search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெப்போக்கள் முன்பு டிரைவர், கண்டக்டர்கள் போராட்டம்
    X

    டெப்போக்கள் முன்பு டிரைவர், கண்டக்டர்கள் போராட்டம்

    • பஸ்களை வழக்கம் போல இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
    • சில தொழிற்சங்கங்களை சேர்ந்த டிரைவர்களுக்கு விடுப்பு கொடுக்காமல் பணியில் ஈடுபடுத்தி வருகிறது.

    சேலம்:

    ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் காலி பணியிடங்கனை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

    இதற்கிடையே அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளிடையே நேற்று சென்னையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இந்த போராட்டத்தில் இருந்து தொ.மு.ச. மற்றும் ஐ.என்.டி.யு.சி. உள்பட சில சங்கங்கள் விலகுவதாக அறிவித்தன.

    ஆனாலும் அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு. பாட்டாளி தொழிற்சங்கம், தே.மு.தி.க. தொழிற்சங்கம் உள்பட பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதையடுத்து பஸ்களை வழக்கம் போல இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    அதன்படி 50 சதவீத மாற்று டிரைவர்கள், தனியார் பஸ் டிரைவர்கள், டெம்போ டிரைவர்கள் உள்பட பலரையும் நியமித்து பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகிறது. சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் 300 பஸ்களும், பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் 180 பஸ்களும் போலீஸ் பாதுகாப்புடன் வழக்கம் போல இயக்கப்படுகிறது.

    இதே போல சேலம் புறநகர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இயக்கப்படும் 600 பஸ்களும் வழக்கம் போல இயக்கப்படுகிறது. இதையொட்டி பஸ் நிலையங்கள், டெப்போக்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் பஸ்கள் இயங்காது என்று கூறப்பட்டதால் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் மிக குறைவாகவே இருந்தது. ஆனாலும் குறைந்த பயணிகளுடன் பஸ்கள் புறப்பட்டு சென்றன. இதையொட்டி பஸ் நிலையங்கள், டெப்போக்கள் முன்பு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் சென்ன கிருஷ்ணன் தலைமையில் சேலம் மெய்யனூர் போக்குவரத்து கழக டெப்போ நுழைவு வாயில் முன்பு டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    இதே போல 2 மாவட்டங்களிலும் டெப்போக்கள் முன்பு டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து சி.ஐ.டி .யு. போக்குவரத்து தொழிற்சங்க மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில் அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு. பாட்டாளி தொழிற்சங்கம், தே.மு.தி.க.தொழிற்சங்கம் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 50 சதவீத தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

    ஆனால் அரசு சில தொ.மு.ச. உள்பட சில தொழிற்சங்கங்களை சேர்ந்த டிரைவர்களுக்கு விடுப்பு கொடுக்காமல் பணியில் ஈடுபடுத்தி வருகிறது. மேலும் தனியார் பஸ் டிரைவர்கள், டெம்போ டிரைவர்களை வைத்து பஸ்களை இயக்கி வருகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×