என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை அருகே புத்தூர் கோட்டை வாசல் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் 2 வாலிபர்கள் ரெயிலில் அடிபட்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.
    திருமருகல்:

    நாகை அருகே புத்தூர் கோட்டை வாசல் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் 2 வாலிபர்கள் ரெயிலில் அடிபட்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.

    இன்று காலை அந்த வழியாக சென்ற பொது மக்கள், 2 வாலிபர்கள் உடல் துண்டான நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 2 வாலிபர்களும் 20 வயதுடையவர்களாக இருந்தனர்.

    உடனே இதுபற்றி நாகை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிணமாக கிடந்த 2 வாலிபர்களின் உடல்களையும் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரெயிலில் அடிபட்டு பலியான 2 வாலிபர்கள் யார்? என தெரியவில்லை. 2 பேரும் ஜீன்ஸ் பேண்டும், நீல கலர் சட்டையும் அணிந்திருந்தனர்.

    அவர்கள் 2 பேரும், ரெயிலில் அடிபட்டி இறந்தார்களா? அல்லது தற்கொலை செய்யும் முடிவோடு ரெயில் முன் பாய்ந்தார்களா? என்று ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலியான சம்பவம் நாகையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    குத்தாலம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் ஊராட்சி செபஸ்தியார்கோவில் பகுதியில் கடந்த மாதம் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆடுதுறை-மங்கைநல்லூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து குத்தாலம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் திருமாறன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் 15 நாட்களில் டாஸ்மாக் கடையை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் 15 நாட்கள் கடந்தும் டாஸ்மாக் கடை மூடப்படாததால், கிராம மக்கள் குத்தாலம் தாசில்தார் அலுவலகம் முன்பு கூடி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நாளை (15-ந்தேதி) டாஸ்மாக் மண்டல மேலாளர் முன்னிலையில் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அதுவரை டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்றும் தாசில்தார் திருமாறன் உறுதியளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
    குத்தாலத்தில் கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

    குத்தாலம்:

    குத்தாலம் தாலுகா ராஜகோபாலபுரம் பகுதி கீழமாந்தோப்பு தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். தொழிலாளி. இவரது மனைவி சுமதி(52). குத்தாலம் மெயின்ரோடு பகுதி மேலசாலையை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி மீனாம்பாள்(48). அப்பகுதியில் பித்தளை பாத்திரக்கடை வைத்துள்ளார்.

    இவரிடம் சுமதி கடந்த ஆண்டு ரூ.1 லட்சத்தை வட்டிக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 4 மாதமாக அவர் வட்டி கட்டவில்லையாம். இதனால் சுமதி வீட்டுக்கு சென்ற மீனாம்பாள் வட்டியுடன் பணத்தை திருப்பிக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவர் குத்தாலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனாம்பாளை கைது செய்து விசாரித்தனர். இதில் அவர் அதேபகுதியை சேர்ந்த பலருக்கும் வட்டிக்கும், பித்தளை பாத்திரங்கள் வாங்க கடனுக்கும் பத்திரம் எழுதி வாங்கி மிரட்டி வந்தது தெரியவந்தது.

    அதேபகுதியை சேர்ந்த அன்னக்கிளி ரூ.30 ஆயிரம், மாலா ரூ.3 லட்சம், மாரியப்பன் ரூ.1 லட்சம், அமுதா ரூ.30 ஆயிரம், உதயபானு ரூ.30 ஆயிரம், அழகேஸ்வரி ரூ.2 லட்சம் என பலரிடமும் மீனாம்பாள் கடனுக்கு பணம் கொடுத்து விட்டு கந்துவட்டி வசூலித்து வந்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தரங்கம்பாடி அருகே டெங்கு காய்ச்சலுக்க சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த கேசவன் பாளையம் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் இளையராஜா என்பவர் மகன் லோகேஷ் (வயது 10) இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டது. அவரை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து லோகேசை தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு சிசிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (18) என்பவரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சுனாமி குடியிருப்பு பகுதியில் ஆண்டுதோறும் மழை காலங்களில் மழை வெள்ளம் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

    இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த ஆண்டும் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக சுனாமி குடியிருப்பில் மழை நீர் தேங்கி வடியாமல் உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது.

    எனவே இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுத்து மழைநீர் தேங்கும் இடத்தில் மணலை கொட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கோடியக்கரை அருகே வெள்ளம் போல் தேங்கியிருந்த தண்ணீரில் கிராமமக்கள் பிணத்தை நீந்தியபடியே பாதுகாப்பாக தூக்கிக் கொண்டு சென்றனர். பின்பு சுடுகாட்டிற்கு சென்று தகனம் செய்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கன மழை பெய்தது. இதனால் வேதாரண்யம், கோடியக்கரை, நெய்விளக்கு, புஷ்பவனம் உள்ளிட்ட கிராமங்களில் வயல்களில் வெள்ளநீர் சூழ்ந்ததால் பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது. இதேபோல் வடிவாய்க்கால்கள் தூர்ந்து போனதால் சாலைகளில் 4 அடி வரை தண்ணீர் தேங்கி பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு கிராமமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

    இந்நிலையில் வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 70) என்பவர் நேற்று இறந்து விட்டார். இவரின் உடலை ஊரின் கடைசியில் உள்ள இடுகாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இந்த இடுகாட்டிற்கு முறையான சாலை வசதி இல்லை.

    தற்போது பெய்த கனமழையால் எம்.ஜி.ஆர். நகரில் இருந்து இடுகாட்டிற்கு செல்லும் சாலையில் சுமார் 400 மீட்டர் இடைவெளியில் முற்றிலும் சாலை வசதி இல்லாததால் அப்பகுதியில் இடுப்பளவு வரை மழை வெள்ளம் தேங்கியிருந்தது.

    அப்போது சுப்பிரமணியன் பிணத்துடன் கிராம மக்கள் புறப்பட்டனர். சிறிது தூரத்தில் சாலையில் வெள்ளம் போல் தேங்கியிருந்த தண்ணீரில் கிராமமக்கள் பிணத்தை நீந்தியபடியே பாதுகாப்பாக தூக்கிக் கொண்டு சென்றனர். பின்பு சுடுகாட்டிற்கு சென்று தகனம் செய்தனர்.

    ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள இச்சாலையில் 400 மீட்டர் சாலையை மட்டும் போடாததாலேயே மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உட்பட அனைவரும் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். எனவே இச்சாலையை போர்க்கால் நடவடிக்கையில் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நாகை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் படகுகளை பயன்படுத்தி வருகிறார்கள்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் தொடர்ந்து 9 நாட்கள் கனமழை பெய்தது. இதில் வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு பகுதியில் அதிகபட்சமாக மழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் வயல்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சியளிக்கிறது.

    இதனால் வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் முகாம்களில் உள்ள மக்களுக்கு தலைஞாயிறு பேரூராட்சி சார்பில் உணவு தயாரிக்கப்பட்டு படகுகள் மூலம் சென்று வழங்கப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க படகுகளை பயன்படுத்துகிறார்கள்.

    தலைஞாயிறில் இருந்து உம்பளச்சேரி வழியாக கரியாப்பட்டினம் செல்லும் சாலையில் போக்குவாய்க்கால் உள்ளது. இந்த போக்கு வாய்க்காலில் உள்ள தரைப்பாலம் கனமழை காரணமாக மூழ்கியது. இடுப்பு அளவுக்கு மேல் தண்ணீர் செல்வதால் இந்த பாலத்தில் பொதுமக்கள் சென்று வர முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே வேளாங்கண்ணியில் இருந்து கடலில் மீன்பிடிக்க ஒரு படகில் சூசை மாணிக்கம் என்பவர் உள்பட 4 பேர் சென்றனர். கடலில் மீன்பிடித்தபோது திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டதால் படகு கவிழ்ந்தது. இதில் 4 பேரும் கடலில் விழுந்தனர்.

    இதில் 3 பேர் மட்டும் நீந்தி கரைக்கு வந்தனர். சூசைமாணிக்கத்தை காணவில்லை. அவரை கடலோர காவல்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    வேதாரண்யத்தில் தொடர் மழையால் சம்பா பயிர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா முழுவதும் நேற்று இரவு ஒரே நாளில் 12 செமீ மழை பெய்தது. கடந்த 9 நாளில் பெய்த மழையில் தலைஞாயிறு, கரியாப்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் 60 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் மூழ்கியது. அரிச்சந்திரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வண்டல், குண்டுரான்வெளி, பழையாற்றங்கரையை முற்றிலுமாக நீர் சூழ்ந்துள்ளது. இப்பகுதியில் மக்கள் தங்கள் அன்றா தேவைகளுக்கு படகில் சென்று வந்தனர். கடந்த 9ம் தேதி மட்டும் வெயில் அடித்த நிலையில் நேற்று மாலை முதல் மழை பெய்ய துவங்கியது. விடிய விடிய பெய்த கனமழையில் வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் ஏரி, குளங்கள் நிரம்பி வழிந்தன.

    புஷ்கரணி, கைலவனம்பேட்டை, காந்திநகர், கொள்ளுதீவு, ராமகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. வேதாரண்யம் காந்திநகரில் புதிதாக கட்டப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதியை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் வீடுகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கனமழை மற்றும் கடல் சீற்றத்தால் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஆயிரக்கணக்கான படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் சூழ்ந்து அழுகிக்கொண்டிருக்கும் சம்பா பயிர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கோவில்தாவு கடல் முகத்துவராத்தில் உள்ள சட்ரஸ் வழியாக மானங்கொண்டான் வெள்ளநீர் வேகமாக வடியத் துவங்கியுள்ளது. கொள்ளுத்தீவு, காந்திநகர், புஷ்பவனம் உள்ளிட்ட பகுதிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டார். கோவில்தாவில் உள்ள ஆற்று நீர் கடலோடு கலக்கும் சட்ரஸை பார்வையிட்டார். அங்கு கூடியிருந்த பெண்கள் தங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெருவிளக்குகள் இல்லையென்றும் கூறினர். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உறுதியளித்தார்.
    சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை பி.வி.பாரதி எம்.எல்.ஏ வழங்கினார்.

    சீர்காழி:

    சீர்காழி பகுதியில் தொடர்ந்து கனமழை 12 நாட்களுக்கு மேல் பெய்தது. இதனால் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள கோவிலார் வடிவாய்க்கால், திருநகரி வாய்க்கால் ஆகியவற்றில் உடைப்பு ஏற்பட்டு விளக்கு முகத்தெரு,தெற்குவெளி, ரெயிலடி தெரு, தாமரைக்குளத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 200 குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பி.வி.பாரதி எம்.எல்.ஏ., நிவாரண உதவிகளை தனது சொந்த நிதியில் வழங்கினார். பாதிக்கப்பட்ட 170 குடும்பங்களுக்கு தலா 10கிலோ அரிசி, போர்வைகள், பிரட், பிஸ்கெட் ஆகியவைகள் வழங்கப்பட்டன.அப்போது அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் செல்லையன், ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம்,பேரூர் செயலாளர் போகர்.ரவி,நகர செயலாளர் பக்கிரிசாமி, ஜெயலலிதா பேரவை செயலர் ஏ.வி.மணி, நிர்வாகிகள் சுகுமார், திருமாறன் உடனிருந்தனர்.

    சீர்காழி அருகே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வாலிபரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மகேந்திர பள்ளி கிராமம், பவுசுபேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஸ் (வயது 26). இவர் கோட்டையன் மேடு பகுதி கண்டங்காடு பகுதியில் சாராயம் விற்பதாக புதுப்பட்டினம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது சதீஸ் சாராயம் விற்றது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்து நாகை சிறையில் அடைத்தனர்.

    மேலும சதீஸ் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது. இதனால் நாகை போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் சதீசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    அதன் பேரில் புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் சதீஸ் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    மத்திய அரசின் உயர் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை கருப்பு தினமாக கடைபிடித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    மத்திய அரசின் உயர் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை கருப்பு தினமாக கடைபிடித்து காங்கிரஸ் சார்பில் வேதாரண்யம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாகை தெற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் சிவபிரகாசம், மகளிரணி செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது கருப்பு பணம் ஒழிந்ததா? கள்ளப் பணம் ஒழிந்ததா? என்று கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

    மேலும் உயர் மதிப்பு பணம் செல்லாது என அறிவித்த மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து மருதூர் கணேசன் விளக்கி பேசினார். இதில் தொண்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர்.

    தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கையுடன் செய்ல்பட வேண்டும் என பிரதமர் மோடி - திமுக தலைவர் கருனாநிதி சந்திப்பு குறித்தான கேள்விக்கு தொல்.திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
    நாகை:

    கடந்த வாரம் தினந்தந்தி பவளவிழாவில் பங்கேற்க சென்னை வந்திருந்த போது பிரதமர் மோடி, தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்த்து நலம் விசாரித்தார். இந்நிலையில், மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் இது தொடர்பாக கூறியதாவது:-

    கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தது, திமுக கூட்டணி இடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகதான். ஸ்டாலின் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற திராவிட கழகங்களை சீரழிக்கும் வேலையை செய்து வருகிறது.

    காவல்துறை அ.தி.மு.க அல்லது பா.ஜ.க கட்டுப்பாட்டில் உள்ளதா என்ற ஐயம் எழுகிறது.  தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மணல்மேடு அருகே நள்ளிரவு டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் மணல்மேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள மல்லிய கொல்லையில் ஒரு டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை நேற்று இரவு ஊழியர்கள் பூட்டி விட்டு சென்று விட்டனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு கடை பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாவில் வைக்கப்பட்டு இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் மதுபான பாட்டில்களை திருடி கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை அதே பகுதியில் செங்கல் ஆளை நடத்தி வரும் காமராஜ் என்பவர் டாஸ்மாக் கடை பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். அவர் இது பற்றி டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் ராமலிங்கத்துக்கு தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து ராமலிங்கம் மற்றும் கடை ஊழியர்கள் ரெங்கநாதன், கார்த்திகேயன், வன்னியராஜன், முருகன், கண்ணன், ரமேஷ் ஆகியோர் கடைக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் மதுபாட்டில்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

    இது பற்றி மணல்மேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த கடையில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மணல்மேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×