search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி மத்திய சிறை"

    • திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கை அகதிகள் மற்றும் வெளிநாட்டு அகதிகளுக்கான சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது.
    • உள்ளூர் காவல்துறையினரும் முகாமில் அதிரடியாக சோதனை நடத்தி தடை செய்யப்பட்டுள்ள செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கை அகதிகள் மற்றும் வெளிநாட்டு அகதிகளுக்கான சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு ஜாமீனில் இருப்பவர்கள், தண்டனை காலம் முடிந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப சட்ட நடவடிக்கைகளுக்காக காத்திருப்பவர்கள் என ஏராளமானோர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

    தற்போது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ராபர்ட் பயஸ், முருகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் சிலர் முகாமில் இருந்து கொண்டு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்து வருகிறது.

    சமீபத்தில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள், முகாமில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அதை தொடர்ந்து அவ்வப்போது உள்ளூர் காவல்துறையினரும் முகாமில் அதிரடியாக சோதனை நடத்தி தடை செய்யப்பட்டுள்ள செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    அதன் தொடர்ச்சியாக இன்று காலை 6 மணி அளவில் திருச்சி மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் அன்பு, ஸ்ரீதேவி மற்றும் 6 உதவி போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட 200 போலீசார் முகாமுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகின்றனர். இன்றைய தினமும் சிலரிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • சுப்ரமணியன் தஞ்சை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    • ஜெயிலில் குளித்துக்கொண்டிருக்கும்போது சதீஷிற்கு திடீரென வலிப்பு நோய் வந்து மயங்கி சரிந்தார்.

    திருச்சி:

    திருச்சி கொட்டப்பட்டு அம்பாள் நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 75). இவர் தஞ்சை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் கடந்த மாதம் 25-ம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் அவருக்கு கடந்த 9-ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் பரிதாபமாக நேற்று இறந்து விட்டார்.

    இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி கண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு செய்தி...

    இதேபோன்று சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ் என்கிற ஸ்டீபன். இவர் ஒரு வழக்கில் 6 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 6-ந் தேதி ஜெயிலில் குளித்துக்கொண்டிருக்கும்போது திடீரென அவருக்கு வலிப்பு நோய் வந்து மயங்கி சரிந்தார்.

    ஜெயில் அதிகாரிகள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று இரவு சதீஷ் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தார்.

    இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இரண்டு வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்று ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் இறந்துள்ளார்.

    • வெளிநாட்டினரின் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடப்பதாக கூறப்பட்டது.
    • சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு சிலரை அமலாக்கத்துறையினர் தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    திருச்சி:

    தமிழ்நாட்டிலேயே திருச்சி மத்திய ஜெயிலில் மட்டும்தான் வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் போலி பாஸ்போர்ட், போதைப்பொருள் கடத்தல், கள்ளத்தோணியில் இந்தியா வந்தடைதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அதிக எண்ணிக்கையில் இலங்கையை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் திருச்சி மத்திய ஜெயில் வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் நேற்று தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சுமார் 13 மணி நேரம் தொடர்ச்சியாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல்வேறு 57 பவுன் நகை, ரூ 2 லட்சம் ரொக்கம், ஆவணங்கள் மற்றும் செல்போன்கள், வைபை மோடம், லேப்டாப் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அந்த பரபரப்பு அடங்குவதற்குள் நிலையில் இன்று அமலாக்கத்துறையை சேர்ந்த 4 டெல்லி அதிகாரிகள் சிறப்பு முகாமிற்கு இன்று காலை 10.30 மணி அளவில் வருகை தந்தனர். பின்னர் அவர்கள் முகாமிற்குள் அதிரடியாக சென்று சோதனை நடத்தி வருகிறார்கள்.

    வெளிநாட்டினரின் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடப்பதாக கூறப்பட்டது. என்.ஐ.ஏ. குழுவினரை போன்று இவர்களும் உள்ளூர் போலீசார் மற்றும் ஜெயில் அதிகாரிகளை வெளியேற்றிவிட்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் தற்போது சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு சிலரை அமலாக்கத்துறையினர் தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. என்.ஐ.ஏ.வை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜெயில் சிறப்பு முகாமில் சோதனையில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    ×