என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. வங்க கடலில் தொடர்ந்து கடல் சீற்றமாக இருந்து வருகிறது. அலைகளும் சீறி பாய்ந்து வருவதாலும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாலும் நாகை மாவட்ட மீனவர்கள் கடந்த 5 நாளாக கடலுக்கு செல்லவில்லை.
குறிப்பாக நாகை, செல்லூர், நாகூர், வேளாங்கண்ணி, தரங்கம்பாடி, சின்னங்குடி, பூம்புகார், வானகிரி, பெருந்தோட்டம் , தென்னாம்பட்டி, திருமுல்லைவாசல், கொட்டாய்மேடு, பழையாறு, மற்றும் வேதாரண்யம், ஆறுக்காட்டுத்துறை, புஷ்பவனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று 6-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
இதனால் மாவட்ட கடலோரம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட விசை படகுகள் ஓய்ந்து கிடக்கின்றன. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நாகை மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வருமானத்தை இழந்துள்ளனர்.
இதேபோல் வேதாரண்யம் பகுதியில் உப்பு தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உப்பள பாத்திகளில் மழைநீர் புகுந்ததால் உப்பளங்கள் மூழ்கி கிடக்கின்றன. இதனால் உப்பு உற்பத்தி தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.
நாகை மாவட்டம் திருமருகல் அடுத்த ஆதீனகுடி கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேலு (வயது 42). இவர் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (41). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிங்காரவேலு, மற்றும் சித்ரா சென்றனர்.
பின்னர் நேற்று இரவு சிங்காரவேலு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.
வீட்டில் இருந்த பீரோவில் வைத்திருந்த 18 பவுன் நகை, மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் ரூ.50 மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளை போய் இருந்தது. பூட்டி கிடந்த வீட்டை நோட்டமிட்டு மர்ம கும்பல் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.
இந்த கொள்ளை சம்பவம் பற்றி திட்டசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அரசு ஊழியர் வீட்டில் 18 பவுன் நகை - பணம் கொள்ளை போன சம்பவம் திருமருகல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலி என நேற்று அரசு பெரியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சீர்காழி தாலுகா வாடி கிராமம் சேர்ந்த ஜெயசங்கர் மனைவி சுபா(25) வை சேர்த்தனர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இறந்த சுபாவுக்கு 1 பெண் குழந்தை உள்ளது. தற்பொழுது கர்ப்பமாக இருந்தார்.
இந்நிலையில் இறந்த சுபாவின் உடலை காலையில் இருந்து மருத்துவமனையில் தராததால் உறவினர்கள் ஆத்திர மடைந்து சத்தம் போட்டனர். இதுகுறித்து தகவல்அறிந்து மயிலாடுதுறை காவல்துறை இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சுபாவின் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் சுபா திருமணம் ஆகி 4ஆண்டுகள் ஆனதால் ஆர்.டி.ஒ. விசாரணைக்கு பின் உடல் வழங்கப்படும் என தெரிவித்ததை அடுத்து கூட்டம் கலைந்து சென்றனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பாக காணப்பட்டது.
நாகை:
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நாகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சமீப காலமாக பா.ஜனதா வன்முறையை தூண்டி வருகிறது. சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் செய்து கட்சி கொடியை எரித்து அராஜகத்தில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது.
வடகிழக்கு பருவ மழை தீவிரமாக இருக்கும் என்று முன்கூட்டியே தெரிந்தும் தமிழக அரசு எந்த முன்னேற்பாடு பணிகளும் செய்யவில்லை. இதனால் ஒருநாள் மழைக்கே சென்னை தாக்குபிடிக்க முடியாமல் ஒருவழியாகி விட்டது.
டெல்டா மாவட்டங்களில் தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தப்பட வில்லை. இதனால் மழைநீர் வெளியேற முடியாமல் வாய்கால்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தாமதமாக நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் மூழ்கி உள்ளன. இது டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. முறையாக ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாராத காரணத்தால் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் எதிர்காலத்தில் ரேசன் கடைகள் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மாநில மக்களின் நலன்களை காப்பாற்ற முடியாத அரசாகவும், மத்திய அரசின் கொத்தடிமையாகவும் தமிழக அரசு செயல் இழந்து கிடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையாறு மீனவ கிராமத்தில் மழை நீர் தேங்கிய பகுதிகளை முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கள் அய்யர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து அங்கு கொள்ளிடம் கிழக்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் பால சுப்பிரமணியம் தலைமை வகித்தார். வைத்தியநாதன் வரவேற்றார். முன்னாள் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கலந்து கொண்டு பேசுகையில் தமிழகத்தில் ஒரு வருடத்தில் பெரிய மாற்றம் வரப்போகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.
தமிழ்நாட்டில் தி.மு.க. ஒரு பலம் வாய்ந்த தூணாக இருந்து வருகிறது. நாம் அவர்களுடன் இருக்கிறோம். நம்முடைய பலம் எவ்வளவே இருக்குமோ அந்த பலத்தை அவர்களுடன் ஒன்று சேர்ந்து கொடுத்து வெற்றிபெற வேண்டும். 11 அல்லது 12 மாதங்களில் உள்ளாட்சி, சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது. வரும் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வெற்றிக்கு பாடுபடவேண்டும் என்றார்.
அதனைத்தொடர்ந்து கடவாசல் கிராமத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் வாக்கு சாவடி முகவர்களுக்கான ஆணையை முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர் வழங்கினார்.
மயிலாடுதுறை அருகே குமாரமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களில் 600-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு யாரேனும் இறந்து விட்டால் உடலை அடக்கம் செய்ய கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள சுடுகாட்டிற்குதான் எடுத்து செல்ல வேண்டும். ஆனால் இடையே ராஜன்வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்காலில் தண்ணீர் ஓடினால் உடலை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுவது வழக்கம்.
அதுபோன்ற நேரங்களில் பாடையின் அடியில் கார் டயர் டியூப்களில் காற்றை நிரப்பி கட்டியும் அல்லது வாழைமரங்களை தெப்பம்போல் கட்டியும் அதில் கயிறு இணைத்து தண்ணீரில் இறங்கி கயிறு மூலம் உடலை இழுத்து கொண்டு கரை சேர்ப்பது வழக்கம். இது பல ஆண்டுகளாக மழைக்காலங்களில் இப்பகுதியில் நடந்து வரும் அவலநிலையாகும்.
இந்நிலையில் நேற்று முன்தினம் குமாரமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த ராஜப்பன்(80) என்பவர் இறந்து விட்டார். இவரின் உடலை கிராமமக்கள் எடுத்து வந்தனர். அப்போது ராஜன் வாய்க்காலில் சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீருடன் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவது கண்டு கிராமமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சுமார் 8 அடி உயரத்திற்கு வாய்க்காலில் தண்ணீர் அதிவேகத்துடன் பெருக்கெடுத்து ஓடியது. குறைந்தளவு தண்ணீர் சென்றாலே இறந்தவர் உடலை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்படும். அதிகளவு செல்லும் தண்ணீரில் உடலை பாதுகாப்பாக அக்கரைக்கு கொண்டு செல்ல என்ன செய்வது என்று செய்வதறியாமல் திகைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதுகுறித்து பொதுப் பணித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைத்தனர். இதனால் நீரோட்டம் குறைந்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு உடலை ராஜன் வாய்க்கால் வழியாக கயிறுகட்டி இழுத்து சென்றனர்.
அதேபோல் மயிலாடுதுறை அருகே உள்ள கொற்றவநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஆச்சியம்மாள் (70) என்பவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இவரின் உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்து சென்றனர். இங்கு வழியில் அய்யாவையாறு வடிகால் வாய்க்கால் ஓடுகிறது. இங்கும் பாலம் இல்லாததால் உறவினர்கள் ஒன்று சேர்ந்து பாடையுடன் வாய்க்காலில் இறங்கினர். பின்னர் கழுத்தளவு தண்ணீரில் நீந்தி பாதுகாப்பாக ஆச்சியம்மாள் உடலுடன் கரை சேர்ந்தனர். அங்கிருந்து பின்னர் மயானத்திற்கு உடலை கொண்டு சென்றனர்.
இதுகுறித்து குமாரமங்கலம் மற்றும் கொற்றவநல்லூர் கிராம மக்கள் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும்போதும், மழைக்காலங்களிலும் இந்த வாய்க்கால்களை கடக்க பாலம் இல்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். இப்பகுதிகளில் பாலம் அமைத்து தரவேண்டும் என இரு கிராம மக்களும் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுநாள்வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இனியாவது அப்பகுதிகளில் பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
நாகை மாவட்டம், பொறையாறில் அரசு போக்குவரத்துக்கழக கிளை அலுவலக பணியாளர் ஓய்வறை கட்டிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியானார்கள். இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளது.
இதனால் பழுதான கட்டிடங்களில் செயல்படும் அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
நாகை மாவட்டம் மயிலாடு துறையில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் தினமும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் பலர் உள் நோயாளியாக தங்கி இருந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரி மகப்பேறு சிகிச்சைப் பிரிவு வராண்டா பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்தது.
இதைத்தொடர்ந்து மயிலாடுதுறையில் பெய்த தொடர்மழை காரணமாக நேற்று மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி மருத்துவ சிகிச்கை பிரிவு கட்டிடத்தின் வரண்டா முகப்பு பகுதியில் திடீரென சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. இதனால் நோயாளிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கட்டிடம் குறித்து பொதுமக்கள் கூறும்போது, இக்கட்டிடம் 1989ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இங்கு 20 படுக்கை வசதிகள் உள்ளன. இந்த கட்டிடம் கட்டி 25 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் கட்டிட உறுதி தன்மையை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளை வேறு வார்டுக்கு மாற்றி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறினர்.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த தொடுவாயை சேர்ந்த சின்னையன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் சின்னையன், அதே பகுதியை சேர்ந்த மதியழகன், காசிராஜன், கபிலன் ஆகிய 4 மீனவர்கள் நேற்று காலை மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் மாலை வீடு திரும்பி இருக்க வேண்டும் ஆனால் அவர்கள் மாயமாகி விட்டனர். இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் குமரவேலு தலைமையில் அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாயமான 4 மீனவர்களும் இன்று காலையில் கரை திரும்பினர். இது தொடர்பாக அவர்களிடம் கேட்ட போது நேற்று நாங்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது கடல்சீற்றம் ஏற்பட்டது. இதனால் படகு எங்களது கட்டுபாட்டை இழந்து கோடியக்கரை பகுதிக்கு சென்று விட்டன. தற்போது கடல் சீற்றம் குறைந்ததால் கரை திரும்பி விட்டுடோம் என்று தெரிவித்தனர்.
மீனவர்கள் கரை திரும்பியதால் அவர்களின் உறவினர்கள் நிம்மதி அடைந்தனர். அவர்கள் 4 மீனவர்களையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரதுறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டார்.
அவர் மகபேறு சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண்களிடம் சிகிச்சை குறித்து விசாரித்து அறிந்துகொண்டார் இதில் 2 பெண்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவசபரிசு பொருட்கள் மற்றும் கொசுவலை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழை காலங்களில் வரும் காய்ச்சல்,சளி போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவ மனைகளையும் ஆரம்ப சுகாதார நிலையங்களையும் நோய் தடுப்பு மருந்துகள் 6 மாதத்திற்கு தேவையானவை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் காய்ச்சல் வந்ததும் அரசு பொது மருத்துவமனை சென்று மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது நல்லது. தாமதமாக வரும்பட்சத்தல் எவ்வித பாதிப்பு என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிக்க தாமதம் ஆகும் எனவே நோய் கண்டவுடன் மருத்துவரை நாடினால் உரிய சிகிச்சை அளிக்கப்படும், தற்பொழுது தமிழகத்தில் 1300 மருத்துவர்கள் புதியதாக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாகை ,திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் மருத்துவர் பற்றாகுறை உள்ளது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
மயிலாடுதுறை அரசு பொதுமருத்துவமனையில் 25கோடியில் மேம்படுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது அதே போல் தற்பொழுது 320 படுக்கை வசதி கொண்டுள்ள இம்மருத்துவமனைக்கு கூடுதலாக 200 படுக்கை வசதி கொண்டதாக மாற்ற ரூ.20 கோடி தமிழக அரசு வழங்கியுள்ளது.
நாகை மாவட்டத்தில் 197 நோயாளிகள் பல்வேறு காய்ச்சலால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 நோயாளிகளுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளது. நாகை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் மற்ற மாவட்டங்களை விட குறைவாக உள்ளது. டெங்கு காய்ச்சல் குறித்த ரத்த அணுக்கள், தட்டணுக்கள் உடனுக்குடன் தெரியும் நவீன இயந்திரம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தற்பொழுது தமிழகத்தில் ஏறுமுகமாக இருந்த டெங்கு காய்ச்சல் இறங்கு முகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் சுகாதாரத்துறை கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட இணை இயக்குநர் டாக்டர் குருநாதன், துணை இயக்குநர் (குடும்ப நலம்) மகேந்திரன், சுகாதாரப் பணிகள் துறை இணை இயக்குநர் செல்வக்குமார். சப்- லெக்டர் பிரியங்கா, தாசில்தார் பாலமுருகன், தலைமை மருத்துவர் தேவலதா, டாக்டர்கள் பானுமதி, மருதவாணன், மருந்தாளுநர் முரளி மற்றும் பலர் உடனிருந்தனர்.
மயிலாடுதுறை அருகே உள்ள சேந்தங்குடி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி விஜயலெட்சுமி.
இவர் நேற்று இரவு 7 மணியளவில் அங்குள்ள மரப்பட்டறை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் விஜயலெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்து சென்றனர்.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த தென்பாதி அம்மன் நகரில் வசிப்பவர் சக்கரபாணி (வயது 73). ஓய்வுபெற்ற வருமானவரித்துறை அதிகாரி.
திருச்சியை சேர்ந்த இவர் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தென்பாதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். அவருடன் மனைவி சுகனலதா (63), சக்கரபாணியின் தங்கை இந்திராபாய் (63) ஆகியோரும் வசித்து வந்தனர். சக்கரபாணியின் மகனும், மகளும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தென்பாதியில் உள்ள வீட்டில் சக்கரபாணி அவரது மனைவி சுகனலதா, சக்கரபாணியின் தங்கை இந்திராபாய் ஆகியோர் மயங்கி கிடப்பது இன்று தெரியவந்தது. அவர்கள் வீடு பூட்டப்பட்டு இருந்ததால் தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிக்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் உறவினர்கள் அருகில் இல்லாததாலும், பேரன் பேத்திகளை பார்க்க முடியாத காரணத்தினாலும் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சீர்காழி தென்பாதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சீர்காழி சரண்ராஜின் திருமண விழா மயிலாடுதுறை ஏ.வி.சி. திருமண மண்டபத்தில் இன்று காலை நடந்தது.
இதில் கலந்து கொள்வதற்காக பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகள் காரில் வந்தனர்.
அப்போது மயிலாடுதுறை காந்திஜி சாலையில் தமிழிசையின் கார் வந்த போது அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளர் வேலு.குபேந்திரன் தலைமையில் 6 பேர் திடீரென தமிழிசைக்கு கருப்பு கொடி காட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அவர்கள் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக கருத்துக்களை கூறி வரும் தமிழிசைக்கு கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதை பார்த்த தமிழிசையுடன் பின்னால் காரில் வந்த பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே கருப்பு கொடியை காட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை தாக்கினர். இதில் அவர்களும் பதிலுக்கு தாக்கியதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது பாதுகாப்புக்கு வந்த போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 6 பேரையும் வலுக்கட்டாயமாக பிடித்து அந்த வழியாக வந்த ஒரு தனியார் வேனில் ஏற்றினர்.
இதனால் பா.ஜனதாவினர் மேலும் ஆத்திரம் அடைந்து வேனில் கண்ணாடியை உடைத்தனர்.
இதையொட்டி அசம்பாவிதத்தை தடுக்க போலீசார் வேனில் விடுதலை கட்சியினரை ஏற்றி புறப்பட்டு சென்றனர்.
இந்த சம்பவத்தால் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






