என் மலர்
செய்திகள்

மத்திய அரசின் கொத்தடிமையாக தமிழக அரசு உள்ளது: முத்தரசன் பேட்டி
நாகை:
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நாகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சமீப காலமாக பா.ஜனதா வன்முறையை தூண்டி வருகிறது. சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் செய்து கட்சி கொடியை எரித்து அராஜகத்தில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது.
வடகிழக்கு பருவ மழை தீவிரமாக இருக்கும் என்று முன்கூட்டியே தெரிந்தும் தமிழக அரசு எந்த முன்னேற்பாடு பணிகளும் செய்யவில்லை. இதனால் ஒருநாள் மழைக்கே சென்னை தாக்குபிடிக்க முடியாமல் ஒருவழியாகி விட்டது.
டெல்டா மாவட்டங்களில் தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தப்பட வில்லை. இதனால் மழைநீர் வெளியேற முடியாமல் வாய்கால்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தாமதமாக நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் மூழ்கி உள்ளன. இது டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. முறையாக ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாராத காரணத்தால் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் எதிர்காலத்தில் ரேசன் கடைகள் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மாநில மக்களின் நலன்களை காப்பாற்ற முடியாத அரசாகவும், மத்திய அரசின் கொத்தடிமையாகவும் தமிழக அரசு செயல் இழந்து கிடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






