என் மலர்
நாகப்பட்டினம்
தரங்கம்பாடி, நவ.9-
தொடர் கனமழையால் நாகை மாவட்டம் பூம்புகார் பகுதியில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வீடுகளை தேசப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை 9 முகாம்களில் வருவாய் துறையினர் தங்கவைத்துள்ளனர். பல ஆயிரம் எக்டேர் நிலங்களில் நெற்பயிர்கள் மூழ்கி அழுகியுள்ளது.
இதனை த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் பார்வையிட்டார். பூம்புகார் தொகுதி ஆறுபாதியில் ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளையும், நிலங்களையும் பார்வையிட்டார். பொறையார் பணிமனையில் கட்டிடம் இடிந்து அண்ணன், தம்பிகள் இருவர் உயிரிழந்த குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். ஆக்கூர் வடிக்கால் வாய்க்கால், கோவில் உடையார் பத்து ஊராட்சி, தலைச்சங்காட்டில் ராஜேந்திரன் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு வீடுகள், வயல்களில் நீரால் சூழப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.
மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்கள் 35 வருடங்களாக தூர் வாரப்படாமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் விவசாயிகளும், மீனவ மக்களும், ஏழை மக்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இதற்கு முக்கிய துறையான பொதுப்பணித் துறையே பொறுப்பேற்க வேண்டும். ஆறுகள், வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாமல், நாணல்கள், வெங்காய தாமரைகள், ஆக்கிரமிப்புகள், மண் திட்டுகள் என உள்ளது. தூர்வாரப்பட்டி இருந்தால் இந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. தமிழக அரசு உடனடியாக வீடுகளை இழந்து முகாம்களில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு முதற்கட்டமாக ரூ.15 ஆயிரம் வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது நாகை வடக்கு மாவட்ட தலைவர் பூம்புகார் சங்கர், மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
நாகை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக மாவட்டத்தில் சுமார் 1½ லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் வடிய வாய்ப்பில்லை என்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வங்கியில் கடன் வாங்கி பயிரிட்டுள்ள விவசாயிகள், மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இனி சம்பா பயிரை காப்பாற்ற முடியுமா? என்ற கேள்விக்குறியுடன் தினமும் வயலை பார்வையிட்டு செல்கிறார்கள்.
இந்த நிலையில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடப்பதை கண்ட சீர்காழழி விவசாயி காதில் விஷத்தை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி அருகே அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 65). விவசாயியான இவர் அப்பகுதியில் 5 ஏக்கரில் சம்பா பயிரிட்டு இருந்தார்.
தற்போது கடந்த 10 நாட்களாக பெய்த மழையால் அவரது வயலில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் அவர் கவலைப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் கலியமூர்த்தி நேற்று வயலை பார்க்க சென்றார். அப்போது தண்ணீரில் மூழ்கியப்படி பயிர்கள் சாய்ந்து கிடந்ததால் மிகவும் மனமுடைந்தார். இனிமேல் பயிர்களை காப்பாற்ற வழியில்லை என வேதனைப்பட்டார்.
அப்போது துக்கம் தாளாமல் தான் கொண்டு வந்த பூச்சி மருந்தை கலியமூர்த்தி காதில் ஊற்றினார். சிறிதுநேரத்தில் வயலிலேயே மயங்கி விழுந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த விவசாயிகள், கலியமூர்த்தி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விவசாயி தற்கொலை முயன்ற சம்பவம் நாகை மாவட்ட விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 27-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதைதொடர்ந்து வங்க கடலில் வளிமண்டலத்தின் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக கடலோர மாவட் டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகையிலும் தொடர்ந்து 11 நாட்களாக மழை பெய்து வருகிறது.
தஞ்சையில் நேற்று காலை தூறல் மழை பெய்தது. இரவும் மழை தொடர்ந்து தூறிக்கொண்டே இருந்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
மழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சம்பா பயிர்கள் மூழ்கியுள்ளன. கும்பகோணம் பகுதியில் மட்டும் சுமார் 2000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதமாகி உள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் மழை காரணமாக சுமார் 60 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது.
குறிப்பாக திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், குடவாசல், வலங்கைமான் ஆகிய பகுதிகளில் மழை விடாமல் மழை பெய்கிறது. இதனால் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகிறார்கள். சம்பா பயிர்கள் ஒரு அடிக்கும் மேலான தண்ணீரில் மூழ்கியப்படி இருப்பதால் வயல்கள் அனைத்தும் குளம்போல காட்சியளிக்கிறது.
டெல்டா மாவட்டங்களில் நாகை மாவட்டத்தில் தான் மிக அதிகளவு மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 30-ந் தேதி முதல் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 1½ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
நாகை, சீர்காழி, மயிலாடுதுறை, கொள்ளிடம், வேதாரண்யம், தலை ஞாயிறு ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. தலைஞாயிறு பகுதியில் நேற்று அதிகபட்சமாக 8.4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சீர்காழி பகுதியில் கனமழை விடாமல் பெய்து வருவதால் ஏரி, குளங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வயல்களில் புகுந்தன.
சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள திருநகரி, கோவிலான் பகுதிகளில் வாய்காலில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக விளக்குமுக தெரு, வள்ளுவர் தொரு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தெருக்களில் மற்றும் விவசாய நிலங்களில் மழைவெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதேபோல் எடக்குடி வடபாதி பகுதியில் சாந்தபுத்தூர், கீழவெளி, கரைமேடு, அட்டக்குளம் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
வேதாரண்யத்தில் நேற்று மழை விட்டு விட்டு பெய்தது.
வேதாரண்யம், கோடியக்கரை , தலைஞாயிறு ஆகிய பகுதிகளில் மழை வெளுத்து கட்டியது. இதனால் வேதாரண்யத்தில் பிரசித்தி பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வெள்ளம் புகுந்தது. மழை தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.இன்று காலையிலும் வேதாரண்யம் பகுதியில் மழை தூறிக்கொண்டே இருந்தது.
மேலும் கடல் சீற்றம் காரணமாக வேதாரண்யம் பகுதியை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் இன்று 8-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
தொடர்ந்து 11-வது நாளாக டெல்டாவை மிரட்டி வரும் மழையால் விவசாயிகள் சோகத்தின் விளம்பில் இருந்து வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
திருத்துறைப்பூண்டி - 84.2
தலைஞாயிறு - 75.2
நாகை - 69.9
திருப்பூண்டி - 68.4
வேதாரண்யம் - 51.4
திருவாரூர் - 49.2
முல்லையாறு - 31.2
நெய்வாசல் - 30.8
மன்னார்குடி - 23.4
குடவாசல் - 20.2
நன்னிலம் - 18.2
கோறையாறு - 15.2
பேராவூரணி - 12.8
வலங்கைமான் - 12.2
ஒரத்தநாடு - 8.3
வெட்டிக்காடு - 7.6
மஞ்சலாறு - 6.2
சீர்காழி - 3.4
கல்லணை - 1.4
அணைக்கரை - 1.2
பூதலூர் - 0.4
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் விளக்குமுகத்தெருவில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை தமிழ் மாநில காங்கிரஸ் மாநில தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் நீரில் மூழ்கி அழுகிய நிலையில் உள்ள விளைநிலங்களை பார்வையிட்டார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சீர்காழி வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் பெய்த கனமழையால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டுள்ளனர். நெற்பயிரை அழிக்கக்கூடிய தண்ணீர் முழுமையாக வடியவில்லை என்பதுதான் வேதனையான செய்தி, இதற்கெல்லாம் காரணம் அரசு முறையாக ஆறுகள், வாய்க்கால்கள், ஏரிகள், வடிகால் வாய்க்கால்களை தூர்வாரவில்லை. மராமத்து பணிகளை அரசு அறிவித்திருந்தாலும்கூட அதன் செயல்பாடுகள் எந்த இடத்திலும் முழுமை பெறவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. எனவே அரசியலுக்கு இடம் கொடுக்காமல் எல்லா கட்சிகளும் ஓர்அணியில் நின்று சாதாரண பகுதியில் வாழ்கின்ற ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கக்கூடாது என்ற உணர்வோடு இனிவரும் காலங்களில் தூர்வாரும் பணி மராமத்துபணி ஆகியவற்றை முறையாகவும், சரியாகவும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் இன்னும் அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை என மக்கள் குறைகூறுகிறார்கள். அதற்கு ஏற்றவாறு நிற்கின்ற தண்ணீர் அதேநிலையில் நின்றுகொண்டிருக்கிறது. அதேபோன்ற பகுதிகளில் அதிகாரிகள் அதிக அக்கறை காட்ட வேண்டும். பயிர் இன்சூரன்ஸ் உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். சம்பா ஏக்கருக்கு 25 ஆயிரம் செலவு செய்துள்ளனர்.
நாகை, திருவாரூர், தஞ்சையில் ஒரு பகுதி விளைநிலங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழிந்த நிலையில் உள்ளது வேதனைக்குரிய ஒன்று. விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் இந்த மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு நியாயமான முறையில் பதில் கூற வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் ஆறுதல் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று பார்த்து வீடுகளுக்கும், கால்நடைகளுக்கும் நிவாரண உதவி கொடுக்க வேண்டும்.
நாகை மாவட்டத்தில் மீனவர்கள் ஒரு வாரமாக வாழ்வாதாரத்தைத் தேடி கடலுக்கு செல்ல முடியாமல் 5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். மீனவர்களுக்கும் உதவிகரமாக அரசு இருக்க வேண்டும். இனிமேல் மழைபெய்தால் வடிகால் வசதி முறையாக இருக்க வேண்டும். முழுமையாக தூர்வார வேண்டும். அந்த பணியை அரசு சரியாக செய்யாததால் மக்கள் இன்று கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அரசு விழித்துக்கொண்டு தங்களுடைய செயல்பாடுகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே காவிரி ஆற்றில் கிளை ஆறான மஞ்சளாறு உள்ளது. இந்த ஆறு மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி தாலுக்காகளில் உள்ள ஒரு சில பகுதிகளுக்கு பாசன ஆறாகவும், பெரும்பாலான கிராமங்களுக்கு வடிகால் ஆறாகவும் உள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால் மஞ்சலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த ஆறு கடந்த 25 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் புதர் மண்டி தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக செம்மஞ்சேரி, ஊர்குடி பகுதியில் உள்ள வீடு மற்றும் வயல்களில் மழை வெள்ளம் புகுந்தது. மேலும் பட்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சத்யா நகர், முட்டம் ஆகிய இடங்களில் மழைவெள்ளம் புகும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் வயல்களில் மழை வெள்ளம் புகுந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வயலில் கருப்பு கொடி நட்டு போராட்டம் செய்தனர். பொதுப்பணித்துறை பல ஆண்டுகளாக மஞ்சலாற்றை தூர்வாராததால் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள கூறினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த தகட்டூரை சேர்ந்த ராஜாங்கம் என்பவர் மகள் அஞ்சம்மாள் (வயது 46). இவர் நேற்று அதே பகுதியில் உள்ள குளத்தில் குளித்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றுவிட்ட அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். குளத்தில் அளவுக்கு அதிகமாக மண் வெட்டி எடுக்கப்பட்டதால் ஏற்பட்டதே இதுபோன்ற உயிர்பலிக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை பகுதியில் பெய்யும் மழையால் சம்பாசாகுபடி செய்யப்பட்ட வயல்களில் பயிர்கள் நீரில் முழ்கி உள்ளதா எனவும், தொகுப்பு வீடுகள், சாலைகளையும் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
நேற்று மன்னம்பந்தல், குளிச்சார், கோடங்குடி, செருதீயூர், அகரகீரங்குடி, முட்டம், பட்டமங்கலம் ஊராட்சி போன்ற இடங்களில் மழைநீரால் சேதம் ஏற்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தார். முட்டம் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளையும் சேதமடைந்தநிலையில் உள்ள மின்கம்பம் மாற்ற நடவடிக்கை எடுக்க கூறினார். பின்னர் கீழபட்டமங்கலம் பகுதியில் குளத்தின் குறுக்கே செல்லும் மின்கம்பம் சாயும் நிலையில் உள்ளதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவும், அப்பகுதியில் உள்ள 75-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ள காலனிகள் பகுதியில் கட்டப்பட்ட வீடுகள் பாழடைந்துள்ளதை அரசு வழங்கும் பசுமை வீடு திட்டத்தில் நிதிவழங்குகிறது. உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறவேண்டும் என்றார். மேலும் அதே பகுதியில் சுமார் 32 குழந்தைகள் உள்ள அங்கன்வாடி வாடகை இடத்தில் நடத்தி வருகின்றனர். அக்கட்டிடம் விழும் நிலையில் உள்ளது அதில் நடத்த வேண்டாம் எனவும் எம்.எல்.ஏ. நிதியில் இருந்து 7 லட்சத்து 50 ஆயிரம் நிதி வழங்கி நிரந்தர கட்டிடம் கட்டப்படும் என தெரிவித்தார்.
ஆய்வின் போது மயிலாடுதுறை தாசில்தார் காந்திமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி மற்றும் சேதுராமன், ராமதாஸ், செல்வநாயகம், முட்டம் குமார், ஈழவேந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.
திருமருகல்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் கடந்த ஒருவாரமாக பெய்த தொடர் கன மழையால் 10-ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தது. தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்து சில இடங்களில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது.
திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் மழைநீர் புகுந்தது. திருமருகல் பகுதியில் உள்ள குளங்களில் அளவுக்கு அதிகமான ஆழம் தோண்டி மண் எடுத்ததால் குளத்தின் கரைகள் மண் சரிந்து கரைகள் சேதமாயின. தாமரைக் குளம், ஆயாக்குளம் கரைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகும் அபாய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து. அப்பகுதி மக்கள் திருமருகல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தஞ்சமடைந்தனர்.
இந்நிலையில் திருமருகல் ஒன்றியத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயபால் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டார். அரசினர் மேல் நிலைப் பள்ளியில் தங்கியிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்குச் சென்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் திருப்பயத்தங்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு மழைநீர் விரைவாக வடிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவருடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே அழிஞ்சியாறு பாசன வாய்க்கால் உள்ளது. இதன் மூலம் குன்னம், பெரம்பூர், மேலமாத்தூர், எலத்தூர், கீழமாத்தூர், கீரங்குடி, சிதம்பரநாதபுரம் உள்ளிட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 5 வருட காலமாக இந்த பாசன வாய்க்கால் தூர்வாரி ஆழபடுத்தாமல் விடப்பட்டதால், மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் ஏக்கர் சம்பா நடவு பயிர் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது.
இவ்வாய்காலில் இருந்து பிரிந்து செல்லும், சம்பா குத்துவடிகால், வாழப் பள்ளம் வாய்க்கால் ஆகிய இரண்டு வடிகால் வாய்கால்களும் கடந்த 15 வருடங்களாக தூர்வாரப் படவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக நடவு வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர் மூழ்கி கடல்போல் காட்சியளிக்கிறது. இதனால் 2 ஆயிரம் ஏக்கர் சம்பா நடவு பயிர் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சித்ராசெல்வி விஸ்வநாதன் கூறியதாவது:-
அழிஞ்சியாறு பல கிராமங்களுக்கு முக்கிய பாசன வாய்க்காலாகவும், வடிகாலாகவும் இருந்து வருகிறது. இது குன்னம் வழியாக சென்று குத்தவக் கரை என்ற இடத்தில் கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது. இந்த வாய்க்காலை கடந்த 5 வருட காலமாக தூர்வாரவில்லை. இதனால் மழை நீர் வடிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், தூர்வார வில்லை. அதிகாரிகள் மெத்தனத்தால் சம்பா பயிர் சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. உடனடியாக அழிஞ்சியாறு பாசன மற்றும் கிளை வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாகை அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது25). இவர் தனக்கு சொந்தமான விசைப்படகில் தனது அண்ணன் மூர்த்தி (28), அதே பகுதியை சேர்ந்த முருகன் (35), தமிழ்மாறன் (45), கீச்சாங்குப்பத்தை சேர்ந்த குட்டியாண்டி (50), கோவிந்தன் (45), மகேந்திரன் (50), ஆறுமுகம் (50) ஆகியோருடன் கடந்த 3-ந்தேதி இரவு 11 மணி அளவில் நாகை கடுவையாற்று மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.
இவர்கள் 8 பேரும் நேற்றுமுன்தினம் இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே 40 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர், நாகை மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்தனர்.
பின்னர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 8 பேரையும் சிறைபிடித்து சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விசைப்படகை கடற்படையினர் இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.
நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி சிறைபிடிப்பது, மீனவர்களின் படகுகளை சேதப்படுத்துவது, மீனவர்களை தாக்குவது உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இலங்கை கடற்படை நாகை மீனவர்களை மீண்டும் சிறைபிடித்து சென்றிருப்பது மீனவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இந்த ஆறுமாத சீசன் காலத்தில் நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், வல்லம் மீன்பிடி சீசனுக்காக வந்து தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் மீன்பிடிக்க சென்று வரும் மீனவர்கள் 50-க்கும் மேற்பட்ட வகையான மீன் வகைகளை பிடித்து வருகின்றனர். இந்நிலையில் புயல் சின்னம் உருவாகி கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருவதால் பெரும்பாலான தங்கு கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 50-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் அதிகாலை சென்ற மீனவர்கள் மதியம் கரை திரும்பினர். அவர்களது வலையில் சுமார் 2 டன் மட்லீஸ் மீன் சிக்கியது. இந்த மீன்கள் கிலோ ரூ.40-க்கு கொள்முதல் செய்யப்பட்டு உடன் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நாள்தோறும் காலை 4 மணிக்கு சென்று 11 மணிக்குள் குறைந்த தூரம் சென்று கரை திரும்பும் மீனவர்கள் வலையில் அதிக மீன்கள் கிடைக்கத் துவங்கியுள்ளது. இதனால் மழையும் பொருட்படுத்தாது மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். மீனவர்கள் வலையில் காலா, நீலக்கால் நண்டு, மூன்று புள்ளி நண்டு, வாவல், மடவாய், பாலை, கொய் ஆகிய மீன்கள் அதிக அளவில் கிடைத்தன. இதில் சுமார் 12 டன் மீன்கள் கிடைத்துள்ளது.
மழை நீர் கடலில் கலப்பதால் ஆழ்கடலில் உள்ள மீன்கள் கரையை நோக்கி வருவதால் அதிக அளவில் மீன்கள் கிடைப்பதாகவும் நல்ல விலை கிடைப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி திருவாலி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி. இவருடைய மகன் கார்த்திக் (வயது 7). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள நரசிம்ம விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட்டு வருவதாக கார்த்திக் சென்றார். பின்னர் கோவிலில் பூஜை முடிந்தவுடன் தெற்கு வழி வயல் வழியாக வீட்டுக்கு தனியாக வந்து கொண்டிருந்தார். அப்போது வயல் வெளியில் உள்ள வாய்க்கால் மழை நீரில் நிரம்பி சென்று கொண்டிருந்தது. இது தெரியாமல் கார்த்திக் எதிர்பாராத விதமாக வாய்க்காலில் விழுந்து விட்டார். இதனால் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் கோவிலுக்கு சென்ற மகன் இன்னும் வீடு திரும்ப வில்லை என்று அவனது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் வாய்க்காலில் சிறுவன் விழுந்து இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவனது பெற்றோர்களுக்கும், திருவெண்காடு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவன் கார்த்திக் உடலை மீட்டனர். சிறுவனின் உடலை பார்த்து அவனது பெற்றோர்கள் கதறி அழுதனர். உடனே போலீசார் சிறுவன் உடலை பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவன் வாய்க்காலில் விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






