என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா இயற்கையான பொழுது போக்கு இடமாக உள்ளது.
    • மீன் பண்ணை, பாம்பு, முயல் பண்ணைகளையும் குடும்பத்துடன் பார்வையிட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாத நிலையில் வறண்ட வானிலையே நிலவுகிறது. ஆனாலும் பகலிலும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

    ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை முதலே ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது. குறிப்பாக ஏற்காடு அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா, பக்கோடா பாயிண்ட், ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், சேர்வராயன் கோவில் என அனைத்து பகுதிகளையும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பார்த்து மகிழ்ந்தனர். மேலும் படகு குழாமில் படகுகளில் குடும்பத்துடன் சவாரி சென்று மகிழ்ந்தனர்.

    சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா இயற்கையான பொழுது போக்கு இடமாக உள்ளது. இயற்கையான சூழலில் மாசற்ற காற்றை சுவாசித்தபடி பூங்காவை சுற்றி பார்ப்பது மனதுக்கு புத்துணர்வை ஊட்டுகிறது. மேலும் குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கு பல்வேறு சாதனங்களுடன் குழந்தைகள் பொழுதுபோக்கு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு இதமான ரம்மியமான சூழல் நிலவுவதால் குழந்தைகளுடன் இன்று காலை முதலே ஏராளமானோர் உயிரியல் பூங்கா வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள மான்கள், மயில்கள், குரங்குகள், பறவைகள், முதலைகள், பாம்புகள், பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் செயற்கை நீரூற்று என அனைத்தையும் பார்த்து மகிழ்ந்தனர்.

    இதே போல சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான மேட்டூர் அணைக்கு சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் நீராடி அணைக்கட்டு முனியப்பனை தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து அணை பூங்காவில் உள்ள ஊஞ்சல் மற்றும் சறுக்குகளிலும் சிறுவர்கள் ஏறி உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். மீன் பண்ணை, பாம்பு, முயல் பண்ணைகளையும் குடும்பத்துடன் பார்வையிட்டனர்.

    அணை பவள விழா கோபுரத்தில் ஏறி அணையையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். இதனால் கடைகளிலும் கூட்டம் அதிகரித்ததால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • 25 ஆயிரம் லாரிகள் தற்போது வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    • 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தண்ணீரில் மூழ்கி பழுதடைந்துள்ளது.

    சேலம்:

    மிச்சாங் புயலால் கடந்த 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

    இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் சென்னைக்குள் செல்லும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பால், காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொது மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    தற்போது சென்னையின் புறநகர் பகுதிகளில் தண்ணீர் வடிந்துள்ளது. இதனால் சென்னை புறநகர் பகுதிகளுக்கு லாரிகள் செல்ல தொடங்கி உள்ளன. இதனால் சேலத்தில் இருந்து சென்னையில் புறநகர் பகுதிகளுக்கு கியாஸ் சிலிண்டர்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

    இதே போல நாமக்கல்லில் இருந்து முட்டைகள், கறிக்கோழிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வட மாநிலங்களில் இருந்தும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கி உள்ளன.

    இதனால் தமிழகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்ட 60 ஆயிரம் லாரிகளில் 35 ஆயிரம் லாரிகள் தற்போது ஓட தொடங்கி உள்ளன. மேலும் 25 ஆயிரம் லாரிகள் தற்போது வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த லாரி உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அதனை நம்பி உள்ள 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட டிரைவர்கள், கிளீனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள்.

    இதனால் சென்னையில் மேலும் பல பகுதிகளில் தேங்கி உள்ள தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்ட அந்த லாரிகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது லாரி உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது .

    மேலும் கனமழையால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தண்ணீரில் மூழ்கி பழுதடைந்துள்ளது. இதனால் அந்த லாரிகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் லாரி நிறுவனங்கள் இலவச வாகன சரிபார்ப்பு முகாம்கள் நடத்தி வாகனங்களை இலவசமாக சரி செய்து கொடுக்க வேண்டும் என்றும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஓடும் காரில் தீ பிடித்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் சுதாரித்துக்கொண்டு காரை நிறுத்தினார்.
    • தீ மளமளவென கார் முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது.

    வாழப்பாடி:

    சேலம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு இன்று அதிகாலை சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார்.

    சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி கிழக்குக்காடு அருகே மேம்பாலத்தில் சென்றபோது திடீரென கார் முன்பகுதி தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது.

    ஓடும் காரில் தீ பிடித்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் சுதாரித்துக்கொண்டு காரை நிறுத்தினார். இதையடுத்து 5 பேரும் கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதற்கிடையே அந்த வழியாக வந்த பொதுமக்கள் கார் என்ஜின் வெடித்து விடுமோ? என்ற அச்சத்தில் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினர். அதன் அருகில் யாரும் செல்லவில்லை.

    தீ மளமளவென கார் முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் தீப்பிடித்து எரிந்ததில் கார் முழுவதும் எலும்பு கூடாக காணப்பட்டது. பின்னர் அந்த காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

    இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்-சென்னை பிரதான தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஓடும் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • அக்.10-ந்தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து டெல்டாவுக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
    • மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்தது. மேலும் கர்நாடகா அணைகளில் இருந்தும் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் திறக்கவில்லை. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து டெல்டாவுக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    மேலும் தொடர்ந்து குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 மாதமாக பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    மேலும் அணைக்கு வரும் நீர்வரத்தை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.22 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 297 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணையில் வெளியே தெரிந்த புராதன சின்னங்கள் மூழ்கி வருகிறது.

    • லாரிகள் செல்ல முடியாத நிலையால் மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சரக்குடன் சென்ற லாரிகள் சென்னை புறநகர் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் லாரிகள் மிக்ஜம் புயலால் சென்னைக்குள் செல்ல முடியால் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு பால், ஜவ்வரிசி, இரும்பு தளவாடங்கள், வெல்லம், மஞ்சள், காய்கறி உள்பட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    நாமக்கல்லில் இருந்து முட்டைகள், கறிக்கோழிகள், ஜவுளிகள் உள்பட பல்வேறு பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் பிற மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சென்னைக்கு தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் பல்வேறு சரக்குகள் அனுப்பி வைக்கப்படும்.

    தற்போது சென்னையில் புயல் வெள்ளம் வடியாத நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஆங்காங்கே மேடான பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே போல பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சரக்குடன் சென்ற லாரிகள் சென்னை புறநகர் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இதனால் சென்னை உள்பகுதிகளுக்குள் லாரிகள் செல்ல முடியாத நிலையால் மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் லாரி போக்குவரத்து முடங்கி உள்ளதால் லாரி உரிமையாளர்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    அதன்படி ஒரு லாரிக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 60 ஆயிரம் லாரிகளுக்கும், ஒரு நாளைக்கு ரூ.18 கோடி வீதம் 4 நாட்களில் மட்டும் 72 கோடிக்கும் மேல் லாரி உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் லாரிகள் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சென்னைக்கு கொண்டு செல்லப்படும் காய்கறிகள், முட்டைகள், மளிகை பொருட்கள் உள்பட பல கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களும் தேக்கம் அடைந்துள்ளன.

    லாரி தொழிலை நம்பியுள்ள 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரைவர்கள், கிளீனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

    இது தவிர நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினசரி 50 லட்சத்திற்கும் அதிகமாக முட்டைகள் லாரிகளில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னைக்குள் லாரிகள் செல்லாததால் இந்த முட்டைகள் கடந்த 4 நாட்களாக நாமக்கல்லில் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் முட்டை கோழிப்பண்ணை யாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2.5 கோடி வீதம் கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ. 10 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    • சம்பவம் தொடர்பாக ஆனந்தராஜின் மாமனார் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • ஆனந்தராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    காடையாம்பட்டி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பில்பருத்தி பகுதியை சேர்ந்தவர் தமிழ். இவரது மகன் ஆனந்தராஜ் (27).

    இவர் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் வங்கியில் லோன் பணம் வசூலிக்கும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் ஆனந்தராஜ் தனது மனைவியின் தங்கையை ஆசை வார்த்தை கூறி சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த டேனீஸ்பேட்டை ஊராட்சி லோகூர் வனப்பகுதிக்கு அழைத்து வந்து கற்பழித்ததாக தெரிகிறது. இதில் அந்த பெண் 2 மாத கர்ப்பிணியானார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஆனந்தராஜின் மாமனார் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆனந்தராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    • மேட்டூர் அணைக்கு நேற்று 2,128 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3,367 கன அடியாக அதிகரித்துள்ளது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 2,128 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3,367 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட, நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    நேற்று அடியாக 67.39 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 67.70 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 30.75 டி.எம்.சி.யாக உள்ளது.

    • தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
    • அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இதையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் 30 அடிக்கு கீழ் குறைந்தது. இதனால் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 1827 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 2128 கன அடியாக அதிகரித்துள்ளது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    நேற்று 67.21 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 67.39 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 30.50 டி.எம்.சி.யாக உள்ளது.

    • மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    • கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இதையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மேட்டூர் அணை நீர்மட்டம் 30 அடிக்கும் கீழ் குறைந்தது. இதனால் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந்தேதி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு ஆயிரத்து 827 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று 66.91 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 67.06 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 30.22 டி.எம்.சி.யாக உள்ளது.

    • அண்மை காலமாக தோட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகளை வெறி நாய்கள் கடித்து கொல்லும் நிகழ்வு தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
    • நல்லம்மாள் என்பவருக்கு சொந்தமான 18 ஆடுகளை அவரது தோட்டத்தில் கட்டி இருந்தார். நள்ளிரவு நேரத்தில் அவரது தோட்டத்திற்குள் நுழைந்த வெறி நாய்கள், அங்கு கட்டிருந்த 8 ஆடுகளை கடித்து குதறி கொன்றது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் அண்மை காலமாக தோட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகளை வெறி நாய்கள் கடித்து கொல்லும் நிகழ்வு தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

    கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் கொல்லப்பட்டதால் இப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தூர் ஊராட்சி, மேல்சித்தூர் பகுதியை சேர்ந்த பாலன் மனைவி நல்லம்மாள் என்பவருக்கு சொந்தமான 18 ஆடுகளை அவரது தோட்டத்தில் கட்டி இருந்தார். நள்ளிரவு நேரத்தில் அவரது தோட்டத்திற்குள் நுழைந்த வெறி நாய்கள், அங்கு கட்டிருந்த 8 ஆடுகளை கடித்து குதறி கொன்றது. மேலும் சில ஆடுகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

    ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த பழனியம்மாள் குடும்பத்தினர் ஆடுகள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வருவாய் துறை மற்றும் கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை துறையினர். உயிரிழந்த 8 ஆடுகளை அப்புறப்படுத்தி, காயம் அடைந்த ஆடுகளுக்கு தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நயினாம்பட்டி புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த அன்வர் பாஷா மகன் அசேன் (வயது 36). லாரி டிரைவர்.
    • பாத்திமா என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி நயினாம்பட்டி புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த அன்வர் பாஷா மகன் அசேன் (வயது 36). லாரி டிரைவர்.

    காதல் திருமணம்

    இவர் அதே பகுதியை சேர்ந்த நிஷா என்ற பாத்திமா என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இதற்கிடையே கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. குடும்பத்தினர் இருவரையும் சமாதானம் செய்து வந்தனர். கடந்த 1-ந் தேதி அசேன் வீட்டில் சுயநினைவு இல்லாமல் கிடந்தார். 108 ஆம்புலன்சு ஊழியர்கள் வந்து அசேனை பரிசோதித்து பார்த்த போது அவர் இறந்து இருப்பது தெரிய வந்தது.

    காதல் மனைவி தாயுடன் கைது

    இது தொடர்பாக எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவருடைய மனைவி நிஷாவிடம் விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    அப்போது, தன்னுடைய தாய் ரஜியா, சித்தி சகிராபானு ஆகியோருடன் சேர்ந்து அசேனை கொலை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் நிஷா, ரஜியா, சகிராபானு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    திடுக்கிடும் தகவல்

    இந்த கொலை எதற்காக நடந்தது என விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விபரம் வருமாறு:-

    அசேனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்தார். தொடர்ந்து அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் தினம், தினம் கணவர் செய்யும் டார்ச்சரால் சகித்துக் கொண்டு வாழ்வதை விட அவரை தீர்த்துக்கட்டி விட்டு நிம்மதியாக வாழலாம் என நிஷா கருதியதாக தெரிகிறது.

    கழுத்தை இறுக்கினர்

    சம்பவத்தன்று அசேன் மீண்டும் நிஷாவிடம் தகராறு செய்து அவரை அடித்து உதைத்துள்ளார். இதை தடுக்க சென்ற மாமியார் ரஜியாவையும் தாக்கி உள்ளார். உடனே அவர்கள் பதிலுக்கு அசேனை தாக்கி உள்ளனர். தொடர்ந்து நிஷா தனது தாய் ரஜியா, சித்தி சகிராபானு ஆகியோருடன் சேர்ந்து சேலையால் அசேன் கழுத்தை இறுக்கி உள்ளதாக தெரிகிறது. இதில் அசேன் பரிதாபமாக இறந்தார்.

    இதனை அறியாத அவர்கள், அசேன் மூச்சு பேச்சு இல்லாமல் கிடப்பதாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து பார்த்த பிறகுதான் அசேன் இறந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ஜெயிலில் அடைப்பு

    இதையடுத்து கைதான நிஷா, ரஜியா, சகிராபானு ஆகிய 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

    • சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    மேலும் தொடர் மழை காரணமாக விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. மேலும் வனப்பகுதிகள் மற்றும் மலை பகுதிகள் பசுமையாக காட்சி அளிக்கிறது.

    அதிகரிக்கும் நீர்மட்டம்

    மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகள், ஏரி, குளங்கள் மற்றும் குட்டைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதன் காரணமாக குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    ஏற்காடு

    குறிப்பாக சுற்றுலா தலமான ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் பஸ் நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    மேலும் கடுமையான பனிமூட்டமும் நிலவி வருகிறது. இதன் காரணமாக பகல் நேரத்திலேயே வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி வந்து செல்கிறது. தற்போது குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வந்தாலும் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஏற்காடு பகுதியில் பொதுமக்கள் கம்பளி ஆடைகளை அணிந்து வந்து செல்கிறார்கள். தொடர் சாரல் மழை மற்றும் பனி மூட்டம், கடுங்குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    ×