search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மழை தண்ணீர் வடிய ஆரம்பித்ததால் 35 ஆயிரம் லாரிகள் மீண்டும் ஓட தொடங்கியது
    X

    மழை தண்ணீர் வடிய ஆரம்பித்ததால் 35 ஆயிரம் லாரிகள் மீண்டும் ஓட தொடங்கியது

    • 25 ஆயிரம் லாரிகள் தற்போது வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    • 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தண்ணீரில் மூழ்கி பழுதடைந்துள்ளது.

    சேலம்:

    மிச்சாங் புயலால் கடந்த 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

    இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் சென்னைக்குள் செல்லும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பால், காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொது மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    தற்போது சென்னையின் புறநகர் பகுதிகளில் தண்ணீர் வடிந்துள்ளது. இதனால் சென்னை புறநகர் பகுதிகளுக்கு லாரிகள் செல்ல தொடங்கி உள்ளன. இதனால் சேலத்தில் இருந்து சென்னையில் புறநகர் பகுதிகளுக்கு கியாஸ் சிலிண்டர்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

    இதே போல நாமக்கல்லில் இருந்து முட்டைகள், கறிக்கோழிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வட மாநிலங்களில் இருந்தும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கி உள்ளன.

    இதனால் தமிழகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்ட 60 ஆயிரம் லாரிகளில் 35 ஆயிரம் லாரிகள் தற்போது ஓட தொடங்கி உள்ளன. மேலும் 25 ஆயிரம் லாரிகள் தற்போது வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த லாரி உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அதனை நம்பி உள்ள 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட டிரைவர்கள், கிளீனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள்.

    இதனால் சென்னையில் மேலும் பல பகுதிகளில் தேங்கி உள்ள தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்ட அந்த லாரிகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது லாரி உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது .

    மேலும் கனமழையால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தண்ணீரில் மூழ்கி பழுதடைந்துள்ளது. இதனால் அந்த லாரிகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் லாரி நிறுவனங்கள் இலவச வாகன சரிபார்ப்பு முகாம்கள் நடத்தி வாகனங்களை இலவசமாக சரி செய்து கொடுக்க வேண்டும் என்றும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×