என் மலர்
சேலம்
- ஒரு வாரம் சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் ஜெகநாதன் விடுவிக்கப்பட்டார்.
- துணைவேந்தருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
சேலம்:
சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன் (66), பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல் (60), கணினி துறை இணை பேராசிரியர் சதீஷ்குமார் (45), திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் (54) ஆகியோர் இணைந்து அரசு அனுமதியின்றி பூட்டர் அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனம், அப்டெக்கான் போரம் என்ற பெயரில் மற்றொரு அமைப்பையும் தொடங்கியதாக புகார் கூறப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்திய கருப்பூர் போலீசார் 4 பேர் மீதும் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ஜெகநாதனை கடந்த 26-ந் தேதி கைது செய்தனர்.
பின்னர் ஒரு வாரம் சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் மற்ற 3 பேரும் தலைமறைவாக உள்ளனர்.
இதற்கிடையே பெரியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள துணைவேந்தர் அலுவலகம், அவரது வீடு, பயணியர் மாளிகை, பதிவாளர் அலுவலகம் உள்பட 7 இடங்களில் 22 மணி நேரம் சோதனை நடந்தது.
இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. மேலும் துணைவேந்தருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி பெரியார் பல்கலைக்கழக பொருளாதாரத்துறை தலைவர் பேராசிரியர் ஜெயராமன், மேலாண்மை கல்வி நிறுவன பேராசிரியர் சுப்பிரமணிய பாரதி, விலங்கியல் துறை உதவி பேராசிரியர் நரேஷ் குமார், உளவியல் துறை உதவி பேராசிரியர் ஜெயக்குமார் மற்றும் விருந்தினர் மாளிகை ஊழியர் நந்தீஸ்வரன் ஆகிய 5 பேருக்கு சம்மன் அனுப்பினர். இதையடுத்து இவர்கள் 5 பேரும் இன்று கருப்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- தாய் இறந்ததை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
சேலம்:
சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள பெருமாம்பட்டி, கோவில் காடு பகுதியை சேர்ந்தவர் சூர்யா. இவருடைய மனைவி மணிமேகலை (வயது 25). வெள்ளிப்பட்டறை தொழிலாளர்கள். நிறைமாத கர்ப்பிணியான மணிமேகலையை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தனர். அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் அன்று இரவு மணிமேகலைக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிமேகலை நேற்று இரவு திடீரென இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் கூடியதால் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பச்சிளம் குழந்தை அழுது கொண்டிருந்தது. தாய் இறந்ததை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இது குறித்து உறவினர்கள் கூறும் போது, பயற்சி டாக்டர் மூலம் மணிமேகலைக்கு தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால்தான் இறந்து போனார். மேலும் அறுவை சிகிச்சை செய்தது முதல் மணிமேகலையை பார்க்க டாக்டர்கள், ஊழியர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. மேலும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டபோதே தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கின்றோம் என்று கூறியும் டாக்டர்கள் அனுமதிக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
தொடர்ந்து இன்று காலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
இது பற்றி தகவல் அறிந்த அரசு மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு மருத்துவமனை முதல்வரை சந்தித்து மனு அளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதையடுத்து கம்யூனிட்டு கட்சியினர் உறவினர்களை அழைத்து சென்று இறந்த பெண்ணுக்கு நீதி கேட்டு முதல்வரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து சண்முகம் கூறுகையில் நல்ல நிலையில் இருந்த பெண் திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது அறுவை சிகிச்சை செய்த பிறகு குழந்தை நல்ல முறையில் பிறந்துள்ளது. தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாகவே பெண் உயிர் இழந்து உள்ளார். எனவே மருத்துவ நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பெண்ணின் இறப்பிற்கு உரிய நீதி வேண்டும் என்றார்.
- வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிறப்பு வாகன சோதனை நடத்தினர்.
- விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.
சேலம்:
ஆங்கில புத்தாண்டையொட்டி ரெயில்கள், பஸ்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதையொட்டி சேலம் சரகத்துக்குட்பட்ட ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என தொப்பூர், ஓமலூர், மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிறப்பு வாகன சோதனை நடத்தினர்.
இந்த சோதனை கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி நேற்று அதிகாலை வரை நடைபெற்றது. மொத்தம் 715 ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுகிறதா?, அதிக பயணிகள் உள்ளார்களா?, சாலை வரி கட்டுப்பட்டுள்ளதா?, உரிமம் பெற்று இயக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், புத்தாண்டையொட்டி நடந்த சிறப்பு சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 78 பஸ்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் அந்த பஸ்களின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த வாகன சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும், விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.
- சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது விவகாரத்தில் காவல்துறை செயல்பாடு சரியில்லை.
- துணைவேந்தர் கைது தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் பனமரத்துப்பட்டி பிரிவு கெஜ்ஜல்நாயக்கன் பட்டியில் பா.ஜ.க. சேலம் பாராளுமன்ற தொகுதி அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த அலுவலகத்தை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் வருகையால் தமிழக பா.ஜ.க.வினரிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது. நல்ல தமிழ் வார்த்தையை பயன்படுத்தியது தமிழக மக்களுடன் பிரதமர் இணைந்துள்ளதை காட்டுகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது விவகாரத்தில் காவல்துறை செயல்பாடு சரியில்லை. துணைவேந்தரை கைது செய்து 4 மணிநேரம் வாகனத்தில் வைத்து அலைக்கழித்துள்ளனர். துணைவேந்தர் கைது தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் சுற்றுப் பயணத்தை ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட பேளூரில் தொடங்கினார். தொடர்ந்து ஆத்தூர், கெங்கவல்லி தொகுதிக்கு உட்பட்ட தம்மம்பட்டியில் நடைபயணம் செல்கிறார். நாளை (4-ந்தேதி) காலை 11 மணியளவில் ஓமலூர் தொகுதியில் தனது நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை தொடர்ந்து வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட இளம்பிள்ளையில் நடைபயணம் மேற்கொள்ளும் அவர், மாலை 6 மணியளவில் எடப்பாடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். தொடர்ந்து நாளை மறுநாள் (5-ந் தேதி) சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் கிழக்கு தொகுதிகளில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
- முதல் 4 நாட்கள் அண்ணாமலை சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
- சேலம்-நாமக்கல் சாலையில் பனமரத்துப்பட்டி பிரிவு அருகே சேலம் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
சேலம்:
என் மண், என் மக்கள் என்ற பெயரில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். இதையொட்டி நாளை (3-ந் தேதி ) முதல் 4 நாட்கள் அண்ணாமலை சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அதன்படி நாளை (3-ந் தேதி) காலை 11 மணியளவில் ஏற்காடு தொகுதிக்குட்பட்ட பேளூரில் சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்திக்கிறார். 3 மணிக்கு ஆத்தூர் தொகுதியில் ஆத்தூர் டவுன் பகுதியிலும், மாலை 6 மணிக்கு கெங்கவல்லி தொகுதியில் தம்மம்பட்டியிலும் பாத யாத்திரை செல்கிறார்.
4-ந் தேதி காலை 11 மணிக்கு ஓமலூர் தொகுதிக்கு ட்பட்ட ஓமலூரிலும், மதியம் 3 மணிக்கு வீர பாண்டி தொகுதி இளம்பிள்ளையிலும், மாலை 6 மணிக்கு எடப்பாடி பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.
5-ந் தேதி காலை 11 மணிக்கு சேலம் மாநகரில் பாத யாத்திரை நிகழ்ச்சி தொடங்குகிறது. இதில் மாநகர தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் சேலம் மேற்கு சட்ட சபை தொகுதிக்குட்பட்ட சேலம் 5 ரோடு முதல் மெய்யனூர் சாலை வரையிலும் மதியம் 2 மணி வரைக்கும், செவ்வாய்ப்பேட்டை முக்கோணம் முதல் அரசு ஆஸ்பத்திரி வரை மாலை 5 மணிக்கும், தெற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட குகை முதல் தாதகாப்பட்டி வரை இரவு 7 மணிக்கும் பாதயாதத்திரை மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளார்.
8-ந் தேதி காலை 11 மணிக்கு மேட்டூர் தொகுதி மேச்சேரியில் பா.ஜனதா தலைவர் பாதயாத்திரை செல்கிறார். மேலும் சேலம்-நாமக்கல் சாலையில் பனமரத்துப்பட்டி பிரிவு அருகே சேலம் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை நாளை (3-ந் தேதி) காலை 9 மணிக்கு மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தலைவர்கள் சுரேஷ்பாபு, சண்முகநாதன், சுதிர் முருகன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
- மகிழ்ச்சியோடு வாழ்க்கையை ஆரம்பித்த இவர்களுக்குள் புத்தாண்டு தினமான நேற்றிரவு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
- சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார் சேலம் ஆர்.டி.ஓ. மற்றும் வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் ஊராட்சி மாரியம்மன் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் அருள்முருகன் (வயது 27).
கட்டிடத் தொழிலாளியான இவருக்கும், சந்தரபிள்ளைவலசு ஊராட்சி பெரியார் சமத்துவபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்தோஷ் என்பவரின் மகள் அபிராமி (19) என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது.
மகிழ்ச்சியோடு வாழ்க்கையை ஆரம்பித்த இவர்களுக்குள் புத்தாண்டு தினமான நேற்றிரவு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மனமுடைந்த இளம்பெண் அபிராமி தற்கொலை செய்து கொள்வதற்காக நள்ளிரவு 12 மணியளவில் அருகில் உள்ள விவசாயி மாணிக்கம் என்பவரது தோட்டத்திலுள்ள கிணற்றில் குதித்துள்ளார். இதனைக்கண்ட இவரது கணவர் அருள்முருகனும் அதே கிணற்றில் குதித்தார். இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வாழப்பாடி தீயணைப்பு படையினர் துணையுடன் 1 மணி நேரத்திற்கு மேல் போராடி அருள்முருகன், அபிராமி ஆகியோரது உடல்களை இன்று அதிகாலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட தம்பதிக்கு திருமணம் நடந்து 3 மாதங்களே ஆகியுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார் சேலம் ஆர்.டி.ஓ. மற்றும் வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
புதுமணத் தம்பதி அடுத்தடுத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இவர்களது பெற்றோர், உறவினர்கள் மட்டுமின்றி கிராம மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தங்கும் விடுதிகள் குறிப்பாக லாட்ஜ்களில் உள்ள அறைகள் நிரம்பி வழிகிறது.
- சட்டம்-ஒழுங்கை குலைக்கும் வகையில், பட்டாசு வெடிப்பது, பெண்களை கேலி கிண்டல் செய்வது கூடாது.
சேலம்:
ஜனவரி மாதம் 1-ந் தேதி வந்துவிட்டால் போதும். கொண்டாட்டங்களுக்கு பஞ்சமிருக்காது. சமூக வலைதளங்கள் அதிகரித்து விட்ட சூழலில் போட்டி போட்டுக் கொண்டு வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர். அப்படித் தான் இன்றைய தினமும் கடந்து சென்று கொண்டிருக்கிறது.
ஆங்கிலப் புத்தாண்டு-2024 இன்று நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கிறது. இதனால் மலைப் பகுதியில் நிலவும் பனி மூட்டம் மற்றும் சிலு சிலு காற்றின் மத்தியில் புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர்.
கோவில்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், மால்களில் குவிவது ஒரு ரகம். சுற்றுலா தலங்களை தேடி தேடி சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பது மற்றொரு ரகம்.
அந்த வகையில் "ஏழைகளின் ஊட்டி" என்று பாசமாக அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு இன்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம், கூட்டமாக படையெடுக்க தொடங்கி உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி , ஆந்திரா உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ஏற்காட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தற்போது தமிழத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதால் ஏராளமான பேர் குடும்பம், குடும்பமாக ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்த வண்ணம் உள்ளனர். ஏற்காட்டில் ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக புத்தாண்டை வரவேற்று கொண்டாடுகிறார்கள். இதையொட்டி இளைஞர்கள், சுற்றுலா பயணிகள் விடுதிகளை முன்பதிவு செய்துள்ளதால், அங்குள்ள தங்கும் விடுதிகள் குறிப்பாக லாட்ஜ்களில் உள்ள அறைகள் நிரம்பி வழிகிறது.
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்ததால் திருவிழா கோலம் போல் காட்சியளிக்கிறது. அங்குள்ள பூங்காக்கள், ஏரி, நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது.
இதற்காக முன்கூட்டியே அதாவது நேற்று இரவு முதலே பக்காவாக திட்டம் தீட்டி வைத்து பஸ்கள், மோட்டார்சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் சாரை, சாரையாக ஏற்காட்டிற்கு வருகின்றனர்.
இன்று ஒருநாள் ஏற்காட்டில் தான் என்று. ஏற்காட்டின் மையப் பகுதியான ஏரியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்தும், அதன் இயற்கை அழகை ரசித்தும் வருகின்றனர். ஆங்காங்கே உள்ள திடீர் கடைகளில் கிடைக்கும் சுட சுட சோளக்கதிர், நிலக்கடலை, மிளகாய் பஜ்ஜி போன்றவற்றை ரசித்து ருசித்து சாப்பிடுகின்றனர்.
சேலம் மாவட்டத்தின் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை காலநிலை குளிர்ச்சியாக இருக்கும். இது டிசம்பர் மாதத்தில் குறைந்தபட்சம் 16.7 செல்சியஸ் வரை தொடும். அந்த வகையில் 4,969 அடி உயர்த்தில் உள்ள ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. பனி படர்ந்து காணப்படுகிறது. அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், மற்றும் சேர்வராயன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஏற்காட்டில் வெப்பநிலை மனதிற்கு இதமாகவும், சில்லென்ற காற்றோடு அம்மண்ணின் வாசத்தையும் அள்ளித் தருவதால் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.
இந்த புத்தாண்டையொட்டி ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்கள் அனைத்தும் சோதிக்கப்பட்டு, மதுபாட்டில்கள் இருந்தால், அவை பறிமுதல் செய்யப்படும். ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகளின் நிர்வாகங்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மது அருந்திவிட்டு வரும் சுற்றுலாப் பயணிகளை விடுதிகளில் அனுமதிக்கக் கூடாது என நாங்கள் கூறியுள்ளோம்.
விடுதிகளில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படால் இருக்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். மது அருந்திவிட்டு எவரும் வாகனங்களை இயக்கக் கூடாது.
சட்டம்-ஒழுங்கை குலைக்கும் வகையில், பட்டாசு வெடிப்பது, பெண்களை கேலி கிண்டல் செய்வது கூடாது. நிகழ்ச்சியாளர்கள், நிகழ்ச்சிகளை கண்டிப்பாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்காட்டில் உள்ள பூங்காக்கள், காட்சி முனைப்பகுதிகள் உள்பட அனைத்து சுற்றுலா இடங்களிலும் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பூட்டர் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களை இணைத்து பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்பட்டதும் தெரியவந்தது.
- வங்கி லாக்கரில் 93 பவுன் நகைகள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களும் இருந்ததாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன் (66). இவர் வணிக நோக்கில் பூட்டர் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி அந்த அலுவலகத்தையும் பல்கலைக்கழக வளாகத்திலேயே நடத்தி வந்தார்.
இது தொடர்பாக பல்கலைக்கழக சட்ட ஆலோசகர் இளங்கோ என்பவர் கருப்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஜெகநாதன், பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பு தங்கவேல், பேராசிரியர்கள் சதீஷ்குமார், ராம் கணேஷ் ஆகிய 4 பேர் மீதும் 8 பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர்.
இதில் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் ஆஸ்பத்திரியில் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே பூட்டர் நிறுவனம் செயல்பாடு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணையில் பூட்டர் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களை இணைத்து பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்பட்டதும் தெரியவந்தது.
இதை ஒட்டி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இதழியல் துறை அலுவலகத்தில் உள்ள பூட்டர் நிறுவன அலுவலகத்தில் நேற்று 3 மணி நேரம் சோதனை நடத்தினர். மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கனரா வங்கியில் பதிவாளர் தங்கவேல் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர்.
குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சூர்யா தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட போலீசார் தங்கவேலுவின் மனைவி வெண்ணிலா முன்னிலையில் அவரது வங்கி கணக்கையும் ஆய்வு செய்தனர். அப்போது வங்கி லாக்கரில் 93 பவுன் நகைகள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
மேலும் தலைமறைவாக உள்ள பதிவாளர் தங்கவேல், பேராசிரியர்கள் ராம் கணேஷ், சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் பிடிக்க உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர்கள் சென்னையில் கோர்ட்டில் ஆஜராக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதால் அவர்களை பிடிக்க சென்னையில் முகாமிட்டு தனிப்படை போலீசார் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் துணைவேந்தர் ஜெகநாதனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்த நிலையில் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென கோரி அரசு தரப்பில் வாதாடப்பட்டு வருகிறது. ஆனாலும் இதுவரை ஐகோர்ட்டில் அது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதனால் அவரது ஜாமீனை ரத்து செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
- அங்குலம், அங்குலமாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் கம்ப்யூட்டர்கள் உள்பட முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன.
- 100-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜுலை மாதம் ஜெகநாதன் (66 ) துணை வேந்தராக பதவி ஏற்றார். அவரது பதவி காலம் ஜுன் 2024 வரை உள்ளது.
இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோ கருப்பூர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார், அதில், துணை வேந்தர் ஜெகநாதன், பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், கணினி அறிவியல் இணை பேராசிரியர் சதீஷ் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர் இணைந்து பூட்டர் அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனமும், அப்டெக்கான் போரம் என மற்றொரு அமைப்பையும் ெதாடங்கி உள்ளனர்.
இவர்கள் பெரியார் பல்கலைக்கழக பிரதி நிதிகளாக இருந்து கொண்டு அரசு அனுமதியின்றி துணை அமைப்புகளை தொடங்கி இயக்குனர்களாக உள்ளனர். அதனால் ஜெகநாதன், தங்கவேல், சதீஷ், பல்கலைக்கழக சட்டப்பிரிவு 19-ன் படி பொது ஊழியர்களாக கருதப்படு கின்றனர். புதிதாக தொழில் தொடங்க கூடாது அதற்கு பல்கலை மற்றும் தமிழக அரசு அனுமதி பெற வேண்டும், விதி மீறிய இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இது குறித்து சூரமங்கலம் உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையில் போலீசார் விசாரித்து நேற்று முன்தினம் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியில் வந்த துணை வேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். அவரை சேலத்திற்கு அழைத்து வந்து 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
பின்னர் கருப்பூர் போலீசார் ஜெகநாதன் உள்பட 4 பேர் மீதும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, சொந்த நிறுவனம் தொடங்கி லாப நோக்கில் செயல்பட்டது, போலி ஆவணங்களை தயாரித்து தனி நிறுவனங்களை தொடங்கி யது உள்பட 8 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் இரவு 10 மணியளவில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப் பட்டது. அப்போது அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் இ.சி.ஜி. உள்பட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் தினேஷ்குமார் வீட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது ஒரு வாரத்திற்கு சூரமங்கலம் போலீசில் தினமும் கையெழுத்திட வேண்டும், 8-வது நாளில் நேரில் ஆஜராக வேண்டும் என கூறி மாஜிஸ்திரேட் நிபந்தனை ஜாமீன் வழங்கினார். தொடர்ந்து நேற்று சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் ஜெகநாதன் கையெழுத்திட்டு சென்றார்.
இதற்கிடையே பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணை வேந்தர் அலுவலகம், இல்லம், ஆய்வு மாளிகை விடுதி, பதிவாளர் தங்கவேலு வீடு, அலுவலகம், அவரது கணினி அறிவியல் அலுவலகம், கணினி அறிவியல் உதவி பேராசிரியர் சதீஷின் அலுவலகம் , சூரமங்கலத்தில் உள்ள துணை வேந்தர் வீடு ஆகிய 7 இடங்களில் உதவி கமிஷனர்கள் தலைமையில் 40 பேர் அடங்கிய போலீசார் சோதனையை தொடங்கினர். அங்குலம், அங்குலமாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் கம்ப்யூட்டர்கள் உள்பட முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன.
இதில் துணை வேந்தர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது வீட்டில் யாரும் இல்லை. அங்கிருந்த அலுவலக நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் வீட்டில் இருந்து கட்டு கட்டாக முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து துணை வேந்தர் ஜெகநாதனின் வீட்டிற்கு ஜெராக்ஸ் மற்றும் ஸ்கேன் மிஷின்களை எடுத்து சென்றனர். அங்கு கைப்பற்றிய ஆவணங்களை அந்த எந்திரங்கள் மூலம் நகல் எடுத்து அதனை அட்டை பெட்டிகளில் அடைத்து எடுத்து சென்றனர்.
துணை வேந்தர் வீடு உள்பட 7 இடங்களிலும் போலீசாரின் சோதனை விடிய, விடிய நடந்தது. 2-வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருவதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே தலைமறைவாக உள்ள பதிவாளர் உள்பட 3 பேரையும் பிடிக்க போலீசார் நடிவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் துணை வேந்தர் ஜாமீனுக்கு எதிராக புகார்தாரர் இளங்கோ தரப்பிலும், அரசு தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்படும் என்றும் புகார்தாரர் இளங்கோ கூறி உள்ளார்.
- புகார் அளிக்க வந்த பவானியை சேர்ந்த பரத் என்பவர் படுகாயம்.
- சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு.
சேலம் மாவட்டம் சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில், ஆய்வு செய்வதற்காக சுத்தம் செய்தபோது பட்டாசு வெடித்து சிதறியது.
திடீரென பட்டாசு வெடித்ததில் மியாமத்துல்லா என்பவர் உயிரிழந்துள்ளார். புகார் அளிக்க வந்த பவானியை சேர்ந்த பரத் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.
பட்டாசு வெடித்ததில் காவல் நிலைய மேற்கூரை சரிந்து விழுந்து மியாமத்துல்லா உயிரிழந்துள்ளார்.
இந்த விவகாரத்தை தொடர்ந்து, சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
விபத்து தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாக்குதலுக்கு உள்ளான கிராம நிர்வாக அலுவலர் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் குமார் (37). இவர் தனது உயர் அலுவலர்களின் உத்தரவின் பேரில் கடந்த சனிக்கிழமை இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது சமுத்திரம் கிராமம் அருகே உள்ள காளியம்மன் கோவில் மூலக்கடை பகுதியில் சிலர் கனரக எந்திரத்தினை கொண்டு மண்ணை அள்ளி டிராக்டர் மூலம் கடத்துவதை கண்டு அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இதில் அங்கு சட்ட விரோதமான முறையில் உரிய அனுமதி இன்றி மண் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
அப்போது மண் கடத்தலில் ஈடுபட்டிருந்த புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன், மணிகண்டன் மற்றும் இவர்களின் நண்பரான சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த செந்தில் ஆகியோருக்கும் கிராம நிர்வாக அலுவலர் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் திடீரென அவர்கள் 3 பேரும் சேர்ந்து கிராம நிர்வாக அலுவலர் குமாரை தாக்கியுள்ளனர்.

மேலும் அங்கிருந்த டிராக்டரை வேகமாக ஓட்டி வந்து குமார் மீது ஏற்றி கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான கிராம நிர்வாக அலுவலர் குமார் கூச்சல் போடவே அப்பகுதி பொதுமக்கள் திரண்டனர். இதை கண்டு சம்பந்தப்பட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்தில் குமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய 3 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை புதுப்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த காளியம்மன் கோவில் மூலக்கடை பகுதியை சேர்ந்த அழகேசன் மகன் ஈஸ்வரன் (31), முத்தியம்பட்டி பகுதியைச் சேர்ந்த அம்மாசி மகன் மணிகண்டன் (33) ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், தலைமறைவாக உள்ள சமுத்திரம் பகுதியை சேர்ந்த செந்திலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான கிராம நிர்வாக அலுவலர் குமார் எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மண் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது.
- மூளை சாவடைந்த தினேஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
- இறந்து போன தினேஷ்குமாரின் பெற்றோர் சம்மதத்துடன் அவருடைய உடல் உறுப்புக்கள் தானமாக பெறப்பட்டது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேச்சேரி காமராஜ் பேட்டையை சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளி சவுண்டப்பன் (55). இவரது மனைவி ருக்மணி (52).
இவர்களுக்கு பிரியா (26), என்ற மகளும், தினேஷ் குமார் (24), கார்த்தி (22) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் 2-வது மகன் தினேஷ்குமார் டிப்ளமோ கெமிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் பார்மசி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி தினேஷ்குமார் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தினேஷ்குமார் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதில் மூளை சாவடைந்த தினேஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்து போன தினேஷ்குமாரின் பெற்றோர் சம்மதத்துடன் அவருடைய உடல் உறுப்புக்கள் தானமாக பெறப்பட்டது. இதையடுத்து தினேஷ்குமார் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான மேச்சேரி நெசவாளர் காலனியில் உள்ள அவரது இல்லத்திற்கு நள்ளிரவு 1 மணிக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ., சப்-கலெக்டர் பொன்மணி, தாசில்தார் சுமதி, மேட்டூர் அரசு மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் இளவரசி, டி.எஸ்.பி. மரியமுத்து ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அருகில் உள்ள மயானத்திற்கு தினேஷ்குமார் உடல் எடுத்துச்செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யபட்டது.






