என் மலர்
நாகப்பட்டினம்
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான 75 ஆண்டுகள் பழமையான வணிக வளாக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் கடந்த 20 ஆண்டுகளாக மூர்த்தி (வயது 50) என்பவர் மருந்து கடை வைத்துள்ளார்.
இந்த கடைக்கு மருந்துகள் வாங்க நேற்று வேதராஜபுரம் கிராமத்தை சேர்ந்த வைத்தியநாதன் (70), அவருடைய மனைவி சரோஜினி (60) ஆகியோர் சென்றனர். பின்னர் மருந்தை வாங்கிவிட்டு வெளியே வந்தனர். அப்போது வணிக வளாக கட்டிடத்தின் முன்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி வைத்திய நாதன் பலத்த காயம் அடைந்தார். சரோஜினி சற்று தள்ளி நின்றதால் இந்த விபத்தில் அவர் தப்பினார்.
காயமடைந்த வைத்தியநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வைத்தியநாதன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்காடு போலீசார், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வைத்தியநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி விசாரணை நடத்தி வருகிறார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மணியன்தீவு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 52), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.
சம்பவத்தன்று நடராஜன் வேதாரண்யம் அருகே நடந்து சென்றபோது பின்னால் வந்த சரக்கு ஆட்டோ மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலே நடராஜன் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நடராஜனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு பிணம் எடுத்து செல்லும் வாகன வசதி (அமரர் ஊர்தி) இல்லாததால் நடராஜனின் உடலை மருத்துவமனையில் உள்ள ஸ்டெச்சரில் வைத்து உறவினர்கள் தோளில் 6 கிலோ மீட்டர் தூரம் சுமந்து மணியன்தீவு கிராமத்துக்கு சென்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் அந்த கிராமத்தில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இதேபோல முனியப்பம்பாளையம் கிராமத்தில் பழனிசாமி என்பவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார்.
இந்த செங்கல் சூளைகளில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா திருமேனி கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் (வயது 49), இவருடைய மனைவி ராஜேஸ்வரி (45), தங்கராஜின் உறவினர்கள் அய்யப்பன் (29), இவருடைய மனைவி சுகன்யா (25) ஆகியோர் செங்கல் சூளை இருக்கும் இடத்தில் உள்ள வீடுகளில் தங்கி, செங்கல்சூளையில் வேலை செய்து வந்தனர்.
இந்தநிலையில் தங்கராஜ், அய்யப்பன் ஆகியோர் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் குடும்ப செலவுக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கியிருந்தனர். வாங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாததால் அவர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர். இந்தநிலையில் தங்கராஜ், வேலை பார்த்த செங்கல் சூளையில் இருந்து தப்பி சென்று கோபிசெட்டி பாளையம் உதவி கலெக்டரிடம் புகார் செய்தார். அதன்பேரில் உதவி கலெக்டர் கோவிந்தராஜ் மற்றும் அலுவலர்கள் அவர்களை மீட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இரவு ஒப்படைத்தனர்.
மயிலாடுதுறை உதவி கலெக்டர் பிரியங்கா, உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் இளங்கோ, தாசில்தார் காந்திமதி ஆகியோர் மீட்கப்பட்ட 4 பேரையும் மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்தில் வைத்து அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி நாகை மாவட்டத்தில் ஒருவாரத்துக்கு முன்பு தொடர் மழை பெய்தது.
அங்கு கனமழை பெய்ததால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. இதில் தண்ணீர் வடியாமல் பல இடங்களில் பயிர்கள் அழுகின.
இந்நிலையில் மழை பெய்யாததால் வயலில் தேங்கிய மழைநீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்.
வேதாரண்யம் பகுதியில் உப்பளங்களில் மழை வெள்ளம் புகுந்ததால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. சீர்காழி, கொள்ளிடம், தலைஞாயிறு, கீழ்வேளூர், தரங்கம்பாடி, மயிலாடுதுறை, ஆகிய இடங்களில் கன மழையால் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
தலைஞாயிறு பகுதியில் உள்ள குண்ரோன்வெளி, வண்டல் ஆகிய கிராமங்கள் மழையால் தீவு போலானது. அங்குள்ள மாணவ -மாணவிகள் தினமும் படகுகள் மூலம் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று மீண்டும் பலத்த மழை பெய்தது.
கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், தரங்கம்பாடி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம், கோடியக்கரை உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வயல்வெளிகளை மீண்டும் மழை வெள்ளம் சூழ்ந்தது. மழை நீரை வடிய வைத்து வரும் நிலையில் மீண்டும் மழை பெய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் மழை நீடித்தால் பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும் என்று அச்சமடைந்துள்ளனர். வேதாரண்யத்தில் நேற்று பெய்த மழையால் உப்பு உற்பத்தி மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையால் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. பலத்த மழையால் சாலைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், பேரளம், வலங்கைமான் உள்ளிட்ட இடங்களில் நேற்று மழை பெய்தது.
தஞ்சை மாவட்டத்திலும் மழையால் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பூதலூர் பகுதியில் சில இடங்களில் பாசனத்துக்கு இன்னும தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. அங்கு பம்புசெட் மூலம் விவசாயிகள் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். நேற்று தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், திருவையாறு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. மிதமாக பெய்த மழையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கும்பகோணத்தில் மட்டும் நேற்று பலத்த மழை பெய்தது.
நாகையில் இருந்து அரசு பஸ் ஒன்று கும்பகோணத்திற்கு புறப்பட்டு சென்றது. அகரகடம்பனூரை சேர்ந்த பாலகுரு என்பவர் அந்த பஸ்சை ஓட்டி சென்றார். திருவாரூரை சேர்ந்த குணசேகரன் கண்டக்டராக பணியாற்றினார். பஸ்சில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
கீழ்வேளூர் பஸ் நிறுத்தத்தின் அருகில் அரசாணி குளம் பகுதியில் ஒரு வளைவில் பஸ் திரும்பியது. அப்போது பஸ்சுக்கு முன்னால் பஸ்சின் டயர் வேகமாக உருண்டு சென்று புதருக்குள் விழுவதை கண்ட டிரைவர் அதிர்ச்சியடைந்தார். அது தனது பஸ்சின் முன்பக்க டயர் தான் என்பதையும், அது எப்படியோ கழன்று ஓடி புதருக்குள் விழுந்துள்ளது என்பதையும் உணர்ந்த டிரைவர் பாலகுரு உடனடியாக சமயோஜிதமாக பஸ்சை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தினார்.
அதனால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் பயணிகள் இறக்கிவிடப்பட்டு மாற்று பஸ்சில் ஏற்றிவிடப்பட்டனர். விபத்தின்றி பஸ்சை சாமர்த்தியமாக நிறுத்திய டிரைவர் பாலகுருவை பயணிகள் பாராட்டி சென்றனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக சம்பா சாகுபடி பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. இதையொட்டி நாகை மாவட்டம் தலை ஞாயிறு, வேதாரண்யம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட வயல்களை வேளாண்மை உற்பத்தி ஆணையரும், முதன்மை செயலாளருமான ககன்தீப்சிங்பேடி பார்வையிட்டார். அப்போது அழுகிய பயிர்களை வயலில் இருந்து எடுத்து விவசாயிகள் காண்பித்தனர்.
மழைநீர் சூழ்ந்து பயிர்கள் அழுகிப்போனதற்கு வடிகால் வசதி இல்லாததுதான் காரணம். கடந்த ஆண்டுக்கான வறட்சி நிவாரணம் இதுவரை வரவில்லை என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். பின்பு பிராந்தியங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பருவமழையில் பாதித்த சம்பா சாகுபடியை பார்வையிட்டு விவசாயிகள் அனைவரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என கூறினார்.
இந்த ஆய்வின் போது அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், வேளாண்மைத்துறை இயக்குநர் சந்திரகாசன், வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், மாவட்ட முன்னாள் ஊராட்சி உறுப்பினர் ரவிச்சந்திரன், பிராந்தியங்கரை கூட்டுறவு சங்கத்தலைவர் ஜெயபாரதிஆறுமுகம் தலைஞாயிறு கூட்டுறவு சங்க தலைவர் அவ்வை பாலசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் உடன் சென்றனர். பின்னர் சுகன்தீப்சிங்பேடி கூறியதாவது:-
வறட்சி நிவாரணம் பணம் வந்துவிட்டது. கணக்கை சரிபார்த்து வழங்கப்படும், இந்த ஆண்டு மழை வெள்ளத்தால் பாதித்த சம்பா பயிர்கள் தண்ணீர் வடிந்தவுடன் விரைவில் கணக்கு எடுக்கப்படும். முற்றிலும் சம்பா பயிர் அழிந்ததால் நாகை மாவட்டத்தில் குளம் குட்டை ஆறுகளில் உள்ள தண்ணீரை வைத்து மூன்றாம் போக சாகுபடி செய்வதற்கு விவசாயிகளுக்கு இலவசமாக விதை நெல் வழங்க முதலமைச்சரை சந்தித்து ஏற்பாடு செய்யப்படும்.
மூன்றாம் போக சாகுபடிக்காக தண்ணீர் போதவில்லை என்றால் ஜனவரி மாதத்தில் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த 10 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலஙகை கடற்படையினர் ஒரு படகில் ரோந்து வந்தனர்.
உடனே படகில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்களின் படகை சுற்றிவளைத்து அவர்களை கைது செய்தனர். பின்னர் கைதான 10 பேரையும் காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க கோரி நேற்று அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது சிலர் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் நடுக்கடலில் மீன்பிடித்த நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை அக்கரைபேட்டையை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான விசை படகில் கடந்த 15-ந் தேதி 10 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் இன்று அதிகாலை நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு படகில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்களின் படகை சுற்றிவளைத்து அவர்களை பிடித்தனர். மேலும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், மற்றும் வலைகளையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் 10 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.
அடுத்தடுத்து 2 நாட்களில் நாகையை சேர்ந்த 20 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் நாகை மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் துலா உற்சவ கடைமுக தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. (அம்மா அணி) பொதுச்செயலாளர் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமளரெங்கநாதர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்திலும் திவாகரன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக மயிலாடுதுறையில் திவாகரன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுக்கூட்டம் நடத்தியதை அமைச்சர்கள் வரவேற்று இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அமைச்சர்களை அழைக்காமல் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டுள்ளார். இது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜனை போட்டியிட செய்து அவரை தமிழக முதல்-அமைச்சராக்கும் ஒத்திகை நிகழ்ச்சி போல் உள்ளது.
இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் விட்டு கொடுப்பார்கள் போல் தெரிகிறது. இவர்கள் இருவருக்கும், தமிழகத்தின் உரிமைகளை கேட்டு பெறுவதற்கு திராணி இல்லை.
இந்தியாவிலேயே மிகப்பெரிய வருமான வரி சோதனை எங்கள் குடும்பத்தில் தான் நடந்து இருக்கிறது. ஆனால் இந்த சோதனை தோல்வியில்தான் முடிந்து உள்ளது. இந்த சோதனையின்போது ரூ.5 கோடி பறிமுதல் செய்ததாக கூறி வருகிறார்கள்.

ஆனால் சேகர்ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு ரூ.250 கோடி பறிமுதல் செய்தனர். அதன்மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதேபோல் அகில இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் வீட்டில் கூட ரூ.1,500 கோடியும், 1½ கிலோ தங்கமும் கைப்பற்றினார்கள். அது என்னவானது என்றே தெரியவில்லை.
ஆனால் 35 கார்களில் வந்து மன்னார்குடியில் சோதனை முடித்து சென்ற வருமான வரித் துறையினர் 4 நோட்டுகளை மட்டும்தான் எடுத்துச் சென்றனர். வருமான வரி சோதனைகள் குறித்து இதுவரை அதிகாரிகள் எதுவும் பதில் கூறாத போது, சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
அ.தி.மு.க. எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை மட்டுமே பணிய வைத்து உள்ளனர்.
எந்த சோதனையாலும் எங்களை பணிய வைக்க முடியாது. இந்த அரசாங்கம் அடுத்த தேர்தல் வரைதான் செயல்படும். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பா.ஜனதா கட்சிக்கு தாவி விடுவார்கள்.
இவ்வாறு திவாகரன் கூறினார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் காலமாகும். இதையொட்டி இங்கு ஏராளமான மீன்கள் கிடைக்கும் என்பதால் தமிழகம் முழுவதும் இருந்து 1500 மீனவர்கள் அங்கு முகாமிட்டு மீன்பிடித்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை நிலவியது. தற்போது மழை நின்று விட்டதால் நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த அமிர்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இலங்கை அருகே உள்ள பருத்தித்துறை பகுதியில் இன்று அதிகாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்கள் படகை முற்றுகையிட்டு அதில் மீன்பிடித்து கொண்டிருந்த 10 மீனவர்களையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை காங்கேசன் துறைக்கு கொண்டு சென்று ஜெயிலில் அடைத்தனர்.
இதுபற்றி நாகை மீனவர்களின் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அக்கரைபேட்டை மீனவ பஞ்சாயத்தார் கடலோர காவல் படை போலீசிடம் இதுதொடர்பாக புகார் செய்து அவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக மீனவர்கள் கூறும் போது, ‘இலங்கை கடற்படையினர் தமிழக கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தாலும் மீனவர்களை கைது செய்வது தாக்குவது தடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக மத்திய- மாநில அரசுகள் மீனவர்களை அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையும் பலன் அளிக்கவில்லை. மீனவர்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடும் போக்கை இலங்கை கடற்படை கைவிட மத்திய- மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட நாகை மீனவர்களையும், படகுகளையும் மீட்க வேண்டும்’’ என்றனர்.
மயிலாடுதுறை மாயூர நாதர் சுவாமி கோவிலில் இன்று துலா உற்சவத்தை முன்னிட்டு கடைமுக தீர்த்தவாரி நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்வதற்காக சசிகலாவின் தம்பி திவாகரன் நேற்று மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் தரிசனம் செய்தார்.
அதன்பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மயிலாடுதுறையில் நடைபெறும் துலா உற்சவ விழாவில் காவிரியில் தண்ணீர் விடாமல் உள்ளனர்.
கோவையில் கவர்னர் பன்வாரிலால் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி உள்ளார். இதை அமைச்சர்கள் வரவேற்றுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதை பார்க்கும் போது ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தமிழிசையை நிறுத்தி முதல்வராக்கும் ஒத்திகை நிகழ்ச்சி போல் தெரிகிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடியும் மற்றும் ஓ.பன்னீர்செல்வமும் விட்டு கொடுத்து விடுவார்கள் போல் தெரிகிறது. தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் கேட்டு பெற 2 பேருக்கும் திராணி இல்லை.
இந்தியாவிலேயே மிகப்பெரிய வருமான வரிசோதனை எங்கள் குடும்பத்தினர் மீது நடந்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்து விட்டது.
சுமார் 187 இடங்களில், 400 வாகனங்கள், 1800 அதிகாரிகள் என்று சோதனை நடத்தப்பட்டது. இதில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு ஒரு நாள் மட்டுமே அரசாங்கம் சார்பில் உணவு வழங்கப்பட்டது. மீதி நாட்களில் அந்தந்த வீடுகளிலேயே சாப்பாடு வழங்கப்பட்டது.
அகில இந்திய மெடிக்கல் கவுன்சில் தலைவர் வீட்டில் 1500 கோடி பணம், 1½ டன் நகைகள் வருமான வரி சோதனையில் சிக்கியது. அதன்பிறகு இதுபற்றி எந்த தகவலும் இல்லை.
எங்களை மிரட்டி அடிபணிய வைக்கவே இந்த சோதனை நடந்துள்ளது. சமூக வலைக்தளங்களில் வருவது எல்லாம் பொய். எங்கள் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களும் இன்று வரை எங்களிடம் தான் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து நேற்று இரவு திவாகரன், மயிலாடுதுறையில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.
இன்று காலை 8 மணியளவில் மீண்டும் மாயூரநாதர் சுவாமி கோவிலில் திவாகரன் தரிசனம் செய்தார்.
வருமான வரித்துறை சோதனை குறித்து விளக்கம் அளிக்க திவாகரனுக்கு திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து காரில் திருச்சிக்கு திவாகரன் புறப்பட்டு சென்றார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா, கரியப்பாட்டினம் காவல் சரகம், கத்தரிப்புலம் கீழக்குத்தகை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் கருணாகரன் (வயது19). இவர் 10-ம் வகுப்பு படித்து தேர்ச்சியாகாத நிலையில் வீட்டில் இருந்து வந்தார்.
இவர் மாமரம் குத்தகை எடுத்த வியாபாரிகளுக்கு மாங்காய் பறித்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று வீட்டருகே உள்ள வேப்பமரத்தில் தனது வீட்டில் உள்ள ஆடுகளுக்கு தழை பறிப்பதற்காக ஏறியுள்ளார். 30 அடி உயரத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து கருணாகரன் உடலை கைப்பற்றி, வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் சித்தாம்பூரை சேர்ந்தவர் சாமிநாதன்(45). இவர் எலெக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். ஊராட்சி நிர்வாகத்தில் தெரு மின்விளக்குகள் பழுது பார்க்கும் பணிகளையும் செய்து வந்தார். இந்நிலையில் திருவாவடுதுறை ஊராட்சி வடக்குத்தெரு பகுதியில் நேற்று சாமிநாதன் தெரு மின்விளக்குகளை மாற்றிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சாமிநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.






