என் மலர்
சேலம்
- சமூக ஆர்வலரான பிராங்க்ளின் ஆசாத் காந்தி இன்று சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி படத்துடன் கூடிய பதாகையை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டார்.
- கடந்த 40 ஆண்டு காலமாக அத்வைத ஆசிரமரோடு பாலாஜி நகர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பள்ளிக்குள் சாக்கடை நீர் புகுந்து வருகிறது.
சேலம்:
சேலம் அத்வைத ஆசிரம ரோடு பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் பிராங்க்ளின் ஆசாத் காந்தி (90). சமூக ஆர்வலரான இவர் இன்று சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி படத்துடன் கூடிய பதாகையை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 40 ஆண்டு காலமாக அத்வைத ஆசிரமரோடு பாலாஜி நகர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பள்ளிக்குள் சாக்கடை நீர் புகுந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தினசரி 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து போராடத்தை தொடங்கி உள்ளேன். அதன்படி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன். இதற்கு தீர்வு கிடைக்கும் வரை அல்லது சாகும் வரை போராட்டத்தில் ஈடுபடுவேன். மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு சாக்கடை நீர் புகுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- போலீசார் தர்மராஜை கைது செய்தனர்.
- கொண்டலாம்பட்டி போலீசார் கடந்த ஜூலை மாதம் வீடு புகுந்து திருடிய வழக்கில் தேடி வந்தனர்.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் தர்மன் என்கிற தர்மராஜ் (27). இவரை வழிப்பறி வழக்கில் அன்னதானப்பட்டி போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை போலீசார் தர்மராஜை கைது செய்தனர். இதே போல் அமானி கொண்டலாம்பட்டி பழனியப்பன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் என்கிற காட்டுக்கார சரவணன் (40).
இவரையும் கொண்டலாம்பட்டி போலீசார் கடந்த ஜூலை மாதம் வீடு புகுந்து திருடிய வழக்கில் தேடி வந்தனர். இன்று அதிகாலை சரவணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று 3771 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3030 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையில் இருந்து திறக்கப் படும் தண்ணீரை விட, நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று 66.23 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 66.51 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 29.77 டி.எம்.சி. யாக உள்ளது.
- ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சேலத்திற்கு அருகாமையில் கிழக்கு தொடர்ச்சி மலை சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும்.
- ஏற்காடு மலைப்பாதை, வனப்பகுதியில் நேற்று இரவு காலாவதியான மாத்திரை, மருந்து உள்ளிட்ட கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து வனத்துறை பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சேலத்திற்கு அருகாமையில் கிழக்கு தொடர்ச்சி மலை சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 4969 அடி உயர்த்தில் உள்ளது. இதன் பரப்பளவு 382.67 ச.கிமீ. ஆகும்.
ஏற்காட்டில் அண்ணா பூங்கா, தோட்டக்கலைதுறை பண்ணை, தாவரவியல் பூங்கா, மணிப்பாறை, கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, லேடீஸ் சீட், ஜென்ஸ், சில்ரன்ஸ் சீட், சேர்வராயன் கோவில், பட்டு பண்ணை, ரோஜா தோட்டம், மான்பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.
இந்த சுற்றுலா தலங்களை குடும்பத்துடன் கண்டுகளிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்த நிலையில் ஏற்காடு மலைப்பாதை, வனப்பகுதியில் நேற்று இரவு காலாவதியான மாத்திரை, மருந்து உள்ளிட்ட கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து வனத்துறை பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து வன விலங்குகள், கால்நடைகள் சாப்பிடும் முன் காலாவதியான மருத்துவ கழிவுகளை சேகரித்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார்கள். மேலும் காலாவதியான மருந்து, மாத்திரைகளின் நிறுவனம் தயாரிப்பு தேதியை ஆய்வு செய்தனர்.
இந்த மருத்துவ கழிவுகள் எந்த வண்டியில் எடுத்து வரப்பட்டது? கழிவுகளை வனப்பகுதியில் கொட்டிய மர்ம நபர்கள் யார்? என பறக்கும் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சம்பவத்தன்று சகோதர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 6-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் 7-ம் வகுப்பு படிக்கும் அண்ணனின் வகுப்பிற்கு சென்று அவரை அடித்ததாக கூறப்படுகிறது.
- மாணவன் கதறி அழுத நிலையில் இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என வகுப்பு ஆசிரியர் மிரட்டியுள்ளார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புளியம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் 7 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சகோதர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 6-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் 7-ம் வகுப்பு படிக்கும் அண்ணனின் வகுப்பிற்கு சென்று அவரை அடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று பள்ளி யின் 7-ம் வகுப்பு ஆசிரியர் அன்புமணி 6-ம் வகுப்பிற்கு சென்று சம்பந்தப்பட்ட மாணவரின் சட்டையை கழற்ற வைத்து முதுகில் சரமாரியாக அடித்துள்ளார். மாணவன் கதறி அழுத நிலையில் இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில் வீட்டிற்கு சென்ற மாணவரின் முதுகு வீங்கி இருந்ததை பார்த்த பெற்றோர் விசாரித்தபோது சிறுவன் நடந்தவற்றை கூறியுள்ளான். இதையடுத்து அவனை ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர் ஆசிரியர் அன்புமணி மீது ஓமலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அரசு பள்ளி ஆசிரியர் அன்புமணி மீது தாக்குதல் நடத்துவது, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.
- சேலத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.
- தாழ்வான பகுதிகளில் மழை பெருக்கெடுத்து ஓடியது.
சேலம்:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. சேலத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலை சேலம் மாவட்டத்தில் காலையில் வெயில் அடித்தது மேக மூட்டத்துடன் காணப்பட்டு மழை பெய்தது.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. தலைவாசல், கரியகோவில், வீரகனூர், கெங்கவல்லி, ஏற்காடு, மேட்டூர், கெங்கவல்லி, ஓமலூர் பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது. மாநகரத்தில் தெருக்களில் மழை நீரும் சாக்கடையும் பெருக்கெடுத்து ஒடியது.
சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக வீரகனூர் - 16மி.மீ, தலைவாசலில்- 12, பெத்தநாயக்கன் பாளையம்-11, சேலம் - 10.7, ஏற்காடு - 7, தம்மம்பட்டி - 5, ஓமலூர் - 4.6, கெங்கவல்லி - 4, சங்ககிரி - 4, மேட்டூர்- 2.2, கரிய கோவில் - 2, ஆத்தூர் - 1.2, எடப்பாடி - 1 என மாவட்டம் முழுவதும் 80.70 மி.மீ. மழை பெய்தது.
- சந்திரசேகரின் தந்தை கந்தசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தார்.
- வாலிபர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் நடுவனேரி புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காகாபாளையம்:
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை நடுவனேரி புதூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் சந்திரசேகர் (வயது 29). தறிதொழிலாளி.
இவருக்கும், பிரியா (25) என்ற பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது பிரியா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் சந்திரசேகரின் தந்தை கந்தசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். இந்த அதிர்ச்சியை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் அவர் மது குடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து மது குடித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் மதுவுக்கு அடிமையானார். மது குடித்து விட்டு அடிக்கடி வீட்டில் சண்டை போட்டு வந்தார்.
கடந்த 25-ந்தேதி சந்திரசேகர் மது குடித்துவிட்டு வந்து போதையில் கத்தியை காட்டி அம்மாவிடம் தகராறு செய்தார். இதனால் அவரை மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து சோதனை செய்தபோது அவரது சட்டை பையில் இருந்து கத்தி மற்றும் போதை மாத்திரை ஆகியவை இருந்தது. இவற்றை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து போலீசார் எச்சரிக்கை செய்து, அறிவுரைகள் சொல்லி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனாலும் அவர் குடி பழக்கத்தை கைவிடவில்லை. மறுநாள் (26-ந்தேதி ) மீண்டும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்தார். இதனால் அவரை குடிபழக்கத்தில் இருந்து மீட்பதற்காக இடங்கணசாலை-சின்னப்பம்பட்டி ரோட்டில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மீட்பு மையத்தில் சேர்த்தனர்.
இந்த நிலையில் சந்திரசேகர் அரியானூர் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு ஆம்புலன்சில் பலத்த காயங்களுடன் இருப்பதாக இன்று காலை உறவினர்களுக்கு போதைமீட்பு மையத்தில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அங்கு சென்று பார்க்கையில் ஆம்புலன்சில் கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்களுடன் சந்திரசேகர் பிணமாக கிடந்தார்.
இது பற்றி மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று சந்திரசேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போதை மறுவாழ்வு மையத்துக்கு சென்று அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சந்திரசேகரின் கை, கால்கள் ஆகியவற்றை முதுகு பக்கமாக சேர்த்து வைத்து கட்டி வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த காட்சி பதிவாகி இருந்தது. இதனால் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தது.
இதனிடையே அங்கு உறவினர்கள் குவிந்தனர். இதனால் பதட்டம் நிலவியது. பாதுகாப்புக்காக போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து போலீசார் சி.சி.டி.வி. காட்சியை கைப்பற்றி போதை மறுவாழ்வு மைய ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று இரவு இங்கு என்ன நடந்தது?, அவரை கொலை செய்தவர்கள் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வாலிபர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் நடுவனேரி புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசிக்கும் சேலத்தில் அவர்களுக்கு என தனியாக ஒரு திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்றார்.
- போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சேலம்:
சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் துணை மேயர் சாரதா தேவி, கமிஷனர் (பொறுப்பு) அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
கூட்டத்தில் கவுன்சிலர் இமயவரம்பன் பேசுகையில் பட்டியலின மக்களுக்கு திருமணம் நடத்த சேலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேயர் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
அந்த மண்டபத்தின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசிக்கும் சேலத்தில் அவர்களுக்கு என தனியாக ஒரு திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்றார்.
அதற்கு பதிலளித்து மேயர் ராமச்சந்திரன் பேசுகையில் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கவுன்சிலர் திருஞானம் பேசுகையில் எனது வார்டில் மழை நீர் அதிக அளவில் தேங்குகிறது. மேலும் அம்மாபேட்டையில் இருந்து டவுன் வரை சாலையோர கடைகள் அதிக அளவில் உள்ளன. இதனால் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கவுன்சிலர் மூர்த்தி பேசுகையில் எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வாக்குச்சாவடிகள் வெகு தூரத்தில் உள்ளன. இதனால் அந்தந்த பகுதி மக்களுக்கு அருகிலேயே வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கவுன்சிலர் சையத் மூசா பேசுகையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்க சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். இதற்கு சாக்கடை நீரும், மழை நீரும் அதிகளவில் தேங்குவது தான் காரணம். அதனை சீரமைக்க வேண்டும் என்றார்.
கவுன்சிலர் பி.எல்.பழனிச்சாமி பேசுகையில் எனது வார்டுக்கு உட்பட்ட மணியனூர் பகுதியில் சுடுகாடு தண்ணீர் மற்றும் கழிவறை தண்ணீர் அதிக அளவில் தேங்குகிறது. இதனால் மக்கள் தவித்து வருகிறார்கள். நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் விபத்தும் அடிக்கடி நடக்கிறது, சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதனையும் சீரமைக்க வேண்டும் என்றார்.
கவுன்சிலர் ஏ.எஸ்.சரவணன் பேசுகையில் களரம்பட்டி 4-வது தெருவில் சாலை, சாக்கடை வசதி, பாலப்பணி செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 45-வது கோட்டத்தில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். 56-வது வார்டு கலைஞர் நகரில் 4-வது வார்டு மற்றும் கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட்டில் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். 60 வார்டுகளிலும் சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும். அப்போது தான் சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக திகழும் என்றார்.
கவுன்சிலர் கோபால் பேசுகையில் அம்பாள் ஏரி ரோடு கடந்த 1 1/2 ஆண்டாக மிக மோசமான நிலையில் உள்ளது. தாதகாப்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் தண்ணீர் வருகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு குடி தண்ணீர் வசதி வழிப்பாதைகள் அமைக்க வேண்டும் என்றார்.
இதை தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
- கூட்டத்திற்கு நகராட்சிமன்ற தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை வகித்தார்.
- அடிப்படை வசதிகள் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ளதால் அதை உடனே நிறைவேற்றி தர வேண்டும் என்று கூறி மன்ற அறையில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி மன்றகூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சிமன்ற தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை வகித்தார். ஆணையாளர் சேம் கிங்ஸ்டன், துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் பாலசுப்பிரமணியம், பா.ம.க. உறுப்பினர்கள் தனபால், குமரேசன், தி.மு.க. உறுப்பினர் வேதாச்சலம் ஆகியோர் தங்களின் வார்டுகளில் போதுமான அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் தவித்து வருவதாக குற்றம் சாட்டினர்.
அதனைத் தொடர்ந்து பேசிய 4-வது வார்டு உறுப்பினர் சாமுண்டீஸ்வரி தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் போடப்பட்ட தார் சாலைகள் மிகவும் தரமற்ற முறையில் உள்ளதாக ஆணையாளரிடம் புகார் தெரிவித்தார். மேலும் குடிநீர் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ளதால் அதை உடனே நிறைவேற்றி தர வேண்டும் என்று கூறி மன்ற அறையில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து தங்களின் வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்றி தருவதாக தலைவர் உறுதி அளித்ததின் பேரில் மீண்டும் எழுந்து தனது இருக்கையில் அமர்ந்தார். இந்த கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மாவட்ட கலெக்டர் மற்றும் குழுவின் உறுப்பினர்களுடன் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, தொல்பொருள் அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுத்தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன், மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் அரசு உறுதி மொழிக் குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, அருள், எம்.கே.மோகன், ராமலிங்கம் ஆகியோருடன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்விற்குப் பின் அரசு உறுதிமொழிக் குழுத்தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஏற்காடு அரசு மருத்துவ மனையில் இருந்த உடல் மறுகூராய்வு செய்கின்ற இடம் பழுதடைந்த நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய பிரேதப் பரிசோதனை அறை கட்டித் தரரப்படும் என்று அறிவித்தார். அதன் அடிப்படையில் தற்போது கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் நிலையில் உள்ளது.
இந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவானது
மாவட்ட கலெக்டர் மற்றும் குழுவின் உறுப்பினர்களுடன் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணியானது தற்போது முற்றிலும் நிறைவுபெற்று உள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் இக்கட்டடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இதனைத் தொடர்ந்து குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, தொல்பொருள் அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பிற்பகல் 3 மணிக்கு மேல் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவானது அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு இணைச் செயலாளர் கருணாநிதி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- ஒரு லிங்கை அனுப்பி அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக கமிஷன் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறினர்.
- இது தொடர்பாக அந்த நபரை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றம் அடைந்த அவர் சம்பவம் குறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூரை சேர்ந்தவர் 32 வயது வாலிபர்். இவருக்கு பகுதி நேர வேலை ெதாடர்பாக வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வந்தது. அதில் தொடர்பு கொண்ட போது மறுமுனையில் பேசிய மர்ம நபர் ஒரு லிங்கை அனுப்பி அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக கமிஷன் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறினர்.
இதனை நம்பிய அவர் 7 தவணைகளாக ரூ.6 லட்சத்து 71 ஆயித்து 241 - ஐ அவர் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பினார். ஆனால் அவர் கூறிய படி கமிஷன் கொடுக்கவில்லை. இது தொடர்பாக அந்த நபரை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றம் அடைந்த அவர் சம்பவம் குறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று விசாரணை நடத்தினர்.
- மணிகண்டன் என்ற மாற்று திறனாளி கொலை வழக்கிலும் குண்டர் சட்டத்தில் கைதானது தெரியவந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள குள்ளம்பட்டி பிரிவு ரோட்டில் விநாயகர் கோவில் உள்ளது.
நேற்றிரவு 8 மணியளவில் இந்த பகுதியில் வாலிபர் ஒருவரின் தலை ஒன்று தனியாக துண்டிக்கப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் வீசப்பட்டு கிடந்தது. இருட்டான பகுதி என்பதால் சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு சென்றபோது தலை கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுபற்றி தெரிய வந்ததும் அந்த பகுதியில் வந்து சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன், வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது கொலை செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கிடந்த வாலிபருக்கு 35 வயது இருக்கும் என தெரிய வந்தது. மேலும் துண்டிக்கப்பட்டு கிடந்த தலையில் இருந்து ரத்தம் வடிந்ததால் கொலை நடந்து சில மணி நேரமே ஆவது தெரியவந்தது. எனவே உடல் இந்த பகுதியில் தான் எங்காவது வீசி இருக்கலாம் என்று போலீசார் கருதினர். தொடர்ந்து அந்த வாலிபரின் தலையை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் குள்ளம்பட்டி, அக்ரஹாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாலிபரின் உடலை தேடினர். இன்று அதிகாலை அக்ரஹாரம் ஏரி கரையில் வாலிபரின் உடலை போலீசார் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்ய ப்பட்ட நபர் குள்ளம்பட்டி, வலசையூர், காட்டூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம்? என்று போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையினர் கொலையாளியை தேடினர். அப்போது அங்குள்ள வேகத்தடை அருகே போலீசார் சார்பில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் காரிப்பட்டியை அடுத்த கள்ளிக்காடு பகுதியை சேர்ந்த திருமலை (32) என்பவர் ரோட்டில் கிடந்த வாலிபரின் தலையை அங்கு வீசி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்ததால் உளறியபடியே இருந்தார். இதையடுத்து போலீசார் இன்று காலை அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். மேலும் சம்பவம் குறித்து அந்த பகுதியில் நேற்றிரவு போலீசார் விசாரணை நடத்திய போது பரபரப்பு தகவல்கள் வெளியானது, அதன் விவரம் வருமாறு-
கொலை செய்யப்பட்ட நபர் அங்குள்ள மதுக்கடையில் மது வாங்கிய போது திருமலைக்கும், கொலை செய்யப்பட்ட வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், அப்போது அந்த நபர் திருமலையை தாக்கியதாகவும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் திருமலை வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து கழுத்தை அறுத்து அந்த வாலிபரை கொலை செய்து தலையை அங்கு வீசி சென்றதும் தெரியவந்தது.
மேலும் போலீசாரிடம் சிக்கியுள்ள திருமலை வாழப்பாடியை சேர்ந்த ஒருவரை கொலை செய்துள்ளார். மேலும் அந்த பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற மாற்று திறனாளி கொலை வழக்கிலும் குண்டர் சட்டத்தில் கைதானது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






