என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் 9 லட்சம் சதுரஅடி பரப்பளவில் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
    • பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரது உருவங்கள் பொறிக்கப்பட்டு கோட்டை போன்ற வடிவில் மாநாட்டின் முகப்பு பகுதி காட்சி அளிக்கிறது.

    சேலம்:

    சேலத்தில் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டையொட்டி சேலம் மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.

    21-ந் தேதி அன்று காலை 9 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்குகிறது. தி.மு.க. துணை பொது செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி. தி.மு.க. கொடியை ஏற்றி வைக்கிறார். இதற்காக மாநாட்டு முகப்பு பகுதியில் 100 அடி உயரத்தில் பிரமாண்ட கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன்பிறகு மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. தி.மு.க. இளைஞரணி துணை செயலாளர் தூத்துக்குடி ஜோயல் வரவேற்று பேசுகிறார். இதையடுத்து பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேசுகிறார்கள். காலை 11 மணியில் இருந்து மாலை 6 மணி வரையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. 

    அதன் பின்னர் மாலை 6.30 மணியளவில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு தலைவர் உரையை நிகழ்த்துகிறார். அதனை தொடர்ந்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு, பொது செயலாளர் துரைமுருகன் ஆகியோரும் பேசுகிறார்கள். இறுதியாக 7.30 மணியளவில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாநாட்டில் நிறைவு பேருரை மற்றும் சிறப்புரை ஆற்றுகிறார்.

    இளைஞரணி மாநாட்டையொட்டி பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் 9 லட்சம் சதுரஅடி பரப்பளவில் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

    1.5 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமான முறையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டு திடலில் லட்சக்கணக்கானோர் மாநாட்டை கண்டுகளிக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    இளைஞரணி மாநாட்டில் 5 லட்சம் பேர் திரள்கிறார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மாநாட்டு திடலில் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு நுழைவு பகுதியில் பிரமாண்டமான முறையில் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரது உருவங்கள் பொறிக்கப்பட்டு கோட்டை போன்ற வடிவில் மாநாட்டின் முகப்பு பகுதி காட்சி அளிக்கிறது. பந்தல் அலங்காரமும் சிறப்பான முறையில் செய்யப்பட்டு உள்ளது.

    மாநாட்டையொட்டி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பிரமாண்டமான புல்லட் பேரணி 20-ந் தேதி மாலையில் நடைபெறுகிறது. மாநாட்டு திடலில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து புறப்படும் இந்த புல்லட் பேரணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.

    அப்போது டிரோன்கள் மூலமாக மாநாட்டு விளக்க காட்சியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போட்டு காண்பிக்கப்படுகிறது.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் 20-ந் தேதி பிற்பகலில் சேலம் வருகிறார்கள். ஓமலூர் விமான நிலையத்தில் இருந்து இருவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இதற்காக அங்கிருந்து மாநாடு நடைபெறும் இடம் வரையில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருவரையும் வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. கொண்டலாம்பட்டியில் மேற்கு மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதேபோன்று மேட்டு பட்டியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சேலம் விமான நிலையத்தில் இருந்து மாநாட்டு திடல் வரையில் 20 அடி தூரத்துக்கு ஒரு மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் கம்பத்தில் ராட்சத விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. வழிநெடுக தி.மு.க. கொடிகளும் பறக்க விடப்பட்டு உள்ளன.

    மாநில உரிமை மீட்பு முழக்கம் என்கிற பெயரில் நடத்தப்படும் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.

    இவர்கள் நாளை மறுநாள் 20-ந் தேதி அன்றே சேலத்தில் குவிய உள்ளனர். இப்படி வெளியூர்களில் இருந்து வரும் தி.மு.க. தொண்டர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் செய்துள்ளனர்.

    மாநாட்டில் மொழி போர் தியாகிகளின் படங்கள் திறந்து வைக்கப்படுகிறது. பெரியார் நுழைவு வாயில், அண்ணா திடல், கலைஞர் அரங்கம், பேராசிரியர் மேடை, வீரபாண்டியார் கொடி மேடை, முரசொலி மாறன் புகைப்பட கண்காட்சி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

    வீரபாண்டி ஆ.ராஜா, வீரபாண்டி செழியன், நீட் தேர்வுக்காக உயிர்நீத்த அனிதா, தனுஷ் ஆகியோரது பெயர்களில் தோரண வாயில்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

    மாநாட்டில் மாநில சுயாட்சியை வலியுறுத்தும் வகையிலும், மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையிலும் மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    முடிவில் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீரபாண்டி பிரபு நன்றி கூறுகிறார்.

    இளைஞரணி மாநாட்டையொட்டி தி.மு.க.வினர் சேலம் மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வரவேற்பு பேனர்களை வைத்து, தி.மு.க. கொடிகளையும் பறக்கவிட்டுள்ளனர். இதனால் சேலம் தி.மு.க. மாநாடு 2 நாட்களுக்கு முன்பே களை கட்டி உள்ளது.

    மாநாட்டையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் சேலத்தில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். மேற்கு மண்டல ஐ.ஜி. பவா னீஸ்வரி, சேலம் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் ஆகியோரின் மேற்பார்வையில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    • இயற்கை சூழலில் இந்த பூங்கா உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பார்வையிட்டு செல்கிறார்கள்.
    • அணையின் பவள விழா கோபுரத்தில் ஏறிய அவர்கள் அணையின் அழகையும் பார்த்து ரசித்தனர்.

    சேலம்:

    சேலம் குரும்பப்பட்டியில் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு பறவையினங்கள், பாலூட்டி இனங்கள், ஊர்வன, நீந்துவன என 200-க்கும் மேற்பட்ட உயிர் இனங்கள் உள்ளன. இயற்கை சூழலில் இந்த பூங்கா உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பார்வையிட்டு செல்கிறார்கள்.

    மேலும் வண்ணத்து பூச்சி பூங்கா, செயற்கை நீர் வீழ்ச்சிகளும் பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளன. குறிப்பாக வார இறுதி நாட்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இங்கு வருவார்கள். சிறியவர்களுக்கு கட்டணமாக 10 ரூபாயும், பெரியவர்களுக்கு கட்டணமாக 50 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது.

    காணும் பொங்கலையொட்டி இன்று காலை முதலே பூங்காவிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் பூங்காவை சுற்றி பார்த்ததுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். குறிப்பாக அங்குள்ள மான்கள், பாம்புகள் மற்றும் பறவையினங்களை பார்த்து மகிழ்ந்தனர்.

    மேட்டூர் அணை பூங்காவுக்கு காணும் பொங்கலையொட்டி இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் நீராடி அணை முனியப்பனை தரிசனம் செய்தனர்.

    பின்னர் சமைத்து எடுத்து வந்த உணவை குடும்பத்துடன் பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டனர். சிறுவர்கள் அங்குள்ள ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாட்டுகளில் ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அணையின் பவள விழா கோபுரத்தில் ஏறிய அவர்கள் அணையின் அழகையும் பார்த்து ரசித்தனர்.

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து வழக்கமாக அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். காணும் பொங்கலையொட்டி இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர்.

    தொடர்ந்து அங்குள்ள மான் பூங்கா, அண்ணா பூங்கா, படகு குழாம், சேர்வ ராயன் கோவில் , பக்கோடா பாயிண்ட, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் உள்பட அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் கடைகளிலும் வியாபாரம் அதிகரித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல சேலம் அண்ணா பூங்காவிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அங்கு திரண்டதால் கூட்டம் அலை மோதியது.

    • அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை நிறுத்தியது தான் தி.மு.க.வின் சாதனை.
    • தி.மு.க.விற்கு பாடம் புகட்டும் வகையில் இந்த தேர்தல் அமைய வேண்டும்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள திண்டமங்கலம் கிராமத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுடன் சேர்ந்து 108 பொங்கல் வைத்து கொண்டாடினார்.

    முன்னதாக அவர் ஓமலூரில் இருந்து மேட்டூர் செல்லும் சாலையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் விழா நடைபெறும் இடத்திற்கு மாட்டு வண்டி ஓட்டி வந்தார். தொடர்ந்து அவருக்கு வழி நெடுகிலும் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 108 பொங்கல் வைக்கும் இடத்திற்கு சென்று எடப்பாடி பழனிசாமி பொங்கல் பானையில் பச்சரிசியை போட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடினார்.

    அப்போது பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-


    ஏழைகளுக்காக திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றுகின்ற அரசு அ.தி.மு.க. தான். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை நிறுத்தியது தான் தி.மு.க.வின் சாதனை.

    விவசாயிகளுக்காக தலைவாசலில் திறக்கப்பட்ட 1000 கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடை பூங்கா மூடிக்கிடப்பது வருத்தம் அளிக்கிறது. மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் செயல்படாமல் தி.மு.க. அரசு செயல்படுகிறது.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தல் முக்கிய தேர்தல். இந்த தேர்தல் தி.மு.க. அரசுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.

    தமிழகம், புதுச்சேரி சேர்த்து 40 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். தை பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடுவது போல தேர்தல் வெற்றியை நாம் கொண்டாடும் காலம் வந்து விட்டது.

    சேலம் அ.தி.மு.க.வின் கோட்டை. சேலத்தில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்ற ஒரே கட்சி அ.தி.மு.க. தான்.

    தமிழகத்திலேயே சேலம் பாராளுமன்ற தொகுதியில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். தி.மு.க.விற்கு பாடம் புகட்டும் வகையில் இந்த தேர்தல் அமைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாலிகடை பகுதியில் இருந்து மாட்டு வண்டியில் எடப்பாடி பழனிசாமி ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
    • 150க்கும் மேற்பட்ட பானைகளில் பிரம்மாண்டமாக முறையில் பொங்கல் விழா நடைபெற்றது.

    சேலம் மாவட்டத்தில் அதிமுக பொதுசெயலாளர் தனது தை பொங்கலை சிறப்பாக கொண்டாடினார். மக்கள் எடப்பாடி பழனிசாமியை மேளதாளத்துடன் ஓமலூர் பாலிகடை பகுதியில் இருந்து மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். வழி எங்கும் பெண்கள் மலர்தூவி உற்சாக வரபேற்பு அளித்தனர்.

    150க்கும் மேற்பட்ட பானைகளில் பிரம்மாண்டமாக முறையில் பொங்கல் விழா நடைபெற்றது.

    பொங்கல் விழாவில் போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    சேலம் திண்மங்கலம் பகுதியில் பொங்கல் விழாவை ஏற்பாடு செய்திருந்த அனைவருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தைபொங்கல் போல தேர்தல் வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற நேரம் வந்துவிட்டது, தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வெற்றி பெற பாடுபட வேண்டும். மக்கள் நமது கூட்டணியை ஆதரிக்க வேண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து 5 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • முதலமைச்சர் வருகையை முன்னிட்டு 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. குறிப்பாக மாநாடு நடைபெறும் திடலுக்கு தினமும் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

    இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து 5 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் மாநாடு நடைபெறும் இடத்தை தினமும் பார்வையிட்டு வருகின்றனர்.

    தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்காக அவர் வருகிற 20-ந் தேதி மாலை விமானம் மூலம் சேலம் வருகிறார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். முதலமைச்சர் சேலம் வருகையை முன்னிட்டு மாநாடு நடைபெறும் இடத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    அதன் பொறுப்பாளராக சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வரும், போலீஸ் சூப்பிரண்டுமான லாவண்யா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சேலத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே தி.மு.க. மாநாட்டு பணிகளை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம் (கிழக்கு), வக்கீல் ராஜேந்திரன் (மத்திய மாவட்டம்), டி.எம்.செல்வகணபதி (மேற்கு), மாவட்ட துணை செயலாளர்கள் சுரேஷ்குமார், சின்னதுரை, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம், அவைத்தலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் மூர்த்தி, சிவராமன், அன்பு, பேரூர் செயலாளர்கள் வெங்கடேஷ், பாபு, முன்னாள் பேரூர் செயலாளர் சோமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏசி பெட்டியில் கஞ்சா ஆயில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    ரெயில்களில் கஞ்சா கடத்தி வருவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து ரெயில்வே போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி கஞ்சா கடத்தி வரும் நபர்களை பிடித்து கைது செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் டாட்டா நகர்-எர்ணாகுளம் செல்லும் ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து இன்று காலை சேலம் வந்த அந்த ரெயிலில் சேலம் போதை தடுப்பு பிரிவு போலீசார் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் உதவியுடன் சோதனை செய்தனர்.

    அப்போது ஏசி பெட்டியில் கஞ்சா ஆயில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மதிப்பு ரூ.2 கோடியாகும். இதை ஏ.சி பெட்டியில் பணிபுரியும் உதவி பணியாளர் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த தீபக் செட்டி (31) என்பதும், ஏ.சி பெட்டியில் பெட்ஷீட், தலையணை வழங்கும் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

    இவர் கஞ்சா ஆயில் பந்தை கேரளாவிற்கு கடத்தி செல்ல இருந்தார். இவருக்கு இதை யார் வழங்கினார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரியார் பல்கலைக்கழகத்தில் கவர்னர் ரவி, துணை வேந்தரை சந்தித்த போது நடந்த இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • நேற்று காலை முதல் நள்ளிரவு வரை பெரியார் பல்கலைக்கழகம் பரபரப்பாகவே காணப்பட்டது.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற பெயரில் தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய (பொறுப்பு) பதிவாளர் தங்கவேல் உள்பட 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையே பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள துணை வேந்தர் அலுவலகம் உள்பட பல இடங்களில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது. கடந்த வாரம் பல்கலைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 4 பேராசிரியர்கள் மற்றும் விருந்தினர் மாளிகை தற்காலிக ஊழியர் உள்பட 5 பேருக்கு கருப்பூர் போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து 5 பேரும் ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை துணை வேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி அவருடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது துணை வேந்தர் மீது போடப்பட்ட வழக்கின் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். சுமார் 25 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின் போது கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் துணை வேந்தர் ஜெகநாதன் மட்டுமே அந்த அறையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து சிண்டிகேட் கூட்ட அரங்கில் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது துணை வேந்தர் ஜெகநாதன் வழக்கு தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி கோவைக்கு புறப்பட்டு சென்றார்.

    இதற்கிடையே கவர்னர் ஆர்.என்.ரவி முறைகேடு புகாரில் கைதான துணை வேந்தர் ஜெகநாதனை சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் 150-க்கும் மேற்பட்டோர் கையில் கருப்பு கொடிகளுடன் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு முன்பு திரண்டனர். கவர்னர் வருவதற்கு முன்பாகவே அங்கு திரண்டிருந்த 156 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக நேற்று காலை 9 மணியளவில் போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 30 போலீசார் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். அவர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள துணை வேந்தர் அலுவலகம், திட்டம் மற்றும் வளர்ச்சி நிர்வாக அலுவலகம், மாணவர் வசதி மையம், கணினித்துறை அலுவலகம், தமிழ்துறை அலுவலகம், ஆவணங்கள் பாதுகாக்கும் அலுவலகம், மத்திய அரசின் கீழ் இயங்கும் தீனதாயன் யோஜனா கிராமின் கவுசல்யா அலுவலகம் ஆகிய 7 இடங்களில் தீவிர சோதனை நடத்தினர்.

    ஒவ்வொரு அறையிலும் அங்குலம், அங்குலமாக இந்த சோதனை நடத்தப்பட்டது. பெரியார் பல்கலைக்கழகத்தில் கவர்னர் ரவி, துணை வேந்தரை சந்தித்த போது நடந்த இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனை இரவு 11 மணி வரை நடந்தது. பின்னர் போலீஸ் அதிகாரிகள் சோதனையை முடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 14 மணிநேரம் நடந்த இந்த சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. கவர்னர் வருகை, போலீஸ் சோதனை, மாணவர் அமைப்புகள் போராட்டம் ஆகியவை காரணமக நேற்று காலை முதல் நள்ளிரவு வரை பெரியார் பல்கலைக்கழகம் பரபரப்பாகவே காணப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    • சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காத வகையில் மழை நீர் வடிகால் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்கள்.
    • தி.மு.க. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் அதிக கனமழை பெய்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

    சேலம்:

    சேலம் ஓமலூரில் அ.தி.முக. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. மக்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கே தேர்தலில் பேட்டியிட சீட் வழங்கப்படும். அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். சென்னையில் கனமழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. முதலமைச்சர், அமைச்சர்களும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காத வகையில் மழை நீர் வடிகால் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்கள். இதனை மக்களும் நம்பினார்கள். இந்த கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். உடமைகள் எல்லாம் பெரும் சேதத்திற்கு ஆளாகியது. 2, 3 நாட்கள் உணவு கிடைக்காமல் தவித்தனர். இப்படி நிலைமை இருக்க இந்த அரசாங்கம் முழுமையான வடிகால் வசதியை செய்து கொடுக்கவில்லை.


    இந்திய வானிலை ஆய்வு மையம் தென் மாவட்டங்களில் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என அறிவித்தது. இது பற்றி செய்தி வெளியிடப்பட்டது. அப்படி இருந்தும் தி.மு.க. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் அதிக கனமழை பெய்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அரசு வேகமாக துரிதமாக போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு என்ன என்ன தேவை என்பதை உணர்ந்து உடனுக்குடன் செயல்பட்டு இருந்தால் மக்களுடைய கோபத்திற்கு ஆளாகி இருக்க மாட்டார்கள். இதையும் இந்த அரசு செய்ய தவறி விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. உள்பட 14 மாணவர் அமைப்பினர் பெரியார் பல்கலைக்கழகம் எதிரே கருப்பு கொடியுடன் திரண்டனர்.
    • பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் கவர்னர் வரும் பாதைகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற பெயரில் தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது.

    இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதில் தொடர்புடைய பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மற்றும் 2 பேராசிரியர்கள் தலைமறைவாக உள்ளனர். போலீசார் தொடர்ந்து அவர்களை தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு இன்று கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். அங்கு நடைபெற்ற அலுவலர் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    இதற்காக இன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் சேலம் வந்தார். பின்னர் சேலத்தில் இருந்து காரில் கோவை செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்கிறார்.

    இதற்கிடையே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் உள்ள துணைவேந்தரை கவர்னர் சந்திக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், தி.மு.க. மாணவர் அணி, திராவிட மாணவர் கழகம் உள்பட 14 மாணவர் சங்கங்கள் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டுவோம் என்று அறிவித்திருந்தனர்.

    அதன்படி தி.மு.க. உள்பட 14 மாணவர் அமைப்பினர் பெரியார் பல்கலைக்கழகம் எதிரே கருப்பு கொடியுடன் திரண்டனர். பின்னர் அவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். அதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

    இதற்கிடையே கவர்னர் வரவுள்ள நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் போலீசார் இன்று காலை 10 மணி முதல் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துணை வேந்தர் அலுவலகம், பதிவாளர் அலுவலகம், பூட்டர் பவுண்டேசன், அறிவியல் துறை உள்ளிட்ட 6 இடங்களில் சூரமங்கலம் துணை கமிஷனர் நிலவழகன் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள் தனித்தனியாக பிரிந்து இந்த சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் செயலாளர் அருண்சுந்தர் தயாள் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து வருகிறார். அவர் கணக்கு வழக்குகளை சரிபார்த்து வருகிறார். கவர்னர் பல்கலைக்கழகத்திற்கு வரும் நேரத்தில் போலீசார் ஒருபுறம் சோதனை நடத்தி வருவதும், நிதித்துறை கூடுதல் செயலாளர் ஆய்வு செய்து வருவதாலும் பல்கலைக் கழக வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    கவர்னர் வருகையையொட்டி பல்கலைக் கழக வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    • துணை வேந்தர் ஜெகநாதனை ஆளுநர் சந்திப்பதற்கு திமுக மாணவரணியினர் கடும் கண்டனம்
    • திமுக மாணவரணி சார்பில் நாளை சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் அறிவித்துள்ளார்.

    பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு மேற்கொண்டதாகப் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

    இதனைத்தொடர்ந்து, சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கருப்பூர் காவல்துறையினரால் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், மோசடி, கூட்டுச்சதி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஜெகநாதனுக்கு உடந்தையாக இருந்ததாக துணைவேந்தரின் தனிச் செயலாளர், பொறுப்பு பதிவாளர், கண்காணிப்பாளர் உட்பட 5 பேரிடமும் சேலம் கருப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    இந்நிலையில், முறைகேடு புகாரில் சிக்கிய துணைவேந்தர் ஜெகநாதனை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்க உள்ளார். சேலம் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற உள்ள விழாவில் பங்கேற்கச் செல்லும் ஆளுநர் ரவி, ஜெகநாதனை சந்திக்க உள்ளதற்கு திமுக மாணவரணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநரை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் நாளை சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் அறிவித்துள்ளார்.

    மேலும், ஆளுநரை கண்டித்து நாளை சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள் எனவும் தெரிவித்தார்

    • வழக்கம் போல பஸ்கள் புறப்பட்டு சென்றன. ஆனால் பஸ்களில் கூட்டம் குறைவாக இருந்தது.
    • பஸ் நிலையங்கள் மற்றும் டெப்போக்கள் முன்பு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல் படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு. உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    இதையொட்டி சேலம் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இயக்கப்படும் 1060 அரசு பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் வழக்கம் போல பஸ்கள் புறப்பட்டு சென்றன. ஆனால் பஸ்களில் கூட்டம் குறைவாக இருந்தது.


    2-வது நாளாக இன்றும் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடின. தொ.மு.ச. மற்றும் ஐ.என்.டி.யு.சி. உள்பட பல்வேறு தொழிற் சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பஸ்களை இயக்கி வருகிறார்கள்.

    அண்ணா தொழிற்சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அவர்களுக்கு பதில் மாற்று டிரைவர்கள், தனியார் பஸ், லாரி டிரைவர்களை நியமித்து போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் பாதிப்பின்றி பயணம் செய்து வருகிறார்கள்.

    மேலும் பஸ் நிலையங்கள் மற்றும் டெப்போக்கள் முன்பு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • பஸ்களை வழக்கம் போல இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
    • சில தொழிற்சங்கங்களை சேர்ந்த டிரைவர்களுக்கு விடுப்பு கொடுக்காமல் பணியில் ஈடுபடுத்தி வருகிறது.

    சேலம்:

    ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் காலி பணியிடங்கனை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

    இதற்கிடையே அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளிடையே நேற்று சென்னையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இந்த போராட்டத்தில் இருந்து தொ.மு.ச. மற்றும் ஐ.என்.டி.யு.சி. உள்பட சில சங்கங்கள் விலகுவதாக அறிவித்தன.

    ஆனாலும் அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு. பாட்டாளி தொழிற்சங்கம், தே.மு.தி.க. தொழிற்சங்கம் உள்பட பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதையடுத்து பஸ்களை வழக்கம் போல இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    அதன்படி 50 சதவீத மாற்று டிரைவர்கள், தனியார் பஸ் டிரைவர்கள், டெம்போ டிரைவர்கள் உள்பட பலரையும் நியமித்து பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகிறது. சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் 300 பஸ்களும், பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் 180 பஸ்களும் போலீஸ் பாதுகாப்புடன் வழக்கம் போல இயக்கப்படுகிறது.

    இதே போல சேலம் புறநகர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இயக்கப்படும் 600 பஸ்களும் வழக்கம் போல இயக்கப்படுகிறது. இதையொட்டி பஸ் நிலையங்கள், டெப்போக்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் பஸ்கள் இயங்காது என்று கூறப்பட்டதால் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் மிக குறைவாகவே இருந்தது. ஆனாலும் குறைந்த பயணிகளுடன் பஸ்கள் புறப்பட்டு சென்றன. இதையொட்டி பஸ் நிலையங்கள், டெப்போக்கள் முன்பு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் சென்ன கிருஷ்ணன் தலைமையில் சேலம் மெய்யனூர் போக்குவரத்து கழக டெப்போ நுழைவு வாயில் முன்பு டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    இதே போல 2 மாவட்டங்களிலும் டெப்போக்கள் முன்பு டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து சி.ஐ.டி .யு. போக்குவரத்து தொழிற்சங்க மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில் அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு. பாட்டாளி தொழிற்சங்கம், தே.மு.தி.க.தொழிற்சங்கம் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 50 சதவீத தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

    ஆனால் அரசு சில தொ.மு.ச. உள்பட சில தொழிற்சங்கங்களை சேர்ந்த டிரைவர்களுக்கு விடுப்பு கொடுக்காமல் பணியில் ஈடுபடுத்தி வருகிறது. மேலும் தனியார் பஸ் டிரைவர்கள், டெம்போ டிரைவர்களை வைத்து பஸ்களை இயக்கி வருகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×