என் மலர்
செய்திகள்

சீர்காழி அருகே வணிக வளாக கட்டிடம் இடிந்து விழுந்து முதியவர் பலி
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான 75 ஆண்டுகள் பழமையான வணிக வளாக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் கடந்த 20 ஆண்டுகளாக மூர்த்தி (வயது 50) என்பவர் மருந்து கடை வைத்துள்ளார்.
இந்த கடைக்கு மருந்துகள் வாங்க நேற்று வேதராஜபுரம் கிராமத்தை சேர்ந்த வைத்தியநாதன் (70), அவருடைய மனைவி சரோஜினி (60) ஆகியோர் சென்றனர். பின்னர் மருந்தை வாங்கிவிட்டு வெளியே வந்தனர். அப்போது வணிக வளாக கட்டிடத்தின் முன்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி வைத்திய நாதன் பலத்த காயம் அடைந்தார். சரோஜினி சற்று தள்ளி நின்றதால் இந்த விபத்தில் அவர் தப்பினார்.
காயமடைந்த வைத்தியநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வைத்தியநாதன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்காடு போலீசார், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வைத்தியநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி விசாரணை நடத்தி வருகிறார்.






