என் மலர்
சேலம்
- மல்லூர் வேங்காம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (39). இவர் அங்கு காய்கறி கடை நடத்தி வந்தார்.
- இதனிடையே பனமரத்துப்பட்டி பிரிவில் அவரது வண்டி தனியாக நின்றது. அருகில் சாலையோரம் கார்த்தி மயங்கிய நிலையில் கிடந்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் மல்லூர் வேங்காம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (39). இவர் அங்கு காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்று பனமரத்துப்பட்டி சந்தைக்கு காய்கறி வாங்க சென்றார். அதன்பின்னர் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இதனிடையே பனமரத்துப்பட்டி பிரிவில் அவரது வண்டி தனியாக நின்றது. அருகில் சாலையோரம் கார்த்தி மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்து மல்லூர் போலீசார் கார்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் கார்த்தி சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிவித்து கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகு அதிக மது குடித்து உள்ளார். இதனால் வலிப்பு நோய் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உறவினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அனைவரும் பங்கு பெறும் அளவிலான வாள் சண்டை தேர்வு போட்டி வருகிற 30-ந் தேதி களரம்படியில் நடைபெறுகிறது.
- இந்த போட்டியில் எப்பி, சேபர், பாயில் போன்ற 3 விதமாக போட்டிகள் நடைபெறும்.
சேலம்:
சேலம் மாவட்ட அளவிலான 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அனைவரும் பங்கு பெறும் அளவிலான வாள் சண்டை தேர்வு போட்டி வருகிற 30-ந் தேதி களரம்படியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் எப்பி, சேபர், பாயில் போன்ற 3 விதமாக போட்டிகள் நடைபெறும்.
இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் அடுத்த மாதம் 6-ந் தேதி திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
இந்த போட்டியில் பங்குபெறும் மாணவ, மாணவிகள் 1-1-2007-க்கு பின் பிறந்திருக்க வேண்டும்.
இதற்கு தகுந்த பள்ளி சான்றிதழ் அல்லது ஆதார் கார்டு, பிறந்த தேதி சான்றிதழ் இருக்க வேண்டும். மாவட்ட தேர்வில் பங்கு பெற இருக்கும் மாணவ, மாணவிகள் விளையாட்டுக்கு தேவையான உபகரணங்கள் கொண்டு வர வேண்டும். பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. இந்த தகவலை வாள்சண்டை சங்கத் தலைவர் கோசலம், செயலாளர் வக்கீல் வஸ்தாத் கிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
- சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு வேலூருக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது.
- அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியில் கல்லை வீசினார். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு வேலூருக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை நாகராஜ் (46) என்பவர் ஓட்டி சென்றார். பஸ்சை வீராணத்தை அடுத்த வலசையூர் பகுதியில் நிறுத்திவிட்டு டிரைவர் டீ குடிக்க சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியில் கல்லை வீசினார். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனை பார்த்த டிரைவர் நாகராஜ் மற்றும் கண்டக்டர் அவரைப் பிடிக்க முயன்றனர்.
ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் அவர் தப்பி விட்டார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக பஸ் மீது கல் வீசினார் என்று தெரியவில்லை. இது குறித்து நாகராஜ் வீராணம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அரசு பஸ் மீது கல் வீசிவிட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் வீட்டு வசதி திட்டத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் பயன்பெறலாம்.
- பதிவு பெற்ற பெண் ஆட்டோ டிரைவர்கள், புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
சேலம்:
சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்கள் போன்ற அனைத்து விதமான விண்ணப்பங்களையும் www.tnuwwb.tn.gov.in என்ற தொழிலாளர் துறையின் இணையதளத்தில் பெற்று கொள்ளலாம்.
கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு, குழந்தைகளின் கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி வாங்குதல், இயற்கை மரணம், விபத்து மரணம் போன்றவற்றுக்கு உதவித்தொகையும், 60 வயது நிறைவடைந்தவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய நிதியுதவி தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் வீட்டு வசதி திட்டத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் பயன்பெறலாம். பதிவு பெற்ற பெண் ஆட்டோ டிரைவர்கள், புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் திருநங்கைகளும் பயன்பெறலாம். இதற்கு இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சேலம் மாநகராட்சி 90 சதுர கி.மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. மாநகராட்சி பகுதியில் 10.50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
- சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் போக்குவரத்துக்கு தீர்வு காணப்படாத வகையில் கட்டப்பட்டதாக பலரும் குமுறலை தெரிவித்துள்ளனர்.
சேலம்:
சேலம் மாநகராட்சி 90 சதுர கி.மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. மாநகராட்சி பகுதியில் 10.50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். சேலம் மாநகராட்சியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கடை கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் முளைத்துள்ளன.
மேலும் தினமும் வெளி யூர், வெளிமாநி லங்களில் இருந்து 2.50 லட்சம் மக்கள் வந்து செல்லும் பகுதியாக சேலம் மாநகராட்சி விளங்கி வருகிறது.
சேலம் மாநகரின் முக்கிய புறவழிச்சாலைகளில் ஒன்றாக உள்ள சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானாவை தினமும் பல்லாயிரக்கணக்கான இருசக்கர, 4 சக்கர, கன ரக வாகனங்கள் கடந்து சென்று வருகின்றன. பெங்களூரு, கோவையில் இருந்து சென்னை, திருச்சி, மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானாவை கடந்து தான் சென்றாக வேண்டும்.
இதுபோன்ற சூழலில் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் போக்குவரத்துக்கு தீர்வு காணப்படாத வகையில் கட்டப்பட்டதாக பலரும் குமுறலை தெரிவித்துள்ள னர்.
கடும் போக்குவரத்து நெரிசல்
சேலம் நகர பகுதியில் இருந்து ஆத்தூர், கள்ளக்குறிச்சி, மல்லூர், ராசிபுரம், நாமக்கல், திருச்சி பகுதிகளுக்கும், ஈரோடு, கோவை மார்க்கமாகவும் செல்லும் வாகனங்கள் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானாவை கடந்து சென்று வருகின்றன. சேலம் மாநகர வாகனங்களும், வெளிமாவட்டம் சென்று வரும் வாகனங்களும் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானாவை அதிகளவு பயன்படுத்தி வருகின்றன. மேலும் சேலம் மாநகரில் இருந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பஸ்களும் இந்த சாலையில் அதிகளவு இயக்கப்படுகிறது.
இதனால் காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இதில் பல கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அடிக்கடி அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் நாமக்கல்லில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் சீல நாயக்கன்பட்டி ரவுண்டாவை கடந்து செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதே நிலை அடிக்கடி நீடிக்கிறது. இதற்கு தீர்வு காணப்பட வேண்டுமானால் தாதகாப்பட்டி சாலையி லிருந்து நாமக்கல் பிரதான சாலை இணைக்கும் வகையில் பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் சேலம் மாநகரம் முழுவதும் அதிகப்படியான பாலங்கள் கட்டப்பட்ட நிலையில் மிகவும் தேவைப்படக்கூடிய இந்த ரவுண்டானா பகுதியில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கான கூடுதலாக பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக தீர்வாக ரவுண்டானா பகுதியில் கூடுதலாக போக்குவரத்து போலீசாரை பணியாற்றி நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- 4-ஜி மற்றும் 5- ஜி அலைவரிசையை உடனடியாக வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாக்க வேண்டும்.
- மனித சங்கிலி போராட்டம் சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் நடைபெற்றது. பி.எஸ்.என்.எல். அலுவலகம் முதல் அண்ணா சிலை வரை மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.
சேலம்:
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக செயல்படும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 4-ஜி மற்றும் 5- ஜி அலைவரிசையை உடனடியாக வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாக்க வேண்டும். ஊழியர்களுக்கு புதிய பதவி உயர்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். எம்பிளாய் யூனியன் மாவட்ட தலைவர் ஹரிஹரன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் நடைபெற்றது. பி.எஸ்.என்.எல். அலுவலகம் முதல் அண்ணா சிலை வரை மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் சங்க செயலாளர் கோபால்,ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமிழ்மணி, ஒப்பந்த தொழிலாளர்கள் மாவட்ட செயலாளர் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- கொளத்தூர் மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் (55). கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.
- பலமாக காற்று வீசியதால் விளக்கில் இருந்த தீப்பொறி ஆட்டுப்பட்டியில் பட்டு மளமள என தீ பிடித்து எரிய தொடங்கியது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் (55). கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பி விட்டு மாலை வழக்கம் போல சக்திவேல் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆட்டுப்பட்டியில் அடைத்துள்ளார்.
இந்நிலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஆட்டுபட்டியில் விளக்கேற்றி விட்டு செல்லம்மாள் வீடு திரும்பி உள்ளார். அப்போது பலமாக காற்று வீசியதால் விளக்கில் இருந்த தீப்பொறி ஆட்டுப்பட்டியில் பட்டு மளமள என தீ பிடித்து எரிய தொடங்கியது.
இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படை வீரர்கள் வருவதற்குள் ஆட்டுப்பட்டி முழுவதும் தீப்பற்றி எரிந்து சாம்பலானது.
இந்த தீ விபத்தில் மொத்தம் 8 ஆடுகள் தீயில் கருகியது. மேலும் காயம் அடைந்த ஆடுகளுக்கு கால்நடை டாக்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீ விபத்தில் 8 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஓமலூர் நகரை சுற்றி கிழக்கு மற்றும் மேற்கு சரபங்கா நதி ஓடுகிறது.
- கிழக்கு சரபங்கா நதிக்கரையை ஒட்டிஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை சரபங்கா விநாயகர் கோவில் உள்ளது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் நகரை சுற்றி கிழக்கு மற்றும் மேற்கு சரபங்கா நதி ஓடுகிறது. இதில், கிழக்கு சரபங்கா நதிக்கரையை ஒட்டிஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை சரபங்கா விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கட்டிடம் இல்லாமல் வெட்ட வெளியாக திறந்தவெளிகோவிலாக உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக, கோவிலை சுற்றிலும் சுமார் 70 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, கோவிலில் பூஜை செய்து பராமரித்து வந்தவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால், அவர்கள் காலத்திற்கு பிறகு கோவிலை பராமரிக்க வில்லை, நிலத்தையும் யாரும் கண்டு கொள்ளவில்லை.
இந்தநிலையில், கோவில் நிலத்தை ஒருசிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலத்தை மீட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், நிலம் அளவீடு செய்யும் தாசில்தார் பாலாஜி, ஓமலூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணன், ஓமலூர் வருவாய்துறை நில அளவர்கள், இந்துசமய அறநிலையத்துறை நில அளவீடு செய்யும் அலுவலர்கள் வந்து, கோவில் நிலத்தை நேரடியாக அளவீடு செய்தனர். கோவில் நிலத்தில் உள்ள வீடுகளையும் அளவீடு செய்தனர். தொடர்ந்து கோவிலுக்கு சொந்தமான 70 சென்ட் நிலத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிலம் மீட்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஊருக்கு பொதுவான இடத்தில் பெரிய புளிய மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் மலைத்தேன் கூடு கட்டியுள்ளது.
- அப்பகுதியை சேர்ந்த யாரோ தேன் கூட்டில் கற்களை வீசியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த தேனீக்கள் ஊருக்குள் வேகமாக பறந்து ஓடியது. மேலும், வழியில் வந்தவர்களை எல்லாம் கடித்தது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சக்கரைசெட்டிபட்டி ஊராட்சியில் மந்திவளவு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு பொதுவான இடத்தில் பெரிய புளிய மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் மலைத்தேன் கூடு கட்டியுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான தேனீக்கள் வாழ்ந்து வந்த இந்தநிலையில், அப்பகுதியை சேர்ந்த யாரோ தேன் கூட்டில் கற்களை வீசியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த தேனீக்கள் ஊருக்குள் வேகமாக பறந்து ஓடியது. மேலும், வழியில் வந்தவர்களை எல்லாம் கடித்தது. இதில், அப்பகுதியை சேர்ந்த காவேரி, அவரது மனைவி கலா, மகள் சபரிதா, அதே பகுதியை சேர்ந்த ரமேஷ், மோலையன், மஞ்சுளா, செந்தில், பெரியசாமி, பெருமாள், மவுலி உள்பட 9-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதில், மஞ்சுளா, மோலையன் ஆகியோர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ஊருக்குள் பரவிய தேனீக்கள் அங்குள்ள நாய்கள், ஆடு, மாடுகள் ஆகியவற்றையும் கடித்ததில், அவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு மூலிகை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், அதிர்ச்சி யடைந்த கிராம மக்கள், ஊராட்சி தலைவருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஊராட்சி தலைவர் வெங்கடேசன், ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு வந்து, தீயணைப்பு வீரர்களை அழைத்து சென்று, புளியம் மரத்தில் இருந்த தேன் கூடு, தண்ணீரை பீய்ச்சியடித்து அங்கிருந்து விரட்டியடித்தனர். இதையடுத்து கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
- நாராயணன் (வயது 77). இவர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
- நுழைவு வாயிலில் வைத்து திடீரென பெட்ரோலை எடுத்து தலையில்ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் பல்பாக்கி பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 77). இவர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். நுழைவு வாயிலில் வைத்து திடீரென பெட்ரோலை எடுத்து தலையில்ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அவரை தடுத்து தண்ணீரை ஊற்றி சமாதானப்படுத்தினர்.
இதுகுறித்து தீக்குளிக்க முயன்ற முதியவர் நாராயணன் கூறியதாவது:-
எனக்கு முனியப்பன் மற்றும் அமிர் தலிங்கம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் முனியப்பன் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் எனக்கு சொந்தமான 1.38 ஏக்கர் நிலத்தை அபகரித்துக் கொண்டார். இது குறித்து எனது மகனிடம் கேட்டபோது என்னை திட்டி வெளியேற்றுகிறார். வயதான நான் எங்கு செல்வது என தெரியாமல் தவித்து வந்தேன். இதனால் வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொள்வதை விட அனாதையாக இருக்கும் எனக்கு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து இறந்து விடலாம் என நினைத்து தீக்குளிக்க முயற்சி செய்தேன். மாவட்ட நிர்வாகம் என் மகன் மீது நடவடிக்கை எடுத்து வாழ வழிவகை செய்ய வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து முதியவரை டவுன் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சேலம் பெரிய கடை வீதியில் உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட் பழைமை வாய்ந்தது.
- இதற்கிடையே பூ மார்க்கெட் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றதால் கடந்த ஜுன் மாதம் 12-ந் தேதி சேலம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூ மார்க்கெட்டை திறந்து வைத்தார்.
சேலம்:
சேலம் பெரிய கடை வீதியில் உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட் பழைமை வாய்ந்தது. இந்த மார்க்கெட்டிற்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் விற்பனைக்காக அதிகளவில் பூக்களை கொண்டு வருவார்கள். அதே போல சேலம் ம ற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்வார்கள்.
புதிய கட்டிடம்
இந்த பூ மார்க்கெட் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.70 கோடி செலவில குளிர் பதன வசதியுடன் நவீன மயமாக்க முடிவு செய்து கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் பூ மார்க்கெட் தற்காலிகமாக போஸ் மைதானத்தில் செயல்பட்டது.
இதற்கிடையே பூ மார்க்கெட் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றதால் கடந்த ஜுன் மாதம் 12-ந் தேதி சேலம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூ மார்க்கெட்டை திறந்து வைத்தார். தொடர்ந்து மீதம் உள்ள பணிகளும் நிறைவு பெற்று தற்போது தயாராக உள்ளது.
ஆனால் தற்போது வரை பூ மார்க்கெட் திறக்கப்படாத நிலையில் தற்காலிக பூ மார்க்கெட் பழைய பஸ்நிலைய வணிக வளாக பகுதியில் செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்த பகுதியில் ஏற்கனவே உள்ள கடைகளும் செயல்பட்டு வரும் நிலையில் பூக்கடைகளும் அங்கு செயல்படுவதால் கடும் இட நெருக்கடி நிலவுகிறது.
சிக்கி தவிக்கும் மக்கள்
குறிப்பாக முகூர்த்த நாட்களில் அதிக அளவில் பூக்கள் வாங்க பொது மக்கள் குவிவதால் கடும் ெநரிசல் நிலவுகிறது. மேலும் மழையும் பெய்வதால் சரியான மேற்கூரை இல்லாமல் வியாபாரிகளும் பொது மக்களும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் வியபாரிகள் மற்றும் பொது மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகிறார்கள்.
எனவே புதிதாக கட்டப்பட்ட வ.உ.சி. பூ மார்க்கெட்டை உடன டியாக திறந்து அந்த புதிய கட்டிடத்திற்கு பூ மார்க்கெட்டை மாற்ற வேண்டும் என்பது பூக்கடை உரிமையாளர்கள் மற்றும் பூ வாங்க வரும் பொது மக்ககளின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
- கலைஞரின் நூற்றாண்டு விழாவை யொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டன.
- முத்தமிழ்த்தேர்– அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டு கடந்த 4-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி வைக்கப்பட்டது.
சேலம்:
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை யொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டன. அதில் எழுத்தாளர் கலைஞர் குழு சார்பில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முகத் தன்மையினை எடுத்துச் செல்லும் வகையில் முத்தமிழ்த்தேர்– அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டு கடந்த 4-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங் களிலும் இத்தேர் காட்சிப்ப டுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தருமபுரி மாவட்டத்திலிருந்து இன்று சேலம் மாவட்டத்திற்கு வருகைதந்த முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தியை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா ஆகியோர் மலர்தூவி வரவேற்றனர்.
தொடர்ந்து அலங்கார ஊர்தியில் உள்ள கலைஞரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைஞரின் உருவம் பொறித்த பேனாக்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முன்னதாக முத்தமிழ்த்தேர் உருவாக்கப்பட்ட விதம் குறித்தும், அதன் நோக்கங்கள் குறித்தும் தயாரிக்கப்பட்டிருந்த வீடியோ படக்காட்சி ஒளிபரப்பப் பட்டதை மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் பொறுப்பு சுகந்தி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.






