என் மலர்
சேலம்
- அங்குலம், அங்குலமாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் கம்ப்யூட்டர்கள் உள்பட முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன.
- 100-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜுலை மாதம் ஜெகநாதன் (66 ) துணை வேந்தராக பதவி ஏற்றார். அவரது பதவி காலம் ஜுன் 2024 வரை உள்ளது.
இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோ கருப்பூர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார், அதில், துணை வேந்தர் ஜெகநாதன், பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், கணினி அறிவியல் இணை பேராசிரியர் சதீஷ் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர் இணைந்து பூட்டர் அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனமும், அப்டெக்கான் போரம் என மற்றொரு அமைப்பையும் ெதாடங்கி உள்ளனர்.
இவர்கள் பெரியார் பல்கலைக்கழக பிரதி நிதிகளாக இருந்து கொண்டு அரசு அனுமதியின்றி துணை அமைப்புகளை தொடங்கி இயக்குனர்களாக உள்ளனர். அதனால் ஜெகநாதன், தங்கவேல், சதீஷ், பல்கலைக்கழக சட்டப்பிரிவு 19-ன் படி பொது ஊழியர்களாக கருதப்படு கின்றனர். புதிதாக தொழில் தொடங்க கூடாது அதற்கு பல்கலை மற்றும் தமிழக அரசு அனுமதி பெற வேண்டும், விதி மீறிய இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இது குறித்து சூரமங்கலம் உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையில் போலீசார் விசாரித்து நேற்று முன்தினம் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியில் வந்த துணை வேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். அவரை சேலத்திற்கு அழைத்து வந்து 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
பின்னர் கருப்பூர் போலீசார் ஜெகநாதன் உள்பட 4 பேர் மீதும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, சொந்த நிறுவனம் தொடங்கி லாப நோக்கில் செயல்பட்டது, போலி ஆவணங்களை தயாரித்து தனி நிறுவனங்களை தொடங்கி யது உள்பட 8 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் இரவு 10 மணியளவில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப் பட்டது. அப்போது அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் இ.சி.ஜி. உள்பட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் தினேஷ்குமார் வீட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது ஒரு வாரத்திற்கு சூரமங்கலம் போலீசில் தினமும் கையெழுத்திட வேண்டும், 8-வது நாளில் நேரில் ஆஜராக வேண்டும் என கூறி மாஜிஸ்திரேட் நிபந்தனை ஜாமீன் வழங்கினார். தொடர்ந்து நேற்று சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் ஜெகநாதன் கையெழுத்திட்டு சென்றார்.
இதற்கிடையே பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணை வேந்தர் அலுவலகம், இல்லம், ஆய்வு மாளிகை விடுதி, பதிவாளர் தங்கவேலு வீடு, அலுவலகம், அவரது கணினி அறிவியல் அலுவலகம், கணினி அறிவியல் உதவி பேராசிரியர் சதீஷின் அலுவலகம் , சூரமங்கலத்தில் உள்ள துணை வேந்தர் வீடு ஆகிய 7 இடங்களில் உதவி கமிஷனர்கள் தலைமையில் 40 பேர் அடங்கிய போலீசார் சோதனையை தொடங்கினர். அங்குலம், அங்குலமாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் கம்ப்யூட்டர்கள் உள்பட முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன.
இதில் துணை வேந்தர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது வீட்டில் யாரும் இல்லை. அங்கிருந்த அலுவலக நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் வீட்டில் இருந்து கட்டு கட்டாக முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து துணை வேந்தர் ஜெகநாதனின் வீட்டிற்கு ஜெராக்ஸ் மற்றும் ஸ்கேன் மிஷின்களை எடுத்து சென்றனர். அங்கு கைப்பற்றிய ஆவணங்களை அந்த எந்திரங்கள் மூலம் நகல் எடுத்து அதனை அட்டை பெட்டிகளில் அடைத்து எடுத்து சென்றனர்.
துணை வேந்தர் வீடு உள்பட 7 இடங்களிலும் போலீசாரின் சோதனை விடிய, விடிய நடந்தது. 2-வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருவதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே தலைமறைவாக உள்ள பதிவாளர் உள்பட 3 பேரையும் பிடிக்க போலீசார் நடிவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் துணை வேந்தர் ஜாமீனுக்கு எதிராக புகார்தாரர் இளங்கோ தரப்பிலும், அரசு தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்படும் என்றும் புகார்தாரர் இளங்கோ கூறி உள்ளார்.
- புகார் அளிக்க வந்த பவானியை சேர்ந்த பரத் என்பவர் படுகாயம்.
- சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு.
சேலம் மாவட்டம் சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில், ஆய்வு செய்வதற்காக சுத்தம் செய்தபோது பட்டாசு வெடித்து சிதறியது.
திடீரென பட்டாசு வெடித்ததில் மியாமத்துல்லா என்பவர் உயிரிழந்துள்ளார். புகார் அளிக்க வந்த பவானியை சேர்ந்த பரத் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.
பட்டாசு வெடித்ததில் காவல் நிலைய மேற்கூரை சரிந்து விழுந்து மியாமத்துல்லா உயிரிழந்துள்ளார்.
இந்த விவகாரத்தை தொடர்ந்து, சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
விபத்து தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாக்குதலுக்கு உள்ளான கிராம நிர்வாக அலுவலர் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் குமார் (37). இவர் தனது உயர் அலுவலர்களின் உத்தரவின் பேரில் கடந்த சனிக்கிழமை இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது சமுத்திரம் கிராமம் அருகே உள்ள காளியம்மன் கோவில் மூலக்கடை பகுதியில் சிலர் கனரக எந்திரத்தினை கொண்டு மண்ணை அள்ளி டிராக்டர் மூலம் கடத்துவதை கண்டு அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இதில் அங்கு சட்ட விரோதமான முறையில் உரிய அனுமதி இன்றி மண் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
அப்போது மண் கடத்தலில் ஈடுபட்டிருந்த புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன், மணிகண்டன் மற்றும் இவர்களின் நண்பரான சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த செந்தில் ஆகியோருக்கும் கிராம நிர்வாக அலுவலர் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் திடீரென அவர்கள் 3 பேரும் சேர்ந்து கிராம நிர்வாக அலுவலர் குமாரை தாக்கியுள்ளனர்.

மேலும் அங்கிருந்த டிராக்டரை வேகமாக ஓட்டி வந்து குமார் மீது ஏற்றி கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான கிராம நிர்வாக அலுவலர் குமார் கூச்சல் போடவே அப்பகுதி பொதுமக்கள் திரண்டனர். இதை கண்டு சம்பந்தப்பட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்தில் குமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய 3 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை புதுப்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த காளியம்மன் கோவில் மூலக்கடை பகுதியை சேர்ந்த அழகேசன் மகன் ஈஸ்வரன் (31), முத்தியம்பட்டி பகுதியைச் சேர்ந்த அம்மாசி மகன் மணிகண்டன் (33) ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், தலைமறைவாக உள்ள சமுத்திரம் பகுதியை சேர்ந்த செந்திலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான கிராம நிர்வாக அலுவலர் குமார் எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மண் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது.
- மூளை சாவடைந்த தினேஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
- இறந்து போன தினேஷ்குமாரின் பெற்றோர் சம்மதத்துடன் அவருடைய உடல் உறுப்புக்கள் தானமாக பெறப்பட்டது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேச்சேரி காமராஜ் பேட்டையை சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளி சவுண்டப்பன் (55). இவரது மனைவி ருக்மணி (52).
இவர்களுக்கு பிரியா (26), என்ற மகளும், தினேஷ் குமார் (24), கார்த்தி (22) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் 2-வது மகன் தினேஷ்குமார் டிப்ளமோ கெமிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் பார்மசி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி தினேஷ்குமார் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தினேஷ்குமார் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதில் மூளை சாவடைந்த தினேஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்து போன தினேஷ்குமாரின் பெற்றோர் சம்மதத்துடன் அவருடைய உடல் உறுப்புக்கள் தானமாக பெறப்பட்டது. இதையடுத்து தினேஷ்குமார் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான மேச்சேரி நெசவாளர் காலனியில் உள்ள அவரது இல்லத்திற்கு நள்ளிரவு 1 மணிக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ., சப்-கலெக்டர் பொன்மணி, தாசில்தார் சுமதி, மேட்டூர் அரசு மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் இளவரசி, டி.எஸ்.பி. மரியமுத்து ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அருகில் உள்ள மயானத்திற்கு தினேஷ்குமார் உடல் எடுத்துச்செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யபட்டது.
- ஏற்காட்டில் குளிர் மேலும் அதிகரித்து ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.
- இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வரமுடியாத அளவிற்க்கு பனி மூட்டமும் குளிரும் காணப்படுகிறது.
சேலம்:
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஏற்காட்டில் கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் ஏற்காடு மலை முழுவதும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. மேலும் ஏற்காடு மலைப்பாதையில் புதிது, புதிதாக அருவிகளும் உருவானதால் அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதற்கிடையே இன்று அதிகாலை முதல் ஏற்காட்டில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காட்டில் குளிர் மேலும் அதிகரித்து ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.
இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வரமுடியாத அளவிற்க்கு பனி மூட்டமும் குளிரும் காணப்படுகிறது. குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளதால் சாலையோரங்களில் கம்பளி ஆடைகள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. ஜர்க்கின், குல்லா, சொட்டர், கம்பளி போன்ற உடைகள் விற்பனையாகி வருகிறது.
பனிமூட்டம் அடர்த்தியாக காணப்படுவதால் மலை பாதையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு நகர்ந்து செல்கின்றன. இந்த குளிர் மற்றும் பனி மூட்டம் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் குளிர், சாரல் மழையை பொருட்படுத்தாமல் கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை தினம் என்பதால் குடும்பம், குடும்பமாக அதிக அளவில் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் ஏற்காட்டில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது.
குறிப்பாக ஏற்காடு அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா, பக்கோடா பாயிண்ட், ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், சேர்வராயன் கோவில் என அனைத்து பகுதிகளையும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பார்த்து மகிழ்ந்தனர். மேலும் படகு குழாமில் படகுகளில் குடும்பத்துடன் சவாரி சென்று மகிழ்ந்தனர்.
சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா இயற்கையான பொழுது போக்கு இடமாக உள்ளது. இயற்கையான சூழலில் மாசற்ற காற்றை சுவாசித்த படி பூங்காவை சுற்றி பார்ப்பது மனதுக்கு புத்துணர்வை ஊட்டுகிறது. மேலும் குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கு பல்வேறு சாதனங்களுடன் குழந்தைகள் பொழுது போக்கு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு இதமான ரம்மியமான சூழல் நிலவுவதால் குழந்தைகளுடன் இன்று காலை முதலே ஏராளமானோர் உயிரியல் பூங்கா வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள மான்கள், மயில்கள், குரங்குகள், பறவைகள், முதலைகள், பாம்புகள், பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் செயற்கை நீரூற்று என அனைத்தையும் பார்த்து மகிழ்ந்தனர்.
- இந்திய கடற்படையை சேர்ந்த விமானம் அரபிக்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது.
- போர்க்கப்பல் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் நவீன வசதிகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சோமாலியா:
அரபிக்கடல் பகுதியில் கடந்த 14-ந்தேதி மால்டா நாட்டு கொடியுடன் சென்ற எம்.வி. ரூன் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தினார்கள்.
அந்த கப்பலில் ஊழியர்கள் உள்பட 18 பேர் இருந்தனர். அதில் பயணம் செய்த மாலுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவருக்கு உதவி செய்வதற்காக இந்திய கடற்படை கப்பல் உதவி கோரப்பட்டது.

இதையடுத்து இந்திய கடற்படையை சேர்ந்த விமானம் அரபிக்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா நாட்டுக்கு செல்வது தெரிய வந்தது. உடனே இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ் கொல்கத்தா அந்த பகுதிக்கு சென்று கடத்தப்பட்ட கப்பலை இடைமறித்தது. இதனால் கடற்கொள்ளையர்கள் உடல்நலம் சரியில்லாமல் இருந்த மாலுமியை விடுவித்தனர். அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கடற்கொள்ளையர்களை தடுக்கும் நடவடிக்கையில் இந்தியா தீவிரம் காட்டி உள்ளது. ஏடன் வளைகுடா பகுதியில் 2-வது போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.கொச்சி கப்பல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பல் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் நவீன வசதிகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- குறிப்பாக மாலை 3 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு காலை 11 மணி வரை நீடிக்கிறது.
- ஏற்காட்டில் உள்ள மரங்கள், காபி, தேயிலை செடிகளிலும் பனி படர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறது.
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடுக்கு சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக கோடை காலமான ஏப்ரல் , மே மாதங்களில் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இந்த காலங்களில் கோடை விழாவும் அரசு சார்பில் நடத்தப்படும். இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை காலமான கடந்த சில மாதங்களாக ஏற்காட்டில் கனமழை பெய்தது. இந்த மழையால் ஏற்காடு மலை பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. மேலும் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள அருவிகளில் அதிக அளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதில் சு ற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இதை தொடர்ந்து ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. குறிப்பாக மாலை 3 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு காலை 11 மணி வரை நீடிக்கிறது. இதனால் ஏற்காட்டில் உள்ள மரங்கள், காபி, தேயிலை செடிகளிலும் பனி படர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறது.
மேலும் ஏற்காட்டில் தொடரும் பனியால் அருகில் நிற்பவர்களை கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடரும் பனிப்பொழிவால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு ஊர்ந்த படியே செல்கின்றன. ஏற்காட்டில் கடும் குளிர் நிலவுவதால் ஏற்காட்டில் வசிக்கும் காபி மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். மேலும் வெளியில் செல்பவர்கள் குளிர் தாங்க முடியாமல் ஸ்வெட்டர், ஜர்கின் அணிந்த படி செல்கிறார்கள். பகல் முழுவதும் இதே நிலை நீடிப்பதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
- கடந்த 17-ந்தேதி மாநில மாநாடு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
- மிச்சாங் புயலால் பாதிப்பை கருத்தில் கொண்டு இளைஞரணி மாநில மாநாடு டிசம்பர் 24-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி சார்பில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் கடந்த 17-ந்தேதி மாநில மாநாடு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் மிச்சாங் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பெருமழை பெய்து, வெள்ளம் சூழ்ந்தது.
இந்த பாதிப்பை கருத்தில் கொண்டு இளைஞரணி மாநில மாநாடு டிசம்பர் 24-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி மாநாட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. மாநாட்டு ஏற்பாடு பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்திருந்தார்.
இந்த நிலையில் அதிகனமழையால் நெல்லை, தூத்துக்குடி போன்ற தென்மாவட்டங்கள் வெள்ளக்காடாகி உள்ளன. நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை கருத்தில் கொண்டு மாநாடு மீண்டும் 2-வது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதிகனமழை காரணமாக வருகிற 24-ந்தேதி அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் விழா சிறப்புரையாற்றுகிறார்.
- தமிழகம் முழுவதும் இருந்து 380 ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சேலம்:
கற்பித்தலில் புதுமையை புகுத்தியும் மற்றும் தொழில் நுட்ப திறனை பயன்படுத்தி கற்பித்தலை செய்யும் ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களின் கல்வித்திறன் மற்றும் கற்பித்தல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இருந்து 380 ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விருது வழங்கும் விழா நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இளையாம்பாளையம் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி கலையரங்கில் நாளை (19-ந் தேதி) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இந்த விழாவில் 380 பேருக்கும் விருதுகளை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி விழா பேருரையாற்றுகிறார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் விழா சிறப்புரையாற்றுகிறார்.
பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி வரவேற்று பேசுகிறார். பள்ளி கல்வி துறை அரசு செயலாளர் குமரகுருபரன் திட்ட விளக்க உரையாற்றுகிறார். மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமை உரையாற்றுகிறார். எம்.பி.க்கள் ராஜேஷ்குமார் சின்ராஜ், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்து உரை யாற்றுகிறார்கள். விழாவில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் நன்றி கூறுகிறார்.
இந்த விழாவில் விருது பெறுபவர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் வகையில் தங்கும் இடம், உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கடந்த சில மாதங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்தது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும், அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. மேலும் குடிநீர் தேவைக்காக முதலில் வினாடிக்கு 500 கனஅடி திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது வினாடிக்கு 250 கனஅடியாக குறைக்கப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆனாலும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்தது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.03 அடியை தொட்டது. அணைக்கு வினாடிக்கு 1978 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- மாநாட்டில் 100 அடி உயர கொடி கம்பம், கார் பார்க்கிங் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
- அமைச்சர் மேடை அமைக்கும் பணியினை பார்வையிட்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் தி.மு.க. மாநில இளைஞரணி இரண்டாவது மாநாடு வருகின்ற 24-ந் தேதி நடைபெறுகிறது. அதற்காக 100 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு பந்தல் அமைக்கும் பணி, உணவருந்தும் இடம், கட்சி நிர்வாகிகள் அமருமிடம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தங்குமிடம், மாநாட்டில் 100 அடி உயர கொடி கம்பம், கார் பார்க்கிங் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகள் நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்று வருகிறது.

தினமும் காலை மாலை இரு வேலையும் அமைச்சர் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணியினை பார்வையிட்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். இந்த நிலையில் திடீரென அமைச்சர் புல்லட் வண்டியைதானே ஓட்டி சென்று பணிகளை சுற்றி பார்வையிட்டார் அவருடன் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்டச் துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
- தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு வருகிற 24 ந் தேதி நடைபெறுகிறது.
- 100 அடி உயரத்தில் கட்சிக் கொடி ஏற்ற பிரம்மாண்ட கம்பமும் நடப்பட்டுள்ளது.
ஆத்தூர்:
சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு வருகிற 24 ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
100 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக நடைபெறும் இந்த மாநாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். அவர்கள் அமருவதற்கான பந்தல், தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்வதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே .என். நேரு ஆய்வு செய்து பந்தல் அமைப்பு குழுவினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தற்போது மாநாட்டு முகப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை அமைச்சர் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருவதற்கான பாதை, அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அமருமிடம் , உணவருந்துமிடம், கட்சி தொண்டர்கள் உணவு அருந்தும் இடம் மற்றும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் உருவ சிலைகள் அமைக்கும் இடத்தையும் அவர் பார்வையிட்டார். தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார். மாநாட்டிற்காக சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்தும் இடமும் தயாராகி வருகிறது. பந்தல் உள் பகுதியில் திரைச் சேலைகளால் அலங்காரம் செய்யும் பணியும் நடந்து வருகிறது. மேலும் மாநாட்டை சுற்றிலும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 100 அடி உயரத்தில் கட்சிக் கொடி ஏற்ற பிரம்மாண்ட கம்பமும் நடப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் நேருவுடன் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் .ஆர் . சிவலிங்கம், மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் டி .எம். செல்வகணபதி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.






