்கள் பார்த்தனர். இந்த கண்காட்சி தமிழகத்தில் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பதற்கான தொழில் புரிவதற்கான முன்னோட்டம் தான். கன்னியாகுமரியில் ரூ.40 ஆயிரம் கோடியில் சாலை உள்பட பல்வேறு திட்டங்களை துவங்கி வைத்தார். திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தையும் மோடி துவக்கி வைத்தார். ஸ்டாலினுக்கு வரலாறும் தெரியாது பூகோளமும் தெரியாது.

    சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய பணிகள் ஆரம்பித்துள்ளது. இந்த திட்டங்கள் எல்லாம் மோடி தமிழகத்திற்கு செய்தது ஸ்டாலினுக்கு தெரியாதா? காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சி காலத்தில் போலி சட்டமன்றத்தை மன்மோகன்சிங் திறந்து வைத்தார். சென்னை - மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தால் என்ன பயன் என்று ஸ்டாலின் கேட்கிறார். 6 மணி நேரத்தில் வரும்போது மக்கள் மட்டுமல்லாமல் வணிகர்களும் பொது மக்களும் பயன்பெறுவார்கள்.

    இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட 1900 மீனவர்களை மோடி மீட்டுக் கொண்டுவந்துள்ளார். இதில் 5 மீனவர்கள் தூக்கு மேடை விளிம்பில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்கள். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கிரஸ், தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் சிறை பிடிக்கப்பட்டார்கள் அப்போது இவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள். காஞ்சிபுரத்தில் துவங்கியுள்ள இந்த நல்லவர்கள் கூட்டணி வெற்றிபெறும். தி.மு.க. தலைவர் ஸ்டாலினை மக்கள் நம்ப தயாராக இல்லை என அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP

    Next Story
    ×