search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இறங்கு முகமாக உள்ளது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
    X

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இறங்கு முகமாக உள்ளது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

    தமிழகத்தில் ஏறுமுகமாக இருந்த டெங்கு காய்ச்சல் இறங்கு முகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரதுறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டார்.

    அவர் மகபேறு சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண்களிடம் சிகிச்சை குறித்து விசாரித்து அறிந்துகொண்டார் இதில் 2 பெண்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவசபரிசு பொருட்கள் மற்றும் கொசுவலை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழை காலங்களில் வரும் காய்ச்சல்,சளி போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவ மனைகளையும் ஆரம்ப சுகாதார நிலையங்களையும் நோய் தடுப்பு மருந்துகள் 6 மாதத்திற்கு தேவையானவை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் காய்ச்சல் வந்ததும் அரசு பொது மருத்துவமனை சென்று மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது நல்லது. தாமதமாக வரும்பட்சத்தல் எவ்வித பாதிப்பு என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிக்க தாமதம் ஆகும் எனவே நோய் கண்டவுடன் மருத்துவரை நாடினால் உரிய சிகிச்சை அளிக்கப்படும், தற்பொழுது தமிழகத்தில் 1300 மருத்துவர்கள் புதியதாக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாகை ,திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் மருத்துவர் பற்றாகுறை உள்ளது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

    மயிலாடுதுறை அரசு பொதுமருத்துவமனையில் 25கோடியில் மேம்படுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது அதே போல் தற்பொழுது 320 படுக்கை வசதி கொண்டுள்ள இம்மருத்துவமனைக்கு கூடுதலாக 200 படுக்கை வசதி கொண்டதாக மாற்ற ரூ.20 கோடி தமிழக அரசு வழங்கியுள்ளது.

    நாகை மாவட்டத்தில் 197 நோயாளிகள் பல்வேறு காய்ச்சலால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 நோயாளிகளுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளது. நாகை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் மற்ற மாவட்டங்களை விட குறைவாக உள்ளது. டெங்கு காய்ச்சல் குறித்த ரத்த அணுக்கள், தட்டணுக்கள் உடனுக்குடன் தெரியும் நவீன இயந்திரம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    தற்பொழுது தமிழகத்தில் ஏறுமுகமாக இருந்த டெங்கு காய்ச்சல் இறங்கு முகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் சுகாதாரத்துறை கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாவட்ட இணை இயக்குநர் டாக்டர் குருநாதன், துணை இயக்குநர் (குடும்ப நலம்) மகேந்திரன், சுகாதாரப் பணிகள் துறை இணை இயக்குநர் செல்வக்குமார். சப்- லெக்டர் பிரியங்கா, தாசில்தார் பாலமுருகன், தலைமை மருத்துவர் தேவலதா, டாக்டர்கள் பானுமதி, மருதவாணன், மருந்தாளுநர் முரளி மற்றும் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×