என் மலர்
சேலம்
- அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் 40 சதவீதம் விலை உயர்ந்துவிட்டது.
- அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.
சேலம்:
சேலம் மாநகர் மாவட்டத்திலுள்ள பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய இஸ்லாமிய மக்கள் 500 பேர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து மசூதியில் இஸ்லாமியர்களுடன் இணைந்து தொழுகை மேற்கொண்டார். இதனிடையே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 520 வாக்குறுதிகளை செயல்படுத்தி நடைமுறைப்படுத்துவோம் என்று தேர்தல் நேரத்தில் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டு காலம் ஆகிவிட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த நன்மை என்னவென்றால் கேள்விக்குறியாக தான் உள்ளது. மேலும் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் ஏதோ சிலவற்றை மட்டும் நிறைவேற்றிவிட்டு 520 அறிவிப்புகளையும் நிறைவேற்றிவிட்டதாக பொய்யாக சொல்லி வருகிறார். இது விஞ்ஞான உலகம், எதை சொன்னாலும் மக்கள் கேட்பதற்கு தயாராக இல்லை; குறிப்பாக 100 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக தி.மு.க. அரசாங்கம் மார்தட்டி வருகிறது.தமிழக முதல்வர் முழுபூசணிக்காயை சோற்றில் மறைத்து வருகிறார். அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் 40 சதவீதம் விலை உயர்ந்துவிட்டது. இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது. அதிமுக மக்களுடன் மக்களாக வாழ்ந்து வருவதால் மக்களின் சிரமங்கள், துன்பங்கள் அனைத்தும் அறிந்து இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

தற்போது உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக கொண்டு வரவேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்; நிச்சயம் இது நடக்காது.
அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் சாதாரண தொண்டன் பொதுச்செயலாளர் கூட வரமுடியும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகுத்து கொடுத்த கொள்கையில் இருந்து ஒரு புள்ளி அளவும் அதிமுக மாறாது. அதிமுகவைப் பொறுத்தவரைக்கும் ஜாதி, மதம், பேதம் கிடையாது; அனைவரும் ஒன்று என்று கருதக்கூடியது. அதிமுகவின் அவைத்தலைவர் ஒரு இஸ்லாமியர் என்று பெருமிதம் தெரிவித்தார். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் அதிமுகவை ஆதரிக்க வேண்டும்.
40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அதிமுகவையே இஸ்லாமிய மக்கள் ஆதரவு தந்து வெற்றி பெறசெய்ய வேண்டும். இஸ்லாமிய மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்க அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறு ஆதரித்தால் உங்களுடைய ஒவ்வொருவரின் குரல் பாராளுமன்றத்தில் நிச்சயம் ஒலிக்கும் என்றும் உறுதியளித்தார்.
- சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
- கண்டெய்னர் லாரியின் டிரைவரான நெல்லையை சேர்ந்த பேச்சிமுத்து பாண்டியன் என்பவர் படுகாயம் அடைந்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இருந்து சேலம் நோக்கி இன்று காலை 7 மணி அளவில் ஒரு மினி ஆட்டோ வந்து கொண்டிருந்தது. மினி ஆட்டோவை விழுப்புரத்தை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் அரக்கோணம் பகுதியை சேர்ந்த சுதர்சன் மற்றும் குடியாத்தம் பகுதியை சேர்ந்த பிரகாசம் ஆகியோரும் வந்தனர்.
சேலம்-சென்னை புறவழிச் சாலையில் வாழப்பாடி கிழக்குக்காடு அருகே மினி ஆட்டோ வந்தபோது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் மினி ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இதில் டிரைவர் பிரவீன்குமார், சுதர்சன் மற்றும் பிரகாசம் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அங்கிருந்த சுங்கச்சாவடி பணியாளர்களுடன் சேர்ந்து கிரேன் எந்திரத்தை பயன்படுத்தி 3 பேர் உடலையும் மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் கண்டெய்னர் லாரியின் டிரைவரான நெல்லையை சேர்ந்த பேச்சிமுத்து பாண்டியன் என்பவர் படுகாயம் அடைந்தார். அவரையும் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரி சங்கரி, இன்ஸ்பெக்டர் உமாசங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
இந்த விபத்தால் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்களை அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மினி ஆட்டோ மீது லாரி மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மாதேஷ். இவரது மனைவிக்கு கடந்த 1½ மாதத்திற்கு முன்பு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது.
- நேற்றிரவு குழந்தைக்கு வயிற்றுப்போக்குடன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த குழந்தையை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
சேலம்:
சேலம் அன்னதானப்பட்டி சண்முகாநகர் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவிக்கு கடந்த 1½ மாதத்திற்கு முன்பு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு குழந்தைக்கு வயிற்றுப்போக்குடன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த குழந்தையை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை நேற்றிரவு பரிதாபமாக இறந்தது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குமார் (வயது 34). ஈரோட்டில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார்.
- போலி ஆவணங்களின் மூலம் எனது மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், எனவே, குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார்.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் வீரன். இவரது மகன் குமார் (வயது 34). ஈரோட்டில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார்.
காதல்
இவரும், ஈரோட்டை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். பிறகு அவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு இருவரும் சங்ககிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
இதனிடையே சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தை தரப்பில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் குமார் மீது ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் போலி ஆவணங்களின் மூலம் எனது மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், எனவே, குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சாதி சான்றிதழ், பத்திரிகை உள்ளிட்ட போலியாக ஆவணங்கள் தயார் செய்து ஈரோட்டை சேர்ந்த பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்தது உறுதிசெய்யப்பட்டது.
ஓராண்டு ஜெயில்
இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சேலம் 6-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு கமலகண்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலி ஆவணங்களின் மூலம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவு பிறப்பித்தார்.
- சங்ககிரியை சேர்ந்தவர் 27 வயது வாலிபர். இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார்.
- ஆன்லைனின் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும் என கூறினார்.
சேலம்:
சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் 27 வயது வாலிபர். இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார். அப்போது இவரது வாட்ஸ் அப்புக்கு கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி பகுதி நேர வேலை குறித்து விளம்பரம் வந்தது.
அதில் தெரிவிக்கப்பட்டிருந்த எண்களை டெலிகிராம் மூலம் அந்த வாலிபர் தொடர்பு கொண்டு பேசினார். எதிர்முனையில் பேசிய நபர் ஆன்லைனின் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும் என கூறினார். அதை நம்பிய அவர் மர்மநபர் அனுப்பிய யு.பி.ஐ.-ஐ.டி.க்களில் பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்து 9 லட்சத்து 33 ஆயிரத்து 710 ரூபாயை அனுப்பினார்.
பணம் சென்றடைந்த நிலையில் மர்ம நபர் தொடர்பை துண்டித்து விட்டார். பல முறை முயற்சி செய்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அந்த வாலிபர் அனுப்பிய வங்கி கணக்கு எண்களை வைத்து பணம் யாரிடம் சென்றுள்ளது என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேலம் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி சேலம் நெத்திமேடு ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
- வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்வாணி மற்றும் உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார், சக ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.
காக்காபாளையம்:
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் சேலம் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி சேலம் நெத்திமேடு ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் கருப்பூர் எஸ்.எஸ்.ஆர்.எம் மேல்நிலைப் பள்ளியை எதிர்த்து களம் கண்ட இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 15-க்கு 11 என்ற புள்ளியில் வென்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர்.
அதேபோல் 17 வயதுக்கு உட்பட்டோ ருக்கான போட்டியில் சேலம் ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியை எதிர்த்து இறுதி போட்டியில் விளையாடிய இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 2-ம் இடம் பிடித்தது.
14 வயதுக்கு உட்பட்டோருக்கான பூப்பந்து போட்டியில் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மாதிரி பள்ளியை எதிர்த்து விளையாடி இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்வாணி மற்றும் உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார், சக ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.
- சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
- சேலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுடனான விழிப்புணர்வுக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.
சேலம்:
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சேலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுடனான விழிப்புணர்வுக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத் தில் கலெக்டர் பேசியதாவது:-
சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த விழிப்புணர்வினை உள்ளூர் தொழிலதிபர்கள், தொழில்முனைவோர், தொழிலார்வம் கொண்ட இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.
சேலம் மாவட்டம் தொழில் நிறுவனங்கள் தொடங்கத் தேவையான ஒப்புதல்கள், தடையின்மைச்சான்றுகள், புதுப்பித்தல் போன்றவற்றை எளிதாகப் பெற ஒரு ஒற்றைச் சாளர தீர்வுக்கான இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பி டப்பட்ட கால வரம்புக்குள் பரிசீலிக்கப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்படும்.
இதனைக் கண்காணிக்க மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு உள்ளது. தொழில்முனைவோருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட மாவட்ட நிர்வாகம் எப்போதும் தயாராக உள்ளது. எனவே, தொழில்முனைவோர் சேலம் மாவட்டத்தில் மென்மேலும் முதலீடு செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் 4,334 இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 124 தொழில் முனைவோர்கள் ரூ.1,638.91 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதில் மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ., மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் சிவகுமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பெரியசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் ரவிச்சந்திரன், இந்திய தொழில் கூட்டமைப்பு (மாநில எம்.எஸ்.எம்.இ கொள்கை) சுதாகர், மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்க பொதுச் செயலாளர் செந்தில்முருகன், உற்பத்தி திறன் குழுத் தலைவர் இளங்கோவன், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் நாகராஜன் மற்றும் தொழில் வணிக சங்கப் பிரதிநிதிகள், தொழில திபர்கள், தொழிலார்வம் கொண்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
- சேலம் தலைமை தபால் நிலைய பாஸ்போர்ட் மையத்தில் தினமும் 100 முதல் 150 பேருக்கு நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்கி வருகின்றனர்.
- சேலம் மாவட்டத்தை சேர்ந்த 1 லட்சத்து 3 ஆயிரத்து 530 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர்.
சேலம்:
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், சேலம், ராசிபுரம், ஈரோடு, குன்னூர், திருநெல்வேலி உள்பட பல்வேறு இடங்களில் மத்திய விமான போக்குவரத்து துறை சார்பில் பாஸ்போர்ட் வழங்கும் பணியை தபால் நிலைய சேவை மையங்கள் மூலம் மேற்கொண்டு வருகின்றன.
கோவை மேற்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் இயங்கும் சேலம் தலைமை தபால் நிலைய பாஸ்போர்ட் மையத்தில் தினமும் 100 முதல் 150 பேருக்கு நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்கி வருகின்றனர். அதன்படி கடந்த 6 ஆண்டுகளில் சேவை மையத்தின் மூலம் இதுவரையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 1 லட்சத்து 3 ஆயிரத்து 530 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர்.
ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவுடன் நேர்காணலுக்கான தேதி விண்ணப்ப தாரருக்கு தெரியப்படுத்தப்படுகிறது. வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வயது தொடர்பான சான்றுக்காக பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வந்து பதிவு செய்ய வேண்டும். இந்த நேர்காணல் முடிந்ததும் கோவை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விண்ணப்பங்களின் முழு தகவல்களும் அனுப்பி வைக்கப்படுகிறது.
பின்னர் பாஸ்போர்ட் தபால் மூலம் விண்ணப்பித்தவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் இளைஞர்கள் எளிதாக பாஸ்போர்ட் பெற முடிவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலான்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
- அரசுப்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் வட்டார வள மைய வளாகத்தில் நடைபெற்றது.
வாழப்பாடி:
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலான்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டார அரசுப்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் வட்டார வள மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் திலகவதி மற்றும் கருத்தாளர் ஆசிரியர் ராஜீவ்காந்தி மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் பயிற்சி அளித்தனர். பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். பள்ளியை மேம்படுத்துதல், இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தல், அரசு மற்றும் பொதுமக்களோடு இணைந்து பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்தல், கற்றல் கற்பித்தல் செயல்களை ஊக்குவித்தல் குறித்தும், பள்ளி மேலாண்மை குழுக்கான பிரத்தியேக மொபைல் செயலி குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
- விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- அறங்காவலர் ராதாகிருஷ்ணன் சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.
சேலம்:
சேலம் டவுன் 2-வது அக்ரஹாரத்தில் பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
தற்போது இந்த கோவில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் கோவில் சுவரில் ஒரு அரசியல் கட்சியின் போஸ்டர் மற்றும் சினிமா போஸ்டர் அத்துமீறி ஒட்டப்பட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் திருத்தொண்டர்கள் சபை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் திறந்த வெளிகள் அழகு சீர்குலைப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தபட்டவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
- அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட, நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
சேலம்:
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று 4489 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 4026 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட, நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
நேற்று 65.48 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 65.87 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 29.25 டி.எம்.சி.யாக உள்ளது.
- அன்பழகன் (47). இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார்.
- நேற்றிரவு மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர் ஒருவர் வீட்டில் இருந்த ரூ.5,200 பணம் மற்றும் செல்போனையும் எடுத்துக்கொண்டு வெளியே வர முயன்றார்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (47). இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். நேற்றிரவு மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர் ஒருவர் வீட்டில் இருந்த ரூ.5,200 பணம் மற்றும் செல்போனையும் எடுத்துக்கொண்டு வெளியே வர முயன்றார். அப்போது கையும் களவுமாக அவரை மடக்கி பிடித்த அன்பழகன் அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் அப்ரித் என்பது தெரியவந்தது. இவர் மீது திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.






